யாழ்ப்பாணரின் ஆற்றாமை

மனிதன் தனக்கு ஆற்றாமை நேர்கையில் செய்வதறியாது மனம் வருந்துவதுண்டு; வாயால் சபிப்பதுண்டு.
யாழ்ப்பாணரின் ஆற்றாமை

மனிதன் தனக்கு ஆற்றாமை நேர்கையில் செய்வதறியாது மனம் வருந்துவதுண்டு; வாயால் சபிப்பதுண்டு. தனது கையில் அகப்பட்ட பொருள்களை வீசியெறிவது என்ற செய்கைகளைச் செய்வதைக் காணவும் முடியும். சினம் கொண்ட போர்வீரன் தனது கையிலிருக்கும் வில்லினை உடைப்பான். வாயினால் பாடும் பாணன், துயர நிலையைத் தன் வாயால் பாடுவான். கவித்துவம் மிக்க புலவன் கையறுநிலைப் "பா' இயற்றுவான். யாழினை வாசிக்கும் இயல்பினனான யாழ்ப்பாணன், துயரமான தொனியில் பண்ணிசைக்கும் அதேவேளை, அந்த யாழினை முறிக்கவும் செய்து தனது வருத்தத்தை வெளிப்படுத்துவான்.
 இசைப்பாணர், மண்டைப் பாணர் என்னும் வகையினருடன் யாழ்ப்பாணர் என்போரும் ஒருவகையினர். இவர்கள் யாழில் பண்ணிசைத்துப் பிறரை மகிழ்விப்பவர்கள். அரசரையோ, வள்ளல்களையோ புகழ்ந்திசைத்துப் பரிசில் பெறுவர்.
 பறம்புமலைத் தலைவனாகிய "வேள் எவ்வி' என்பவன், இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த "நீடுர்' என்னும் ஊரில் வாழ்ந்த மிகச்சிறந்த வள்ளல். இவனிடம், பாணர்களுக்குப் பேரன்பு உண்டு.
 ஒருமுறை, எவ்வி பகைவரோடு போரிட்டான். போரின் முடிவில் இறந்துபோனான். அவனது இறப்பு எல்லோர்க்கும் துயரினை ஏற்படுத்தியது. அவனால், பெரிதும் பேணிப் பாதுகாக்கப்பட்ட பாணர்கள் வருந்தினர். பிரிவுத் துயரினைத் தாங்கவியலாத யாழ்ப்பாணர்கள் தமது இசைக்கருவியாகிய யாழினை முரித்துத் தமது துயரினை வெளிப்படுத்தினர். அதுமுதற்கொண்டு அவர்கள் வறுமையால் வாடத் தொடங்கினர். புறநானூறு இலக்கியத்திற்கு உரையெழுதிய ஒüவை துரை
 சாமிபிள்ளை, அதன் பாடலொன்றுக்கான (233) உரைக் குறிப்பில் இச்செய்தியைக் குறிப்பிடுகின்றார்.
 யாழ்ப்பாணர்கள் அவ்வாறடைந்த துயரினை எடுத்துரைத்த புலவர் பெருமக்களுள் வெள்ளெருக்கிலையார் என்பவர், தனது பாடலில் அவ்வள்ளலின் இறப்பினைத் தன்னால் நம்பவே முடியவில்லை என்கிறார். அப்பாடல் வருமாறு:
 "பொய்யா கியரோ பொய்யா கியரோ
 பாவடி யானை பரிசிலர்க் கருகாச்
 சீர்கெழு நோன்றாள் அகுதைகட் டோன்றிய
 பொன்புனை திகிரியிற் பொய்யா கியரோ
 இரும்பா ணொக்கற் றலைவன் பெரும்பூட்
 போரடு தானை யெவ்வி மார்பின்
 எஃகுறு விழுப்புண் பலவென
 வைகுறு விடியல் இயம்பிய குரலே'
 இப்பாடலில், பாணர்களால் யாழ் முரிக்கப்பட்டது என்ற செய்தியை வெளிப்படுத்தாமல், வள்ளல் எவ்வி பெரும்பாணர்களின் சுற்றத்தினர்க்குத் தலைவன் என்பதை மட்டும் கூறி, முரிக்கப்பட்ட யாழின் பெருமையினை உய்த்துணர வைத்துள்ளார் அப்புலவர்.
 யாழ் முரித்தல் பற்றிய தகவல் இடைக்காலத்திலும் உண்டு. திருஞானசம்பந்தர் தேவாரத்திற்கு யாழிசைத்துச் சிறப்பிக்கும் திருநீலகண்ட யாழ்ப்பாணரின் சுற்றத்தார் பொருட்டு, திருஞானசம்பந்தர் திருப்பதிகத்தின் இசையானது, இசைவாணர்களின் குரலிலும், கருவியிலும் அடங்காவண்ணம் உயரிய, "மாதர்ம டப்பிடியும் மட வன்னமும் அன்னதோர்' (தே. 1459) என்ற பதிகத்தைப் பாடியருளி, திருக்கடைக்காப்பும் சாத்தினார்.
 அந்தப் பதிகத்தை, திருநீலகண்ட யாழ்ப்பாணர் தன் கையிலிருக்கும் யாழில் வாசிக்க, அதன் இசை யாழில் அடங்காததைக் கண்டு நடுங்கினார். உடனே அவர், திருஞானசம்பந்தரின் திருவடிகளை வணங்கி, " இப்பதிக இசையை யாழில் ஏற்பதாக என்னை நம்பவைத்த இவ்யாழினை நான் இனி மீட்டுவதென்பது எனக்கு உகந்ததன்று' என்ற கருத்தில், உணர்வு மேலமிட, தனது கையிலிருந்த யாழினை முரிக்கத் துணிந்தார்.
 அதைக் கண்ட திருஞானசம்பந்தர், அவ்யாழினைத் தன் கையில் வாங்கிக்கொண்டு, "பாணரே! நீவிர் ஏன் இதனை முரிக்க முனைந்திர்? சிவனார் பெருமையெல்லாம் யாழில் அடங்கிவிடுமோ? எனக் கேட்டார். மேலும், "சிந்தனையால் அளவிட முடியாத பதிக இசை, செயலளவில் முடியாது. ஆதலால், நீவிர் இந்த யாழினைக் கொண்டே இறைவனின் மீதான திருப்பதிகத்தினை இயலுமளவில் பாடி வாசிப்பீராக' எனக் கூறி, அவ்யாழினைப் பாணரிடமே திரும்பக் கொடுத்தார் திருஞானசம்பந்தர்.
 திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அதனை வாங்கி முன்போலவே இசைத்தார் என்கிறது "பன்னிரு திருமுறை வரலாறு' என்னும் நூல். ஞானசம்பந்தரின் குறிப்பிட்ட அப்பதிகத்தால், அவர் யாழை முரியப் பண்ணினார் என்பது உபசார வழக்காயிற்று. இதனை நம்பியாண்டார் நம்பி,
 "பாமாலை யாழ்முரியப் பாணழியப் பண்டருள்செய்
 மாமான சுந்தரன்வண் சம்பந்த மாமுனி'
 எனப் பாடுகின்றார். யாழை முரித்ததென்றதொரு நிகழ்வு திருஞானசம்பந்தர் வரலாற்றில் உறுதி செய்யப்படவில்லை. இதனைக் கூறுவோர், "முரி என்பது, ஓரடியில் தொடங்கிய யாப்பியலையும், இசை நடையினையும் அவ்வடியிலேயே முரித்து மாற்றி, மற்றொரு யாப்பியலும் இசையும் அமையப் பாடப்
 பெறுவதாகிய இசைப்பாட்டாகும்' என்பர். இதனை "முரிவரி' என்றும் வழங்குவர்.
 எவ்வாறாயினும், மென்மையான குணமுடைய யாழ்ப்பாணர்கள் தமக்கு ஏற்பட்ட மனக் குமுறல்களைப் பிறரது உடைமைகளின் மேல் காட்டாமல், தமது கையிலிருந்த யாழினை முரிக்கத் துணிந்து, தமது கையறு நிலையை வெளிப்பத்தியுள்ளனர்.
 - முனைவர் ச. சுப்புரெத்தினம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com