கவி பாடலாம் வாங்க - 47

ஒத்தாழிசைக் கலிப்பாவில் மூன்றாவது வகை வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா. வண்ணகம் என்பது ஓர் உறுப்புக்குப் பெயர். அதை அராகம், அடுக்கியல், முடுகியல், போக்கியல் என்ற பெயர்களாலும் வழங்குவர்.
கவி பாடலாம் வாங்க - 47

11.ஒத்தாழிசைக் கலிப்பாக்கள் (3)
 வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா:
 ஒத்தாழிசைக் கலிப்பாவில் மூன்றாவது வகை வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா. வண்ணகம் என்பது ஓர் உறுப்புக்குப் பெயர். அதை அராகம், அடுக்கியல், முடுகியல், போக்கியல் என்ற பெயர்களாலும் வழங்குவர். பெரும்பாலும் விளச்சீர்களே விரவி வருவது அது. கருவிளச்சீர்களே மிகுதியாக வரும். அப்படி வருவதனால் முடுகும் ஓசை உண்டாகிறது. இந்த வண்ணக உறுப்பாகிய அராகத்தைத் தாழிசைக்கும், அம்போதரங்கத்துக்கும் இடையிலே பெற்று வருவது வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா.
 நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா நான்கு உறுப்புக்களை உடையது. அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாவோ ஐந்து உறுப்புக்களை உடையது. வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவுக்கு ஆறு உறுப்புக்கள் இருக்கும். அவையாவன: தரவு, தாழிசை, வண்ணகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம். வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவிலும் தரவு ஆறடியாகவே வரும்.
 "தனதன தனதன தனதன தனதன' என்பது போன்ற ஓசையுடன் வேகமாக நடத்தலின் அராக உறுப்புக்கு முடுகியல் என்று பெயர் வந்தது. இப்படிச் சந்தம் அமைந்த வெண்பாவை முடுகு வெண்பா என்றும், முன்னும் பின்னும் முடுகு அமைந்ததை முன் முடுகு வெண்பா, பின் முடுகு வெண்பா என்றும் பிற்காலத்தார் கூறும் வழக்கு இங்கே ஒப்பு நோக்குதற்குரியது.
 அராக உறுப்பு நாற்சீரடியாகிய அளவடி முதல் எல்லா அடியாலும் வரும். நான்கடி முதல் எட்டடி வரையில் அமையும்.
 "அளவடி முதலா அனைத்திலும், நான்கடி
 முதலா இரட்டியும் முடுகியல் நடக்கும்'
 என்பது பழைய சூத்திரம். வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவுக்கு உதாரணம் வருமாறு:
 (தரவு)
 "விளங்குமணிப் பசும்பொன்னின் விரித்தமைத்துக் கதிர்கான்று
 துளங்குமணிக் கனைகழற்காற் றுறுமலர் நறும்பைந்தார்ப்
 பரூஉத்தடக்கை மதயானைப் பணையெருத்தின் மிசைத்தோன்றிக்
 குரூஉக்கொண்ட மணிப்பூணோய் குறையிரந்து முன்னாட்கண்
 மாயாத வனப்பினையாய் மகிழ்வார்க்கும் மல்லர்க்கும்
 தாயாகித் தலையளிக்கும் தண்டுறை யூரகேள்'
 (தாழிசை)
 காட்சியாற் கலப்பெய்தி எத்திறத்தும் கதிர்ப்பாகி
 மாட்சியால் திரியாத மரபொத்தாய் கரவினால்
 பிணிநலம் பெரிதெய்திப் பெருந்தடந்தோள் வனப்பழிய
 அணிநலம் தனியேவந் தருளுவது மருளாமோ? (1)
 
 அன்பினால் அமிழ்தளைஇ அறிவினாற் பிறிதின்றிப்
 பொன்புனை பூணாகம் பசப்பெய்தப் பொழிலிடத்துப்
 பெருவரைத்தோள் அளருளுவதற் கிருளிடைத் தமியையாய்க்
 கருவரைத்தோள் கதிர்ப்பிக்கும் காதலும் காதலோ? (2)
 
 பாங்கனையே வாயிலாப் பலகாலும் வந்தொழுகும்
 தேங்காத கரவினையும் தெளியாத இருளிடைக்கண்
 குடவரைவேய்த்தோளிணைகள் குளிர்ப்பிப்பான்தமியையாய்த்
 தடமலர்த்தாள் அருளுநின் தகுதியும் தகுதியோ? (3)
 (அராகம்)
 தாதுறு முறிசெறி தடமலரிடையிடை
 தழலென விரிவன பொழில்
 போதுறு நறுமலர் புதுவிரை தெரிதரு
 கருநெய்தல் விரிவன கழி
 தீதுறு திறமறு கெனநனி முனிவன
 துணையொடு பிணைவன துறை
 மூதுறு மொலிகலி நுரைதரு திரையொடு
 கழிதொடர் புடையது கடல்.
 (அம்போதரங்கம்)
 கொடுந்திற லுடையன சுறவேறு கொட்பதனால்
 இடுங்கழி யிரவருதல் வேண்டாமென் றுரைத்திலமோ? (1)
 கருநிறத் துறுதொழிற் கராம்பெரி துடைமையால்
 இருணிறத் தொருகான லிராவார லென்றிலமோ? (2)
 (இவை பேரெண்)
 நாணொடு கழிந்தன்றால் பெண்ணரசி நலத்தகையே; (1)
 துஞ்சலும் ஒழிந்தன்றால் தொடித்தோளி தடங்கண்ணே, (2)
 அரற்றொடு கழிந்தன்றா லாரிருளு மாயிழைக்கே; (3)
 நயப்பொடு கழிந்தன்றா னனவது நன்னுதற்கே (4)
 
 (தொடர்ந்து பாடுவோம்...)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com