14.கலிப்பாவின் இனம் (1)

கலிப்பாவுக்கும் மூன்று இனங்கள் உண்டு. (1) கலித்தாழிசை, (2) கலித்துறை, (3) கலிவிருத்தம் என்பன அவை.
 14.கலிப்பாவின் இனம் (1)

கவி பாடலாம் வாங்க - 53
கலிப்பாவுக்கும் மூன்று இனங்கள் உண்டு. (1) கலித்தாழிசை, (2) கலித்துறை, (3) கலிவிருத்தம் என்பன அவை.
 கலித்தாழிசை
 அடி வரையறை இல்லாமல் இரண்டடி முதல் எத்தனை அடிகளாலும் வந்து, ஈற்றடி மற்ற அடிகளைவிடச் சீர்கள் மிக்கு நீண்டு வருவது கலித்தாழிசை. ஈற்றடியை அன்றி மற்ற அடிகள் தம்முள் அளவொத்தும், அளவு ஒவ்வாமலும் வரும். இவை ஒரு பொருள் மேல் மூன்று அடுக்கி வந்தால் சிறப்புடையன என்று சொல்வார்கள். ஆதலின் கலித்தாழிசை மூன்று வகைப்படுவதைக் காணலாம்.
 "வாள்வரி வேங்கை வழங்கும் சிறுநெறிஎம்
 கேள்வரும் போழ்தின் எழால்வாழி வெண்டிங்காள்
 கேள்வரும் போழ்தின் எழாலாய்க் குறாலியரோ
 நீள்வரி நாகத் தெயிறே வாழி வெண்டிங்காள்'
 இந்தப் பாடல் முன் மூன்று அடிகளும் நான்கு சீர்களை உடையனவாய், ஈற்றடி ஐந்து சீர்களை உடையதாய் வந்தன.
 வெள்ளமென அன்புடைய வித்தகருக் கெந்நாளும்
 தள்ளரிய இன்பந் தருவான் குறவள்ளிக்
 குள்ளுடைய அன்போங்க உற்ற திருக்கோலம்
 நள்ளுகின்ற கொல்லியிலே நாணாளும் கொண்டுறுவான்
 நண்ணுதிரே
 இந்தப் பாடலும் முதல் மூன்றடிகளும் அளவொத்து நிற்ப, ஈற்றடி ஒருசீர் மிக்கு வந்த கலித்தாழிசை.
 பூண்ட பறையறையப் பூதம் மருள
 நீண்ட சடையா னாடுமே
 நீண்ட சடையா னாடு மென்ப
 மாண்ட சாயல் மலைமகள் காணவே காணவே
 இந்தச் செய்யுளின் ஈற்றடி ஏனையடிகளினும் மிக்கு, ஐந்து சீர்களால் வந்தது. இரண்டாவது அடி மூன்று சீரால் அமைய, முதலடியும் மூன்றாமடியும் நான்கு சீர்களால் அமைந்தன. இது இடையிடை அளவு குறைந்து, ஈற்றடி அளவு மிக்கு வந்த கலித்தாழிசை.
 காந்தமா மலையினிற் காணலாம் கந்தவேள்
 சாந்தமா ருளத்தினர் தாண்மலர்
 ஏந்துமா மலரினால் ஏத்தியர்ச் சனைசெயப்
 போந்தஅன் னவர்வினை யாவையும் போக்கியின் பீவதே
 இந்தப் பாடலும் அத்தகையதே. இவை இரண்டும் இரண்டாவது வகையைச் சார்ந்தன.
 "கொய்தினை காத்தும் குளவி அடுக்கத்தெம்
 பொய்தற் சிறுகுடி வாரல்நீ ஐய நலம்வேண்டில்'
 "ஆய்தினை காத்தும் அருவி அடுக்கத்தெம்
 மாசில் சிறுகுடி வாரல்நீ ஐய நலம்வேண்டில்'
 "மென்றினை காத்தும் மிகுபூங் கமழ்சாரற்
 குன்றச் சிறுகுடி வாரல்நீ ஐய நலம்வேண்டில்'
 இது இரண்டடியாய் ஈற்றடி மிக்கு ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வந்த கலித்தாழிசை.
 கலித்துறை
 ஐந்து சீர்களை உடைய அளவொத்த நான்கடிகளால் வருவது கலித்துறை.
 "யானும் தோழியும் ஆயமும் ஆடும் துறைநண்ணித்
 தானும் தேரும் பாகனும் வந்தென் னலனுண்டான்
 தேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேல்
 கானும் புள்ளும் கைதையும் எல்லாம் கலியன்றோ'
 இவை ஐந்து சீர்களையுடைய நெடிலடி நான்கால் வந்த கலித்துறை.
 "பொன்னைப் போற்றிலன் புகழினைப் போற்றிலன் பொலிமன்
 தன்னைப் போற்றிலன் தகவுறு ஞானமாம் வைவேல்
 மின்னைப் போற்கதிர் வீசுறக் கரத்தினில் விளங்கும்
 நின்னைப் போற்றினன் நின்னடி யடைந்தனன் நிமலா'
 இந்தப் பாடலும் கலித்துறையே. இத்தகைய கலித்துறைகளைக் கலிநிலைத்துறை யென்றும் சொல்வதுண்டு. காப்பியக் கலித்துறை, கட்டளைக் கலித்துறையென்று வேறு இரண்டுவகைக் கலித்துறைகளும் இருத்தலின், இதனைத் தனியே தெரிந்து கொள்ளக் கலிநிலைத் துறையென்று வழங்குகிறார்கள்.
 "வென்றான் வினையின் தொகையாய விரிந்து தன்கண்
 ஒன்றாய்ப் பரந்த உணர்வின்னொழி யாது முற்றும்
 சென்றான் திகழும் சுடர்சூழொளி மூர்த்தி யாகி
 நின்றான் அடிக்கீழ்ப் பணிந்தார்வினை நீங்கி நின்றார்'
 இது காப்பியக் கலித்துறை. விருத்தக் கலித்துறை என்றும் இதைக் கூறுவதுண்டு. இந்தக் கலித்துறையில் ஒவ்வோரடியிலும் மூன்றாவது சீர் கனிச் சீராக வந்தது காண்க.
 "யார்க்கும் எளியன் இனிதாகிய சொல்லன் என்றும்
 ஆர்க்கும் நலமே புரிகின்றவன் ஆழ்ந்த அன்பன்
 ஈர்க்கும் அழுக்கிற் செறியாதவன் ஏய்ந்த தூய்மை
 சேர்க்கும் செயலான் அவன் ஆண்டிடின் தேயம் ஓங்கும்'
 இதுவும் காப்பியக் கலித்துறை.
 கட்டளைக் கலித்துறை
 கட்டளைக் கலித்துறை என்பது எழுத்துக்கணக்கை உடைய கலித்துறை என்னும் பொருளுடையது. கட்டளை என்பது கணக்கு. எழுத்துக் கணக்கையுடைய அடிகளைக் கட்டளையடிகள் என்று சொல்வது வழக்கம்.
 கட்டளைக் கலித்துறை, அடிதோறும் ஐந்து சீர்களை உடையதாய், ஒவ்வோரடியும் தனித்தனியே வெண்டளை அமைய, ஈற்றுச் சீர் மட்டும் விளங்காய்ச் சீராகி, ஏகாரத்தில் முடியும். இடையில் விளங்காய்ச் சீர் வராது. இந்த இலக்கணம் அமைந்தால் ஒவ்வோரடியிலும் ஒற்றை விட்டு எண்ணிப் பார்த்தால் நேர்முதலாகிய அடியில் பதினாறு எழுத்துக்களும், நிரை முதலாகிய அடியில் பதினேழு எழுத்துக்களும் இருக்கும். இந்தக் கணக்குத் தவறவே தவறாது.
 வெண்டா மரைக்கன்றி நின்பதம் தாங்கஎன் வெள்ளையுள்ளத்
 தண்டா மரைக்குத் தகாதுகொலோசக மேழுமளித்
 துண்டானுறங்க ஒழித்தான்பித் தாகவுண் டாக்கும் வண்ணம்
 கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே
 இந்தக் கட்டளைக் கலித்துறையில் ஒவ்வோரடியிலும் பதினாறே எழுத்துக்கள் வந்திருக்கின்றன.
 (1) வெண்டா-2, மரைக்கன்றி-4, நின்பதம்-3, தாங்க என்-3, வெள்ளையுள்ளத்-4 = 16.
 (2) தண்டா-2, மரைக்குத்-3, தகாதுகொ-4 லோசக-3, மேழுமளித்-4 =16.
 (3) துண்டா-2, னுறங்க-3, ஒளித்தான்பித்-4, தாகவுண்-3, டாக்கும் வண்ணம்-4=16
 (4) கண்டான்-2, சுவை கொள்-3, கரும்பே-3, சகல-3, கலாவல்லியே-5=16.
 இதில் மூன்றாம் அடியில் "டாக்கும் வண்ணம்' என்று தேமாந்தண்பூவும் நான்காம் அடியில் "கலா வல்லியே' என்று புளிமாங்கனியும் வந்தாலும் இடையிலுள்ள ஒற்றை நீக்கிக் கூவிளங்காயாகவும் கருவிளங்காயாகவும் கொள்ள வேண்டும்.
 (தொடர்ந்து பாடுவோம்...)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com