கருவூலம்: கன்னியாகுமரி மாவட்டம்!

1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயில். சக்தி பீடங்களில்  ஒன்று!
கருவூலம்: கன்னியாகுமரி மாவட்டம்!

பழமையான புகழ் பெற்ற கோயில்கள்! 

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில்! 

1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயில். சக்தி பீடங்களில்  ஒன்று! இந்தியப் பெருங்கடல்.  அரபிக்கடல், வங்காள வரிகுடா என மூன்று கடல்களும் கூடுமிடத்தில் இந்தியாவின் தென்முனையில் உள்ளது. தமிழகத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்று.

தாணுமாலயன் கோயில் - சுசீந்திரம்!

சிவன், பிரம்மா, விஷ்ணு என மும்மூர்த்திகளும் லிங்க ரூபத்தில் மூலவராகக் கொண்டிருக்கும் ஆலயம்தான் சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயம். 

4 ஏக்கர் பரப்பில் அமைந்த இக்கோயில், சிற்பங்கள் நிறைந்தது. செண்பகராமன் மண்டபம், இசைத்தூண்கள் கொண்ட குணசேகர மண்டபம், ஊஞ்சல் மண்டபம், வசந்த மண்டபம் என பல மண்டபங்களைக் கொண்டது. சிற்பங்கள் நிறைந்த சித்திரசபை மண்டபமும் இருக்கிறது. 

குணசேகர மண்டபத்தில் 4 தொகுதி இசைத்தூண்கள் இருக்கின்றன.  இவை ஒரே கல்லில் குடைந்து உருவாக்கப்பட்டவை! இத்தூண்களைத் தட்டினால் இனிய இசை வரும். இத்தூண்களில் வாசித்து  அக்காலத்தில் நாட்டிய  நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளனர். 

அனுமன் சிலை!

இக்கோயிலில் உள்ள 18 அடி உயர அனுமன் சிலை மிகவும் பிரசித்தி பெற்றது. 
ராஜகோபுரம்!

இக்கோயிலின் 133 அடி உயரமுள்ள ராஜகோபுரம் 7 நிலைகளைக் கொண்டது! 7 நிலைகளின் உட்பகுதியில் அழகிய சுவரோவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. 
புனித சவேரியர் பேராலயம் - கோட்டாறு!

மாவட்டத்தில் முதன்மை கத்தோலிக்க ஆலயம். 1544 இல் குமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துவ மதத்தைப் பரப்ப வந்த புனித சவேரியரால் சிறிய அளவில் நிறுவப்பட்டது. இன்று விரிவடைந்து பேராலயமாக உள்ளது. 

நாகர் கோயில் நாகராஜா கோயில்!

இக்கோயில் பெயராலேயே நாகர் கோயில் என்று ஊர் அழைக்கப்படுகிறது. இது கேரள பாரம்பரிய அமைப்பில் கட்டப்பட்டது.  இங்கு இறைவன் நாக ரூபமாகவே வணங்கப்படுகிறார். இக்கோயிலைச் சுற்றி ஏராளமான பாம்பு சிலைகள் உள்ளன. கருவறையின் மேலே ஓலை வேயப்பட்டுள்ளது. மேலும் கருவறை மண் 6 மாதங்கள் கருப்பாகவும், 6 மாதங்கள் வெண்மையாகவும் காணப்படுகிறது. 

பத்மநாபபுரம் அரண்மனை!

தக்கலை அருகே உள்ளது பத்மநாபபுரம் அரண்மனை.  6 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்த அரண்மனை வளாகத்தில், தாய்க் கொட்டாரம், மந்திர சாலை, நாடகசாலை, உப்பரிகை மாளிகை, தெற்குக் கொட்டாரம் என பல பகுதிகள் உள்ளன. இந்த அரண்மனை 17 ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட ரவிவர்மா குலசேகரப் பெருமாள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது.  அரண்மனையில் 14 மாளிகைகள் உள்ளன. மேலும் 4 கி.மீ. நீளத்திற்கு கிரானைட் கற்களால் கட்டப்பட்ட கோட்டைச் சுவரும் உள்ளது. பத்மநாபபுரம் 1795 வரை திருவிதாங்கூர் சமஸ்தானமாக இருந்துள்ளது. 

மாளிகையின் கதவுகளும், ஜன்னல்களும், தூண்களும், உத்திரங்களும் நுட்பமான வேலைப்பாடுகளுடன் உள்ளன. பிரமிக்க வைக்கும் பிரம்மாண்டமான தோற்றத்துடன், கலையழகும் கொண்ட மாளிகை இது!

மாத்தூர் தொட்டிப் பாலம்!

ஆசியாவின் மிகப் பெரிய தொட்டிப்பாலம்! மலைப்பாங்கான காடுகளாக இருந்த மாத்தூர் பகுதியில் உள்ள "கணியான் பாறை' என்ற மலையையும், "கூட்டு வாயுப் பாறை'  என்ற மலையையும் இணைத்து பறளியாற்றுத் தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக இரண்டு மலைகளுக்கு நடுவில் கட்டப்பட்டுள்ளது.  இந்தப் பாலம் வழியாக ஒரு மலையிலிருந்து இன்னொரு மலைக்குத் தண்ணீர் கொணடு செல்லப்படுகிறது. திருவட்டாரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. 1971 இல் கட்டப்பட்ட இப்பாலம் 1204 அடி நீளமும் தரையிலிருந்து 104 அடி உயரமும் கொண்டது. பிரம்மாண்டமான இப்பாலத்தை 32 அடி சுற்றளவு கொண்ட 28 தூண்கள் தாங்கி நிற்கின்றன,. 

தண்ணீர் செல்லும் பாதை 7 அடி அகலமும், 7 அடி உயரமும் கொண்டது. படிக்கட்டுகள் மூலம் ஏறிச் சென்று நீர் ஓடும் அழகையும், இயற்கைக் காட்சிகளையும் கண்டு ரசிக்கலாம்! 

விவேகானந்தர் பாறையும் நினைவு மண்டபமும்!

கன்னியாகுமரி கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு பாறையே விவேகானந்தர் பாறை என்று அழைக்கப்படுகிறது. 

சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரிக்கு 1892 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி வந்திருந்தபோது இப்பாறைக்கு நீந்திச் சென்று 3 நாட்கள் தியானம் செய்திருக்கிறார். எனவே அவரது நினைவாக இப்பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபமும், மேலும் அம்மன் பாதம் கோயிலும், தியான மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளன. விவேகானந்தர் நின்ற நிலையில் சிலையும் உள்ளது. கடற்கரையிலிருந்து விவேகானந்தர் பாறைக்குச் செல்ல படகு வசதி செய்யப்பட்டுள்ளது. 

அய்யன் திருவள்ளுவர் சிலை!

தமிழ் நாடு அரசு, கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்தில் ஜனவரி 1 ஆம் தேதி  உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவருக்கு குமரியில் கடல் நடுவே, நீர் மட்டத்தில் இருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைத்த 133 அடி உயரச் சிலை வைத்துள்ளது! 

இச்சிலை பல கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பல மாடிக் கட்டிடம் போன்ற அமைப்புக் கொண்டது. உலகில் இது போன்று கருங்கற்களால் ஆன சிலை வேறு கிடையாது! 3 டன் முதல் 8 டன் வரை எடையுள்ள 3681 கருங்கற்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மொத்த எடை 7000 டன்! 

சிலையின் எடை மட்டும் 2500 டன்! சிலையைத் தாங்கியுள்ள பீடத்தின் எடை 1500 டன்! பீடத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள மண்டபத்தின் எடை 3000 டன்!பீடத்தின் 38 அடி உயரமானது அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், சிலையின் உயரமான 95 அடி பொருட்பால், மற்றும் இன்பத்துப் பாலின் 95 அதிகாரங்களையும் குறிப்பதாகத் திகழ்கிறது. வள்ளுவர் கையில் ஏந்தியிருக்கும் ஏட்டின் நீளம் 10 அடி!

காந்தி மண்டபம் 

கடற்கரையில் சுமார் அரை ஏக்கர் நிலப்பரப்பில் 79 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. 

காந்தியடிகளின் அஸ்தி குமரிக்கடலில் கரைப்பதற்கு முன்பு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்ட இடத்தில்தான் இந்த நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. 

மண்டபத்தின் உள்ளே காந்தியடிகளின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் அரிய வகை புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தியடிகளின் அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் சூரிய ஒளி விழும் வகையில் இம்மண்டபம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மண்டபத்தின் மேல் பகுதியில் நின்று கடற்கரையின் அழகையும் கடலழகையும் பார்த்து ரசிக்கலாம்.

சிதறால் - சமணர் நினைவுச் சின்னங்கள்!

மார்த்தாண்டத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள சிதறால் கிராமத்தின் மலைப் பகுதியில் உள்ளது. இக்குடைவரைக்கோயில்கள் கி.மு. முதல் நூற்றாண்டு முதல் கி.பி. 6 ஆம் நூற்றாண்டுக்குள் நிறுவப்பட்டவை. இங்கு சமண சமயத்தின் தீர்த்தங்கரர்களான் மகாவீரர், பார்சுவநாதர், போன்றவர்களின் சிற்பங்களும் பத்மாவதி தேவதையின் சிற்பம் மற்றும் யட்சர்கள், யட்சிணிகள் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. 

முதலாம் மகேந்திர வர்ம பல்லவன் காலத்திய கோயில் என்று கருதப்படுகிறது.  தற்போது தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ளது. 

தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com