மரங்களின் வரங்கள்!: ஆரோக்கியத்தின் அருமருந்து  நெல்லி மரம்

நான்தான் நெல்லி மரம் பேசுகிறேன்.  எனது தாவரவியல் பெயர் பில்லாந்தஸ் எம்பிலிகா.
மரங்களின் வரங்கள்!: ஆரோக்கியத்தின் அருமருந்து  நெல்லி மரம்

என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா ?
 
நான்தான் நெல்லி மரம் பேசுகிறேன்.  எனது தாவரவியல் பெயர் பில்லாந்தஸ் எம்பிலிகா.  நான் யுபோர்பியேசி  குடும்பத்தை சேர்ந்தவன்.  எனது வேறு பெயர்கள் அந்தோர், ஆமலகம், அமுதம், அந்தகோளம், அத்தகோரம் ஆகியவை ஆகும்.  

சங்கக் காலம் தொட்டு நான் உங்கள் வாழ்வில் இரண்டற கலந்தவன்.   தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை உண்ணும் போது அதில் ஒரு துளி பூலோகத்தில் விழுந்ததாம் அதிலிருந்து முளைத்து உண்டானவன்தான் நான் என்று என்னை பெருமையாகப்  பேசுவார்கள். 

குழந்தைகளே, தகடூரை (இன்றைய தருமபுரி மாவட்டம்)  ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சி  என்னும் மன்னன் தனக்குக் கிடைத்த நெல்லிக் கனியை அமுதம் எனக் கருதி, தான் உண்ணாமல் தமிழ் மூதாட்டி ஒளவைக்கு கொடுத்ததிலிருந்தே என் பெருமை உங்களுக்கு எல்லாம் நன்கு  விளங்கும்.  நெல்லிக்காய் ஆரோக்கியம் தந்து ஆயுளை அதிகரிக்கச் செய்யும்.  என்னிடம் 8.75 மில்லி கிராம் வைட்டமின் சி சத்தும்,  தாது உப்புகளும், இரும்பு சத்தும் நிறைய உள்ளது.   

ஆரஞ்சு பழத்தை விட 20 மடங்கு வைட்டமின் சி சத்தும், ஆப்பிளை விட 3 மடங்கு புரதச் சத்தும், அஸ்கார்பிக் அமிலம் எனும் உயிர்ச் சத்து 160 மடங்கு என்னிடம் உள்ளது. நெல்லிக் கனியை உண்டு தண்ணீரைக் குடித்தால் அது எப்பேர்பட்ட தண்ணீராக இருந்தாலும் இனிக்கும்.  நான் கல்லீரலின் சீரான செயல்பாட்டிற்கு உதவுவேன்.  நெல்லிக்காய் புளிப்பு, இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகளை உடையது.  குளிர்ச்சித் தன்மையானது.  தழை, கால்நடைகளுக்குத் தீவனமாகும். தழையை எருவாகவும் பயன்படுத்துவார்கள்.  தாழையிலிருந்து சாயப் பொருள்கள் எடுக்கலாம். நெல்லி விதைக்கு ஆஸ்துமா, பித்தம், சளி ஆகியவை குணப்படுத்தும்  திறன் உள்ளது. 

கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும்  நெல்லிக்காயை சிலர் வற்றலாகவும் சாப்பிடுவாங்க. அது குளிர்ச்சியைத் தந்து இருமல், சளி போன்றவற்றைப் போக்கும்.   உடலைப் பலப்படுத்தும். நெல்லிக்காய் சாறு, நெல்லிக்காய் ஊறுகாய் போன்றவை ஆரோக்கியம் தரும் உணவு பொருள்களாகும். இத்தனை உபயோகமுள்ள என்னை தெய்வீக மரம் என்றும் சொல்வார்கள். 

நான் கடலூர் மாவட்டம், திருநெல்வாயிலில் உள்ள அருள்மிகு உச்சிவனேஸ்வரர்,  தஞ்சாவூர் மாவட்டம், பழையாறை, அருள்மிகு சோமநாதர், பெரம்பலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், அருள்மிகு கழுமலைநாதர், திருவாரூரிலிருந்து 16 கி.மீ. தொலைவிலுள்ள திருநெல்லிகா அருள்மிகு நெல்லிவனநாதன் ஆகிய திருக்கோவில்கள் நான் தலவிருட்சமாக உள்ளேன்.

குழந்தைகளே, மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்காயும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்.  எனவே, நீங்கள் பெரியவர்கள் பேச்சைக் கேட்டு நடக்கனும். என்னுடைய நட்சத்திரம் பரணி, தமிழ்  ஆண்டு பிலவ.  ஒளவை விரும்பச் சொன்னது அறம் ! அரசவை வளர்க்கச் சொன்னது மரம் ! மீண்டும் சந்திப்போம் குழந்தைகளே!

(வளருவேன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com