நட்பு!

ஊரின் மையப் பகுதியில் அமைந்திருந்த கோவில் குளத்தில் தாமரைப் பூக்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. குளம் முழுக்க தண்ணீரால் நிரம்பி, அழகால் மிளிர்ந்து கொண்டிருந்தது. செவ்வி என்ற  தவளையும், மினுக்கி என்ற
நட்பு!

ஊரின் மையப் பகுதியில் அமைந்திருந்த கோவில் குளத்தில் தாமரைப் பூக்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. குளம் முழுக்க தண்ணீரால் நிரம்பி, அழகால் மிளிர்ந்து கொண்டிருந்தது. செவ்வி என்ற  தவளையும், மினுக்கி என்ற மீனும் நீண்ட நாட்களாக நெருங்கிய நண்பர்களாகப் பழகி மகிழ்ச்சியாக அக்குளத்தில் ஒருசேர வாழ்ந்து வந்தன.

தினமும் செவ்வி மினுக்கியை  அழைத்து, ""நண்பா..! என்  முதுகில் உட்கார்ந்து கொள். நான் இக்குளத்தைச் உனக்கு அழகாகச் சுற்றிக் காட்டுகிறேன்''  என்று சொல்லும். 

மினுக்கியும் ஆசையுடன், ஆருயிர் நண்பன் செவ்வியின் முதுகில் ஏறி உட்கார்ந்துகொண்டு, அக்குளத்தைச் சுற்றி சுற்றி வலம் வந்தவாறு வாழ்வின் அழகையெல்லாம் ரசிக்கும். பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கும். இக்குளத்தில் வாழ்ந்து வந்த மற்ற உயிரினங்கள், இவை இரண்டையும் பார்த்து பொறாமை  கொண்டன.

இப்படியே நாட்கள் நகர்ந்தன...

கோடைக்காலம் ஆரம்பித்தது.  குளத்தில்  தண்ணீர் சிறிது சிறிதாக குறையத் துவங்கியது. மினுக்கியின் மனதுக்குள் சிறிது கவலை தோன்றியது. ஆனாலும் செவ்வி உடன் இருந்ததால் அதை மறந்து மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தது.

மேலும் சில வாரங்கள் கடந்தன... வெப்பம் அதிகரித்தது. குளத்தில் நீரின் அளவும் குறைந்து கொண்டே வந்தது. மினுக்கிக்கு கவலை மேலும் அதிகமானது.

""நண்பா! குளத்தில் நீரின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. அநேகமாக, நாளை குளம் முற்றிலும் வற்றிவிடும் போலத்தெரிகிறது. எனக்கு மிகவும் பயமாக உள்ளது. நாம் இருவரும் வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்து சென்றுவிடலாம். என்னை உன் முதுகில் ஏற்றிக் கொள். நாம் நீர் நிறைந்துள்ள இடத்திற்குச் சென்றுவிடலாம்!...'' என்று கண்கள் கலங்கியபடியே வேண்டியது.

செவ்விக்கு சிரிப்பு வந்தது. ""ஏய்.. மினுக்கி!... குளத்தில் நீர் குறைந்தால் எனக்கு ஒரு கவலையும் இல்லை. ஏனெனில், நான்  நீரிலும் வாழ்வேன். நிலத்திலும் வாழ்வேன். உனக்குத்தான் ஆபத்து!... நீ வேண்டுமால் எங்காவது சென்றுவிடு. என்னால் இங்கிருந்து வரமுடியாது ....'' என அலட்சியமாக நண்பனின் கோரிக்கையை உதாசீனப்படுத்தியது.

நெருங்கிய நண்பன்,  திடீரென இப்படிப் பேசியதும், மினுக்கிக்கு கவலையும் பயமும் அதிகமாகியது. இரவு முழுதும் அழுதுகொண்டே இருந்தது.

மறு நாள் விடிந்ததும் குளத்து நீர் முற்றிலும் வற்றியது. மினுக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. அதைக் கண்டு கொள்ளாமல் மகிழ்ச்சியாக செவ்வி குளத்தை விட்டு வெளியேறியது. 

ஏற்கனவே மரத்தில் காத்துக்கொண்டிருந்த ஒரு காகம் ஒன்று குளத்தில் இருந்து வெளியேறிய செவ்வியை வாயில் கவ்விக் கொண்டு, மீண்டும் மரத்தில் அமர்ந்து அதைச் சாப்பிட ஆரம்பிக்கப் போகும் நேரத்தில், இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த மினுக்கி அதிர்ச்சியடைந்தது.

உடனே காக்கையை நோக்கி, ""அண்ணே..! நான் இன்னும்  சற்று நேரத்தில் சாகப் போகிறேன். நீரின்றி இருக்கும் இக்குளத்தில், இனி நான் உயிர் வாழ்வது கடினம்.  உனக்குப் பசியாக இருந்தால் சாகப்போகும் என்னை  உணவாக எடுத்துக்கொள். என் நண்பனை விட்டுவிடு.  அவன் பாவம். வேறு எங்காவது சென்று பிழைத்துக் கொள்வான்!''... என்று  துடித்துக் கொண்டே மினுக்கி கூறியது. 

உயிர் போகும் நேரத்திலும் நண்பனுக்காக பரிந்து பேசி, தன் உயிரைத் தியாகம் செய்யத் துணிந்த மினுக்கியின் பெருந்தன்மையை எண்ணி வியந்த காகம், சிறிது யோசிக்க ஆரம்பித்தது. 

"பசியில் இறந்தாலும் பரவாயில்லை. நண்பர்களைப் பிரிப்பது பாவம்!...'....  என எண்ணி,  உண்மையான நட்பின் அடையாளமாக வாழும் மினுக்கியின் வார்த்தைக்கு மரியாதை கொடுத்து, செவ்வியை மீண்டும் குளத்தருகில் விட்டுச் சென்றது.

மனம் பதைத்த செவ்வி, துடித்துக் கொண்டிருந்த நண்பனிடம் ஓடிச்சென்று, தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்தது. அவசரமாக  மினுக்கியைத் தன் முதுகில் ஏற்றி கொண்டு அருகில் இருந்த நீர்நிலைக்கு வேகமாக தத்தித்தத்திச் சென்றது. அங்கிருந்த நீரில் பத்திரமாக மினுக்கியை  இறங்கி விட்டது. உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த  மினுக்கி,  மீண்டும் உயிர் பிழைத்தது. அதைப்பார்த்த செவ்வி அளவில்லா ஆனந்தம் அடைந்தது. அன்றிலிருந்து செவ்வியும், மினுக்கியும் "ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காமல் வாழ்வதே வாழ்வுக்கு அழகு' என்பதைப் புரிந்துகொண்டு,  இணைரபிரியா நண்பர்களாக வாழ்ந்து வந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com