நலம் தரும் காய்கறிச் சாறுகள்!

எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் கிடைக்கக் கூடிய இஞ்சியைச் சாறு பிழிந்து தேன் கலந்து அதிகாலையில் அருந்தினால் பித்த வியாதிகள் விரட்டி அடிக்கப்படும்.
நலம் தரும் காய்கறிச் சாறுகள்!

இஞ்சிச் சாறு: எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் கிடைக்கக் கூடிய இஞ்சியைச் சாறு பிழிந்து தேன் கலந்து அதிகாலையில் அருந்தினால் பித்த வியாதிகள் விரட்டி அடிக்கப்படும். தீராத வியாதிகளும் தீர்க்கப்படும். சளி, இருமல், புளியேப்பம், வாயுத் தொல்லைகள் அகலும். வயிற்று வலி, வயிறு உப்புசம், தொண்டை வலி, தலைவலி ஜீரணக் கோளாறுகள் குணமாகும்.

தக்காளிச் சாறு: உடலுக்கு குளிர்ச்சியை அளித்து மூலச்சூடு, மலச்சிக்கல், வாயுத் தொல்லைகளைப் போக்குகிறது. ஜீரணத்தை எளிதாக்குகிறது. முகப் பொலிவுக்கும், உடல் இளமைக்கும் உத்தரவாதம் அளிக்கிறது. நீரிழிவு நோயாளிகளும் அச்சமின்றி பருகக் கூடிய தக்காளிச்சாறு உடல் பருமனைக் குறைக்கும்.

வெள்ளரிச் சாறு: வெயில் காலங்களில் அதிகமாகக் கிடைக்கும் நீர்ச் சத்தும் குளிர்ச்சியும் நிறைந்தது. வெள்ளரிச்சாறில் அனைத்துச் சத்துகளுடன் வைட்டமின் "பி' அதிகமாகவும் உள்ளது. உடல் சூடு தணியும். உடல் பருமன், உடல் தொப்பை குறையும். சிறுநீரக எரிச்சல், குடல் எரிச்சல் கல் அடைப்பு குணமாகும். ரத்த அழுத்த நோயாளிகளும், நீரிழிவு நோயாளிகளும் அவசியம் அருந்த வேண்டிய சாறு.

சுரைக்காய்ச் சாறு: நீர்ச்சத்து மிகுந்த சுரைக்காய் குளிர்ச்சியைத் தரக் கூடியது. மாவுச் சத்து குறைவானது. காயைச் சிறு துண்டுகளாக்கி நீர் சேர்த்து அரைத்து வடிகட்டி தேன் சேர்க்கலாம். சுரைக்காய்ச் சாறு மலச்சிக்கல், வயிற்று வலி, வயிற்றுப் புண், மூல வியாதி முதலியவற்றைக் குணமாக்கும். உடல் சூடு தணியும். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி கட்டுப்படும்.

பீட்ரூட் சாறு: புற்று நோய் ஆராய்ச்சியில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. பீட்ரூட் சாற்றில் சிவப்பு, கருஞ்சிவப்பு என்று இரு நிறங்கள் உள்ளன. பீட்ரூட் சாறு உடலுக்கு குளிர்ச்சியையும், சக்தியையும் அளித்து சிறுநீரக எரிச்சலைத் தணிக்கிறது. வயிற்றுக் கோளாறுகளைக் குணமாக்கி முகப் பொலிவை உண்டாக்குகிறது. உடலில் ரத்தத்தைச் சுத்தப்படுத்தி ரத்தவிருத்தியை உண்டாக்குகிறது. மலச்சிக்கலை அகற்றுகிறது. உடல் பருமனையும் சரியான எடைக்குச் சமன் செய்கிறது.

கேரட் சாறு: கேரட்டைத் துருவி அரைத்து வடிகட்டி நீருடன், தேன், வெல்லம் அல்லது பேரீச்சை கலந்து சாறு தயாரிக்கலாம். கேரட் சாறு கண்களைப் பாதுகாத்து கண் நோய்களைத் தீர்ப்பதில் முதல் இடத்தைப் பெறுகிறது. பற்களின் உறுதியையும் முகப்பொலிவையும் கேரட் சாறால் அடையலாம். பெப்டிக் அல்சர், கேன்சர் போன்ற நோய்களின் வீரியத்தை வெகுவாகக் குறைக்கும். கேரட் சாறு உடலில் அழிந்த திசுக்களையும் விரைவில் புதுப்பிக்கிறது.

பாகற்காய்ச் சாறு: பாகற்காய்ச் சாறு கசப்பு நிறைந்தது என்றாலும், அமிர்தத்தை விட மேலானது என்பர். பாகற்காயைச் சாறு பிழிந்து இனிப்பு வேண்டுமென்றால் சேர்த்து அருந்தலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு அற்புத மருந்து. நரம்புகள் பலம் பெறும், வயிற்றிலுள்ள புழுக்கள், பூச்சிகள் முதலியவை அழியும். விஷம் முறிவடையும். கல் அடைப்பு, மூலவியாதி, கல்லீரல் வீக்கம் போன்றவையும் குணமாகும்.
- ஆர். ஜெயலட்சுமி, திருநெல்வேலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com