வட்டெழுத்தில் அசத்தும் மாணவி!

கல் தோன்றி.. மண் தோன்றாக் காலத்தே.. முன் தோன்றிய மூத்த மொழி!..என்று தமிழின் பெருமையை நமது முன்னோர் கூறியுள்ளனர். இதைக் கேட்டதும் மண், கல் தோன்றாத போது எப்படி உயிர் தோன்றியிருக்க முடியும்
வட்டெழுத்தில் அசத்தும் மாணவி!

கல் தோன்றி.. மண் தோன்றாக் காலத்தே.. முன் தோன்றிய மூத்த மொழி!..என்று தமிழின் பெருமையை நமது முன்னோர் கூறியுள்ளனர். இதைக் கேட்டதும் மண், கல் தோன்றாத போது எப்படி உயிர் தோன்றியிருக்க முடியும், மொழி இருந்திருக்க முடியும் என கேள்வி எழலாம்.
 ஆனால், பூமி பெரும்பகுதி பாறையாக இருந்தபோதே மனிதப் பரிணாம வளர்ச்சியில் ஒலி மூலம் தமிழைத் தொடர்பு ஓசையாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதே உண்மை.
 ஒலி ஓசையாக வந்த தமிழ் பின்னர் கி.பி.3 -ஆம் நூற்றாண்டுக்கு முன்பாகவே வரிவடிவத்துக்கு மாறியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 வரிவடிவம் வட்டெழுத்து வடிவமாக தெளிவாக எழுதப்பட்டது சேர, சோழ, பாண்டியர் காலமாகக் கூறப்படுகிறது. கி.பி.10- ஆம் நூற்றாண்டுக்கு முன்பே தமிழ் கல்வெட்டுகளில் வட்டெழுத்துகளின் வடிவம் தென்பட்டுள்ளது என்பதே ஆய்வாளர்கள் கருத்து. தமிழின் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் மலைக்குன்றுகள் தோறும் விரவிக்கிடக்கின்றன. சமணக் குகைகளாக கருதப்படும் இடங்களில் ஏராளமான தமிழ் வட்டெழுத்துகள் காணப்படுகின்றன. ஆனால், அவை குறித்த ஆய்வுக்கோ, அதன் பொருள் குறித்து விளக்கம் அறியவோ தமிழில் பெரிய...பெரிய பட்டம் பெற்று, ஆய்வு முனைவர் பட்டம் பெற்று தமிழுக்கு சேவை செய்வதற்கு என்றே பிறவிப்பயன் எடுத்ததாக கூறிக்கொள்ளும் பேராசிரியர்கள் முதல் தமிழ் தொண்டர்கள் வரை யாரும் முன்வரவில்லை என்பதே உண்மை. கடந்த 25 ஆண்டுகளாக தமிழகத்தில் தமிழ் மொழி குறித்த குறித்த ஆய்வுகள் பெரிதாக முன்னெத்துச் செல்லப்படவில்லை. தினமணி ஆசிரியராக இருந்து சமீபத்தில் மறைந்த ஐராவதம் மகாதேவன் போன்ற வெகுசிலரே கல்வெட்டியலில் கவனம் செலுத்தி தமிழரின் ஆதிகால நாகரீகத்தையும், வரலாறையும் வெளிப்படுத்தியுள்ளனர். அதன்பின் அகழாய்வு பணிகள் என தமிழை வைத்து அரசியல் நடத்துவதே வழக்கமாகிவிட்டது. இப்படிப்பட்ட நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அரசு மேல்நிலைப் பள்ளியானது தமிழின் தொன்மையைப் பாதுகாக்கும் வகையில் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் மூலம் கல்வெட்டியல் ஆய்விலும் ஆர்வத்தை ஏற்படுத்தியும், தமிழ் கிராமங்களின்ஆதி வரலாறை யும் பதிவாக்கும் முயற்சியில் மாணவ, மாணவியரை ஈடுபடுத்தி வருகிறது.
 இப்பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி கோகிலா கல்வெட்டுகளைப் படிப்பதிலும், வட்டெழுத்துகளின் பொருள் அறிவதிலும் பட்டம் பெற்ற ஆராய்ச்சியாளர்களுக்கு இணையாகச் செயல்படுவது ஆச்சரியம்தான். பள்ளபச்சேரி எனும் குக்கிராமத்தைச் சேர்ந்த தந்தை ராமையா, தாய் ராமு இருவரும் விவசாயக் கூலிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
 பள்ளியின் ஆங்கிலப் பாட ஆசிரியரும், தொன்மை பாதுகாப்பு மன்றப் பொறுப்பாளருமான வே.ராஜகுருவின் வழிகாட்டலால் கடந்த 4 ஆண்டுகளாகவே கல்வெட்டியல் ஆய்வில் ஈடுபட்டுவரும் மாணவி கோகிலா, கடந்த கி.பி.3 முதல் 7 - ஆம் நூற்றாண்டுகள் வரை தமிழகத்தில் புழக்கத்தில் இருந்த வட்டெழுத்துகள் குறித்த புத்தகங்களைப் படித்து மனனம் செய்து பயிற்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் தமிழ் ஆய்வில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள்
 கூட வட்டெழுத்துகளை அவ்வளவு எளிதில் மனனம் செய்துவிடமுடியாது என்பதே உண்மை. அப்படிப்பட்ட நிலையில், "பசுமரத்தாணி போல' என்று கூறுவது போலவே, மாணவி கோகிலா மனதில் கல்வெட்டுகளின் வட்டெழுத்துகள் பதிந்துவிட்டன. இதனால், எங்கு கல்வெட்டுகளைக் கண்டாலும் அதை படித்து, பொருள் புரிந்து எழுதி வைக்கவும் மாணவி கோகிலா தவறுவதில்லை. மதுரை கீழக்குயில்குடி சமணர்படுகை வட்டெழுத்துகளையும், வேடர்புளியங்குளம்
 மலையில் உள்ள வட்டெழுத்துகளையும் சர்வசாதாரணமாக படித்து படியெடுக்கிறார் கோகிலா. ஏராளமான கல்வெட்டுகளைப் படித்து படியெடுத்த கோகிலா, கிராமக் கோயில்களில் கல்வெட்டுகள் ஏதேனும் உள்ளதா, அதன்படி கிராம வரலாறுகளைத் தொகுக்க முடியுமா என்ற கோணத்தில் தனது கல்வெட்டுப் பயணத்தை தொடர்கிறார். ஒருபுறம் படிப்பு, மறுபுறம் கல்வெட்டு மற்றும் தமிழ் மக்கள் வரலாறு சார்ந்த ஆய்வு என இரட்டைக் குதிரையில் இனிமையாக பயணித்து வருகிறார் மாணவி கோகிலா. அவரது அயராத உழைப்பால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமநாதபுரத்தில் நடந்த தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர்களுக்கானப் பயிற்சி வகுப்பில் ஆசிரியர்களுக்கே பயிற்சி அளித்து அசத்தியுள்ளார். மாணவி கோகிலாவிடம் பேசியபோது,
 "ஆறாம் வகுப்பில் இருந்தே எனக்கு கல்வெட்டு படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. எங்களது பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றப் பொறுப்பாசிரியர் வே.ராஜகுருவின் வழிகாட்டல் மூலம் எனது குலதெய்வக் கோயிலை ஆராய்ந்து கட்டுரை எழுதியுள்ளேன். வட்டெழுத்தை எழுதப் படிக்க மட்டுமல்ல, அகழாய்வில் கிடைக்கும் பானை, ஓடுகளின் காலம் அறியவும், ஓலைச்சுவடிகளைப் படிக்கவும் கூட பயிற்சி பெற்றிருக்கிறேன்'' என்கிறார்.
 இப்பள்ளி மாணவர்கள் சார்பில் கிராமக் கோயில்கள் அடிப்படையை வைத்து அந்தந்த கிராம வரலாறுகள் தொகுக்கப்பட்டு நூலாக்கப்பட்டுள்ளதாக தொன்மை மன்றப் பொறுப்பாளர் ஆங்கிலப் பாட ஆசிரியரான வே.ராஜகுரு கூறுகிறார். மேலும், அவர் கூறுகையில்,
 " எங்கள் பள்ளியில் தமிழின் தொன்மையை அறியும் ஆவலுடன் பல கோகிலாக்களும், அகழாய்வு ஆய்வு மாணவர்களும் உள்ளனர். அவர்களால் நிச்சயம் தமிழ் வருங்காலங்களில் வளர்ச்சி பெறும்'' என்கிறார் நம்பிக்கையுடன். ஆம்.... மெல்லத்தமிழினி சாகும் என்றெந்தப் பேதை சொன்னான் என்ற பாரதியின் கோபக் கேள்விக் கனவை நனவாக்கும் வகையில்தான் அரசுப் பள்ளி மாணவி கோகிலா போன்றோரின் செயல்பாடு உள்ளது. பாராட்டுக்கள்!
 கட்டுரை, படங்கள்-வ.ஜெயபாண்டி.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com