ஆதிவாசியால் குறி வைக்கப்பட்டேன் !

சமீபத்தில் அந்தமான் நிக்கோபார் பகுதியில் இருக்கும் வடக்கு செண்டினல் தீவுக்குச் சென்றவர். அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஆலன் காவ். "தீவினுள் வர வேண்டாம் .. திரும்பிப் போய்விடுங்கள்''
ஆதிவாசியால் குறி வைக்கப்பட்டேன் !

சமீபத்தில் அந்தமான் நிக்கோபார் பகுதியில் இருக்கும் வடக்கு செண்டினல் தீவுக்குச் சென்றவர். அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஆலன் காவ். "தீவினுள் வர வேண்டாம் .. திரும்பிப் போய்விடுங்கள்'' என்று சென்டினல் தீவின் ஆதிவாசிகள் எச்சரித்தும் ஜான் அந்த தீவின் கடல் பகுதியில் படகில் சுற்றி வந்துள்ளார்.
 தன்னை அழைத்து வந்த மீனவர்களை நீங்கள் போங்கள்.. நான் இங்கே இறங்கிக் கொள்கிறேன்'' என்று தீவில் காலடி வைத்த ஜானை தீவின் ஆதிவாசிகள் அம்பு எய்து கொன்றுவிட்டனர். இந்த சம்பவத்திற்குப் பின் சென்டினல் தீ வைப்பு பற்றியும் ஆதிவாசிகள் குறித்தும் சர்வதேச செய்தியை ஊடகங்கள் எழுதிக் கொண்டிருக்கின்றன.
 "சென்டினல் தீவுக்குள் நுழையும் அந்நியர்களை ஆதிவாசிகள் அம்பு எய்து கொன்று விடுவார்கள்' என்று காலம் காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. 2006-இல் வழி தவறி சென்டினல் தீவிற்குள் சென்ற இரண்டு மீனவர்களைக் கொன்று மூங்கில் சட்டங்களில் உடல்களை வைத்து கடலில் மிதக்கவிட்டனர் என்ற சம்பவத்தை பலரும் நினைவு கூறுகிறார்கள். ஆனால், இரண்டு இந்தியர்கள் அந்த தீவிற்குச் சென்று ஆதிவாசிகளிடம் பழகி வந்துள்ளனர். ஒருவர் மனித இன ஆராய்ச்சியாளர் டிஎன். பண்டிட். ஆண். இன்னொருவர் முனைவர் மதுபாலா சாட்டோபாத்யாயா. சென்டினல் தீவினுள் சென்று தங்கி ஆதிவாசிகளை சந்தித்து பாதுகாப்பாக மீண்டும் திரும்பிய முதலும் கடைசிப் பெண்மணியும் மதுபாலாதான்.

சென்டினல் ஆதிவாசிகள் அந்தமான் தீவில் வடக்கு சென்டினல் தீவில் வசித்து வருகிறார்கள். இவர்கள் ஆபத்தானவர்கள் என்று சொல்லப்படுவதால் அந்தமான் தீவைச் சேர்ந்தவர்களே சென்டினல் தீவிற்குப் போவது கிடையாது. பதினெட்டாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சி செய்த சமயத்தில் சுமார் எட்டாயிரம் ஆதிவாசிகள் சென்டினல் தீவில் வசித்தனராம். சென்டினல் ஆதிவாசிகள் குறித்து அறிந்து கொள்ள வடக்கு செண்டினல் தீவில் 1880-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் படையினர் முற்றுகை. இரண்டு பெரியவர்களையும், நான்கு சிறுவர்களையும் சிறைப் பிடித்து அந்தமானின் போர்ட் பிளேயருக்கு கொண்டு சென்றனர். ஆனால் வெளியுலக கால நிலை அந்த ஆதிவாசிகளுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. அந்த இரண்டு ஆதிவாசிகளும் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தனர். இதைப் பார்த்து ஆங்கிலேயர், நான்கு ஆதிவாசி சிறார்களை மீண்டும் தீவிற்கு கொண்டு வந்து இறக்கிவிட்டுச் சென்றனர்.
 தற்சமயம் சுமார் நூறு பேர்கள் மட்டுமே வசித்து வருகிறார்களாம். இந்த தீவிற்குச் செல்ல யாரையும் இந்திய அரசும் அனுமதிப்பதில்லை. சென்டினல் ஆதிவாசிகள் அங்கேயே வாழ்ந்து வருவதால், வெளி தொடர்புகள் எதையும் அவர்கள் வைத்துக் கொண்டதில்லை. விரும்புவதும் இல்லை. அந்தமான் ஆதிவாசிகளைவிட சென்டினல் தீவு ஆதிவாசிகள் அன்னியர்களை எதிரிகளாகவே கருதுகின்றனர். இந்த சூழ்நிலையில் பெண்ணான மதுபாலா எப்படி தீவினுள் சென்றார்? எப்படி அவர் பாதுகாப்பாகத் திரும்பி வந்தார்?
 மதுமாலா அந்தமான் நிக்கோபர் தீவுகளில் வசிக்கும் பழங்குடிகள் பற்றி ஆறு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்துள்ளார். வெளி உலகத்திற்கும் அந்தமான் நிக்கோபர் தீவுகளின் ஆதிவாசிகளின் வாழ்க்கை முறைகளை வெளி உலகிற்கு அறிமுகம் செய்தவர். "ஜார்வ' பழங்குடி இனத்தவரின் பண்புகளை உலகறியச் செய்தவரும் மதுபாலாதான். மதுபாலா தன் அனுபவத்தை விளக்குகிறார்:
 "நான் சென்டினல் தீவிற்குப் போனது சமீபத்தில் அல்ல. 1991, ஜனவரி 4-ஆம் தேதி சென்றேன். நான் மனிதவியல் ஆராய்ச்சியாளர். சுமார் அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தனிமையில் வாழ்ந்து வரும் ஆதிப் பழங்குடியினரை சந்திக்க 1880 -இல் மாரிஸ் போர்ட்மேன், என்ற பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர் முதன் முதலாக முயன்றார். ஆனால் வெற்றி பெறவில்லை. நூறு ஆண்டுகள் கழித்து 1970 - ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவின் மானுடவியல் ஆய்வுக் கழகம், நேஷனல் ஜியோகிராபிக் நிறுவனத்துடன் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டது. சென்றவர்களை நோக்கி , பழங்குடியினரின் அம்பு தாக்குதல் நடத்தியதால், உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்பதை உணர்ந்து தீவில் இறங்கும் முயற்சிகள் கைவிடப்பட்டது.''

"அடுத்ததாக நான் செல்லத் தீர்மானித்தேன். 1991-ஆம் ஆண்டு ஜனவரி 4 -இல் "எம்.வி. தார்முக்லி' என்ற கப்பல் மூலம் சென்டினல் தீவு நோக்கிப் பயணித்தோம். தீவின் அருகே போக படகு ஒன்றைப் பயன்படுத்தினோம். அந்தக் குழுவில் நான் மட்டும்தான் பெண்.'
 " சென்டினல் தீவிற்குச் செல்லுமுன் கப்பலில் தேங்காய்களை சேகரித்து வைத்திருந்தோம். கையில் தேங்காய்களுடன் படகில் நின்றோம். தீவில் யாரையும் காணவில்லை. தொலைவில் புகை வந்து கொண்டிருந்தது . சரி .. ஆதிவாசிகள் இருக்கிறார்கள் என்பது உறுதியானது. கரையை நெருங்க நெருங்க , சில ஆதிவாசிகள் மரங்களுக்குப் பின் நின்று கொண்டிருப்பது தெரிந்தது . தேங்காய்களை கரையின் பக்கம் தூக்கிப் போட்டோம். அதை பார்த்ததும் ஆதிவாசிகள் மெல்ல மெல்ல எங்கள் படகு நோக்கி வர ஆரம்பித்தார்கள். அவர்கள் வருவதை பார்த்து இன்னும் அதிகமான தேங்காய்களை அவர்களை நோக்கி வீசினோம். அவர்கள் ஆரவாரம் செய்தார்கள். "இன்னும் தேங்காய் வேண்டும்' என்று சொல்வது போல குரல்களை எழுப்பினார்கள். எல்லா தேங்காய்களையும் கரை நோக்கி வீசினோம். அவர்கள் ஆர்வத்துடன் எடுத்துக் கொண்டார்கள்.
 அடுத்த நாள் நான் பவளப்பாறைகளில் இறங்கி நடந்தேன். அப்போது வந்த ஆண் ஆதிவாசிகளுக்கும் தேங்காய்களை பரிசளித்தோம். அவர்களும் பெற்றுக் கொண்டார்கள். இந்த அணுகுமுறையால் ஆதிவாசிகளின் நம்பிக்கையை, நட்பைத் பெற்று விட்டதாக நினைத்துக் கொண்டோம். ஆனால் எனக்கு வரவிருந்த அபாயம் பற்றி எனக்கு ஒன்றும் அப்போது தெரியவில்லை. அப்படி நடக்கும் என்று நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. ஆம்.. நான் வேறொரு ஆதிவாசியால் குறி வைக்கப்பட்டேன். அந்த ஆதிவாசி என் மீது அம்பினை எய்ய .. அந்த அம்பு என்னைத் தைக்காமல் இருக்க ஒரு ஆதிவாசிப் பெண் அம்பு எய்தவனை தள்ளி விட .. அவன் விட்ட அம்பு கடலில் போய் விழுந்தது. அப்போதுதான் எங்களுக்கிருக்கும் அபாயத்தை உணர்ந்தோம். உடனடியாக படகில் ஏறி கிளம்பிவிட்டோம்.
 ஆனால் முயற்சிக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைக்கவில்லை. மீண்டும், பிப்ரவரி 21- இல் நாங்கள் தீவுக்குள் நுழைந்தோம். இப்போது கொஞ்சம் தைரியம் சேர்ந்து கொண்டது. தேங்காய் இதர பரிசுப் பொருள்களை உடன் கொண்டு சென்றோம். எங்களை தீவுவாசிகள் உற்சாகமாக வரவேற்றார்கள். பயந்து பயந்து கரையில் இறங்கினோம். ஏதோ ஒரு தைரியத்தில், பரிசுப் பொருள்களை அவர்களுக்கு வழங்கினோம். பெற்றுக் கொண்டார்கள். நான் அவர்களின் குழந்தைகளைத் தூக்கி கொஞ்சத் தொடங்கினேன். இதை அவர்கள் எதிர் பார்த்தார்களோ இல்லையோ எனக்குத் தெரியாது. நாங்கள் அவர்களை உபத்திரவம் செய்ய வரவில்லை என்பதைக் காட்ட அவர்கள் குழந்தைகளைத் கொஞ்சினேன். அவர்களிடத்தில் ஒரு மாற்றம் தெரிந்தது. எந்தக் கோணத்திலுமிருந்து தாக்குதல் எதுவும் நடக்கவில்லை. எங்களிடமிருந்து மரண பயம் விடை பெற்றது.
 ஆறு ஆண்டுகால பழங்குடியினருடனான ஆராய்ச்சி பணியின் இடையில் இரண்டு முறை சென்டினல் ஆதிவாசிகளை சந்தித்திருக்கிறேன். அவர்கள் ஒரு தடவை கூட என்னுடன் தவறாக நடந்து கொண்டதில்லை. அந்த ஆதிவாசிகள் தொழில்நுட்பத்தில் வாழ்க்கை முறைகளில் பழமையானவர்களாக இருக்கலாம், ஆனால் ஒரு பண்பட்ட சமூகத்தினராக வாழ்கிறார்கள். அவர்கள் நம்மை விட பந்தங்களின் பிணைப்பால் பல படிகள் முன் நிற்கிறார்கள். எனக்கு வாய்ப்பு கிடைத்தால், வாய்ப்பு தரப்பட்டால் மறுபடியும் சென்டினல் தீவிற்குச் சென்று அவர்களை சந்திக்கத் தயாராக உள்ளேன்... தங்களின் தனித்தன்மையை கொண்டு வாழ வேண்டும் ... வேற்று மனிதர்களின் நாகரீகத்தின் மீது அவர்களுக்கு மோகம், ஆசை, கவர்ச்சி ஏதும் இல்லை. வெளியாட்களை அவர்கள் வெறுக்கவும் செய்கிறார்கள். இந்த "ஒவ்வாமைதான்' வெளி இனத்தவர்களை தீவினுள் அனுமதிக்கத் தடை போடுகிறது. தாக்கச் சொல்கிறது'' என்கிறார் மதுபாலா.
 - பிஸ்மி பரிணாமன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com