சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! - 16

சென்னையிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள பெரியபாளையம் என்ற கிராமத்தில் 1754 இல்   பச்சையப்ப முதலியார் பிறந்தார். இவர் பிறப்பதற்கு  சில மாதங்களுக்கு முன்பாகவே அவருடைய தந்தை இறந்துவிட்டார்.

சென்னையிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள பெரியபாளையம் என்ற கிராமத்தில் 1754 இல்   பச்சையப்ப முதலியார் பிறந்தார். இவர் பிறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே அவருடைய தந்தை இறந்துவிட்டார். மிகுந்த திறமையும் நேர்மையும் உள்ள பச்சையப்ப முதலியார் நிறையப் பணம் சம்பாதித்தார். 1794 இல் தனது  40 ஆவது வயதில்  பச்சையப்ப  முதலியார் இறந்துவிட்டார். அவர் அரும்பாடுபட்டுச்  சேர்த்த  செல்வத்தால் ஒரு கல்லூரி சென்னையில் உருவாக்கப்பட்டது. அதுதான் இந்தியாவிலேயே  முதன் முதலாகத் தோன்றிய கல்லூரி. 

1841ஆம் ஆண்டு முதல் போர்டு ஆஃப் டிரஸ்ட் தொடங்கப்பட்டது.  ஏழை மாணவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் படிப்பதற்காக  மாதம் ரூ.20  வாடகை  கட்டடத்தில்  1842 இல் ஓர் ஆரம்பப் பள்ளி சென்னையில் தொடங்கப்பட்டது.    இதுதான் பச்சையப்பா கல்லூரியின் தொடக்கம். 

1846 இல் ஜார்ஜ் நார்ட்டன் பச்சையப்பா அறக்கட்டளைக்கு வந்து தனது கல்விப் பணியைத் தொடங்கினார். அவர் பச்சையப்பா அறக்கட்டளையின் இரண்டாவது நிறுவுநராவார். 

ஜார்ஜ் நார்ட்டனின்  நினைவாக மிகப் பெரிய ஹால் ஜார்ஜ் டவுன் பகுதியில் உருவாக்கப்பட்டது.  1850 இல் பெரிய விழா நடத்தி  இந்த புதிய கட்டடத்தில் "பச்சையப்பா சென்ட்ரல் இன்ஸ்ட்டிடியூஷன்'  தொடங்கப்பட்டது. இங்கே 600 மாணவர்கள் படிக்கக் கூடிய  12 வகுப்புகள் நடத்தப்பட்டன.  

பச்சையப்பா அறக்கட்டளை மூலமாக  பச்சையப்பா கல்லூரி மட்டும் அல்லாமல், 1967}இல் சி.கந்தசாமி நாயுடு  கல்லூரியும்  1971}இல் செல்லம்மாள் மகளிர் கல்லூரியும்  தொடங்கப்பட்டன. 

1971 ஆம் ஆண்டு முதல்  பச்சையப்பன் டிரஸ்ட்டின் இடத்தின் ஒரு பகுதியையும்,  செல்லம்மாளின் இடம் அடையாறு ஜமீன் வில்லேஜ், பல்லாவரம், கிண்டி எஸ்டேட் 3 இடங்களிலும் சேர்த்து, செல்லம்மாள் மகளிர் கல்லூரி இயங்கி வருகிறது.  பச்சையப்பா ஆண்கள் கல்லூரி காஞ்சிபுரத்தில் இந்த டிரஸ்டின் கீழ் உருவாக்கப்பட்டது.  காஞ்சிபுரத்தில் பச்சையப்பா பெண்கள் கல்லூரியும், கடலூரில் சி.கந்தசாமிநாயுடு மகளிர்  கல்லூரியும்   பச்சையப்பா அறக்கட்டளையின் கீழ்  தொடங்கப்பட்டது.  பச்சையப்ப முதலியாரின் நிலங்கள் பெரும்பான்மையாக கல்விப் பணிக்காகவே சென்னையிலும் காஞ்சிபுரத்திலும்  அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. 

இதேபோன்று, பி.ஏ.சி. ராமசாமி ராஜா மற்றும் அவருடைய குடும்பத்தார் இணைந்து  மக்களுக்காக பல சேவைகள் செய்துள்ளனர்.  1941} 47 வரை ராஜபாளையம் முனிசிபாலிட்டியில் சேர்மனாக இருந்து எண்ணற்ற நிறுவனங்களை உருவாக்கினார்.  ராம்கோ குரூப் மூலமாக எண்ணற்ற நிறுவனங்களை உருவாக்கினார். நிறுவனங்களில் பணிபுரியக் கூடிய ஊழியர்களின் குடும்பத்தின் அடுத்த தலைமுறை நன்றாக வரவேண்டும் என்பதற்காக, வாழ்வாதாரம் மேன்மேலும் சிறப்படைவதற்காக பள்ளிகளையும், பாலிடெக்னிக்குகளையும் மருத்துவவசதிகளையும் ராஜபாளையத்தில் உருவாக்கினார். இந்த பள்ளிகளின் வாயிலாக ராஜபாளையம் மற்றும் அதன் அருகாமையில் உள்ள எண்ணற்ற  ஊர்களில் இருந்து வந்து இங்கு பயின்று இன்று வாழ்க்கையில் ஓர் உச்சநிலையை அடைந்துள்ளார்கள்.  1963 ஆம் ஆண்டு பி.ஏ.சி.ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லூரி  ராஜபாளையத்தில் தொடங்கப்பட்டது.  இந்தப் பாலிடெக்னிக்  இந்தியாவிலேயே டெக்ஸ்டைல் துறை  கல்வியில்   தனிமுத்திரையைப் பதித்து வருகிறது.  இன்றைக்கும்   குமாரசாமி ராஜா டிரஸ்ட் நிறைய ஏழை மாணவர்கள் படிக்க  அவர்களுக்கு கல்வி உதவித்தொகையை  வழங்கி வருகிறது. 


 திருநெல்வேலியில் திருக்குறுங்குடி என்ற ஊரில்  1877 இல் பிறந்த டி.வி.சுந்தரம் அய்யங்கார், வக்கீலாகவும், ரயில்வேயிலும், வங்கியிலும் பணிபுரிந்து, பின்பு அதிலிருந்து விலகி மதுரையில் டி.வி.சுந்தரம் அய்யங்கார் அன்ட் சன்ஸ் நிறுவனத்தை 1911 இல் தொடங்கினார். அதே ஆண்டு மதுரையில் தனியார் பஸ் சேவையையும் தொடங்கினார்.  

அனுபவம் வாயிலாக நிறைய தொழில்நுட்பத் திறமைகளைப் பெற்றார்.  அவர் தொடங்கி வைத்ததுதான் டி.வி.எஸ். சதர்ன் ரோடு வேஸ் லிமிடெட் மற்றும் டிவிஎஸ்  க்ரூப் கம்பெனிகள். இவரும் தொழிலாளர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, அவர்களுடைய குடும்பங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக மதுரையில்   டி.வி.  சுந்தரம் ஐயங்கார் மேல்நிலைப் பள்ளி, சுந்தரம் மேல்நிலைப் பள்ளி என இரண்டு மேல்நிலைப் பள்ளிகளை உருவாக்கினார். 

அதுமட்டுமல்லாது, தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மதுரையில் டிவிஎஸ் மருத்துவமனை ஒன்றை உருவாக்கினார்.  தனது ஊழியர்களை தனது குடும்பத்தின் ஓர் அங்கமாகக் கருதி, அவர்களின் சந்ததிகளின் எதிர்காலம் கல்வியின் வாயிலாக நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக உருவாக்கினார்.  மதுரையைச் சுற்றியுள்ள ஊர்களில் உள்ள மாணவர்கள் இங்கு வந்து பயின்று, மேற்படிப்புக்காக  இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படித்து,  நல்லநிலைமையை அடைய டி.வி.எஸ்.சுந்தரம் ஐயங்கார் குடும்பத்தினர் 1920 களில் வித்திட்ட விதைகள் இன்றும் நல்ல ஓர் ஆலமரமாக வளர்ந்து எண்ணற்ற குடும்பங்களின் தரத்தினை கல்வியின் வாயிலாக உயர்த்தியிருக்கின்றன. 

இதேபோன்று,  கல்விச் சேவை செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர், கருமுத்து தியாகராச செட்டியார். அவர் நெசவாலைத் தொழிலில் ஈடுபட்டிருந்தார்.   சிவகங்கையில் 1893 இல்  பிறந்து,  ஸ்ரீ லங்காவில் படித்து, பின்னர் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்து 14 ஆண்டுகளுக்கும் மேலாக  இந்தத் துறையில் சிறப்புடன் விளங்கி வந்தார். இவரும் இவருடைய தொழில் கிடைத்த வருமானத்தில் ஒரு பகுதியை எடுத்து மதுரையில் தியாகராஜர் கல்லூரி, தியாகராஜர் பொறியியல் கல்லூரி, தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி, தியாகராஜர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, தியாகராஜர் மாடல் ஸ்கூல் தியாகராஜர் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் என பல்வேறு கல்விக்கூடங்களைக் நிறுவினார். தான் சம்பாதித்த பணத்தில் பெரும்பகுதியை நாட்டுமக்களின் நலன் கருதி   அவர்களின் வாழ்வாதாரம் மேம்படவும்  நாட்டின்  தொழில்நுட்ப வளர்ச்சிக்காகவும்  செலவிட்டார்.  

கோயம்புத்தூர் அருகில் கலங்கல் என்றஇடத்தில் 1893 இல் பிறந்த ஜி.டி.நாயுடு மிகச்சிறந்த பொறியியலாளராக விளங்கினார். எலக்டிரிக்கல், மெக்கானிக்ஸ், அக்ரிகல்சர், ஆட்டோமொபைல்  துறைகளில் சிறந்து விளங்கினார். இளம் வயதில் இருந்தே ஒரு மோட்டார்தொழிற்சாலையில் பணியில் சேர்ந்து  பல தொழில்நுட்பங்களை நன்கு தெரிந்து கொண்டார். இளம் வயதிலேயே 
எண்ணற்ற ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு பல புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர்ந்தார்.  இவருடைய கண்டுபிடிப்புகள் அனைத்தும் காட்சிக்கு வைக்கப்பட்டு   கோயம்புத்தூரில் அவிநாசி சாலையில் ஒரு மியூசியமாகவே இயங்கி வருகிறது. 1938 இல் இருந்து தமிழ்நாட்டு இளைஞர்கள் தொழில்நுட்ப நிபுணர்களாக உருவாக வேண்டும் அவர்களுடய தொழில்நுட்ப அறிவினால் நமது நாடு முன்னேறவேண்டும் என்பதற்காக இந்தியாவுக்கு தொழில்நுட்பக் கல்லூரி மிக தேவை என்பதை அறிந்து தன்னுடைய சுயமுயற்சியினால் ஜிசிடி பாலிடெக்னிக் மற்றும் அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியைக் கோயம்புத்தூரில் உருவாக்கினார். இவருடைய மகனையும் தொழிற்கல்வி படிக்கச் செய்தார்.இவருடைய அறிவாற்றலால் உருவான கண்டுபிடிப்புகளைப் பற்றி  அந்த காலகட்டத்தில் கண்டுபிடிப்பதைப் பற்றி யாருமே நினைத்துப் பார்க்க முடியாது.  இன்டர்நெட் இல்லாத, இவ்வளவு தகவல் தொடர்புகள் இல்லாத அந்தக் காலத்திலேயே  அவர் கண்டுபிடித்தவை மிகப் பெரிய சாதனைகளாகும். கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி.நாயுடு கண்டுபிடிப்புகளின் கண்காட்சியை  இன்றைய இளம் தலைமுறை அவசியம் பார்க்க வேண்டும். புதியனவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை அது நிச்சயம் ஏற்படுத்தும்.

திருப்பூரில் டாக்டர் டி.எஸ்.அவினாசி லிங்கம் 1903}இல்  பிறந்தார். திருப்பூர் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் கோயம்புத்தூரில் லண்டன் மிஷினரி ஸ்கூலில் படித்து 1923 இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலைக் கல்வியை முடித்தார். 1926 இல் மெட்ராஸ் லா காலேஜில் சட்டம் பயின்று பட்டம் பெற்றார்.  அப்போது  "வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் ஈடுபட்டார்.  இவர் மெட்ராஸ் ராஜதானியில் கல்வி அமைச்சராகப் பணியாற்றினார். மாணவர்களின் இளம் உள்ளங்கள் இளமையிலேயே செம்மைப்பட வேண்டும் என்பதற்காக,  இவர்தான் முதன்முதலாக சுப்பிரமணிய பாரதியின் கவிதைகளையும் , திருக்குறளையும் 6 ஆம் வகுப்பில் பாடமாகக் கொண்டுவந்தார்.  

பெண்கல்வி மற்றும்  வயோதிகர்கள் நலம் ஆகியவற்றில் மிக அக்கறை கொண்டு நிறைய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 1958 முதல்  64 வரை ராஜ்ய சபை உறுப்பினராகவும்  சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டு ராமகிருஷ்ண மிஷனுடன் இணைந்து ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா என்ற மிகப் பெரிய பள்ளியை 1930 இல் கோயம்புத்தூரில் பெரிய நாயக்கன் பாளையத்தில் 300 ஏக்கர் நிலத்தில் தொடங்கினார்.  இது ரேஸ்கோர்ஸில் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் பெரியநாயக்கன் பாளையத்துக்கு மாற்றப்பட்டது,

இவர் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் உயர்ஜாதியினர் கீழ் சாதியினர் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லாரும் படிப்பதற்கான வழிமுறைகளை  அந்த காலத்திலேயே  உருவாக்கினார். அவினாசிலிங்கம் ஹோம் சயின்ஸ் கல்லூரியை கோயம்புத்தூரில் உருவாக்கினார்.  இவர்  காந்தியின் தத்துவங்களைப் பின்பற்றினார்.  விவசாயம், தொழில், கலாசாரம் மேம்பட வழிவகுத்தார். பெண்கள் முன்னேற்றத்துக்காக ஏற்படுத்திய கல்லூரி அவினாசிலிங்கம் பல்கலைக்கழகமாக உருவாகியது.  

(தொடரும்)

கட்டுரையாசிரியர்: சமூக கல்வி ஆர்வலர் 

www.indiacollegefinder.org

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com