வாங்க இங்கிலீஷ் பேசலாம் 169

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரிடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் மருத்துவருக்கான காத்திருப்போர் அறையில் இருக்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 169

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரிடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் மருத்துவருக்கான காத்திருப்போர் அறையில் இருக்கிறார்கள். நடாஷா எனும் பெண்ணும் மீசைக்காரர் எனும் போலீஸ்காரரும் அங்கு காத்திருக்கிறார்கள். அவர்கள் இடையிலான உரையாடலில் bark up the wrong tree எனும் சொற்றொடரின் அர்த்தம் எனக் கேள்வி வருகிறது. புரொபஸர் விளக்குகிறார்.
புரொபஸர்: கணேஷ், உனக்கு ரக்கூன் தெரியுமா?
கணேஷ்: மரத்தில சின்னதா இருக்குமே அந்த பிராணி தானே? கரடியும் நரியும் பூனையும் கலந்தது போல ஒரு பிராணி.
புரொபஸர்: எப்படிடா இவ்வளவு துல்லியமா சொல்ற? 
கணேஷ்: நேஷனல் ஜியாகிரபி சேனல் முன்னாலே தவமிருக்கிறவன் சார் நான். ரொம்ப க்யூட்டான பிராணி. அழகா ஒரு பொம்மை மாதிரி. 
நடாஷா: Yes so cuddly.
புரொபஸர்: ஆமா. இந்த பிராணிக்கு ஒரு வினோத சுபாவம், அது தன்னோட உணவை தண்ணியில அலம்பித் தான் சாப்பிடும்.
கணேஷ்: சார் அதென்ன cuddly? 
புரொபஸர்: அன்பையும் அக்கறையையும் காட்டும் விதமா கட்டியணைக்கிறது. 
கணேஷ்: ஓ... ஒரு தாய் தன் குழந்தையை அணைச்சுக்கிறது மாதிரி.
புரொபஸர்: Excellent example that - She cuddled her baby as she felt sleepy. காதலர்களும் cuddle பண்றதுண்டு. On the Marina beach, near the waves, I found my friend cuddling and kissing his girlfriend, and I quietly moved away. வழக்கமா கட்டிக்கிறதுக்கும் இதுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. இந்த அணைப்பு ஒரு விதமான தீவிர பிணைப்பை, அதில் கிடைக்கும் சுகத்தை, குழந்தைத்தனமான நெருக்கத்தை காட்டும் அணைப்பு. Canoodle என்றொரு பழைய சொல் உண்டு. மேலே சொன்ன ரெண்டு காரியங்களையும் ஒரு சேர உணர்த்துகிற சொல் இது. குழந்தையை ஆறுதலளிக்க கையிலோ மடியிலோ மெத்துன்னு வச்சுக்கிறதுக்கு தனியா ஒரு சொல் இருக்கு தெரியுமா? Nurse. She nursed the child on her lap as it was crying nonstop. Nurse என்றால் தவிப்பவர்களுக்கு ஆறுதல் அளித்து கவனிப்பது என பொருள். இதில் இருந்து தான் செவிலிகளை nurse என அழைப்பதும் தோன்றியது.
கணேஷ்: சார் நான் செய்தித்தாளில் கொஞ்ச நாட்களுக்கு முன்னால் Indian opening batsman Prithvi Shaw is nursing an ankle injury படிச்சேன். அவர் தன் கணுக்காலை பரிவா கவனிச்சிக்கிறாருன்னு அர்த்தமா?
புரொபஸர்: ஹா... ஹா... அப்படி இல்லடா. ஒரு காயம் ஏற்படும் போது ஓய்வெடுப்பது தான் nursing an injury. இன்னொருத்தரை / இன்னொரு பிராணியை அப்படி மருந்து கொடுத்து கவனிச்சு பாதுகாக்கிறதும் நர்ஸிங் தான். I found a dog with a bleeding ear and nursed it at my shelter. 
கணேஷ்: சார் நர்ஸரி?
புரொபஸர்: இன்னிக்கு நிறைய நல்ல கேள்விகள் கேட்கிறடா. குட். Nurse எனும் வினைச்சொல்லோட இன்னொரு அர்த்தம் ஒரு விசயத்தை அது வளர்ந்து மேம்படுவது வரை அல்லது வெற்றி பெறுவது வரை கவனித்துப் போற்றுவது. ஆகையால் தான் மரக்கன்றுகள், செடிகள் ஆகியவற்றை முளையில் இருந்து வளர்த்து கவனித்து விற்கும் இடத்தை nursery என்கிறோம். அதே போல சின்ன குழந்தைகளை பகல் நேரத்தில் கவனித்துக் கொள்ள பெற்றோர்கள் விட்டுச் செல்லும் இடத்தையும் நர்ஸரி என்கிறோம். அங்கே சிலநேரம் பாடம் கற்றுத் தந்து அவர்களை விளையாடவும் உறங்கவும் கூட வைப்பதுண்டு. இங்கே செடிகளும் குழந்தைகளும் ஒன்று போல கவனிக்கப்படுகின்றன; ரெண்டுமே வளர்ந்து வருவதற்கான பாதுகாப்பையும் கவனிப்பையும் வழங்குகின்றன. செடிகள் வளர்ந்த்தும் நாம் எடுத்துச் செல்கிறோம்; குழந்தைகளை மாலையில் வீட்டு அழைத்து வருகிறோம்.
நடாஷா: What about juvenile detention centers?
புரொபஸர்: நல்ல கேள்வி. Juvenile detention centers எனும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளில் குழந்தைக் குற்றவாளிகள் நல்ல பாடம் கற்று, ஒழுங்காகி வெளி வருவது போலவே மோசமான பழக்கங்களைக் கற்று மேலும் மோசமான குற்றவாளிகளாய் சமூகத்துக்கு திரும்புவதும் உண்டு. So here, Juvenile detention centers turn out to be nurseries of criminals. சில குறிப்பிட்ட குணாதிசயங்கள், இயல்புகள் வளர்த்தெடுக்கப்படுகிற சூழல் மற்றும் நிறுவனங்களையும் இவ்வாறு நர்ஸரி எனக் கூற முடியும்.
கணேஷ்: சார் ஏன் ரக்கூன் பத்தி கேட்டீங்க?
(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com