தயக்கம் ஒரு பாக்டீரியா! ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்.

வருடம் 1890. இங்கிலாந்து நாட்டில் இந்திய இளைஞர் ஒருவர் "பாரிஸ்டர்' பட்டம் படித்துக் கொண்டிருந்தார்.
தயக்கம் ஒரு பாக்டீரியா! ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்.

தன்னிலை உயர்த்து! 22
வருடம் 1890. இங்கிலாந்து நாட்டில் இந்திய இளைஞர் ஒருவர் "பாரிஸ்டர்' பட்டம் படித்துக் கொண்டிருந்தார். அவருக்கு அப்பொழுது வயது இருபத்து ஒன்று. ஒருநாள், அவரது மூத்த நண்பருடன் வெண்ட்னர் என்னும் நகரத்திற்கு சென்றார். அங்கே அவர்கள் தங்கியிருந்த போது "உணவு முறையின் தருமம்' (The Ethics of Diet) என்னும் நூலின் ஆசிரியர் ஹோவர்டு அவர்கள், சைவ உணவின் சிறப்பினைப் பற்றி பேச இவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இளைஞன் பேசுவதற்கு ஆசைப்பட்டார். இருப்பினும் மனதிற்குள் ஒரு தயக்கம். மனதில் இருப்பதை மேடையேறிப் பேசிவிட முடியுமா? என்ற தயக்கம். எனவே, பேச வேண்டியதை தாளில் எழுதி வைத்துக் கொண்டார். மறுநாள் கூட்டத்தில் பேச அவர் அழைக்கப்பட்டார். மேடையேறினார். பேசத் தொடங்கினார். பேச்சு வரவில்லை. எழுதி வைத்ததைப் பார்க்க, கண்ணில் எழுத்துகள் மங்கலாகத் தெரிந்தன. உடம்பெல்லாம் நடுங்கியது. அவரது நண்பர் அதை வாங்கிப் பேசினார். அவருக்கு கைதட்டல் கிடைத்தது. இளைஞன் தனக்குத்தானே வெட்கப்பட்டுக் கொண்டார்.
இளைஞன் தாய் நாடு திரும்பும் காலம் வந்தது. சைவ நண்பர்கள் அனைவருக்கும் ஒரு விருந்தளித்தார். அதில் உரையாற்றுவது என்பது அவசியமாயிருந்தது. நகைச்சுவையாக பேசவும் ஆசைப்பட்டார். ஒருவித தயக்கத்தோடு மேடையேறினார். அனைவரையும் வரவேற்று ஒரு வாக்கியம் மட்டுமே பேசினார். அவரது ஞாபக சக்தி ஸ்தம்பித்தது. தயக்கத்தில் பேச்சே வரவில்லை. அது, இங்கிலாந்து நாட்டு பாராளுமன்றத்தில், உறுப்பினர் அடிஸன் ஆற்றிய முதல் உரையைப்போல் இருந்தது. பாராளுமன்றத்தில் பேச ஆரம்பித்த அடிஸன், "நான் கருதுகிறேன் (I Conceive)' என்று மும்முறை திரும்பத் திரும்பச் சொன்னார். அதற்கு மேல் அவரால் பேச முடியவில்லை. அப்போது மற்றொரு உறுப்பினர் எழுந்து, "இம்மனிதர் மும்முறை கருத்தரித்தார். ஆனால், எதுவுமே வெளியே வரவில்லை' என்றார். அடிஸனைப் போலவே இவ்விளைஞரும் அனைவரின் கேலிக்குள்ளனார். நகைச்சுவையாகப் பேச வேண்டுமென நினைத்தவர், கடைசியில் அனைவரின் நகைப்புக்கு ஆளானார்.
அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்த காலத்தில் தயக்கமும், கூச்சமும் அகன்றது. தனது "சத்தியசோதனை' என்னும் சுயசரிதையில், "கூச்சத்தால் பிறர் நகைப்பதற்கு நான் இடம் கொடுத்துவிட்டேன் என்பதைத் தவிர, அதனால் எனக்கு எவ்வித கெடுதலும் உண்டாகவில்லை. உண்மையில் தயக்கம் எனக்கு நன்மையே செய்திருக்கிறது. பேச்சில் இருந்த தயக்கம், சொற்களைச் சிக்கனமாகப் உபயோகிக்க எனக்கு கற்றுக் கொடுத்தது என்றெழுதினார். அவர் மகாத்மா காந்தியானார். அப்போது கூச்சப்பட்டவரின் பேச்சைக் கேட்க பின்னாளில் மக்கள் கூட்டம் கூட்டமாய் வந்தனர். தயக்கப்பட்டவரின் தரிசனத்திற்காக தரணியே காத்திருந்தது. காந்திக்கு தயக்கம் தலைக்குனிவைத் தந்தது. முயற்சியால் தயக்கத்தை உடைத்தபோது தன்னிறைவை உருவாக்கியது.
"நாமெல்லாம் சாதாரண மனிதர்கள். நமக்கு தயக்கமும், பேராசையும் தான் நோய்கள்' ஏன்றார் அமெரிக்க எழுத்தாளர் எமர்சன். தயக்கம் தாழ்வு மனப்பான்மையின் படிவம். ஆற்றலின் அழிவிடம். இதயத்தின் கல்லறை. அதனைத் தகர்ப்பது தான் வெற்றியின் அடிக்கல்.
தயக்கம் தனது ஆற்றலை மறைக்கும். தன்னையறிதலை தடுக்கும் சக்தி தயக்கமே. சுக்ரீவனின் ஆணைப்படி, சீதா தேவியைத் தேடி எட்டுத் திசைகளிலும் வானரப் படைகள் பறந்தன. தென்திசையில் தேடிய வீரர்களில் அங்கதனும், நீலனும், அனுமனும் அடக்கம். அவர்கள் சீதா தேவியைத் எங்கெங்கு தேடியும் காணாததால் சோர்வுற்றனர். வெறுங்கையுடன் திரும்பிச் செல்வதற்கும் தயக்கம். ஒரு சிறு தயக்கம், ஒருவனின் வாழ்வினையே பாழாக்கும். தயக்கத்தால் தங்கள் உயிரையும் விடத் தயாரானார்கள். தயக்கம் மனிதனை அழிக்கும் சக்தி. நல்ல வேளை, ஜாம்பவான் வந்தார். இராவணன் சீதையை கடத்திச் சென்ற திசை நோக்கி மட்டும் காட்டாமல், அனுமனின் தசை வலிமையையும் எடுத்துரைத்தார். அதனால், அனுமன் உடல் வலிமையோடு மன வலிமை கொண்டார். ஒற்றைத் தாவலில் அனுமன் இலங்கையை அடைந்தார். தயக்கத்தை தனிமைப்படுத்த தன்னையறிதலே தீர்வு.
தயக்கம் மனிதனைக் தனிமைப்படுத்தி விடுகிறது. ஆசிரியர் கேட்டும் கேள்விகளுக்கு தெரிந்த பதிலைக் கூட சொல்லத் தயங்குவதுண்டு. காரணம், சொல்வதில் ஏதாவது தவறு ஏற்பட்டு, அதனால் சக மாணவர்களும் கேலி செய்வார்களே என்ற எண்ணம் மட்டுமே. வயிறு நிறையப் பசி இருந்தும் விருந்தில் சரியாக உண்ணாமல் வெளிவருவதும், தயக்கத்தின் வெளிப்பாடே. தன்னைப் பற்றி எண்ணுவதை விட நாம், நம்மைப் பற்றி நினைப்பதை விட, பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ? என்ற எண்ணம் கொண்டவர்கள் தயக்கமானவர்கள்.
தயக்கம் ஒரு பாக்டீரியா. அது அளவோடு இருப்பது ஆரோக்கியம். அதை அளவுக்கு அதிகமாக அனுமதித்தால், அது ஆளையே அழித்துவிடும். முகம் அகத்தின் பிரதிபலிப்பு போல், தயக்கம் சுற்றத்தின் பிரதிபலிப்பு. "குழந்தைகளிடம், "கேள்வி கேட்காதே! சும்மா இரு!' என்ற அதட்டல் மொழிக்கும், "இது கூடவா தெரியாது உனக்கு?' என்ற ஏளன வார்த்தைகளும் குழந்தைகளில் தயக்க உணர்வை ஆழமாய் விதைக்கும். புதிய முயற்சிகள் எடுக்கும்போது, "அது தோல்வியில் முடிந்தால் என்ன செய்வாய்?' என்ற ஆரோக்கியமற்ற கேள்விகள் தயக்கத்திற்கு எரிகின்ற நெருப்பில் எண்ணெய்யைச் சேர்க்கும். மொத்தத்தில் சமூகத்தின் எதிர்மறைப் பிரதிபலிப்பால் தயக்கத்தோடு இருக்கும் ஒரு குழந்தை, ஏக்கத்தோடு வளர்ந்து, வாழ்வில் ஏற்றங்களை எட்டிப் பார்க்க முடியாமலே போய் விடுகிறது.
புதியன முனையும் போதும், புதியவர்களைச் சந்திக்கும் போதும், சிறு தயக்கம் அவசியமே. அது ஆராய்வதற்கு அவசியம். அஸ்திவாரத்திற்காக அல்ல. முடிவெடுக்கும்போது, ஒரு கணப்பொழுது தயக்கம், வாழ்க்கை முழுவதும் சங்கடத்தை ஏற்படுத்தி விடும்.
தீமை செய்வதற்கு தயக்கம் அவசியம். மகாபாரதப் போரின் ஆரம்ப நாள். பாண்டவர்கள் ஒருபுறம், கெüரவர்கள் மறுபுறம். பாண்டவர்களின் நம்பிக்கை நட்சத்திரம் "வில்லுக்கு விஜயன்' என்றழைக்கப்பட்ட அர்ச்சுனன். அவருக்கு தேரோட்டியாக பகவான் கிருஷ்ணர். அர்ச்சுனன் வில்லேந்தி போரிட ஏறிட்டுப் பார்க்க, எதிர் முனையில் உறவுகளின் முகங்கள். நாட்டை அடைவதற்காக பாட்டனைக் கொல்வதா? ஏற்றம் பெறுவதற்காக சுற்றத்தை சாய்ப்பதா ? என்ற கேள்விகணைகளால், கணைதொடுக்கக் தயங்கினான். இங்கு தயக்கம் அர்ச்சுனனின் திறமை மீது சந்தேகத்தால் உருவானதல்ல. உறவுகளை வெல்வது தருமமா? என்ற சந்தேகம் தான்.
தயக்கத்தின் காரணம் வினவ, அர்ச்சுனனின் கேள்விக்கணைகளுக்கு, கிருஷ்ணரின் பதில்கள் "பகவத் கீதையாய்' மண்ணில் வலம் வருகிறது. முடிவு, எதிரே இருப்பவர்கள் எல்லாம் "ஆன்மாவைப் போர்த்திக்கொண்டிருக்கும் உருவங்கள்' என்ற கிருஷ்ணரின் பதில்களில் தயக்கம் மறைந்தது. அர்ச்சுனனின் அம்பில் ஆன்மாக்கள் விடுதலை பெற்றன. தயக்கத்தை தாண்டியபோது அர்ச்சுனனின் காண்டீபத்தின் ஆற்றல் உலகமறிந்தது. நற்செயலுக்கு தயக்கமே எதிரி. தயக்கம் ஒரு கவசம் போன்றது. அதைப் போரில் பயன்படுத்தி பாதுகாத்துக் கொள்ளலாம். எப்பொழுதும் அணிந்திருப்பது சுமையாகவே அமையும். 
"பயம் தயக்கத்தைத் தருகிறது. தயக்கம்தான் பயத்தை உண்மையாக்குகிறது' என்கிறார் அமெரிக்க நடிகரும், பாடலாசிரியருமான பேட்ரிக் ஸ்வேய்ஸ். ஒரு மன்னருக்கு இரண்டு கிளிக்குஞ்சுகளைப் பரிசாய்த் தந்தார் ஒர் அறிஞர். அவற்றை அரண்மனை வளாகத்திலுள்ள மரத்தில் வளர்த்து வந்தனர். சில நாட்களில் ஒரு கிளி பறக்க ஆரம்பித்தது. மற்றொரு கிளி பறக்கத் தயங்கியது. பறக்கும் கிளி மகிழ்ச்சியாய் இருக்க, தயங்கிய கிளியோ தயக்கம், வாழ்வையே பாழாக்கும் என்ற வரிகளுக்கேற்ப ஒர் அச்சத்துடனே வாழ்ந்தது. விலங்கின மருத்துவர் சோதித்துப் பார்த்துவிட்டு "இக்கிளிக்கு எந்தக் குறையுமில்லை, ஊனமுமில்லை. ஆனால் ஏன் பறக்க மறுக்கிறது எனப் புரியவில்லை?' என்றார். 
நாட்கள் கடந்தன. பல முயற்சிகளெடுத்தும் கிளி பறக்கவில்லை. மன்னரின் முரசு முழங்கியது. "இக்கிளியை பறக்க வைப்பவர்களுக்கு தங்கக் காசுகள் பரிசு' என்று அறிவித்தார் மன்னர். பலரும் முயன்றனர். தோல்வி கண்டனர். இறுதியில் ஒரு விவசாயி வெற்றி கண்டார். மன்னரிடம் பரிசு பெற்றபோது, "எப்படி அக்கிளியைப் பறக்க வைத்தாய்?' என்று கேட்டார் மன்னர். அதற்கு அந்த விவசாயி, "மன்னா! கிளி பறப்பதற்கு பயந்து கொண்டு, மரக்கிளையைப் பிடித்துக் கொண்டு, தயக்கத்தோடு இருந்தது. அக்கிளையை வெட்டினேன். கிளிக்கு வேறு வழி இல்லை. பறக்கத் தொடங்கியது. அதற்கு எல்லையில்லா வானமே வீடானது' என்றார். தயக்கத்தை தாங்கும் மனநிலையை அழித்தால், மகிழ்வாய்ப் பறக்கலாம்.
தயக்கம் பயத்தின் முதல் வீடு !
துணிச்சலுக்கு எல்லையில்லாத வானமே வீடு !
(தொடரும்)
கட்டுரையாசிரியர்:
காவல்துறை துணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com