சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 24 - தா.நெடுஞ்செழியன்

திருநெல்வேலியில் எண்ணற்ற பள்ளிகள் கிறிஸ்தவ மிஷனரிகளால் வளர்க்கப்பட்ட காலத்தில் இந்து சைவ குலம் ( ஹிந்து சைவ கிளான்) என்ற அமைப்பு திருநெல்வேலியில் ஒரு பள்ளியை உருவாக்க வேண்டும்
சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 24 - தா.நெடுஞ்செழியன்

எம்.டி.டி. இந்துக் கல்லூரி, திருநெல்வேலி

திருநெல்வேலியில் எண்ணற்ற பள்ளிகள் கிறிஸ்தவ மிஷனரிகளால் வளர்க்கப்பட்ட காலத்தில் இந்து சைவ குலம் ( ஹிந்து சைவ கிளான்) என்ற அமைப்பு திருநெல்வேலியில் ஒரு பள்ளியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், 1859-ஆம் ஆண்டு ஒரு பள்ளியைத் தொடங்கியது. அது ஆங்கிலோ - வெர்னாகுலர் பள்ளி என்ற பள்ளியாகும். இந்தப் பள்ளி வீரராகவபுரம் என்ற இடத்துக்கு (தற்போது திருநெல்வேலி ஜங்ஷனுக்கு அருகில்) 1861-ஆம் ஆண்டு மாற்றப்பட்டது. "இந்து கலாசாலை' என்று பெயர் மாற்றம் பெற்றது. இந்தப் பள்ளியின் முதல்வராகப் பணியாற்றிய பி.சுந்தரம்பிள்ளையின் முயற்சியினால் இந்தப் பள்ளி செகண்ட் கிரேட் காலேஜ் ஆக - "இந்து கல்லூரி'யாக - மாறியது. 
1908 ஆம் ஆண்டு "தி எஜுகேஷன் சொசைட்டி' என்ற பெயரில் திருநெல்வேலியில் தொடங்கப்பட்ட அமைப்பின் நிர்வாகத்தின் கீழ் இந்துக் கல்லூரி முதல் தர கல்லூரியாக 1924-ஆம் ஆண்டு மாறியது. ஜாதி, மத, இன, பேதங்களைத் தாண்டி திருநெல்வேலி மாவட்டத்தில் தனி முத்திரையை இந்த கல்லூரி பதித்தது. 
1929-ஆம் ஆண்டு உலகப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த நிலையில் இந்தக் கல்லூரிக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. ராவ் சாகிப் பேராசிரியர் அலெக்சாண்டர் ஞானமுத்து என்ற கிறிஸ்துவ முதல்வரின் தனி முயற்சியினாலும், கல்லூரியிலுள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மதுரையிலிருந்த சில புரவலர்களின் முயற்சியினாலும் இந்தக் கல்லூரி நிதி நெருக்கடியைத் திறமையாகச் சமாளித்தது. 
1936-ஆம் ஆண்டு மதுரையைச் சேர்ந்த திரவியம் பிள்ளை 1 லட்சம் ரூபாயை நன்கொடை கொடுத்தார். அந்த காலத்தில் அது மிகப் பெரிய தொகை. அவருடைய வேண்டுகோளுக்கிணங்க இந்தக் கல்லூரி "மதுரை திரவியம் - தாயுமானவர் இந்துக் கல்லூரி' (THE MADURAI DIRAVIYAM THAYUMANAVAR HINDU
 COLLEGE) என்று பெயர் மாற்றப்பட்டது. 
பின்னர் இந்தக் கல்லூரி 2004-ஆம் ஆண்டு 125 ஆண்டுகளை நிறைவு செய்ததைக் (POST CENTENARY SILVER JUBLIEE) கொண்டாடியது. இக்கல்லூரி 150 ஆண்டை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. 
இக்கல்லூரி திருநெல்வேலியில் கல்விக்கென தனிமுத்திரையைப் பதித்து லட்சக்கணக்கான மாணவர்களை உலக அளவில் கல்வியின் வாயிலாக உயர்ந்த நிலையை அடையச் செய்தது. இந்தக் கல்லூரியின் முக்கிய குறிக்கோள் லத்தீன் மொழியில் உள்ள AGE QUOD AGIS - என்பதாகும். இதன் பொருள், "எந்தச் செயலைச் செய்தாலும் அதை நன்றாகவும், முறையாகவும் செய்ய வேண்டும்' என்பதே. இந்தக் குறிக்கோளுக்கிணங்க இந்தக் கல்லூரி நிகழ்த்திய சாதனைகள் போற்றுதலுக்குரியது. பாராட்டுக்குரியது. 
1878-ஆம் ஆண்டு இக்கல்லூரியின் முதல் முதல்வராக இருந்த பேராசிரியர் பி.சுந்தரம்பிள்ளையின் வரலாற்றை இந்த இடத்தில் குறிப்பிடுவது அவசியம். 
பேராசிரியர் பி.சுந்தரம்பிள்ளை கேரள மாநிலத்தில் ஆலப்புழாவில் 1855-ஆம் ஆண்டு பிறந்தார். இளமையிலேயே தேவாரம், திருவாசகம், சமய வழிபாட்டு நூல்களைக் கசடறக் கற்றார். இவருடைய தமிழாசிரியராக விளங்கியவர் நாகப்பட்டினம் நாராயண சாமி பிள்ளை. 1876-ஆம் ஆண்டு பி.ஏ., தேர்வில் வெற்றிபெற்றார். 1877-இல் தனது ஆசிரியப் பணியை திருநெல்வேலியில் இருந்த ஆங்கிலத் தமிழ்க் கல்விச்சாலையில் தலைவராக 2 ஆண்டுகள் பணியாற்றி, அக்கல்விச்சாலை இந்துக் கல்லூரியாக உயர்வதற்கு உறுதுணையாக இருந்தார். 
இவர் 19-ஆம் நூற்றாண்டின் தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும், மிக முக்கியப் பங்காற்றினார். இவர் ஐரோப்பிய தத்துவ மரபை தமிழ்த் தத்துவங்களோடு இணைத்து - ஒப்பிட்டு - புதிய கல்விப் புரட்சியை உருவாக்கினார். இவரே எம்.டி.டி. இந்துக் கல்லூரியின் முதல் முதல்வராக 1878 - 79 ஆம் ஆண்டு பணியாற்றினார். 
1885 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் சைவ பிரகாச சபையை உருவாக்கினார். நூற்றொகை விளக்கம் என்று அறியப்படுகிற "சாத்திர செüகரியம்' என்ற நூலை வெளியிட்டார். 1891 ஆம் ஆண்டு இவர் எழுதிய மனோன்மணீயம் என்பது ஒரு நாடக நூலாகும். தமிழில் தோன்றிய நாடக இலக்கியங்களில் இதுவே முதல் நாடக நூலாகும். முழுவதும் செய்யுள் நடையில் அமைந்துள்ள இந்நூல், பேராசிரியர் சுந்தரம்பிள்ளையின் தமிழ்ப் புலமையை, ஆர்வத்தை எடுத்துக் காட்டுகிறது. இந்நூலே பின்னாளில் மனோன்மணியம் பி.சுந்தரம்பிள்ளை என்று அவர் அழைக்கப்பட காரணமாக இருந்தது. 
திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவ ஆசிரியராகச் சேர்ந்தார். 1880-இல் எம்.ஏ., பட்டம் பெற்றார். அக்கல்லூரியில் தத்துவத்துறைப் பேராசிரியராக இருந்த ஹார்வி என்பவருடன் இவருக்கு நல்ல நட்பு கிடைத்தது. தனது மனோன்மணீயம் நூலை அவருக்கு சுந்தரம்பிள்ளை சமர்ப்பணம் செய்தார். 3 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய பிறகு திருவனந்தபுரம் அரசர் அரண்மனையில் வருவாய்துறை தனி அலுவலராக நியமிக்கப்பட்டார். 1885-இல் டாக்டர் ஹார்வி துறைப் பேராசிரியர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றபோது சுந்தரம் பிள்ளையைத் தனது பதவிக்குப் பரிந்துரைத்தார். இதனை ஏற்று மீண்டும் திருநெல்வேலி அரசர் கல்லூரியில் தத்துவத்துறை தலைமைப் பேராசிரியராகப் பணியாற்றினார். 
கல்வெட்டுத்துறையில் திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சியில் ஈடுபாடு கொண்டு அந்த ஆராய்ச்சியின் முடிவில் அதை நூலாக 1894 ஆம் ஆண்டு வெளியிட்டார். பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வினை ஆங்கிலத்தில் எழுதி, சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் முதலில் வெளியிட்டார். மனோன்மணீயத்தில் இடம் பெற்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலான "நீராருங் கடலுடுத்த' என்ற பாடல் தமிழ்நாடு அரசினால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அறிவிக்கப்பட்டது. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை 1897-ஆம் ஆண்டு தனது 42 வயதில் காலமானார். இவருடைய நினைவாக திருநெல்வேலியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. 
டாக்டர் ஜான் ஸ்கடர் சீனியர் (ஒர்ட்ய் நஸ்ரீன்க்க்ங்ழ் நழ்)என்பவர் 1793-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் உள்ள ஃப்ரீ ஹோல்ட் என்ற ஊரில் பிறந்தார். இவர் பின்னர் நியூயார்க் காலேஜ் ஆஃப் பிஸிஸியன் அண்ட் சர்ஜன்ஸ் கல்லூரியில் 1813-இல் தமது மருத்துவப் படிப்பை முடித்தார், மருத்துவர் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கினார். அந்த நாட்களில் அதிக அளவு மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால், மருத்துவர்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதுமட்டுமல்லாமல், இவர் மிக கனிவோடும், திறமையோடும் நோயாளிகளைக் கவனித்தவிதம், அதனால் அவர் ஆண்டிற்கு 2 ஆயிரம் டாலர் (1815 களில்) சம்பாதிக்கும் மருத்துவரானார். 
1819-ஆம் ஆண்டு ஒரு நோயாளியைச் சந்திக்க அவர் வீட்டுக்கு ஸ்கடர் சென்றபோது, அந்த வரவேற்பறையில் உள்ள துண்டுத்தாளில் 60 கோடி மக்களின் மன மாற்றத்துக்கு கிறிஸ்துவ சபைகள் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கண்டறிந்தார். அதன் மூலம் இந்தியா மற்றும் இலங்கையில் வாழும் மக்களுக்கு மருத்துவ வசதி இல்லாத சூழ்நிலை இருந்ததை அறிந்து அவர் தனது தந்தையின் கடுமையான எதிர்ப்பையும் மீறி தனக்குக் கிடைத்த செல்வம், புகழ் எல்லாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டு, வறுமையை ஏற்றுக் கொண்டு, கடல் கடந்து, 1819-இல் இலங்கைக்கு வந்து பணியாற்றினார். இவருடைய மனைவி இவருடைய தீர்மானத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு தனது இரண்டு வயது மகளுடன் இலங்கைக்கு வந்து சேர்ந்தார். அமெரிக்க - சிலோன் மிஷனின் கீழ் யாழ்ப்பாணத்தில் முதல் மேற்கத்திய மெடிகல் மிஷனை உருவாக்கினார். அதன் மூலம் பெரிய மருத்துவமனை அங்கே தொடங்கப்பட்டது. 
இவர் யாழ்ப்பாணத்தில் 1819-இல் இருந்து 1836 வரை பணியாற்றினார். அங்குள்ள மக்களுக்கு நோய்களில் இருந்து பாதுகாப்பளித்தார். காலரா, மலேரியா, பிளேக், மஞ்சள் காமாலை போன்ற நோய்களில் இருந்து மக்களைக் காப்பாற்றினார். 17 ஆண்டுகள் யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய பிறகு, தமிழை நன்கு கற்றுக் கொண்டு யாழ்ப்பாணம் பகுதியில் 23 பள்ளிகளை நிறுவினார். அவர்களுக்கு 8 ஆண் குழந்தைகளும் 2 பெண் குழந்தைகளும் பிறந்தன. அதுமட்டுமல்லாமல், 16 ஆண் குழந்தைகளையும் 3 பெண்குழந்தைகளையும் தத்து எடுத்து வளர்த்தார். 
பின்னர் 1836-ஆம் ஆண்டு சென்னைக்கு மாற்றப்பட்டு, மருத்துவப் பணிக்காக சென்னையிலிருந்து காஞ்சிபுரம், வாலாஜா போன்ற பகுதிகளில் அடிக்கடி பயணம் செய்து வந்தார். 1842 -ஆம் ஆண்டு உடல் நலமின்மை காரணமாக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பினார். 1847 ஆம் ஆண்டு மதுரையில் தங்கி 2 ஆண்டுகள் மருத்துவப் பணியை மேற்கொண்டார்.
கிறிஸ்துவ மிஷனரியில் சாதி பாகுபாடு பார்க்கும் முறையை எதிர்த்து அனைவரும் சமம் என்ற கொள்கையை நிலைநாட்டினார். இவர் 1855-ஆம் ஆண்டு உயிர்நீத்தார். 
இவருடைய பரம்பரையைச் சேர்ந்த இடா சோபியா ஸ்கடர் டிசம்பர் 9, 1870 இல் பிறந்தார். இவர் டாக்டர் ஜான் ஸ்கடர் சீனியரின் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவர். இவருடைய இளம் வயதிலேயே இந்தியப் பெண்களின் நிலையை அறிந்து அவர்களுக்கு ஏற்படும் கொடுமையான நோய்களாகிய பிளேக் , காலரா, லெப்ரஸி ஆகியவற்றை எதிர்த்துப் போராட தன்னை அர்ப்பணித்தார். 1918 ஆம் ஆண்டு இவர் ஆரம்பித்த டீச்சிங் ஹாஸ்பிடல் இன்றைக்கு உலகிலேயே சிறந்த கல்வி நிறுவனமாக கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிட்டலாக வேலூரில் உள்ளது. 
(தொடரும்)
கட்டுரையாசிரியர்: சமூக கல்வி ஆர்வலர் 
www.indiacollegefinder.org
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com