கடவுள் சொல்லும் கட்டளை: சுகி. சிவம்

இரண்டு இளைஞர்கள் காட்டு வழியே நடந்து போய்க் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஓர் இளைஞர் குனிந்து, தமது கால் ஷூவின் லேஸ் கயிற்றை இறுக்கிச் சரிபார்த்துக் கொண்டார்.
கடவுள் சொல்லும் கட்டளை: சுகி. சிவம்

நீ... நான்... நிஜம்! 
இரண்டு இளைஞர்கள் காட்டு வழியே நடந்து போய்க் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஓர் இளைஞர் குனிந்து, தமது கால் ஷூவின் லேஸ் கயிற்றை இறுக்கிச் சரிபார்த்துக் கொண்டார். பக்கத்தில் கூட வந்த இளைஞர், "ஏன் ஷூ நாடாவை திடீரென்று சரி செய்து கொள்கிறாய்?' என்று வியப்புடன் கேட்டார். "பக்கத்தில் எங்கேயோ புலி உறுமுவது போல் லேசான ஒலி கேட்டது. ஓட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் கால் ஷூ சரியாக இருக்க வேண்டுமே என்று நான் சரி செய்து கொண்டேன்' என்றார். 
எச்சரிக்கை உடன் வந்த நண்பர் சிரித்துக் கொண்டு, "மிஸ்டர்... நீங்கள் என்னதான் வேகமாக ஓடினாலும் புலியை விடவா வேகமாக ஓடித் தப்பிக்க முடியும்?' என்று கிண்டல் செய்தார்.
"தப்பிப்பதற்குப் புலியை விட வேகமாக ஓட வேண்டிய அவசியம் இல்லை, பிரதர். உன்னைவிட வேகமாக ஓடினாலே போதுமானது' என்றார் படு கெட்டிக்கார அந்த எச்சரிக்கை இளைஞர்.
இது வேடிக்கை கதைதான். ஆனால் மனிதர்கள் ஒரே தரத்தில், திறத்தில் இருப்பதில்லை. சிலர் கூடுதல் திறமைசாலிகளாக இருக்கிறார்கள் என்பதை விளக்க இந்தக் கதை உதவும் என்று நம்புகிறேன். சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கைப் பயிலரங்குகள், பணிமனைகள் நடத்தும் பலரும், அப்படி புதிதாக என்ன சொல்லிக் கொடுத்து விடுகிறார்கள். நீங்கள் உலகில் உள்ள சுயமுன்னேற்றப் புத்தகங்களை எல்லாம் வாங்கிப் படித்தாலும் அதிகபட்சம் ஒரு நூறு விஷயங்கள் தான் திரும்பத் திரும்ப போதிக்கப்பட்டிருக்கும். முயற்சி செய். காலத்தை விரயமாக்காதே. திட்டமிடு. உடலைப்பேணு. கவனமாக இரு. எச்சரிக்கையாகச் செயல்படு. ஒத்தி போடாதே.. இப்படி ஒரு சில யோசனைகள்... கட்டளைகள்... அறிவிப்புகள் தான் திரும்பத் திரும்ப எழுதப்படுகின்றன. உதாரணங்கள், முன்னேறிய நபர்களின் பெயர், விளக்கக் கதைகள், இவை வேண்டுமானால் மாறலாமே ஒழிய, உள்ளடக்கம் ஒன்று தான். இவை யாவுமே நமக்கே தெரிந்தவைதான். ஆனாலும் இவற்றை நடைமுறைப்படுத்தி சிகரம் தொட பலராலும் ஏன் முடிவதில்லை? இந்தக் கேள்விக்கான விடை சுயமுன்னேற்றப் புத்தகங்களில் உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு வெகுகுறைவு. அதனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்:
நாம் அனைவரும் சிறைப்பட்டிருக்கிறோம். உடம்பு என்றொரு சிறை. மனம் என்றொரு சிறை. உடம்பு ஜீன்களால் வடிவமைக்கப்பட்டது. வாங்கி வந்த வரத்திற்கேற்பவே வசமான உடம்பு கிடைக்கிறது. இந்தத் தடையைத் தகர்க்கத் தெரிய வேண்டும். ஸ்டீபன் ஹாக்கிங்கின் உடம்பை விட மோசமான உடம்பு ஒருவருக்கு வாய்த்து விடுமா என்ன? மனுஷன் அந்தக் களபுளா உடம்பின் உள்ளிருந்தே பிரபஞ்ச ரகசியங்களின் மர்ம முடிச்சுகளை அவிழ்த்து சாதனை படைக்கவில்லையா? "உடம்பு நானல்ல' என்பது வெறும் ஆன்மிக கோஷம் அன்று. சிறையுடைக்க விரும்பும் ஒவ்வொருவரும் உணர்ந்திருக்க வேண்டிய உயிர் மந்திரம். ஜீன்களால் நெய்யப்பட்ட உடல், தன் சொந்த இயல்புகளில் நம்மைச் செலுத்தவே விரும்புகிறது. அதனாலேயே உலகில் கோடிக்கணக்கான மக்கள் எந்த உயர்வும் அடையாமல் உடல் வழியிலேயே, விலங்காகப் பிறந்து, விலங்காக வாழ்ந்து, விலங்காகச் சாகிறார்கள். "வாலி வதம்' பற்றிய கம்பன் கவிதைகளில் காமம் சார்ந்த தன் செயலை நியாயப்படுத்தும் வாலி, "நான் விலங்கு.. எனக்கு அண்ணன் மனைவி, தம்பி மனைவி என்னும் ஒழுக்க எல்லைகள் இல்லை' என்ற Defence வாதம் எடுத்து வைக்கும் போது, "நீயா விலங்கு. இத்தனை தர்க்க நியாயம் தெரிந்து பேசும் நீ விலங்கலாமை விளங்கிய தன்றோ?' என்று இராமன் பதில் பேசுவதாகக் கம்பன் பாட்டெழுதுகிறார். இந்தக் கருத்து மிக முக்கியம். பெருவாரியான மனிதர்கள் உடல்வழி உந்துதல் மூலமே உள்ளுணர்வு இயக்க இயங்கி, ஏகப்பட்ட பிழைகளைக் கூச்சமின்றி நிகழ்த்துகிறார்கள். அதனை மனித அறிவு கொண்டு நியாயப்படுத்தவும் வெறித்தனமாக வாதாடுகிறார்கள். உடல்வழி நாம் விலங்குதான் என்றாலும் விலங்கைக் கடக்க வேண்டிய பொறுப்பு உடையவர் என்பதைப் பலரும் ஒப்புக்கொள்வதே இல்லை. கொரில்லாக்கள் மிகப் பெரிய அந்தப்புரத்துடன் (பலபெண்கள் மோகம்) இருப்பதற்கும் சிம்பன்ஸிகள் கள்ளத் தொடர்பு வைத்துக் கொள்வதற்கும் ஜீன்கள் தான் காரணம் என்கின்றனர் விஞ்ஞானிகள். மனிதனுக்கும் இதே வாதம் பொருந்தும். ஆனால் மனிதன் விலங்கல்ல - இன்னும் கூர்மையாகச் சொன்னால் விலங்கு மட்டுமல்ல... விலங்கு என்னும் சிறை கடந்து மேலேறி வருகிற பரிணாம உயிர் மனிதன். எனவே தமது விலங்கின் பிழைகளை மனிதகுலம் நியாயப்படுத்திக் கொண்டே இருக்க முடியாது. ஆனால் மனிதர்கள் இதையே கூச்சம் இல்லாமல் செய்கிறார்கள். "விலங்கலாமை விளங்கியது' என்று வாலியிடம் இராமன் சொன்ன சொல் மனிதகுலம் நோக்கி கடவுள் சொல்லும் கட்டளை என்றே கருதவேண்டும். 
ஓரினச்சேர்க்கை குறித்து உச்சநீதி மன்றம் தீர்ப்புரைத்தது நினைவிருக்கலாம். வெகுகாலம் வரை இது சகவாசதோஷம்; சமூகம் கொடுத்த மன வியாதி; மனசின் திருகல் என்றே பலரும் கருதிக் கொண்டிருந்தோம். ஆனால் மேலைநாட்டு விஞ்ஞானிகள் பாலினப் பொறாமை, ஓரினச் சேர்க்கை யாவுமே ஜீன்களின் படியெடுப்பில் நிகழ்ந்த அச்சுப் பிழைகளின் வெளிப்பாடு என்று விளங்கப்படுத்திவிட்டனர். இதைப் புரிந்து கொண்டு இது நேர்ந்த பிழை... கடக்கப்பட வேண்டியது என்கிற புதுப்பயணம் மேற்கொள்ள மனிதனால் முடியும். விலங்கால் முடியாது. அருணகிரி நாதரின் முன் வாழ்க்கை விலங்குகளுக்கும் சாத்தியம், ஆனால் பின் வாழ்க்கை விலங்குகளுக்குச் சாத்தியம் இல்லை. மனிதனுக்கு மட்டுமே ஞானம் அடைதல்' உள்ளொளி பெறுதல் சாத்தியம் என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். 
மனிதனது நடத்தைக்கு என்ன காரணம் என்பது பற்றிய ஆராய்ச்சி ஓயாமல் உலகில் நடந்து கொண்டேதான் இருக்கிறது. ஆளுக்கொரு காரணத்தைச் சொல்லுகிறார்கள். குறிப்பிடத்தக்க சில காரணங்களை மட்டும் உங்கள் முன் வைக்கிறேன். கடந்த இரண்டு கட்டுரைகளில் நான் ஓயாமல் புகழ்ந்து தள்ளுகிற "மனித ஜினோம்' புத்தகத்தில் இருந்தே தருகிறேன். இது ஓர் அற்புதமான புத்தகம். தயவு செய்து புரிகிறதோ இல்லையோ ஒரு முறைக்குப் பலமுறை படித்து விளங்கிக் கொள்ள வேண்டுகிறேன். பிறப்பு மட்டுமே நடத்தை வேறுபாட்டுக்குக் காரணம் என்று சிலர் சாதிக்கிறார்கள். வளர்ப்பு மட்டுமே காரணம் என்று சிலர் வாய்கிழிய வாதிடுகின்றனர். இரண்டுமே வலிமையானவை என்று அறிய வேண்டாமா? ஒரே அமைப்புடைய இரட்டையரைப் பிரித்துப் பிரித்து வெவ்வேறு சூழலில் வளர்த்தாலும் அவர்கள் நடத்தைகள் பெரும்பாலும் ஒன்றாக இருந்த நிகழ்வுகள் உண்டு. மிகச் சிறந்த பெற்றோர்களால் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட பிள்ளைகள், என்னதான் வளர்ப்பு முறை ஒன்றானாலும் வேறுவேறு தன்மையை வெளிப்படுத்திய நிகழ்வுகளும் உண்டு. சரி... இப்போது மனித குல நடத்தை வேறுபாடு பற்றிய பல சமூக அறிவியல் அறிஞர்கள் பார்வையைப் புத்தகத்தில் இருந்து அப்படியே தருகிறேன். பேரா.க. மணி சொல்கிறார்.
"ஒவ்வொருவரும் தனித்தனி காரணிகளை முன்வைத்து அவைதான் மனிதரின் நடத்தைகளை நிர்ணயிக்கின்றன என்று அவர்களுக்குள் பிரிந்து நிற்கிறார்கள். 
1. சிக்மன் ஃபிராய்டு (Freud - parental determinism) பெற்றோர் வளர்ப்பு.
2. கார்ல் மார்க்ஸ் (marx - Socioecononomic determinism) 
சமூக பொருளாதாரம். 
3. லெனின் (Lenin - Political determinsm) - அரசியல் சூழல். 
4. ஃபிரான்ஸ் போயஸ் (Franz Boas)- சகவாசம். 
5. மார்கரேட் மீட் (Margeret Mead)- கலாச்சாரம்.
6. ஜான்வாட்சன் மற்றும் ஸ்கின்னர் (John Watson-B.H. Skinner)
7. எட்வர்ட் சாப்பிர் (Edward Sapir)- தாய்மொழி
8. பெஞ்சமின் ஓர்ஃப்- Linguistic determinism (மொழித்தாக்கம்) 
இவ்வாறு சமூக அறிவியல் வல்லுநர்கள் ஆளுக்கொரு காரணத்தைச்சுட்டிக்காட்டி அதுதான் மனித நடத்தைகளை நிர்ணயிக்கின்றன என வாதிடுகிறார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், விலங்குகளுக்கு உள்ளுணர்வுகள் தான் காரணி, மனிதருக்கு உள்ளுணர்வு இல்லை; புறத்தூண்டுதல்கள் தான் காரணி, இதுவே அவர்களது முடிவான கருத்து.
இப்போது புத்தகத்தை விட்டுவிட்டு நம்முடைய அறிவைக் கொண்டு முடிவு செய்வோம். நடத்தை வேறுபாடு குறித்து அறிஞர்கள் சொன்ன காரணங்களில் ஒன்றிரண்டு தவிர, மற்றவை எல்லாமே சிந்திக்கத்தக்கவை. ஓரளவு உண்மையும் கூட. ஆனால் இத்தனை வலிமையான காரணங்களை எல்லாம் கடந்தும் வித்தியாசமான, உன்னத மனிதர்கள் எதிர்மாறாக சமூகத்தில் உதித்துக் கொண்டே இருந்தனர். 
அடிமை இந்தியாவில், அச்சமும் பேடிமையையும் உச்சத்தில் இருந்த கோழைச் சமூகத்தில் இருந்து, நேதாஜி, காந்திஜி போன்ற வீரபுருஷர்கள் வெளிப்பட்டிருக்கின்றனர். ஆசாரம் மிக்க குடும்பத்தில் பிறந்து, அனுஷ்டானம் மிக்க சூழலில் வளர்ந்த பாரதி, கனகலிங்கத்திற்கு "யக்ஞோபவீதம்' செய்யும் புரட்சியாளராக மலர்ந்தது எங்ஙனம்? ஊழலே வடிவமான அரசியல்வாதிகள் மத்தியிலும் நேர்மையே வடிவமான கக்கனும் கலாமும் கம்பீரமாகக் கால்பதித்திருக்கின்றனர். நெற்றி நிறைய திருமண் இட்டு, பக்தி பக்தி என்று உருகிய ஈரோட்டுக் குடும்பத்தில் இருந்து நாத்திகம் பேசும் பெரியார் "ஜம்'மென்று கிளம்பவில்லையா? மனிதன் ஆச்சர்யமானவன். ஜீன்கள், தாயின் கர்ப்பம், கட்டுக்கோப்பான சமூகம், பெற்றோரின் வளர்ப்புமுறை, அரசுகளின் ஆட்டிப் படைப்பையும் கடந்து ஜெயித்த மனிதர்கள் உலகில் உண்டு. அன்னி பெஸண்டும் லீபிடரும் பொத்திப் பொத்தி உருவாக்கிய, செதுக்கிச் சேகரித்த, தத்துவமேதை ஜே.கே. அன்னிபெசன்ட் கட்டிய கனவுக்கோட்டையைச் சுக்கு நூறாகத் தகர்த்து சுயம் சுயம் என்று கிளம்பிய கதையை உலகமே அறியுமே. பிறப்பு, வளர்ப்பு, வார்ப்பு, எல்லாம் கடந்து புதிய இருப்பு காணும் தனித்திறனே மனித வர்க்கத்தின் மகத்துவம்.
(அடுத்த இதழில் முடியும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com