நறுமணம் மிக்க ஏலக்காய்  மாலை!

கர்நாடகா மாநிலத்தில்  உள்ள ஹாவேரி  நகரத்திற்குள்  நுழையும்  போதே "ஏலக்கி  காம்பின நகரக்கே ஸ்வாகதா'  ( ஏலக்காய்  மணம் மிக்க நகரம் உங்களை  வரவேற்கிறது)  என்ற வரவேற்பு பலகையை காணலாம்.
நறுமணம் மிக்க ஏலக்காய்  மாலை!

கர்நாடகா மாநிலத்தில்  உள்ள ஹாவேரி  நகரத்திற்குள்  நுழையும்  போதே "ஏலக்கி காம்பின நகரக்கே ஸ்வாகதா' (ஏலக்காய் மணம் மிக்க நகரம் உங்களை வரவேற்கிறது) என்ற வரவேற்பு பலகையை காணலாம்.  ஏலக்காய் விவசாயமோ, விளைச்சலோ இல்லாத  இந்த நகரம்   கர்நாடகாவில்   ஏலக்காய் வர்த்தகத்தில் பிரபலமாக இருப்பது ஆச்சரியம்தான்.   இந்த ரகசியத்தை அறிய ஹாவேரிக்கு  செல்வோம்  வாருங்கள்:

ஹாவேரியின்  குறுகலான தெருக்களின் வழியே சென்றால்  ஒவ்வொருவரும் பட்டாவேகர் வீட்டை அடையாளம் காட்டுவார்கள். இங்குதான்  ஹாவேரியின் புகழ் பரப்பும்  நறுமணம்  மிக்க ஏலக்காய்  மாலைகள்  தயாரிக்கும்   குடும்பம் வசித்து வருகிறது. பட்டுநூல், உல்லன் கயிறு, வித விதமான மணிகள் கொண்டு தயாரிக்கப்படும்  இந்த ஏலக்காய் மாலைகள்,  மலர் மாலைகளைப் போன்று காய்ந்து உதிர்ந்துவிடாமல்  மூன்றாண்டுகள்  வரை நறுமணத்துடன் கெடாமல் இருக்கும். இம்மாலைகள் திருமணம், சமூகம் மற்றும் அரசியல் தலைவர்கள்,  சாதனையாளர்களுக்கு  அணிவிக்கும்  மாலையாகவும், மண்டப அலங்கரிப்புக்கும் பயன்படுத்தப்படுகிறது. உள்ளூரில் மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் நாடுகளிலும் இதை விரும்பி வாங்குகிறார்கள்.

இந்த மாலைகள் தயாரிக்க  அபூர்வமான வழிமுறைகள் கையாளப் படுகின்றன. ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களில்  தமிழகம் மற்றும் கர்நாடகாவில்  சக்லேஸ்பூர்,  மூடிகரே போன்ற இடங்களிலிருந்து  முதல்தர ஏலக்காய்கள்  கொள்முதல்  செய்யப்படுகின்றன. ஒரே அளவாக  இருக்க வேண்டுமென்பதற்காக உருண்டை வடிவமான ஏலக்காய்களை தேர்வு செய்கின்றனர். பின்னர் அவைகளை இயற்கையான உப்பு நீரில் ப்ளீச்சிங் பவுடர் கலந்து தண்ணீரில்  ஒரு வாரம் சுத்தப்படுத்துகின்றனர்.  பின்னர்  24 மணி நேரம் புகைபோட்டு அவைகளை சுத்தப்படுத்தி  உலரவைக்கிறார்கள். பிறகு ஏலக்காய்கள் உடையாதபடி வலுவான நூலில் கோர்க்கின்றனர். சிறிது கவனக்குறைவு ஏற்பட்டாலும் ஏலக்காய் உடைந்து பயனற்றுபோகும். மாலைகள் உருவாக்க வாங்கப்படும் ஒவ்வொரு குவிண்டால் ஏலக்காய்களிலும்  ஐந்து  கிலோ  ஏலக்காய்  பயனற்று போகும்.   பின்னர் இவைகளை  குறைந்த  விலையில்  விற்பனை  செய்வதுண்டு.

இந்த மாலைகள்  நீளம்,  இணைக்கப்படும்  இழைகளின்  எண்ணிக்கை ஆகியவைகளை கணக்கிட்டு  தயாரிக்கப்படுவதுண்டு. அதே போன்று வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப வண்ணக்கயிறு, ஏலக்காய் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு தயாரிப்பாளர்கள். மாலைகள் தயாரானதும் மேலும் அழகுக்காக  வாசனை  திரவியங்களை இவைகளின்  மீது தெளிப்பதுண்டு. ஒவ்வொரு மாலையும் 1.5,  2 மற்றும் 2.5 அடி நீளங்களில் தயாரிப்பார்கள். அரசியல் தலைவர்களுக்கு மெகா சைஸில் தயாரித்து கொடுக்கும்படி கேட்பதுண்டு, தேர் அலங்காரங்களுக்கு கூட ஏலக்காய் மாலைகளை பயன்படுத்துவதுண்டு. ஒவ்வொன்றும்  ரூ.200 முதல் ரூ.10 ஆயிரம் வரை  ஏலக்காய்  விலைக்கு ஏற்ப  மாலை விலையை  நிர்ணயிப்பதுண்டு.

உஸ்மான் சாகேப்  பட்டாவேகர்,  இந்த மாலைகள்  தயாரிப்பில்  சிறு வயதிலிருந்தே   ஈடுபட்டு வருகிறார்.  தொடக்கத்தில்  கர்நாடகாவில்  தார்வாட் மாவட்டத்தில்  மட்டும் விற்பனையான இந்த மாலைகள், இப்போது  இந்தியா முழுமையிலும், வெளிநாடுகளிலும்  விற்பனை  செய்யப்படுகிறது.  வேறு பலரும்  இந்த மாலை தயாரிப்பில்  ஆர்வம்  காட்டினாலும், இப்போது பட்டாவேகர்  குடும்பத்தினர்  மட்டுமே  தொடர்ந்து  இத்தொழிலை  செய்து வருகின்றனர்.

பட்டாவேகருக்கு இத்தொழிலில்  நாட்டம் ஏற்பட்டது எப்படி ?

""சுதந்திரமடைவதற்கு  முன் என் தந்தை  ஹஸ்ரத் சாகேப்  ஹாவேரியில் கோயில்களுக்கு  தேவைப்படும்  பூஜை பொருட்களையும், குஞ்சம் வைத்த விசிறிகளை மன்னர்களுக்கும், கோயில்களுக்கு பல்லக்கு போன்றவைகளையும் தயாரித்து விற்பனை  செய்து வந்தார்.  சுதந்திரமடைந்த பின்னர்  அரசியல்வாதி ஹொசமணி சித்தப்பா என்பவர், என் தந்தையிடம் ஹாவேரியின் புகழை பரப்பும் வகையில் ஏலக்காய் மாலை தயாரிக்கும் யோசனையை கூறினார். என்  தந்தை  உருவாக்கிய  முதல் ஏலக்காய் மாலை அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு அணிவிக்கப்பட்டது. பின்னர், அதுவே எங்கள் குடும்பத் தொழிலாகிவிட்டது. நாளடைவில் மாலைகளுக்கு தேவை அதிகரிக்கவே குடும்பத்தினர் மட்டுமின்றி, உறவினர்களும் உதவி செய்ய  முன்வந்தனர்.

ஹாவேரியில்  ஏலக்காய்  மாலைகளுக்கு   தேவை அதிகரித்த நேரத்தில்  ஏலக்காய் வியாபாரமும் அமோகமாக வளர்ச்சியடையத் தொடங்கியது. நூறாண்டுகளுக்கு முன் மலை நாட்டில்  ஏலக்காய்  விளைச்சல்  அதிகமாக இருந்தாலும், காற்றில் ஈரப்பதம் அதிகமிருந்ததால் ஏலக்காய்களை சுத்தப்படுத்துவதும், உலர வைப்பதும்  சிரமமாக இருந்தது.  ஹாவேரியில் உள்ள சில  வியாபாரிகள்  காப்பி விதைகளை  வாங்கிவிற்கும் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்ததால், மலை நாட்டிற்கு  அடிக்கடி  சென்று வந்தார்கள். அங்கிருந்து  ஏலக்காய்  கொள்முதல்  செய்யத் தொடங்கினார்கள். அவைகளை சுத்தப்படுத்த  ஹாவேரியில்  இயற்கையான  உப்பு நீர்  உள்ள கிணறுகள் இருந்ததால், ஏலக்காய்கள் சுத்தப்படுத்திய பின் பிரகாசமாய் தோற்றமளித்தன.  இங்கு பதப்படுத்தப்படும்  ஏலக்காய்கள் பிரபலமாகவே, ஏலக்காய் வர்த்தகத்தில்  ஹாவேரி முக்கியத்துவம் பெற்றது. ஏலக்காய் விளைச்சலே இல்லாத  ஹாவேரி  வர்த்தகத்தில்  இடம் பிடிப்பதற்கு,  ஏலக்காய் மாலை தயாரிப்பும்  ஒரு காரணமாயிற்று''  என்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com