மகள்

சூரியன் தனது பணியை நிறைவு செய்திருந்தது. நிலா தனது பணியை தொடங்கி மங்கிய நிலவொளியை பூமிக்கு அனுப்பி இரவின் இருளை குறைக்க முயன்று கொண்டிருந்தது. 
மகள்

சூரியன் தனது பணியை நிறைவு செய்திருந்தது. நிலா தனது பணியை தொடங்கி மங்கிய நிலவொளியை பூமிக்கு அனுப்பி இரவின் இருளை குறைக்க முயன்று கொண்டிருந்தது. 

திருமண மண்டபத்தில் பரபரத்துக் கொண்டிருந்த உறவுகள் கூட்டம், மெதுவாக கிடைத்த இடத்தில் தலைசாய்க்க தொடங்கியிருந்தது. எனக்கு தூக்கம் வரவில்லை. புரண்டு, புரண்டு படுத்திருந்த என்னைப் பார்த்து, "" கொஞ்சம் நேரம் தூங்குங்கள்... அப்பதான் நாளைக்கு எல்லா வேலைகளையும் செய்ய முடியும்'' என்றபடி மண்டப தூணில் தலை சாய்த்து படுத்தாள் என் மனைவி. 

சிறிது நேரத்தில் அவள் தூங்கியது தெரிந்தது. பாவம் கடந்த பல நாள்களாகவே ஓடி, ஓடி வேலை செய்த களைப்பு . கொஞ்ச நேரம் தூங்கட்டும்  என நினைத்தபடியே எழுந்திருந்து வராண்டாவில் நடந்தேன். எப்போதும் வானத்து நட்சத்திரங்களையும், நிலவினையும் ரசிக்கக் கூடிய  நான், இன்று அத்தகைய மன நிலையில் இல்லை. 

வராண்டாவின் ஓரம் இருந்த படிகளில் இறங்கியவன்,  கடைசிப்படியில் அமர்ந்தேன். பல நாள்களாக விழித்திருந்த களைப்பால் கண் எரிந்தது. கண்ணுக்கு இதமாக இமைகளை மூடினேன்.  

 திருநெல்வேலியிலுள்ள பிரபல நிறுவனம் ஒன்றில்  இரவு நேர ஷிப்ட் பார்த்துக் கொண்டிருந்த போதுதான் அந்த தொலைபேசி அழைப்பு வந்தது, எனக்கு மகள் பிறந்திருக்கிறாள் என்று.  அதைக் கேட்ட மாத்திரத்திலேயே, மேலதிகாரியிடம் அழைப்பின் விவரத்தை எடுத்துச் சொல்லி கிளம்பினேன். அங்கு பணியிலிருந்தோர் கூறிய வாழ்த்துக்களைக் கூட காதில் வாங்காமல் பைக்கை கிளப்பி மருத்துவமனைக்கு வந்து என் உயிரின், உயிரை பார்த்த போது வந்த பரவசம் சொல்லி மாளாது. 

குழந்தை பிறந்த செய்தி கேட்டு வந்த உறவுகளிடமும், நட்புகளிடம் வாய் ஓயாமல் மகள் புகழ் பாடி மகிழ்ந்தேன்.

""என்னவோ பார்க்காதத பார்த்த மாதிரியில்ல அலையுறான்'' என பலர் பேசிய கேலிப்பேச்சுக்கள் கூட எனக்கு கோபத்தை வரவழைக்கவில்லை. எப்போதும் மகளே என் மனக்கண்ணில் நின்றாள். ஏதோ அவள் பிறந்த பின்தான் சமூகத்தில் எனக்கு அந்தஸ்து கிடைத்தது போன்ற மகிழ்ச்சி. 

 சொந்த பந்தங்களின் இல்ல நிகழ்ச்சிகளுக்கு கூட என் மனைவிதான் சென்று வருவாள். எத்தனையோ பேர், "" உன் வீட்டுக்காரன் என்ன கலெக்டராவா இருக்கான்? அப்படி என்ன வேலையோ?'' என்று சொன்னாலும் கூட, உறவுகளின் விஷேசங்களுக்கு செல்லாத நான், இவள் பிறந்த பின்பு அவளையும் அழைத்து செல்வதை வழக்கமாக்கி விட்டேன். அவளை பார்க்கும் ஒவ்வொருவரும், "" நீ கொடுத்து வைத்தவன். அந்த அஷ்டலட்சுமியே உனக்கு மகளாக பிறந்திருக்கிறாள்'' எனும் போது எனது மனம் சிறகடித்து பறக்கும். 

நாளாக, நாளாக அவள் என் தாயாகவே மாறி விட்டாள். என் மனைவியைக் காட்டிலும், என்னையே அவளுக்கு பெரிதும் பிடித்துப் போனது. பள்ளி நாள்களில் நான் அலுவலகம் விட்டு நடு இரவில் வந்தாலும் விழித்திருந்து பள்ளி நிகழ்வுகளை கதை, கதையாக என்னிடம் கூறினால்தான் அவளுக்குத் தூக்கமே வரும். 

""அப்பாவை தூங்க விடு. இவ்வளவு நேரம் நான் சும்மாதானே இருந்தேன். என்ட்ட சொல்லியிருக்கலாமே?'' என என் மனைவி நாள்தோறும் கேட்டாலும் கூட, என் மகள் என்னவோ என்னிடம் மட்டுமே வண்டி, வண்டியாய் கதை சொல்லுவாள். நானும் கொஞ்சம் கூட சலிக்காமல் அதைக் கேட்பேன். அம்மாவிடம் சொல்லாமல் என்னிடம் அவள் கூறுவதில் எனக்குக் கூட கொஞ்சம் பெருமைதான். 

கல்லூரி நாள்களில் என்சிசி கேம்புக்காக ஒரு வாரம் என் மகள் வெளியூர் சென்றிருந்த நாள்களில், அலுவலகத்தில் வேலை ஓடாமல் தவித்திருக்கிறேன். "எப்போது இரவு வரும்; மகளிடம் பேசலாம்' என்ற நினைவே என் மனதில் நிறைந்திருக்க, அலுவலகப் பணிகளில் கூட ஏராளமான தவறுகள். மேலதிகாரி கூறிய கடுஞ்சொற்கள் கூட எனக்கு பெரிதாய்ப்பட்டதில்லை. பெர்மிஷன் கேட்டபடி வீட்டுக்கு வந்த என்னிடம், ""என்ன அதற்குள் வந்து விட்டீர்கள்? உடம்பு, கிடம்பு சரியில்லையா?'' என்ற மனைவியிடம், "" அதெல்லாம் ஒன்று மில்லை. பிள்ளை பேசினாளா? அவள் நினைப்பாகவே இருக்கு.  அதான் பெர்மிஷன் கேட்டு வந்திட்டேன்'' என்றவனைப் பார்த்து, கேலியாகச் சிரித்தாள் மனைவி.
""என்னங்க...  இன்னும் கொஞ்ச நாள் கழித்து நம்மை விட்டு அவள் வேறு ஒரு வீட்டுக்கு போய்த்தானே ஆக வேண்டும்?'' என்றவுடன் எனக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. ""ஏன் நாங்கள்ளாம் எங்க, வீட்டை விட்டு இங்க வந்திருக்கதானே செய்தோம். பிறகென்ன உங்களுக்கு?'' என்று அவள் சொல்லியும் கூட என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை.

நான் இங்கே தவித்துக் கொண்டிருக்கிறேன் என்று நினைத்தோ, அல்லது என்னைப் போலவே அவளும் தவித்திருந்தாளோ என்னவோ அவளும் 1 வார டிரிப்பை 2 நாளிலேயே முடித்து விட்டு வீட்டுக்கு வந்து விட்டாள். ""ஏம்மா இன்னும் 5 நாள்தானே. இருந்து விட்டு வந்திருக்கலாம்ல. நல்லா வாய்ப்புலமா?'' என்று அவளிடம் கேட்ட போது, ""விடுங்கப்பா. பார்த்துக்கலாம்''னு சொல்லி 2 நாள் நிகழ்வுகளைச் சொல்லத் தொடங்கினாள். ""நல்ல அப்பா, நல்ல மகள்'' என்று நொந்து கொண்டே இரவுச் சமையலை பார்க்க கிளம்பினாள் மனைவி. 
படித்து முடித்து உள்ளூரிலேயே பெரும் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியேற்றாள் அவள். எனக்கு பெருமைபிடிபடவில்லை.  அவள் போடும் உத்தரவை செயல்படுத்துவதற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் அங்கிருந்தனர். ஆனாலும் கூட காலை , இரவு நேர உணவை எனக்கு பரிமாறிக் கொண்டே, இருவரும் உட்கார்ந்து கதை பேசி சாப்பிடா விட்டால் அவளுக்கு தாங்காது. 

""அப்பா... இன்னும் அரை மணி நேரத்தில் வந்திருவேன். கொஞ்சம் பொறுத்துக்கோங்கப்பா..'' என இரவு நேரத்தில் எனக்கு சாப்பாடு பரிமாற ஓடோடி வருவாள் அவள். என் மனைவி கொஞ்சம் கண்டிப்புடனே, "" இது நல்லதுக்கு இல்லை. நாளைக்கு என்னைத்தான் எல்லோரும் திட்டுவாங்க. எப்படி பிள்ளையை வளர்த்திருக்கான்னு''  என்று சொல்வதை கேட்டு எக்காளமாக சிரித்தோம் நாங்கள்.

ஒரு நாள் வேலை முடிந்து வீடு திரும்பும் போது எதிர்பாராதவிதமாக பைக்கிலிருந்து கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். மகளுக்குச் சொல்ல வேண்டாம் ரொம்ப பயப்படுவாள் என நினைத்து எனது சக ஊழியர்கள் மூலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பிய சமயம் அவள் என் மீது கொண்ட கோபம், அழுகையாய் மாறி அவள் பட்ட பாட்டை இப்போது நினைத்தாலும் கண்ணீர் வரும். 

""என்னங்க,  கன்னம் எல்லாம் கண்ணீராய் இருக்கு'' என்றவாறே  என்னைத் தொட்டு எழுப்பினாள் என் மனைவி. என்னையறியாமலேயே வந்த கண்ணீரை துடைத்தபடி, "" என்னமா, ரொம்ப நேரமாச்சோ? லேசா கண் அசந்திட்டேன்'' என்றபடி எழுந்த நான், "" அவள் எழுந்திட்டாளா?'' என்றேன்.

""இன்னும் இல்ல. இனிமேதான் போய் எழுப்பணும். நீங்க தயாராகுங்க'' என்றாள் மணி 3 - ஐ தொட்டிருந்தது. மாப்பிள்ளை அழைப்புக்கு இன்னும் 2 மணி நேரம் இருந்தது. நாம் தயாராகி மாப்பிள்ளை அழைப்புக்கு செல்பவர்களை தயார் படுத்த வேண்டும் என்று நினைத்தவாறே, மகள் படுத்திருந்த அறை நோக்கிச் சென்றேன். அறைக் கதவு திறந்திருந்தது. அங்கே என் மனைவி, மகளிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

திவ்யா அழுவது லேசாக எனக்கு கேட்டது.  ""அம்மா , கல்யாணத்துக்கு அப்புறம் அப்பாவை விட்டு பிரிந்து போய்தான் ஆகணுமா?'' என கேட்ட மகளுக்கு புத்தி சொன்னாள் மனைவி. உள்ளே நுழைந்த நான், ""பொண்ணுங்கன்னு வந்திட்டா,  கல்யாணம் ஆன பின்னால மாப்பிள்ளை வீட்டுக்கு போய்தானே ஆகணும். அதானே பெற்றவர்களுக்கும் சந்தோஷம், இப்ப என்னடா, நினைச்சா ஓடி வரப் போறோம். இதுக்கெல்லாம் போய் யாராவது அழுவாங்களா?'' என்றேன்.

அவளும் இரவு முழுவதும் தூங்கவில்லை என்பதை அவளின் கண் காட்டியது. என் கண்ணை நோக்கிய அவள், ""அப்பா நீங்க சரியா தூங்கலயா?'' என்றாள். பிறகு என்ன நினைத்தாளோ? சமையலறைக்குள் நுழைந்து அங்கிருந்த உணவு வகைகளை எடுத்துக் கொண்டு அறைக்குள் வந்து என் அருகே உட்கார்ந்து, ""அப்பா சாப்பிடுவோம்'' என்றபடி உணவுகளை வைத்தாள். ""எத்தனையோ கல்யாண வீட்டுக்கு போயிட்டு வந்து நடந்த கதையெல்லாம் சாப்பிட்டுக்கிட்டே பேசியிருக்கோம். ஆனா, என் கல்யாண கதையைக் கூட இனி உங்ககிட்ட சொல்ல முடியாதில்ல.  இனி நான் யாருகிட்ட சாப்பிட்டுக்கிட்டே கதை பேசுவேன்'' என்றவாறே குலுங்கி அழுதாள். அவள் கண்ணில் வடியும் நீரைக் கூட துடைக்க மனமின்றி மனதிற்குள் அழுதேன் நான். எங்களிருவரையும் சமாதானப் படுத்த முடியாமல் விக்கித்து நின்றாள் என் மனைவி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com