ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: செவித்திறன் குறைந்தால்...?

நான் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். எனக்கு காது சுமார் 2 மாதங்களாக மந்தமாகக் கேட்கிறது. காது அடைப்பு, சில நேரங்களில் "ஓய்' என்று சத்தம். வெளிச்சத்தம் அதிகம் கேட்டால் காது அதிர்வு. குணமாக ஆயுர்வேத
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: செவித்திறன் குறைந்தால்...?

நான் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். எனக்கு காது சுமார் 2 மாதங்களாக மந்தமாகக் கேட்கிறது. காது அடைப்பு, சில நேரங்களில் "ஓய்' என்று சத்தம். வெளிச்சத்தம் அதிகம் கேட்டால் காது அதிர்வு. குணமாக ஆயுர்வேத மருந்துகள் உள்ளதா? 

 மணிவேல், வடச்சேரி, வாணியம்பாடி. 

பெருங்குடல், இடுப்பு, தொடை எலும்புகள், காது, எலும்புகள், தோல் ஆகிய பகுதிகளில் வாயு  அதிகமாக வசித்திருக்கும் இடமாக ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. அதன் குணாதிசயங்களான வறட்சி, லேசான தன்மை, குளிர்ச்சி, சொர சொரப்பு, நுண்ணிய தன்மை, நகரும் தன்மை போன்றவையினுடைய ஆட்சியில் இவ்விடங்கள் என்றென்றும் இருக்க வேண்டிய நிர்பந்தமிருப்பதால், அவ்விடங்களிலுள்ள நரம்புகள், உணவின் வழியாக வர வேண்டிய ஊட்டச்சத்தை பெற முடியாதவாறு இந்த குணங்களே அதிகம் ஸ்வீகரித்துவிடுவதால், நரம்புகள் பலவீனமடைகின்றன. 

காதினுள் செல்லும் ஒலியானது, நுண்ணிய நரம்புகள் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு, மூளையை அடைந்து, செய்தியாக மாற்றி உணர்த்துகிறது. வந்துள்ள செய்திக்குத் தகுந்தாற்போல், மூளை பதிலைத் தயார்ப்படுத்தி, நரம்பு மண்டலங்கள் வழியாக, நாக்கினுள்ளே அமைந்துள்ள  நரம்புகளுடைய அசைவின் வழியாக வெளியேற்றுகிறது. ஒலி காது வழியாக உள் நுழைவதும், பதில் வாய் வழியாக வருவதும் மூளையினுடைய அதிசயத்தக்க திறமையினால் ஏற்படுகிறது. வயோதிகத்தில் செவித்திறன் குறைவதற்கு வாயுவினுடைய குணங்களே பெரும் பங்காற்றுகின்றன. நெய்ப்பும், கனமும், வீர்யத்தில் சூடானதும், வழுவழுப்பும், பருத்ததும், நிலைப்பும்  நிறைந்த குணாதியங்களைக் கொண்ட உணவும், செயலும், மருந்தும் ஒருங்கே அமைந்தால், செவியினுடைய கேட்கும் திறனானது உயிர்பெறும்.

அந்த வகையில், உணவில் இனிப்பும், புளிப்பும், உப்புச் சுவையும் சிறந்தவை. இவற்றை நீங்கள் மிதமாக உண்ணலாம். காரம், கசப்பு, துவர்ப்புச் சுவையுடைய உணவு வகைகளை நீங்கள் பெறுமளவு குறைத்திட வேண்டும். அவை நரம்பு மண்டலங்களை மிகவும் பலவீனப்படுத்தும் குணம் கொண்டவை. செயல்களில் - பேச்சைக் குறைத்து, அதிக சத்தம் ஏற்படுத்தும் பகுதிகளில் வசிக்காமல், மன அமைதியுடன் நீங்கள் காலத்தைக் கழிக்க வேண்டும். பணி நிறைவுபெற்று, மறுபடியும் ஓயாமல் உழைக்க நேர்ந்தால், புலன்கள் வேகமாக, தம் செயல்திறனை இழந்துவிடக் கூடிய அபாயம் இருக்கிறது.

தலைக்கு இளஞ்சூடாக, கார்பாஸாஸ்தியாதி தைலம்  தேய்த்து வெது வெதுப்பான நீரில் தலைக்கும் உடலுக்கும் குளிப்பது, வயோதிகத்தில் நரம்பு பலவீனம் ஏற்படாமல் பாதுகாக்கக் கூடியது. குளிரூட்டப்பட்ட அறையில் படுக்காதிருப்பதும், இரவில் காலதாமதமின்றி உறங்குவதும் நலமே. காதினுள் இளஞ்சூடாக, வசாலசுனாதி தைலத்தில்   5 - 8 துளிகள்விட்டு, காதுமடல், காதின் பின்புறம் ஆகிய இடங்களில் இதமாக இதே தைலத்தை நீவிவிட்டு, வெந்நீரில் பிழிந்த துணியைக் கொண்டு ஒத்தடம் கொடுப்பதும், நரம்புகளை வலுப்பெறச் செய்யும் சில வழிகளாகும்.

ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி, உள்மருந்தாக, அஸ்வகந்தாதி லேகியம், தசமூலாரிஸ்டம், தான்வந்திரம் குளிகை, வாதகஜாங்குசரஸம் எனும் மாத்திரை, அஸ்வகந்தா சூரணம், இந்துகாந்தம்  எனும் நெய் மருந்தைக் காலையிலும் விதார்யாதிக்ருதம் எனும் மருந்தை மாலையிலும் சாப்பிடுவதை வழக்கப்படுத்திக் கொண்டால், காதினுடைய கேட்கும் திறன் வலுப்படுகிறது. 
தலைமை ஆசிரியர் ஆவதற்கு முன், எத்தனையோ பிள்ளைகளிடம் நீங்கள் கோபமாகப் பேசியிருக்கலாம், சத்தம் போட்டிருக்கலாம். அதனால் ஏற்படும் பலவீனமானது குணமடைய ஓய்வும், பிறருடைய அன்பும், அரவணைப்பும் தேவையான சூழ்நிலையில் நீங்கள் இருப்பது அவசியமாகிறது. 

 (தொடரும்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com