ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மைக்ரேன் தலைவலிக்கு மருந்து!

என்னுடைய அண்ணன் மகள் மணமானவர். வயது 47. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மைக்ரேன் தலைவலியால் அவதியுற்று வருகிறாள்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மைக்ரேன் தலைவலிக்கு மருந்து!

என்னுடைய அண்ணன் மகள் மணமானவர். வயது 47. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மைக்ரேன் தலைவலியால் அவதியுற்று வருகிறாள். அண்மையில் இந்த தலைவலி வந்தபோது, மயக்கமுற்று, தற்காலிகமாக, பேச முடியாத நிலை வந்தது. இதற்கு ஆயுர்வேதத்தில் மருந்து உள்ளதா?

-க.இளங்கோ, சென்னை - 101.

பிராணவாயுவின் முக்கிய இருப்பிடமாகிய தலைப்பகுதியில், நீங்கள் குறிப்பிடும் மைக்ரேன் தலைவலியைக் குணப்படுத்த, அந்த வாயுவின் சீரான செயல்பாட்டிற்கான அடித்தளம் அமைத்துத் தர வேண்டிய அவசியமிருக்கிறது. வாயினுள் மூலிகைத்தைலம் விட்டு நன்கு குலுக்கித் துப்புவதும், தலை, காது, கண் மற்றும் மூக்கினுள் மூலிகைகளால் காய்ச்சப்பட்ட எண்ணெய் வகைகளால் இட்டு நிரப்புவதுமான  சிகிச்சை முறைகளே நல்ல பலனை அளிக்கக் கூடியவை. அந்த வகையில், தலைக்குக் க்ஷீரபலா தைலத்தைச் சூடாக்கி, பஞ்சில் முக்கி போட்டு வைக்கும் சிகிச்சை முறையும், வசாலசுனாதி எனும் மூலிகைத் தைலத்தை, வெது வெதுப்பாக காதில் விடும் முறையும், கண்களைச் சுற்றி வரம்பு கட்டி, அதனுள் பிழிந்து விடப்படும் த்ரைபல க்ருதம் எனும் நெய் மருந்தைவிட்டு நிரப்பிவைப்பதும், மூக்கினுள் 3 - 4 சொட்டுகள்,  நரம்பிற்கு ஊட்டமளிக்கும் க்ஷீரபலா தைலத்தை விட்டுக் கொள்வதும், நரம்புகளிலுள்ள வாயுவை நெய்ப்புடன் குணமாக்கி, தலைவலி முற்றிலும் விட்டு அகல உதவிடக்கூடும். நீர்க்கோர்வையினால் தலைவலி ஏற்படுவதாயிருந்தால், ராஸ்னாதி சூரணம் எனும் மூலிகை சூரணத்தை, சிறிது இஞ்சிச் சாறுடன் குழைத்துச் சூடாக்கி, நெற்றியில் பற்று இடுவதன் மூலம், தலை சார்ந்த ரத்த குழாய்கள் விரிவடைந்து, ரத்த ஓட்டம் சீராவதால், தலைவலி குறைந்துவிடும். இந்த சிகிச்சை முறைகள் அனைத்துமே மூளையைச் சார்ந்த நரம்பு மண்டலங்களை வலுப்படுத்துவதும், அவற்றில் ஏற்படும் வாயுவின் சீற்றத்தை அகற்றி, ஊட்டத்தை அளிப்பதுமாகும். 

உணவில் சூடு ஆறிய நிலையிலுள்ள பருப்பு சாம்பார், கொத்துக்கடலை சுண்டல், உருளைக்கிழங்கு, வாழைக்காய் பொரியல், வேர்க்கடலை சட்னி போன்றவற்றைச் சேர்க்கக்கூடாது. இவற்றால் ஏற்படும் வாயுவின் சீற்றமானது, குடலிலிருந்து கிளம்பி ரத்த நாளங்களைத் தாக்கக் கூடும் அபாயமிருப்பதால், இவ்வகை உணவுகளை நீக்க வேண்டிய அவசியமிருக்கிறது. வெயிலில் குடை, குளிர்க் கண்ணாடி போன்றவற்றைப் பயன்படுத்தாமல் செல்லுதல் கூடாது. மன உளைச்சல் ஏற்படும்படியான வார்த்தைகளை அவர் மீது பயன்படுத்தாமல், அன்புடனும் அனுசரணையுடனும் பிறர் பழக வேண்டும். வயிற்றில் புண் இருந்தால் கூட, தலைவலி ஏற்படலாம். காரம், புளி, உப்பு அதிகம் சேர்த்த உணவு வகைகளால் வயிற்றில் வலியோ, எரிச்சலோ ஏற்பட்டால், பித்த சேர்க்கையினால் ஏற்படுவதாக ஊகித்தறியலாம். அதற்குரிய சிகிச்சைகளைச் சரியான படி செய்து பித்தத்தினால் ஏற்படக் கூடிய மைக்ரேன் தலைவலியைப் போக்கலாம்.

கண் பரிசோதனை செய்யப்பட்டு அவற்றில் ஏதேனும் கோளாறுகள் இருந்தால் அதை சரி செய்து கொள்வது நல்லது. கண்களை வலுப்படுத்தும் பொன்னாங்கண்ணி, முருங்கை கீரைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். கண் சோர்வடையும் வரை புத்தகம் படித்தல், தொலைக்காட்சி நிகழ்வுகளைப் பார்த்தல், இருட்டறையிலிருந்து கொண்டு வெளிச்சம் அதிகமுள்ள கைபேசி, கணிணி ஆகியவற்றைப் பார்த்தல், படுத்துக் கொண்டே கண்களுக்குச் சோர்வைத் தரும் செயல்களைச் செய்தல் போன்றவை தவிர்க்கப்பட வேண்டியவை.

தேனில் ஊறிய நெல்லிக்காய், ஒன்றிரண்டு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுதல், சம அளவில் அல்லாமல் தேனும் நெய்யும் குழைத்துச் சாப்பிடுதல், கல்லீரல் மற்றும் மண்ணீரல் பகுதியில் பித்த ஊறலை மட்டுப்படுத்தும் திரிபலைக் குடிநீர் பருகுதல், வாஸாகுடூச்யாதி எனும் கஷாய மருந்தை, திராக்ஷôதி கஷாய மருந்துடன் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு, குடலிலிருந்து பித்த ஊறலை அதிகப்படுத்தாதபடி வெளியேற்றுதல் போன்ற சில சிகிச்சை முறைகளால் தலைவலியானது பித்தத்தின் சீற்றம் காரணமாக ஏற்பட்டிருந்தால் குணப்படுத்தலாம். 

பிராணாயாமம், நல்ல காற்றுள்ள பகுதியில் அமைதியாக உட்கார்ந்திருப்பது, அன்புடன் கூடிய தோழிகளுடன் அடிக்கடி பேசி மனதை லேசாக்குவது, பகல் தூக்கம் தவிர்த்து, இரவில் அதிக நேரம் கண்விழித்திராமல், குறித்த நேரத்திற்கு படுத்துறங்குதல் போன்றவை நல்லது. தசமூல ரஸாயனம், அகஸ்திய ரஸாயனம் தல மூலஹரீதகீ போன்ற நல்ல தரமான ஆயுர்வேத மருந்துகளிலிருந்தாலும், மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிடுவதே சிறந்தது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com