கோவைக்குத் தேவை- பெருநகர வளர்ச்சிக் குழுமம்

ஒரு நகரத்தின் வளர்ச்சிக்கு ஏற்பவும், அந்த நகரத்தின் மக்கள் தொகைக்கு ஏற்பவும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வளர்ச்சித் திட்டங்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டும்.
கோவைக்குத் தேவை- பெருநகர வளர்ச்சிக் குழுமம்

கோவை: ஒரு நகரத்தின் வளர்ச்சிக்கு ஏற்பவும், அந்த நகரத்தின் மக்கள் தொகைக்கு ஏற்பவும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வளர்ச்சித் திட்டங்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டும். இந்தியாவில் 20 சதுர கி.மீ முதல் 100 சதுர கி.மீ வரை பரப்பளவு கொண்ட நகரங்களில் அனுமதிக்கப்படும் நில பயன்பாட்டை நிர்ணயிக்கும் முழுமைத் திட்டத்தை மாஸ்டர் பிளான் என்றும், நகரத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியின் வளர்ச்சிக்காகத் திட்டமிடுவது விரிவான வளர்ச்சித் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
 தமிழகத்தில் சென்னை பெருநகரத்துக்கான மாஸ்டர் பிளானை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் வடிவமைக்கிறது. அதேபோல், மாநிலத்தில் உள்ள பிற நகரங்களுக்கான மாஸ்டர் பிளானை நகர ஊரமைப்புத் துறை மேற்கொள்கிறது. இதற்காக சென்னையை தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதிலும் 11 இடங்களில் மண்டல நகர ஊரமைப்புத் துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
 தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய நகரமான கோவை, நாட்டின் முக்கிய தொழில் மண்டலமாகவும், வேகமாக வளர்ந்து வரும் நகரமாகவும் உள்ளது. இந்த நிலையில் கோவை மாநகருக்காக கடந்த 1980ஆம் ஆண்டில் மாஸ்டர் பிளான் உருவாக்கப்பட்டது. இதையடுத்து அந்தத் திட்டம் 1994ஆம் ஆண்டில் திருத்தி அமைக்கப்பட்டது. இதை திருத்துவதற்கு 2004ஆம் ஆண்டில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டது.
 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் அடிப்படையில் 34.58 லட்சமாக இருந்த மக்கள் தொகை தற்போது சுமார் 50 லட்சத்தை நெருங்கியிருக்கும் என்று கணிக்கப்படுகிறது. ஒரு மாநகராட்சி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை என மூன்று நகராட்சிகள், 10 தாலுகாக்கள், 12 ஒன்றியங்கள், 37 பேரூராட்சிகள், 295 கிராமங்கள் என சுமார் 4,723 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது கோவை மாவட்டம்.
 சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், ஒரு லட்சம் ஹெக்டேருக்கும் மேற்பட்ட வனப் பகுதி, 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள், சுமார் 3 ஆயிரம் தொழிற்சாலைகள், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு நிறுவனங்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், 12 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகள் என மிகப் பெரிய கட்டமைப்பைக் கொண்டுள்ள கோவையின் மாஸ்டர் பிளானை 2004ஆம் ஆண்டில் திருத்த முடியவில்லை. அதன் பிறகு 2007, 2011ஆம் ஆண்டுகளிலும் திருத்தம் செய்து வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
 ஆனால் அதன் வரைவு அறிக்கை கூட வெளியிடப்படவில்லை. இந்த நிலையில்தான், கடந்த 2014ஆம் ஆண்டில் மீண்டும் மாதிரி திட்டம் தயாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி, தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கை கடந்த பிப்ரவரி மாதம் அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், வழக்கம் போலவே இந்தத் திட்ட அறிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
 இதனால் கோவையின் தொழில் வளர்ச்சி மட்டுமின்றி ஒட்டுமொத்த வளர்ச்சியும் தடைபட்டு வருவதாகக் கூறுகிறார் கொங்கு குளோபல் ஃபோரம் அமைப்பின் இயக்குநர் டி.நந்தகுமார்.
 இது குறித்து அவர் கூறியதாவது: கோவைக்கு கடைசியாக 1994ஆம் ஆண்டில் மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த 24 ஆண்டுகளாக அது திருத்தி அமைக்கப்படவில்லை. இந்த காலகட்டத்தில் மக்கள் தொகை சுமார் 20 லட்சம் அதிகரித்துள்ளது.
 அதேபோல் மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கையும் 72இல் இருந்து 100ஆக உயர்ந்துள்ளது. மாநகரில் மட்டும் சுமார் 20 லட்சம் மக்கள் வசிக்கும் அளவுக்கு நகரம் விரிவடைந்துள்ளது. மேலும் கடைசியாகத் தயாரிக்கப்பட்ட மாதிரி திட்டத்தையும் கூட தற்போது திருத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அப்போது தொழிற்சாலைக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில் தற்போது விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த இடங்களில் தடையில்லாச் சான்று பெற்ற தொழிற்சாலைகள் தொடங்குவதில் மிகப் பெரிய சவால் உள்ளது. எனவே, ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட மாஸ்டர் பிளானை பொதுமக்கள், தொழில் நிறுவனங்களிடம் கருத்துக் கேட்பதற்காக உடனடியாக வைக்க வேண்டும். அதில் தேவையான திருத்தங்களை செய்து திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றார்.
 இது குறித்து கோவை உள்ளூர் திட்டக் குழும உறுப்பினர் செயலர் தன்ராஜ் கூறியதாவது: கோவைக்கான மாஸ்டர் பிளான் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசின் ஒப்புதலுக்காக நகர ஊரமைப்புத் துறை செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொடிசியா போன்ற பொது தொழில் நிறுவனங்களின் கருத்துகளைக் கேட்டிருக்கிறோம். அதன் அடிப்படையில் தேவையான திருத்தங்களையும் மேற்கொண்டு வருகிறோம். பொதுமக்கள், தொழில் அமைப்புகள், நுகர்வோர் அமைப்புகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு வரைவுத் திட்டத்தை விரைவில் இறுதி செய்வோம். அதன் பிறகு அதை நடைமுறைப்படுத்துவோம்.
 இதற்கிடையே, அனைத்து மாவட்டங்களுக்கும் மாஸ்டர் பிளான் தயாரிக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசும் உத்தரவிட்டுள்ளது. இதனால், மாஸ்டர் பிளான் தயாரிக்கும் பணி வேகமாகவே நடைபெற்று வருகிறது என்றார்.
 கோவை பெருநகர வளர்ச்சிக் குழுமம்: என்னதான் மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டாலும் அவற்றை செயல்படுத்துவதில் பல சிக்கல்கள் ஏற்படும் எனவும், எந்தவித தடையும் இல்லாமல் பணிகளை மேற்கொள்ள வேண்டுமானால் சென்னையில் இருக்கும் சி.எம்.டி.ஏ.வைப் போன்று கோவைக்கும் பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஏற்படுத்துவதே நிரந்தரத் தீர்வாக இருக்கும் என்கிறார் கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பின் செயலர் கதிர்மதியோன்.
 ஒரு நகரின் எந்தப் பகுதியை எந்தெந்த பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்த வேண்டும், பேருந்து நிறுத்தம், மேம்பாலம் எங்கு வேண்டும், இணைப்புச் சாலைகள் எங்கு தேவைப்படுகிறது என ஒட்டுமொத்த மேம்பாட்டுக்கும் திட்டமிடுவதற்காக மாஸ்டர் பிளான் தேவைப்படுகிறது. முன்பு கோவை நகரம் மட்டுமே உள்ளூர் திட்டக் குழுமத்தில் இடம் பெற்றிருந்தது. ஆனால் தற்போது பொள்ளாச்சி முதல் மேட்டுப்பாளையம் வரையிலும் ஒட்டு மொத்த மாவட்டமும் திட்டக் குழுமத்தில் வந்துள்ளது. இதனால் இந்த அமைப்பில் உள்ள 10 அதிகாரிகளால் மட்டுமே மாஸ்டர் பிளானை அமல்படுத்திவிட முடியாது.
 எனவே கோவைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் சென்னையில் இருப்பதைப் போன்று பெருநகர வளர்ச்சிக் குழுமத்தை ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பாக 2009ஆம் ஆண்டிலேயே அறிவிப்பு வெளியிடப்பட்டது. இருப்பினும் அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 எனவே, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் கோவை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தை அமைக்க வேண்டும். அந்த அமைப்பின் மூலம் திட்டம், திட்டச் செயலாக்கம் என இரண்டு பணிகளையுமே செய்ய வேண்டும்.
 தவறு செய்பவர்கள் மீது நகர ஊரமைப்புத் துறை அதிகாரிகளால் பெரிய அளவிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்பதால் நகரின் மேம்பாட்டுக்கு எதையும் செய்ய இயலாமல் போகும். எனவே அதிக அதிகாரத்தையும், கூடுதலான அதிகாரிகளையும் கொண்டதுமான பெருநகர வளர்ச்சிக் குழுமத்தை அமைக்கத் தேவையான முயற்சிகளில் அரசு ஈடுபட வேண்டும் என்றார் அவர்.
 - க.தங்கராஜா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com