பல்கலை., கல்லூரி ஆசிரியர் பணிக்கு நெட் அல்லது செட் தேர்ச்சி கட்டாயம்: யுஜிசி

பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர் பணிக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதிக்கான புதிய வழிகாட்டுதலை நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் பின்பற்ற
பல்கலை., கல்லூரி ஆசிரியர் பணிக்கு நெட் அல்லது செட் தேர்ச்சி கட்டாயம்: யுஜிசி


பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர் பணிக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதிக்கான புதிய வழிகாட்டுதலை நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் பின்பற்ற பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி, கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர் பணிக்கு முதுநிலைப் பட்டப்படிப்புடன், தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) அல்லது மாநில அளவிலான தகுதித் தேர்வு (செட்) ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயமாகும்.
இந்தப் புதிய வழிகாட்டுதல் 2018 -ஐ, கடந்த ஜூலை மாதம் அரசிதழிலும் யுஜிசி வெளியிட்டது. தற்போது, இந்த வழிகாட்டுதலை அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் பின்பற்ற அறிவுறுத்தி, சுற்றறிக்கையை யுஜிசி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.
புதிய விதிமுறை என்ன?: புதிய வழிகாட்டுதலின்படி , கல்லூரி-பல்கலைக்கழக ஆசிரியர் பணிக்கான நேரடி தேர்வுக்கு முதுநிலை பட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், நெட் அல்லது செட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயமாகும்.
இருந்தபோதும், குறைந்தபட்ச கல்வித் தகுதிக்கான யுஜிசி வழிகாட்டுதல் 2009 மற்றும் வழிகாட்டுதல் 2016 ஆகியவற்றின் அடிப்படையில் பிஎச்.டி. பட்டம் பெற்றவர்களுக்கும், 2009 ஜூலை 11 -ஆம் தேதிக்கு முன்பாக பிஎச்.டி. படிப்புக்கு பதிவு செய்து (சேர்ந்து) பின்னர் முடித்தவர்களுக்கும் நெட் அல்லது செட் கட்டாயம் என்ற நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்றும் புதிய வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com