குறிஞ்சிப்பாடி அருகே கண்டறியப்பட்ட 2,500 ஆண்டுகள் பழைமையான முதுமக்கள் தாழி

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சுமார் 2,500 ஆண்டுகள் பழைமையான முதுமக்கள் தாழி கண்டறியப்பட்டது.
குறிஞ்சிப்பாடி அருகே அரசடிக்குப்பம் கிராமத்தில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழி
குறிஞ்சிப்பாடி அருகே அரசடிக்குப்பம் கிராமத்தில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழி


கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சுமார் 2,500 ஆண்டுகள் பழைமையான முதுமக்கள் தாழி கண்டறியப்பட்டது.
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள அரசடிக்குப்பம் கிராமத்தில் மழைநீரை வெளியேற்றுவதற்காக நிலத்தை தோண்டியபோது இந்தத் தாழி வெளிப்பட்டது. இதுகுறித்து நிலத்தின் உரிமையாளர் மணிவாசகம் அளித்த தகவலின்பேரில், ஆத்தூர் அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன் தலைமையில் அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து ஆய்வுக் குழுவினர் தெரிவித்ததாவது:
அரசடிக்குப்பம் கிராமத்தில் கி.மு. 5-ஆம் நூற்றாண்டு முதல் மக்கள் வாழ்ந்து வருவது ஆய்வில் தெரியவந்தது. இங்குள்ள வண்ணான்குட்டையின் மேற்குப் பகுதியில் தோண்டப்பட்ட பள்ளத்தில், தரைத் தளத்திலிருந்து 75 செ.மீ. ஆழத்தில் முதுமக்கள் தாழி வெளிப்பட்டது. இது சுமார் 2,500 ஆண்டுகள் பழைமையானதாகும். கனரக இயந்திரம் மூலம் மண் தோண்டப்பட்டதால் தாழியின் கழுத்துப் பகுதி சேதமடைந்துவிட்டது. இந்தத் தாழி 120 செ.மீ. உயரம் கொண்டது. தாழியின் அருகே மூடுகற்கள், தாழியைச் சுற்றி வட்ட வடிவில் வைக்கப்பட்ட லாட்ரைட் கற்கள் காணப்பட்டன.
தாழியின் உள்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டவருக்கு பிடித்தமான உணவுப் பொருள்களை வைக்க பயன்படுத்தப்பட்ட சிறிய வகை கருப்பு, சிவப்பு மட்கலன்களின் உடைந்த பாகங்கள் இருந்தன. இந்தப் பானை ஓடுகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
கருப்பு, சிவப்பு நிறம் கொண்ட ஒரு பானை ஓட்டின் கழுத்துப் பகுதியில் கீறல் குறியீடு இருந்தது. குறிப்பாக, தமிழ்நாட்டில் பெருங்கற்கால, இரும்புக்கால மக்களின் வாழ்விடப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கீறல் குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இந்தக் குறியீடுகளே படிப்படியாக வளர்ந்து தமிழ் பிராமி எழுத்து வடிவத்தை எட்டியதாக தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
கொடுமணல், கீழடிப் பகுதி அகழாய்வுகளில் கீழ் மண்ணடுக்குகளில் கீறல் குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும், அதற்கு மேலுள்ள மண்ணடுக்குகளில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும் கிடைத்தன. இதன்மூலம் அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களின் கல்வி நிலை குறித்து அறிய முடிகிறது. இதேபோல, அரசடிக்குப்பம் பகுதியில் வாழ்ந்த பெருங்கற்கால மக்களும் எழுத்துகளை கீறல் குறியீடுகளாக பயன்படுத்தியுள்ளனர். எனவே, இந்தப் பகுதியில் வாழ்ந்த பெருங்கற்கால மக்களில் எழுத்தறிவு பெற்றவர்களும் இருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.
வண்ணான்குட்டையின் வடமேற்குப் பகுதியில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் நடத்தப்பட்ட மேற்கள ஆய்வில் 7 செ.மீ. கன அளவு கொண்ட செங்கற்களின் உடைந்த பாகங்கள், கருப்பு, சிவப்பு நிறம் மற்றும் வழுவழுப்பான சிவப்பு நிற பானை ஓடுகளின் உடைந்த பாகங்கள், பெரிய மட்பாண்டங்களின் உடைந்த பாகங்கள், உறைகேணிக்கு பயன்படுத்தப்பட்ட வட்ட வடிவிலான சுடுமண் உறைகளின் உடைந்த பாகங்கள் போன்றவை கிடைத்தன. மேலும், இரும்பு உருக்கப்பட்ட கசடுகளின் பாகங்களும் அதிகளவில் காணப்படுகின்றன. இதன்மூலம் இங்கு வாழ்ந்த பெருங்கற்கால மக்கள் இரும்பின் பயன்பாட்டையும், அதைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தையும் அறிந்திருந்தனர் என்பதை அறிய முடிகிறது. இவர்கள் தெற்குப் பகுதியை இடுகாடாகவும், வடக்குப் பகுதியை வாழ்விடமாகவும் பயன்படுத்தியுள்ளனர்.
வண்ணான்குட்டையின் கிழக்கு, மேற்குப் பகுதிகளில் முதுமக்கள் தாழிகள் அதிகளவில் காணப்படுகின்றன. மேலும் சிங்களராஜன் ஏரியின் தெற்கு , கிழக்கு பகுதிகளிலும் முதுமக்கள் தாழிகள் காணப்படுகின்றன. இந்த ஏரியின் கிழக்கே உள்ள பாலு என்பவரது நிலத்தில் கண்டறியப்பட்ட சிவலிங்கம், சண்டிகேஸ்வரர் சிலை ஆகியவை சோழர் காலத்தைச் சார்ந்தவை. மேலும், இதே பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் நடத்தப்பட்ட கள ஆய்வில் கி.பி. 10-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.13-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக, வீடுகளுக்கு பயன்படுத்தப்பட்ட ட வடிவ கூரை ஓடுகள், 5ல15ல24 செ.மீ. அளவுள்ள செங்கற்கள், இடைக்காலத்தை சார்ந்த பானையோடுகள், அம்மி குழவி போன்றவையும் கிடைத்துள்ளன. இந்துடன், இதே பகுதியில் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 17-ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தை சார்ந்த தொல்பொருள்களும் கிடைத்து வருகின்றன என்று அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com