மேட்டுப்பாளையம்-குன்னூர், உதகை-கேத்தி இடையே சிறப்பு மலை ரயில்: டிசம்பர் 8 முதல் இயக்கம் தொடக்கம்

மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு டிசம்பர் 8-ஆம் தேதி முதல் அனைத்து சனிக்கிழமைகளிலும், குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் மற்றும் உதகையிலிருந்து-கேத்திக்கு


மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு டிசம்பர் 8-ஆம் தேதி முதல் அனைத்து சனிக்கிழமைகளிலும், குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் மற்றும் உதகையிலிருந்து-கேத்திக்கு டிசம்பர் 9-ஆம் தேதி முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது. 
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
நீலகிரி மலை ரயில் பாதையில் சிறப்பு மலை ரயில் இயக்கம் டிசம்பர் 8-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதில் மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு டிசம்பர் 8 ஆம்தேதி முதல் அனைத்து சனிக்கிழமைகளிலும் இந்த சிறப்பு மலை ரயில் இயக்கப்படும். காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து புறப்படும் இந்த சிறப்பு மலை ரயில் 9.28 மணிக்கு கல்லாறு நிலையத்தையும், 10.46 மணிக்கு ஹில்குரோவ் ரயில் நிலையத்தையும் அடைந்து, பகல் 12.30 மணிக்கு குன்னூரை வந்தடையும். பின்னர் அந்த ரயில் அங்கேயே நிறுத்தப்படும். தொடர்ந்து டிசம்பர் 9 ஆம்தேதி முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் குன்னூரிலிருந்து பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு, 2.35 மணிக்கு ஹில்குரோவ் நிலையத்தையும், 3.50 மணிக்கு கல்லாறு நிலையத்தையும் அடைந்து மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை சென்றடையும்.
132 இருக்கைகள் கொண்ட இந்த சிறப்பு மலை ரயிலில் முதல் வகுப்புக்கு 16 இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் முதல் வகுப்புக்கு ரூ.1,100, இரண்டாம் வகுப்புக்கு ரூ. 800 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணம் செய்யும் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 200 மதிப்பிலான பரிசுப் பொருள்கள் வழங்கப்படும்.
அதேபோல, டிசம்பர் 9-ஆம் தேதி முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் உதகை-கேத்தி இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது. உதகையிலிருந்து பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு 3 மணிக்கு கேத்தியை சென்றடையும். பின்னர், கேத்தியிலிருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு மாலை 4 மணிக்கு உதகையை வந்தடையும். 82 இருக்கைகள் கொண்ட இந்த சிறப்பு மலை ரயிலில் முதல் வகுப்புக்கு 16 இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் முதல் வகுப்புக்கு ரூ.400, இரண்டாம் வகுப்புக்கு ரூ. 300 பயணக் கட்டணமாகும். இதில் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.100 மதிப்பிலான பரிசுப் பொருள்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com