ஆலவிருட்சத்தின் இலைகள் உதிர்வதால் விருட்சமே இல்லாமல் போய்விடுமா? டிடிவி தினகரன் சூசகம்

ஆல விருட்சத்தின் இலைகள் உதிர்வதால் விருட்சமே இல்லாமல் போய்விடுமா என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆலவிருட்சத்தின் இலைகள் உதிர்வதால் விருட்சமே இல்லாமல் போய்விடுமா? டிடிவி தினகரன் சூசகம்

ஆல விருட்சத்தின் இலைகள் உதிர்வதால் விருட்சமே இல்லாமல் போய்விடுமா என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுகவில் இருந்து விலகி, செந்தில்பாலாஜி திமுகவில் இணைவார் என்று வலுவான தகவல்கள் வெளியான நிலையில், அது தொடர்பாக டிடிவி தினகரன் ஒரு கடிதம் வெளியிட்டுள்ளார்.

அதில், கழகம் ஆரம்பிக்கப்பட்ட இந்த 9 மாத காலத்தில், ஓர் அரசியல் இயக்கமாக நாம் அடைந்திருக்கும் அபார வளர்ச்சிக்கு இந்த தமிழகம் தான் சாட்சி. "மக்களால் நான், மக்களுக்காகவே நான்" என்ற அம்மா அவர்களின் கொள்கை காக்க "மக்களால் நாங்கள், மக்களுக்காகவே நாங்கள்" என புறப்பட்ட நமது பயணத்தில், இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்ப்பது என்ற இலக்கைக் கொண்டுள்ளோம்.

திரும்பிய திசையெல்லாம் தடைகளே இருந்தபோதும், தடந்தோள்தட்டி தடம் பதித்த வெற்றியினை ஆர் கே நகரில் பெற்றோம். துரோக பழனிசாமி கூட்டத்திற்கு தோல்வியை தந்து, பிரதான எதிர்கட்சி என மார் தட்டிக்கொள்ளும் திமுகவை டெபாசிட் இழக்கச் செய்து, ஒரு சுயேட்சையாய் வாகை சூடி நின்றோம். 

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு அமைப்புச் செயலாளர், அம்மாவட்டத்தில் எழுச்சியோடு செயல்பட்டுக்கொண்டிருக்கும் தற்போதைய மாவட்ட செயலாளரை மாற்றி, அந்த வாய்ப்பை தனக்கு அளித்திட வேண்டுமென வைத்த கோரிக்கையை நிராகரித்த காரணத்தாலும், தனது தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளவும் துரோகத்தின் பக்கம் சாய்ந்துள்ளார். மேலும், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் அதிமுக(அம்மா) என்ற பெயரில் நாம் இயங்கியபோது அறிவிக்கப்பட்டிருந்த ஒரு ஒன்றிய கழக செயலாளர், நேற்று கட்சியைவிட்டு சென்றுவிட்டாராம், அதனை தற்போது ஊடகங்களில் பெரிதுபடுத்தி காட்டப்படுகிறது. மறைமுகமாக மதுபான கூடம் நடத்திக்கொண்டிருந்த அந்த நபர் ஏற்கனவே இதே செயலை செய்திருந்தபோது அப்போது அந்த மாவட்டத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த நமது கட்சியின் பொறுப்பாளர், அவரை மீண்டும் அழைத்துக் கொண்டுவந்து, அந்த நபரை மன்னித்து வாய்ப்பளிக்கும்படி கேட்டுக்கொண்டார். அவ்வாறு நடந்துகொண்ட அந்த பொறுப்பாளர் தனது பொறுப்பை மறந்து தற்போது, தூக்க நிலைக்கு சென்றாரா? அல்லது தூக்கப்பட்ட நிலைக்குச் சென்றாரா? என்பது தெரியவில்லை.

ஆலவிருட்சத்தின் இலைகள் உதிர்வதால் விருட்சமே இல்லாமல் போய்விடுமா? நம் இயக்கம் என்ற கற்பக விருட்சத்தின் ஆணிவேர், அம்மா அவர்களின் கொள்கைகளும், அடிமரமும், நுனிமரமும், கிளைகளும், கனிகளும் என அத்தனையும், உண்மையான தொண்டர்களாகிய நீங்களும் தான்.

பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், அம்மா ஆகியோர் தலைமை ஏற்ற பொழுதும் ஒரு சிலர் தங்கள் சுயநலனுக்காக தலைமையை விட்டு விலகுவதும், பின் மன்னிப்புக் கோரி இணைவதும் இயல்பான ஒன்றே. நெல்மணிகளோடு, களைகளும் சேர்ந்து வளர்ந்து விடுவது நிலத்தில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் தான். அவற்றைக் காலம் உரிய நேரத்தில் அடையாளம் காட்டிவிடும். ஒரு சில நபர்களோ, ஒரு சிறு குழுவோ தங்களின் சுயநலனுக்காக விலகிச் செல்வதால், கட்சியே முடங்கிவிடும் என்று நினைப்பார்களேயானால், அது, "பூனை கண் மூடினால் உலகம் இருண்டுவிடும்" என நினைப்பது போன்றது. 

சுத்த தங்கங்களாகிய நீங்கள் இருக்கின்றபோது, முலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் இங்கு யார் வருந்தபோகிறார்கள்? அம்மா அவர்களின் கொள்கைகள்தான் நமது அடிப்படை, மக்கள் நலன்தான் நமது பணி, இதற்கு முரணான எண்ணம் கொண்டவர்கள் விலகி நிற்பது நலமே.

முழுக்க முழுக்க தன்னலம் கருதா தியாக உள்ளங்களால் நிரம்பிய இயக்கம் இது. பதவி, பொருளாதாரம், ஆதாயம் என எதையும் கருத்தில் கொள்ளாமல், துரோகத்தை வீழ்த்த, தியாகத்தின் பக்கம் பெறுந்திரளாய் வந்து நிற்கின்ற தூய தொண்டர்கள் கட்டி எழுப்பிய எஃகு கோட்டை தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம். 

தூய தொண்டர்களாகிய உங்களைக் கொண்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை, யாராலும் தீண்டி பார்க்கவும் முடியாது, சீண்டி பார்க்கவும் முடியாது. அப்படி செய்தால், அது உயர் அழுத்த மின்சாரத்தை தொடுவதற்கு சமம். அம்மா அவர்களின் கனவையும், நல்லரசையும் நிலைநாட்டிட உறுதி கொண்டு பயணித்திடுவோம். அதிமுகவையும், இரட்டை இலையையும் துரோகிகளிடமிருந்து மீட்டெடுப்போம்.

கழக பொதுச்செயலாளர் சசிகலா பல இன்னல்களை எதிர்கொண்டு வருவதாலும், கஜா புயலால் டெல்டா மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் பெரும் துன்பம் அடைந்ததாலும் எனது பிறந்தநாளை கொண்டாடிட வேண்டாம் என்ற எனது அன்பு வேண்டுகோளை ஏற்ற ஆருயிர் கழக உடன்பிறப்புகளுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். நாம் ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் ஏராளம் ஏராளம்.  

தேர்தல் களங்களுக்கு ஆயத்தம் ஆகிடுக... வெற்றிகளை குவித்திட வேண்டிய தருணம் நெருங்கிவிட்டது. ஆம், "எதிர்காலம் வரும், நம் கடமை வரும்" என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com