கஜா புயல் நிவாரணம், மேக்கேதாட்டு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப தமிழக கட்சிகள் முடிவு

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில், கஜா புயல் நிவாரணம், மேக்கேதாட்டு அணை விவகாரம், விவசாயிகளின் நிலைமை ஆகிவை தொடர்பான பிரச்னைகளை
கஜா புயல் நிவாரணம், மேக்கேதாட்டு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப தமிழக கட்சிகள் முடிவு


நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில், கஜா புயல் நிவாரணம், மேக்கேதாட்டு அணை விவகாரம், விவசாயிகளின் நிலைமை ஆகிவை தொடர்பான பிரச்னைகளை எழுப்ப தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக , திமுக கம்யூனிஸ்ட் கட்சிகள் முடிவு செய்துள்ளன.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமை (டிச. 11) துவங்குகிறது. இக்கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக மத்திய அரசின் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற அதிமுக, திமுக , மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்கள் பங்கேற்று மாநில நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினர். பின்னர், அவர்கள் தினமணி நிருபரிடம் கூறியதாவது:
நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் பி. வேணுகோபால்: சென்னை , கொல்கத்தா உள்ளிட்ட உயர் நீதிமன்றங்களின் பெயர்களை மாற்றும் விவகாரம் தொடர்பான மசோதா மக்களவையில் நிலுவையில் உள்ளது. அதை நடப்புக் குளிர்காலக் கூட்டத்தில் பட்டியலிட்டு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினேன். மேலும், இக்கூட்டத் தொடரில் அதிமுக சார்பில் தமிழக நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் எழுப்பப்படவுள்ளன.
மாநிலங்களவை அதிமுக குழு தலைவர் நவநீதகிருஷ்ணன்: மேக்கேதாட்டு அணை கட்டுவதற்காக விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்க கர்நாடக அரசுக்கு மத்திய நீர் ஆணையம் அனுமதி கொடுத்தது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு விரோதமானது. இதை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேக்கேதாட்டு அணை விவகாரம், நீட் தேர்வு விவகாரம் , முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அண்ணாதுரை ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது உள்ளிட்டவை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த விஷயத்தில் உரிய பதிலை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். கஜா புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பிரதமர் பார்வையிட்டு, உரிய நிவாரணத் தொகையை வழங்க வேண்டும். இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 18 பேரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 
மாநிலங்களவை திமுக உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன்: 
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட தீர்மானம் என்னவானது என்றே தெரியவில்லை. மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் காவிரி நீர் ஆணையத்திற்கும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கும் ஒருவரே தலைவராக இருப்பது சரியாக இருக்குமா என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று திமுக சார்பில் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரங்கள் எழுப்பப்படும்.
மாநிலங்களவை மார்க்சிஸ்ட் உறுப்பினர் டி. கே. ரங்கராஜன்: ரஃபேல் விவகாரம், சிபிஐ அமைப்பை தவறாகப் பயன்படுத்துவது ஆகியவை தொடர்பாக கருத்துகள் இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் எந்த ஒரு தீர்மானத்திற்கும் மத்திய அரசு மதிப்பளிப்பதில்லை. இதன் மூலம் ஏழு கோடி தமிழ் மக்கள் அவமதிக்கப்படுகின்றனர். தமிழக அரசு இயற்றும் தீர்மானத்திற்கு உரிய மதிப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தினேன். மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பான கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. 
மாநிலங்களவை இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி ராஜா: 
கஜா புயல் பாதிப்பை மத்திய அரசு தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும். தமிழக அரசு கேட்கும் ரூ.15,000 கோடி நிவாரணத்துக்கு மத்திய அரசு செவி சாய்க்க வேண்டும். புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் நேரில் பார்வையிட வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். விவசாயிகள் தங்களது துயரை துடைக்கக் கோரி நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டத்தில் சிறப்பு விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளனர். வேலையில்லாத் திண்டாட்டம், வங்கி நிதி நெருக்கடி உள்ளிட்ட விவகாரங்களுக்குத் தீர்வு காண வேண்டும். இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் தமிழ் மக்கள் மீது ஒரு பாதகமான சூழலை உருவாக்கக்கூடும் என்ற நிலை உள்ளது. மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது. நாடாளுமன்றத்திலும் எழுப்பப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com