உறுப்பு மாற்று சிகிச்சையில் முறைகேடு இல்லை: சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதா
உறுப்பு மாற்று சிகிச்சையில் முறைகேடு இல்லை: சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன்


தமிழகத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாகக் கூறினார்.
தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி அமைப்பு சார்பில் சிறுநீரக நோய்கள் மற்றும் சவால்கள் குறித்த சர்வதேசக் கருத்தரங்கம் சென்னையில் திங்கள்கிழமை தொடங்கியது. வரும் புதன்கிழமை (டிச.12) வரை நடைபெறும் இந்த கருத்தரங்கில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று வெவ்வேறு அமர்வுகளில் உரையாற்ற உள்ளனர்.
முன்னதாக, திங்கள்கிழமை நடைபெற்ற தொடக்க விழாவில் சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
மருத்துவத் துறையில் தேசிய அளவில் தமிழகம் முதன்மையான மாநிலமாக விளங்கி வருகிறது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் சிகிச்சைக்காக இங்கு வருகின்றனர். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளும் சரி, தனியார் மருத்துவமனைகளும் சரி, தரமான சிகிச்சைகளை அளித்து வருகின்றன.
பல்வேறு நோய்கள் குறித்தும், அதன் பாதிப்புகள் குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், நோய்களை வருமுன் தடுப்பதற்கான வழிமுறைகளை பெரும்பாலானோர் பின்பற்றுவதில்லை. அந்த நிலை மாற வேண்டும். குறிப்பாக, தீங்கு விளைவிக்கும் துரித உணவுகளுக்குப் பதிலாக ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது குறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் தமிழகம்தான் சிறந்து விளங்குகிறது. ஆனால், இந்த விவகாரத்தில் சில தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. 
அதாவது, பெரும்பாலான உடல் உறுப்புகள் தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்வதாகவும், பிற நாடுகளைச் சேர்ந்த நோயாளிகளே அதனால் பயனடைவதாகவும் கூறப்படுகிறது. அது முற்றிலும் தவறான கூற்று. 
தமிழகத்தைச் சேர்ந்தவர்களிடம் இருந்து பெறப்படும் உடல் உறுப்புகளில் 98 சதவீதம் இங்குள்ளவர்களுக்கே பயன்படுத்தப்படுகிறது. இந்திய அளவில் எந்த நோயாளிகளுக்கும் பொருந்தாத 2 சதவீத உடல் உறுப்புகள் மட்டுமே வெளிநாட்டினருக்கு உரிய விதிகளுக்குள்பட்டு வழங்கப்படுகிறது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com