பாலைவனமாவதிலிருந்து டெல்டாவை பாதுகாக்க...!

டெல்டா மாவட்டங்கள் பாலை வனமாவதைத் தடுக்க ஒருங் கிணைந்த திட்டங்களை உருவாக்கி அரசு செயல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பாலைவனமாவதிலிருந்து டெல்டாவை பாதுகாக்க...!

புதுக்கோட்டை: டெல்டா மாவட்டங்கள் பாலை வனமாவதைத் தடுக்க ஒருங் கிணைந்த திட்டங்களை உருவாக்கி அரசு செயல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான கடலூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களைப் புரட்டிப் போட்டுவிட்டது கஜா புயல்.
 ஏறத்தாழ 4.50 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன. 40 லட்சம் தென்னை மரங்கள் வீழ்ந்திருக்கின்றன. இவற்றோடு வாழை, முந்திரி, பலா, கரும்பு என பயிர்கள் பெரும் சேதத்துக்குள்ளாகி விட்டன. வாழ்வாதாரம் அழிந்ததால் அதிர்ச்சியில் விவசாயிகளின் தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன. கணக்கெடுப்புகளும் அவற்றின் மீதான மேலாய்வுகளும் நடைபெறுகின்றன. மேலாய்வுகளுக்கு சென்னையிலிருந்து சிறப்பு பணி அலுவலர்களும், அவற்றைக் கணினியில் பதிவு செய்து பணப்பட்டுவாடா செய்திட வெளிமாவட்டங்களில் இருந்து வட்டாட்சியர் நிலையிலான அலுவலர்களும் பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர். இவற்றைக் கண்காணிக்க மூத்த ஐஏஎஸ் அலுவலர்கள், பயிற்சி ஐஏஎஸ் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ள தொகை மிகவும் சொற்பம் என்ற குற்றச்சாட்டும் வலுத்திருக்கிறது. போராட்டங்களும் நடைபெறுகின்றன. ஏதோவொரு முடிவு வரும். ஏதாவதொரு தொகை மக்கள் கைவசம் வந்து சேரும்.
 ஆனால் எவர் கவனத்திலும் இடம்பெறாத, எந்தக் கணக்கெடுப்புக்கு உள்ளும் வராத சுமார் 2 லட்சம் மரங்கள் கஜா புயலால் உடைத்தும், பிடுங்கியும் தூக்கி எறியப்பட்டிருக்கின்றன. ஆல், அரசு, புளியன், வேம்பு, வாகை, கொன்றை உள்ளிட்ட இம்மரங்களைக் கவனிப்பார் யாரும் இல்லை. கணக்கெடுப்புகளும் குரல்களும் பணப் பயிர்களுக்கு மட்டுமே. நெடுஞ்சாலைகளில் இருபுறமும் அரண் போன்று நின்ற புளியன், பொது அரசுப் புறம்போக்கு மற்றும் தனியார் நிலங்களிலும் வளர்ந்திருந்த ஆல், அரசு, வேம்பு, வாகையென இம்மண்ணுக்கான நாட்டு மரங்கள் வேரோடு வீழ்ந்திருக்கின்றன.
 இவ்வாறான மரங்கள் இரண்டு லட்சம் என்பது மேலோட்டமாகப் பார்க்கையில் மிகவும் சிறிய எண்ணிக்கையாக இருக்கலாம். ஆனால் அவையனைத்தும் குறைந்தது 30 வயதுடையவை.
 இனிவரும் காலங்களில் நாம் 2 கோடி மரக்கன்றுகளை நட்டு தீவிரமாகக் கண்காணித்து வளர்த்தாலும், இழந்த இந்த 2 லட்சம் மரங்களுக்கு ஈடாக வளர்ந்துவிட்டால் மிகப்பெரிய ஆறுதல்.
 ஏறத்தாழ டெல்டா மாவட்டங்களின் பசுமைப் போர்வையில் ஆங்காங்கே தைக்க முடியாத பெரும் கிழிசல்கள் விழுந்திருக்கின்றன.
 புவி வெப்பமடைதல் குறித்த விழிப்புணர்வு பிரம்மாண்டமாக ஏற்பட்டிருப்பதாக நம்பப்படும் நிலையில் புயலால் வீழ்ந்த இம்மரங்கள் குறித்த பேச்சு இன்னும் தொடங்கவில்லை.
 சமநிலை குலைந்து போய் தொடர்ச்சியாகப் பெரும் வறட்சியோ மீண்டும் சில பேரிடர்களையோ சந்திக்கலாம். மழை குறையும். வெயில் தாக்கம் அதிகரித்து காணப்படும்.

ஒருங்கிணைந்த திட்டம் தேவை:
 ஏற்கெனவே மரம் வளர்க்கும் திட்டம் தமிழ்நாட்டில் செயல்பாட்டில் உள்ளது. ஆனால் அது மெய்யான வீச்சோடு இல்லை என்பதுதான் பரவலான குற்றச்சாட்டு. வனத்துறையில் தற்போது ஆர்வம் கொண்ட குறிப்பிடத்தக்க மூத்த ஐஎப்எஸ் அதிகாரிகளும், துடிப்பான இளம் வனவர்களும் இருக்கிறார்கள்.
 வெறுமனே உயர் அலுவலர்கள் மட்டுமல்லாது களத்தில் பணியாற்ற பணியாளர்களோடு இணைந்த தனித்திட்டம் வகுத்தால் அடுத்த ஐந்தாண்டுகளில் காணாமல் போன மரங்களை மீட்டுவிடலாம். இதற்கு நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறைகளுடனான ஒருங்கிணைப்பு கட்டாயம் தேவை.
 நிமிர்ந்து நிற்கும் பனைமரங்கள்!
 கஜா புயலின் இத்தனைப் பெரிய சீற்றமும் நம்முடைய மாநில மரமான பனையைத் தொட்டுக்கூட பார்க்கவில்லை. இது சாதாரணமாகக் கடந்துவிடக் கூடியதல்ல. மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டியது. அதேபோல மாநிலம் முழுவதும் பனை நடுவதற்கான விழிப்புணர்வு அதிகரித்திருப்பதையும் கருத்தில் கொண்டு பிரத்யேகமாக நீர்நிலைகளைச் சுற்றியும், நெடுஞ்சாலை ஓரங்களிலும் ஒரு கோடிப் பனை விதைகளை விதைக்கும் திட்டத்தைத் தொடங்க வேண்டும். நீண்டகாலம் காத்திருந்து முளைவிடும் தன்மையுடையது பனை என்பதால் தொலைநோக்குத் திட்டமாக இதனை மேற்கொள்ளலாம்.
 இதுபோல கூடுதல் திட்டங்களைப் பிரத்யேகமாக டெல்டா பகுதிகளுக்கென வகுப்பதுடன் அதனைச் செயல்படுத்தவும், தொடர்ந்து கண்காணிக்கவும் தனித்தனி உயர்நிலைக் குழுக்களையும் உருவாக்கிட வேண்டும். இல்லாவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக டெல்டா மாவட்டங்கள் பாலையாவதைத் தவிர்க்க இயலாது.
 -சா. ஜெயப்பிரகாஷ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com