நசிந்து வரும் கைத்தறி நெசவுத் தொழில்

நசிந்து வரும் கைத்தறி நெசவுத் தொழிலை அழிவிலிருந்து காப்பாற்ற புதிய திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நசிந்து வரும் கைத்தறி நெசவுத் தொழில்

திருநெல்வேலி: நசிந்து வரும் கைத்தறி நெசவுத் தொழிலை அழிவிலிருந்து காப்பாற்ற புதிய திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
 தமிழகத்தில் விவசாயம், கைத்தறி நெசவுத் தொழில், பீடி சுற்றுதல், கைவினைப் பொருள் உற்பத்தி செய்தல் போன்றவற்றில் பல்லாயிரக்கணக்கானோர் ஈடுபட்டு வருகின்றனர்.
 சென்னை, காஞ்சிபுரம், கரூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெருமளவில் கைத்தறி துணி உற்பத்தி செய்யப்படுகின்றன.
 பருத்தி, பட்டு, கம்பளி ஆடைகள் அணிவது தமிழர்களின் தனிச் சிறப்பு. சாயம் தோய்த்தல், பாவு சரி செய்தல், தார் சுற்றுதல், ஜரிகை வடிவமைத்தல் போன்ற நெசவு சார்ந்த துணைத் தொழில்களில் நெசவாளர்கள் குடும்பத்துடன் ஈடுபடுகின்றனர்.
 சேலம், ஈரோடு, கரூர், காஞ்சிபுரம், சங்கரன்கோவில், ஆண்டிப்பட்டி, எட்டயபுரம், பரமக்குடி, சாயர்புரம், புளியம்பட்டி, ஏரல், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்றவை நெசவுத் தொழிலுக்கு புகழ்பெற்ற நகரங்கள்.
 கோவை நெசவு சார்ந்த தொழிலில் முன்னணி வகிக்கிறது. பின்னலாடைத் தொழிலில் திருப்பூர் ஆசியாவிலேயே சிறந்து விளங்குகிறது.
 காஞ்சிபுரத்தில் உற்பத்தியாகும் பட்டுச் சேலைகள் புகழ்பெற்றவை. அடுத்தபடியாக திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பட்டு முக்கிய பங்கு வகிக்கிறது. பட்டு நெசவில் நெசவுத் தொழிலாளர் குடும்பங்கள் பரம்பரை பரம்பரையாக ஈடுபட்டுள்ளன. பட்டுச் சேலை, செயற்கை பட்டு, போர்வை ரகங்கள், ஜமுக்காளம், சட்டைத் துணிகள், வேட்டி, துண்டு ரகங்கள் கைத்தறியில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
 நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி துணிகளை இவற்றின் தாய் சங்கமாகத் திகழும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் (கோ ஆப்-டெக்ஸ்) கொள்முதல் செய்து, தனது விற்பனை நிலையங்கள் மூலம் சந்தைப் படுத்துகிறது.
 தமிழகத்தில் தயாரிக்கப்படும் பட்டு-கைத்தறி ஆடைகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு மட்டுமல்லாது, அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், பிரான்ஸ், கனடா, மலேசியா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
 கைத்தறி துணி ரகங்களுக்கு தமிழக அரசு சாதாரண காலங்களில் 20 சதவீதமும், தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைக் காலங்களில் 30 சதவீதமும் தள்ளுபடி வழங்குகிறது.
 கைத்தறி துணிகளை மக்களிடையே கொண்டு செல்லும் வகையில் ஆண்டுதோறும் மாவட்டத் தலைநகரங்களில், கோடை காலத்தில் கைத்தறி கண்காட்சி நடத்தப்படுகின்றன.
 இதில் ஈரோடு ஜவுளி சந்தையும் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கிருந்துதான் பிற மாநிலங்களுக்கு கைத்தறி ரகங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கைத்தறி நெசவாளர்கள், கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராகத் தங்களை இணைத்துக் கொண்டு மூலப் பொருள்களைப் பெற்று துணிகளை உற்பத்தி செய்தளிக்கின்றனர். தமிழகத்திலுள்ள 1,200 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் சுமார் 5 லட்சம் தொழிலாளர்களுக்கு இத்தொழில் வாழ்வாதாரமாக உள்ளது. கச்சாப் பொருள்களின் விலை உயர்வு, மூலப் பொருள்கள் தட்டுப்பாடு காரணமாக பட்டுச் சேலை ரகங்கள் உற்பத்தி செய்வதில் நெருக்கடி அதிகரித்துள்ளது. இது தவிர, கைத்தறி துணிகளுக்கு அரசு வழங்கும் தள்ளுபடி மானியத்தைப் பெறுவதில் இருக்கும் கட்டுப்பாடுகள் காரணமாக துணிகள் விற்பனையில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது.
 இதுமட்டுமல்லாது, கைத்தறிக்கு ஒதுக்கப்பட்டுள்ள வேட்டி, துண்டு, சேலை உள்பட11 ரகங்களும் விசைத்தறியில் உற்பத்தி செய்து, கைத்தறி உற்பத்தி விலையை விட குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால் கூட்டுறவு சங்கங்களில் கைத்தறி துணிகள் தேக்கமடைந்துள்ளன. சங்கங்களில் உற்பத்தியாகும் கைத்தறி ரகங்களுக்கு 20 சதவீதம் லாபம் நிர்ணயித்து விற்பனை செய்து கொள்ளலாம்.
 ஆனால், கோ ஆப்டெக்ஸ் நிறுவனம், கைத்தறி ரகங்களுக்கு 10 சதவீதம் மட்டுமே லாபம் தருகிறது. போக்குவரத்துச் செலவு, தயாரிப்புச் செலவு போக மிக சொற்ப லாபமே சங்கங்களுக்கு கிடைக்கிறது. இதுபோன்ற காரணங்களால் கைத்தறி சங்கங்கள் நலிவடையத் தொடங்கின.
 சங்கங்களுக்கு அரசு வழங்க வேண்டிய தள்ளுபடி மானியம், கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் வழங்க வேண்டிய கொள்முதல் தொகை 2 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.
 உரிய நேரத்தில் சங்கங்களுக்கு இத்தொகை வழங்கப்படாததால் நிதி ஆதாரம் இல்லாமல் சங்கங்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் திணறுகின்றன.
 கைத்தறி சங்கங்களுக்கு மத்திய கூட்டுறவு வங்கிகள் கடனுதவி வழங்குகின்றன. இந்த சங்கங்கள் வங்கிகளில் இருந்து நிதி ஆதாரத்தை கடனாகப் பெற்று நெசவாளர்களுக்கு வேலை அளித்து வருகின்றன. நிதி நெருக்கடியால் வங்கிக் கணக்கில் இருந்து நிதி பெற முடியாமல் நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை அளிக்க இயலாத நிலை உருவாகியுள்ளது.
 நெசவுத் தொழிலில் போதிய கூலி கிடைக்காததால் மாற்றுத் தொழில் தேடி கைத்தறி நெசவாளர்கள் புலம் பெயர்ந்ததால் இத்தொழிலில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்து விட்டது.
 கூட்டுறவு சங்கங்கள் தவிர, தமிழகத்தில் காஞ்சிபுரம், மதுரை, ஈரோடு போன்ற நகரங்களில் தனியார் உற்பத்தியாளர்கள் கைத்தறி துணிகளை உற்பத்தி செய்கின்றனர். தனியார் உற்பத்தியாளர்களும் தொடர்ந்து வேலை அளிப்பதில்லை, முறையான கூலி உயர்வும் வழங்குவதில்லை என்கின்றனர் நெசவுத் தொழிலாளர்கள்.
 நெசவாளர்களுக்கு மானியத்தில் பெடல் தறி போன்ற உபகரணங்களை அரசு வழங்கிய போதிலும் கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்ய அரசு தடை விதிக்க வேண்டும்.
 பெருமளவில் கைத்தறி துணிகள் உற்பத்தி செய்யப்படும் பகுதியில் நெசவாளர்களை ஈர்க்கவும், அடுத்த தலைமுறையினர் இத்தொழிலில் தொடர்ந்து ஈடுபடவும், கைத்தறி துணி ரகங்களை சந்தைப்படுத்தவும் புதிய திட்டங்களைத் தீட்டி அமல் படுத்துவதன் மூலமும் கைத்தறி நெசவுத் தொழிலை மேம்படுத்த முடியும் என்பதே நெசவாளர்களின் எதிர்பார்ப்பாகும்.
 - சா. ஷேக்அப்துல்காதர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com