அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

நோயாளிகளிடம் கட்டாயப்படுத்தி லஞ்சம் வசூலிப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர்
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை பிரசவ பிரிவில் உள்ள செவிலியர் மற்றும் பணியாளர்களிடம் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை பிரசவ பிரிவில் உள்ள செவிலியர் மற்றும் பணியாளர்களிடம் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்.


நோயாளிகளிடம் கட்டாயப்படுத்தி லஞ்சம் வசூலிப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனர். இச் சோதனையில் கணக்கில் வராத பணம், ஆவணங்கய்ர போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழக சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் மாவட்ட அரசு தலைமை பொது மருத்துவமனைகள், மகப்பேறு மருத்துவமனைகள், குழந்தைகள் நல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் மக்களிடம் கட்டாயப்படுத்தி கீழ் நிலை ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாகப் புகார் கூறப்படுகிறது.
மகப்பேறு வார்டுகளிலும், மருத்துமனைகளிலும் பிறந்த குழந்தையை காட்டுவதற்கு ரூ.500 முதல் ரூ.2,000 வரை லஞ்சம் வாங்குவதாகவும், சி.டி.ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்க வருபவர்களிடம் அரசு நிர்ணயித்ததைவிடக் கூடுதலாக பணம் பெறுவதாகவும் கூறப்படுகிறது.
சி.டி.ஸ்கேன், எக்ஸ்ரே ஆகியவை முன்பதிவு செய்து எடுக்கப்படும் நிலையில், லஞ்சமாக பணம் கொடுத்தால் உடனடியாக எடுக்கப்படுகிறது. புறநோயாளிகளாக சிகிச்சை பெற வருபவர்களிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு பெயரைப் பதிவு செய்வதற்கும், முன்னுரிமை பெற்று சிகிச்சை பெறுவதற்கும் அனுமதிக்கின்றனர். உள்நோயாளிகளுக்கு வழங்குவதற்கு பண்டக சாலையில் வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருள்களை இருப்பைக் குறைத்துக் காட்டி முறைகேடு செய்கின்றனர்.
மருந்து கிட்டங்கிகளில் முக்கியமான மருந்துகளை வெளிச்சந்தையில் விற்கின்றனராம். அறுவை சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள், உபகரணங்களை சம்பந்தப்பட்ட நோயாளிகளின் குடும்பத்தினரிடமே வெளி மருந்துக் கடைகளில் வாங்கி வரச் செய்து, அறுவைச் சிகிச்சைகள் நடைபெறுகின்றன என குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. அரசு மருத்துவமனைகளில் சில ஊழியர்கள் செய்யும் லஞ்ச வசூலால், பொதுமக்கள் ஏமாற்றமடைவதாக சில அரசியல் கட்சியினரும், சமூக இயக்கத்தினரும் வேதனை தெரிவித்து வந்தனர்.
இதுதொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடமும் ஏராளமான புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், வெள்ளிக்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை: மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வெள்ளிக்கிழமை ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர். சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தங்கசாமி தலைமையில் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் என 11 பேர் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் சோதனை செய்ய வந்தனர்.
அவர்கள் மூன்று குழுக்களாகப் பிரிந்து சென்று, மருத்துவமனையின் மருந்து கிடங்கு, பண்டக சாலை, புறநோயாளிகள் பிரிவுகளில் சோதனை செய்தனர். அங்குள்ள ஆவணங்கள், மருந்து மற்றும் உணவுப் பொருள் இருப்பைப் பரிசோதித்தனர்.
பணம் பறிமுதல்: சில கீழ் நிலை ஊழியர்களிடம் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்ததில், கணக்கில் வராத வகையில் அதிகமாக பணம் வைத்திருந்த 3 ஊழியர்களிடமிருந்து தலா ரூ.1000 ரொக்கத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். 
திருவல்லிக்கேணி கஸ்தூர்பா மகப்பேறு மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேற்கொண்ட சோதனையில் பல முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர். லஞ்சப் புகார் கூறப்பட்ட சில ஊழியர்களை விசாரணைக்கு வருமாறு போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும்: காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை பொது
மருத்துவமனையில் டி.எஸ்.பி. சிவபாதசேகரன் தலைமையில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இதில் சில ஊழியர்களிடமிருந்து கணக்கில் வராத ரூ.12 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை பொது மருத்துவமனையில் டி.எஸ்.பி.சங்கர் தலைமையில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். சேலம் ஓமலூரில் ஏ.டி.எஸ்.பி. சந்திரமௌலி தலைமையிலும், திண்டுக்கல்லில் டி.எஸ்.பி.சத்யசீலன் தலைமையிலும், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் டி.எஸ்.பி. புஷ்பராஜ் தலைமையிலும் அரசு மருத்துவமனைகளில் சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனையில் சில இடங்களில் பணமும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com