வியாழக்கிழமை 13 டிசம்பர் 2018

மின் சீரமைப்புப் பணிக்கு ஊழியர்கள் வராததைக் கண்டித்து துணை மின்நிலையத்தைப் பூட்டி கிராம மக்கள் போராட்டம்

DIN | Published: 07th December 2018 01:58 AM
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள உள்ளிக்கோட்டை துணை மின்நிலையத்தின் முன்பக்க இரும்புக் கதவை பூட்டிபோராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள


திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கஜா புயலால் சேதமடைந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணிக்கு, மின் ஊழியர்கள் வராததைக் கண்டித்து, வியாழக்கிழமை துணை மின்நிலையத்தைப் பூட்டி, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
கடந்த மாதம் 15-ஆம் தேதி நள்ளிரவில் வீசிய கஜா புயலின் சீற்றத்தில், மன்னார்குடி அருகே உள்ள உள்ளிக்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் நூற்றுக்கணக்கான மின் கம்பங்களும், மின்மாற்றிகளும் சேதமடைந்தன. தற்போது, 20 நாள்களைக் கடந்தும், இப்பகுதிகளில் முழுமையாக மின் கம்பங்கள் சீரமைக்கப்படவில்லை. இதனால், இப்பகுதி மக்கள் மின்சாரமின்றி பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 
குறிப்பாக, உள்ளிக்கோட்டை தெற்குத் தெரு, அரசு மருத்துவமனைச் சாலை, அண்ணாநகர், சம்மட்டிக்குடிகாடு ஆகிய பகுதிகளில் மின் சீரமைப்புப் பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்படாதது குறித்து, மின்வாரியத்துக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும், உள்ளிக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளியூர் மின் ஊழியர்களை, இப்பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள அனுப்பி வைக்காமல், வேறு பகுதிகளுக்கு மின் சீரமைப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டனராம்.
இதனால், ஆத்திரமடைந்த உள்ளிக்கோட்டை பகுதி மக்கள், ஊராட்சி முன்னாள் தலைவர் செ.இளங்கோவன் தலைமையில், மதுக்கூர் இணைப்புச் சாலையில் உள்ள துணைமின் நிலையத்துக்கு திரண்டு சென்று, முன்பக்க இரும்புக் கேட்டை பூட்டி, போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து, தகவல் அறிந்த மன்னார்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் வ. அசோகன், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அ.மதியழகன் மற்றும் போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று, பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மின்வாரிய அதிகாரிகள் தரப்பில், உள்ளிக்கோட்டை முழுவதும் விரைவில் மின் சீரமைப்புப் பணி நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டதையடுத்து, போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.


 

More from the section

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
ஆலவிருட்சத்தின் இலைகள் உதிர்வதால் விருட்சமே இல்லாமல் போய்விடுமா? டிடிவி தினகரன் சூசகம்
தாழ்வு மண்டலம் தீவிரப் புயலாக மாறி ஆந்திராவை நோக்கி நகரும்: இந்திய வானிலை மையம்
மேக்கேதாட்டு விவகாரம் குறித்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த்
டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை தொடர்ந்து சிபிஐ விசாரிக்க வேண்டும்: கோவை நீதிமன்றம் உத்தரவு