செவ்வாய்க்கிழமை 11 டிசம்பர் 2018

கஜா புயல் குறித்து விவாதிக்க சட்டப்பேரவை நீட்டிப்பை ஏற்காதது கண்டனத்துக்குரியது: ஸ்டாலின்

DIN | Published: 06th December 2018 09:04 PM


கஜா புயல் பாதிப்பு குறித்து விவாதிக்க சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை நீட்டிக்க கோரிக்கை வைத்தும், அதனை சபாநாயகர் ஏற்காதது கடும் கண்டனத்துக்குரியது என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

காவிரி குறுக்கே மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (வியாழக்கிழமை) சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் கூடியது. அப்போது, கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முதல்வர் கொண்டு வந்த கண்டனத் தீர்மானம் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில்,  

"மேக்கேதாட்டுவில் அணை கட்டும் பிரச்னை குறித்து இன்று சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தின் மூலமாக ஒரு தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையில் அந்தத் தீர்மானத்தை அரசியலுக்கு அப்பாற்பட்டு, கட்சி பாகுபாடின்றி இது தமிழக மக்களுடைய வாழ்வாதாரப் பிரச்னை என்ற காரணத்தால் நாங்கள் ஆதரித்து பேசியிருக்கிறோம்.

அதேநேரத்தில் நான் ஒரு கோரிக்கையை எடுத்து வைத்தேன். நியாயமாக ஆணையத்தை கண்டிக்கிற நேரத்தில் மத்திய அரசையும் கண்டித்து அந்தத் தீர்மானம் இடம்பெற்றிருக்க வேண்டும். வெறும் வேண்டுகோள் கேட்கக்கூடிய வகையில் தான் அந்தத் தீர்மானம் அமைந்திருக்கிறது. ஒரு கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றி இருந்தால் அது முழுஅளவில் நிறைவடையக் கூடிய நிலையில் இருந்திருக்கும் என்ற கருத்தை எடுத்துச் சொன்னேன். 

ஆனால், அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொன்னாலும் அந்தத் தீர்மானத்தை தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக டெல்டா பகுதியில் இருக்கக்கூடிய மக்களுடைய வாழ்வாதாரத்தை அடிப்படையாக வைத்து அதை நாங்கள் ஆதரித்து நிறைவேற்றி தந்திருக்கிறோம்.

அதுமட்டுமல்ல, இன்று ஒரு நாள் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தை கூட்டிய நீங்கள் நாளையும் இந்த சிறப்புக் கூட்டத்தை நீட்டிக்க வேண்டுமென வலியுறுத்தினேன். அண்மையில் கஜா புயலினால் பாதிக்கப்பட்டு தங்களுடைய வாழ்வாதாரத்தை முழுமையாக இழந்து பரிதவித்துக் கொண்டிருக்கும் டெல்டா பகுதி மக்களுக்கு முழுமையான நிவாரணம் போய் சேரவில்லை.

அதேபோல், மத்திய அரசும், மாநில அரசு கேட்டிருக்கக்கூடிய நிதியை தருவதற்கான முயற்சியில் இதுவரையில் ஈடுபடவில்லை. எனவே, அதுகுறித்தும் விவாதிக்க வேண்டும். எனவே நாளையும் இந்த அவையை நீடித்து நடத்திட வேண்டும் என்று பேரவைத் தலைவருக்கு நான் ஒரு வேண்டுகோள் எடுத்து வைத்தேன். அந்த வேண்டுகோளை பேரவைத் தலைவரோ, இந்த அரசோ ஏற்றுக்கொள்ளவில்லை. அதனை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்" என்றார்.

More from the section

இந்த நாள் இனிய நாள்: ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து கனிமொழி ட்வீட் 
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி: சந்திரசேகர ராவுக்கு ராமதாஸ் வாழ்த்து 
ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்! 
நாளை முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா..?
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி: சந்திரசேகர ராவுக்கு ராமதாஸ் வாழ்த்து