வியாழக்கிழமை 13 டிசம்பர் 2018

கஜா புயல்: அரையாண்டுத் தேர்வு நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்

DIN | Published: 04th December 2018 01:51 AM


கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு நடத்துவது குறித்து முதல்வருடன் ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மூலம் நிவாரண உதவி வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 11.17 லட்சம் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன. முதல்வரின் ஆணைக்கிணங்க, ஜனவரி 10-ஆம் தேதிக்குள் இலவச மடிக்கணினி, ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
ஸ்மார்ட் கார்டில் மாணவர்களின் முகவரி, ரத்தப் பிரிவு, கியூ ஆர் கோடு போன்றவை ஒருங்கிணைக்கப்பட்டு, படித்த பள்ளி விவரம் உள்ளிட்டவை அடங்கி இருக்கும். இந்தியாவில் எந்தப் பகுதிக்குச் சென்றும் சிம் கார்டு மூலம் டி.சி. பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. எந்தப் பள்ளி, கல்லூரிகளிலும் சேர இது பயனுள்ளதாக இருக்கும். இந்தியாவில் முதல்முறையாக இத்திட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்படவுள்ளது.
திறனறித் தேர்வு தள்ளிவைக்கப்படுகிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரையாண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என்பது குறித்து முதல்வருடன் ஆலோசனை செய்த பிறகு முடிவு அறிவிக்கப்படும். 
புயலால் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜாக்டோ -ஜியோ போராட்டத்தை வாபஸ் பெற்றது வரவேற்கத்தக்கது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 84 ஆயிரம் பேருக்கு பாடப் புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. நிவாரணப் பணிகள் குறித்து குறை கூறிவரும் கமல், ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரடியாக வந்து பார்க்க வேண்டும். குறை சொல்வது சுலபம். ஆனால், பணிகளை முடிப்பது என்பது கடினமானது என்றார்.
பேட்டியின்போது, எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, கே.வி.இராமலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

More from the section

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
ஆலவிருட்சத்தின் இலைகள் உதிர்வதால் விருட்சமே இல்லாமல் போய்விடுமா? டிடிவி தினகரன் சூசகம்
தாழ்வு மண்டலம் தீவிரப் புயலாக மாறி ஆந்திராவை நோக்கி நகரும்: இந்திய வானிலை மையம்
மேக்கேதாட்டு விவகாரம் குறித்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த்
டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை தொடர்ந்து சிபிஐ விசாரிக்க வேண்டும்: கோவை நீதிமன்றம் உத்தரவு