இந்திய அணி மிடில் ஆர்டர் நம்பிக்கை நட்சத்திரமானார் ராயுடு

மே.இ.தீவுகளுக்கு எதிரான நான்காவது ஒரு நாள் ஆட்டத்தில் அம்பதி ராயுடுவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்னைக்கு தீர்வு கிட்டியுள்ளது.
இந்திய அணி மிடில் ஆர்டர் நம்பிக்கை நட்சத்திரமானார் ராயுடு


மே.இ.தீவுகளுக்கு எதிரான நான்காவது ஒரு நாள் ஆட்டத்தில் அம்பதி ராயுடுவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்னைக்கு தீர்வு கிட்டியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் மிடில் ஆர்டர் பேட்டிங் எப்போதுமே சிக்கலான நிலையில் இருந்து வருகிறது. குறிப்பாக 4, 5, 6 மற்றும் 7-ஆம் நிலை பேட்ஸ்மேன்கள் பேட்டிங் கேள்விக்குறியாகவே உள்ளது. தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடி நல்ல ஸ்கோரை பெற்றுத் தந்தாலும், அதை தக்க வைக்க மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பங்கு அவசியமாகும்.
ரோஹித், ஷிகர் தவன் தொடக்க வீரர்களாகவும், கேப்டன் கோலி மூன்றாவது நிலை பேட்ஸ்மேனாகவும் களமிறங்குகின்றனர். இவர்களில் எவர் ஆட்டமிழந்தாலும், பின்னர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் களமிறங்குகின்றனர். ஆட்டத்தின் மத்திய ஓவர்களில் ஸ்கோரை குறைந்து விடாமல் பார்த்துக் கொள்வது இவர்களின பணியாகும்.
மிடில் ஆர்டரில் தோனி, ராயுடு, கேஎல் ராகுல், கேதர் ஜாதவ், ரிஷப் பந்த் ஆகியோர் உள்ளனர். நான்காம் நிலை வீரர் என்பது மிகவும் பொறுப்பு வாய்ந்ததாகும். இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந்த கோடைக்காலத்தில் நடைபெற்ற சுற்றுப்பயணத்தின் போது மிடில் ஆர்டர் பேட்டிங்கில் பிரச்னை தோல்விக்கு ஒரு காரணமாக விளங்கியது.
கேப்டன் கோலி, பயிற்சியாளர் சாஸ்திரிக்கு இப்பிரச்னை தீராத தலைவலியாக இருந்து வந்தது. இதற்கிடையே வரும் 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன. அதற்கு முன்னர் மிடில் ஆர்டருக்கான வீரர்களை நிலை நிறுத்துவது அவசியமாகும்.
33 வயதான ராயுடுவுக்கு கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் நிறைந்துள்ளது. 40 ஒரு நாள் இன்னிங்ஸ்களில் அவரது சராசரி 50 ஆக உள்ளது. இடையில் அணியில் ராயுடு இடம் பெறுவதே சிக்கலாகி விட்டது. இங்கிலாந்துக்கான சுற்றுப்பயணத்தில் யோ-யோ சோதனையில் தேர்ச்சி பெறவில்லை எனக்கூறி அவருக்கு இடம் தரப்படவில்லை.
5 ஆண்டுகளுக்கு மேலான சர்வதேச ஆட்டங்களில் ஜிம்பாப்வே, இலங்கைக்கு எதிராக மட்டுமே சதங்களை அடித்திருந்தார். 
இந்நிலையில் தற்போது இந்நிலையில் அம்பதி ராயுடுவை மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் நான்காம் நிலை பேட்ஸ்மேனாக களமிறக்கினர்.
மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ராயுடு 100 ரன்ளை குவித்தார். நான்காம் நிலை பேட்ஸ்மேனாக நிலைத்து நின்று ரோஹித் சர்மாவுடன் சேர்ந்து 211 ரன்களை எடுத்தார். இதனால் அணியில் மிடில் ஆர்டர் பேட்டிங் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளதாக அணி நிர்வாகம் கருதுகிறது.
மேலும் தோனி இல்லாத நிலையில் ராகுல், தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், மணிஷ்பாண்டே, ஷிரேயஸ் ஐயர் 
ஆகியோர் சிறப்பாக ஆடினால் நிரந்தரமாக இப்பிரச்னை தீர்ந்து விடும். கடந்த 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது ரஹானே நான்காம் நிலை பேட்ஸ்மேனாக களமிறங்கினார். அப்போது ராயுடு முழுவதும் அணியில் இடம் பெறவில்லை. பதிலி வீரராகவே இருந்தார். ஆனால் ரஹானே தனது பணியை சரியாக செய்யாததால் ஒரு நாள் ஆட்ட அணியில் இடம் பெறும் வாய்ப்பை தவறவிட்டார். தற்போது ராயுடு நான்காம் நிலை, மிடில் ஆர்டரில் நம்பிக்கை தரும் வீரராக உருவெடுத்துள்ளார்.
இதுதொடர்பாக கேப்டன் கோலி கூறியதாவது:
ஹைதராபாத் பேட்ஸ்மேனான அம்பதி ராயுடு மீது நம்பிக்கை வைத்து அணி நிர்வாகம் நான்காம் நிலையில் களமிறக்கியது. அவரும் அதை காப்பாற்றும் வகையில் ஆடியுள்ளார். உலகக் கோப்பைக்கான அணியை பலப்படுத்தும் விதத்தில் ராயுடுவின் பங்குள்ளது. ஆசிய கோப்பை போட்டியிலும் ராயுடு நன்றாக ஆடினார். நான்காம் நிலை பேட்ஸ்மேனாக அவரே தொடர்ந்து களமிறக்கப்படுவார். 
இதன் மூலம் மிடில் ஆர்டர் தற்போது நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com