உலகின் இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் சாதனையைக் குறி வைக்கும் 12 வயது சென்னைச் சிறுவன்!

கர்ஜாகின்-னின் 16 வருடச் சாதனையை சென்னைச் சிறுவன் முறியடிக்க வாய்ப்புண்டா...
உலகின் இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் சாதனையைக் குறி வைக்கும் 12 வயது சென்னைச் சிறுவன்!

2002-ல், உக்ரைனைச் சேர்ந்த செர்ஜி கர்ஜாகின், 12 வயதில் (12 வருடம் 7 மாதங்களில்) செஸ் கிராண்ட் மாஸ்டராகி, இளம் கிராண்ட் மாஸ்டர் என்கிற சாதனையைச் செய்தார். இன்றுவரை அவர் சாதனையை யாராலும் தாண்ட முடியவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 வயது பிரக்ஞானந்தா இந்தச் சாதனையைத் தகர்க்க முயற்சி செய்தார். ஆனால் அவரால் முடியாமல் போனது. 12 வயது 10 மாதம், 13 நாள்களில் கிராண்ட் மாஸ்டர் ஆனார். எனினும் இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்கிற பெருமையைப் பெற்றார். 

இந்நிலையில் பிரக்ஞானந்தாவால் முடியாமல் போனாலும் கர்ஜாகின்னின் சாதனையை முறியடிக்க சென்னையிலிருந்து இன்னொரு இளம் வீரர் முயற்சி செய்துவருகிறார். 

செர்பியாவில் நடைபெற்ற செஸ் போட்டியொன்றை வென்ற 12 வயது சென்னை வீரர் குகேஷ், கிராண்ட்மாஸ்டர் பட்டத்துக்குரிய 2-வது தகுதியை அடைந்துள்ளார். இறுதி கிராண்ட் மாஸ்டர் தகுதியை அடைய அவருக்கு டிசம்பர் 29 வரை அவகாசம் உள்ளது. இதையடுத்து உலக சாதனையைப் படைக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளார் குகேஷ்.

டிசம்பர் 13 முதல் ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெறவுள்ள சன்வே சிட்கெஸ் செஸ் ஃபெஸ்டிவல் போட்டியில் குகேஷ் கலந்துகொள்ளவுள்ளார். இதில் சிறப்பாக விளையாடி அதிகப் புள்ளிகள் பெறுவதன் மூலம் உலகின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்கிற தகுதியை அவரால் அடையமுடியும். இந்த ஒரு போட்டியில் இலக்கை அடையமுடியாமல் போனால் கர்ஜாகின்-னின் சாதனையை குகேஷால் வீழ்த்த முடியாமல் போய்விடும். ஸ்பெயின் போட்டியில் ஏழு புள்ளிகளும் 2600 ஈஎல்ஓ புள்ளிகளையும் எட்டும்போது குகேஷால் இறுதித் தகுதியை அடைந்து கிராண்ட் மாஸ்டர் ஆகி சாதனை படைக்கமுடியும். 

இதையடுத்து, கர்ஜாகின்-னின் 16 வருடச் சாதனையை சென்னைச் சிறுவன் முறியடிக்க வாய்ப்புண்டா என்கிற எதிர்பார்ப்பு செஸ் ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com