ஒவ்வொரு விக்கெட்டுக்கும் இந்திய அணியினரைப் போராட வைத்த ஆஸி. பேட்ஸ்மேன்கள்: அடிலெய்ட் டெஸ்டின் கடைசி நாள் ஹைலைட்ஸ்!

மிகவும் பரபரப்பாகச் சென்ற டெஸ்ட் ஆட்டத்தின் கடைசி நாளில் இந்திய அணியின் வெற்றி அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை...
ஒவ்வொரு விக்கெட்டுக்கும் இந்திய அணியினரைப் போராட வைத்த ஆஸி. பேட்ஸ்மேன்கள்: அடிலெய்ட் டெஸ்டின் கடைசி நாள் ஹைலைட்ஸ்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இதன்மூலம், ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது இந்திய அணி.

4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் அடிலெய்டில் 6-ம் தேதி தொடங்கியது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 250 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சேதேஸ்வர் புஜாரா அபாரமாக ஆடி 123 ரன்களுடன் அணியைச் சரிவில் இருந்து மீட்டார். ஆஸி. அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 235 ரன்களை எடுத்தது. டிராவிஸ் ஹெட் அபாரமாக ஆடி 72 ரன்களை குவித்தார். பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 307 ரன்கள் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு 323 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 4-ம் நாள் முடிவில், ஆஸி. அணி 49 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 104 ரன்களை எடுத்திருந்தது. ஷேன் மார்ஷ் 31, டிராவிஸ் ஹெட் 11 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

5-ம் நாள் ஆட்டம் இரு அணிகளுக்கு இடையிலான போட்டி மனப்பான்மையை நன்கு வெளிப்படுத்தியது. ஒவ்வொரு விக்கெட்டை எடுக்கவும் இந்திய அணி மிகவும் மெனக்கெட வேண்டியதாக இருந்தது. இந்திய பந்துவீச்சாளர்கள் போலில்லாமல் ஆஸி. பின்வரிசை வீரர்கள் மிகுந்த பொறுப்புடன் விளையாடி இந்திய அணிக்குக் கடும் சவாலை அளித்தார்கள். அற்புதமான பவுன்சரால் ஹெட்டை 14 ரன்களில் வீழ்த்தினார் இஷாந்த் சர்மா. 166 பந்துகள் எதிர்கொண்டு 60 ரன்கள் எடுத்த ஷேன் மார்ஷை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய வாய்ப்பை உருவாக்கினார் பூம்ரா. மதிய உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்திருந்தது.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு 41 ரன்களில் பூம்ராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் பெயின். 7 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் இந்திய அணியால் மீதமுள்ள விக்கெட்டுகளை எளிதி வீழ்த்தமுடியாமல் போனது. ஒவ்வொரு பேட்ஸ்மேனும் தனது விக்கெட்டைப் பாதுகாத்து இந்திய அணியினரை வெறுப்பேற்றினார்கள். 44 பந்துகள் வரை எதிர்கொண்டு 28 ரன்கள் எடுத்த ஸ்டார்க், ஷமி பந்துவீச்சில் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த டெஸ்டில் ரிஷப் பந்த் பிடித்துள்ள 11-வது கேட்ச் இது. இதன்மூலம் உலகச் சாதனையைச் சமன் செய்துள்ளார். இந்திய விக்கெட் கீப்பர்களில் அதிக கேட்சுகள் பிடித்தவர் என்கிற பெருமையையும் அவர் அடைந்தார்.

மிகவும் பரபரப்பாகச் சென்ற டெஸ்ட் ஆட்டத்தின் கடைசி நாளில் இந்திய அணியின் வெற்றி அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை. 121 பந்துகள் வரை எதிர்கொண்டு 28 ரன்களுடன் இந்திய அணியின் வெற்றியைத் தாமதமாக்கிய கம்மின்ஸ், கடைசியாக பூம்ராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அப்போது ஆஸி. அணியின் ஸ்கோர் - 259. கடைசி விக்கெட்டாவது எளிதில் கிடைக்கும் என்று எதிர்பார்த்த இந்திய அணியினருக்கு மீண்டும் ஏமாற்றம்தான் கிடைத்தது. லயனும் ஹேஸில்வுட்டும் அற்புதமாக அழுத்தமான நிமிடங்களை எதிர்கொண்டார்கள். எனினும் கடைசியில் 13 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஸ்லிப் பக்கம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் ஹேஸில்வுட். கடைசிவரை போராடிய லயன், 47 பந்துகளில் 38 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்ஸில், 119.5 ஓவர்களில் 291 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி முதல் டெஸ்டை 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்தது. இந்திய அணித் தரப்பில் பூம்ரா, ஷமி, அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும் இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இதன்மூலம், ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது இந்திய அணி. இரு இன்னிங்ஸ்களிலும் சிறப்பாக விளையாடிய புஜாராவுக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com