116. துஞ்சலும் துஞ்சலிலாத - பாடல் 5

நம்மை காப்பாற்றும்
116. துஞ்சலும் துஞ்சலிலாத - பாடல் 5


பாடல் 5:

    கொங்கலர் வன்மதன் வாளி ஐந்து அகத்து
    அங்குள பூதமும் அஞ்ச ஐம்பொழில்
    தங்கு அரவின் படம் அஞ்சும் தம்முடை
    அங்கையில் ஐவிரல் அஞ்செழுத்துமே

 
விளக்கம்:

இந்த பாடலில் ஐந்து என்ற என்னுடன் தொடர்பு கொண்டவை குறிப்பிடப்பட்டு, நம்மை காப்பாற்றும் எழுத்தும் ஐந்தெழுத்து என்று சம்பந்தர் கூறுகின்றார். வாளி=அம்பு; பொழில்= சோலை. கொங்கு=நறுமணம் மிகுந்த; அலர்=பூக்கள்; வன்மதன்=மயக்கத்தை ஏற்படுத்தும் வலிமை மிக்க மன்மதன்; ஐந்து என்ற எண்ணினை உணர்த்தும் முகமாக ஐந்த வேறு வேறு பொருட்களை (மன்மதனின் அம்புகள், ஐம்பூதங்கள், ஐம்போழில்கள், பாம்பின் படங்கள், கையின் விரல்கள்) உதாரணமாக சம்பந்தர் காட்டுவது, அவரது மனம் ஐந்து என்ற சொல்லினை உணர்த்தும் ஐந்தெழுத்து மந்திரத்துடன் ஒன்றி இருப்பது புலனாகின்றது.

பொழிப்புரை:

பலரையும் காமமயக்கத்தில் ஈடுபடுத்தும் வலிமை வாய்ந்த மன்மதன் பயன்படுத்தும் அம்புகள், நறுமணம் வாய்ந்த தாமரை, அசோகு, மா, முல்லை மற்றும் கருங்குவளை மலர்கள் ஆகும். இந்த உலகினில் தங்கியுள்ள பூதங்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் என ஐந்து பூதங்கள்; சிறந்த சோலைகளாக கருதப் படுவன, கற்பகம் சந்தனம், பாரிஜாதம், மந்தாரம் மற்றும் அரிசந்தனம் எனப்படும் ஐந்து சோலைகள்; இறைவனின் சடையில் தாங்கும் பாம்பின் படங்கள் ஐந்து; பஞ்சக்கர மந்திரத்தை ஜெபம் செய்வோரின் கை விரல்கள் ஐந்து; இவ்வாறு சிறப்புடைய பல் பொருட்களுக்கு ஒப்ப அஞ்சு எழுத்துக்களை கொண்டதாக உள்ளது திருவைந்தெழுத்து மந்திரம்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com