115. சுற்றமொடு பற்றவை - பாடல் 11

சொற்றுணை வேதியன்
115. சுற்றமொடு பற்றவை - பாடல் 11


பாடல் 11:

    நலம் தரு புனல் புகலி ஞானசம்பந்தன்
    கலந்தவர் கருப்பறியல் மேய கடவுள்ளைப்
    பலம் தரு தமிழ்க் கிளவி பத்தும் இவை கற்று
    வலம் தரும் அவர்க்கு வினை வாடல் எளிதாமே
  

விளக்கம்:

கிளவி என்றால் சொற்கள் என்று பொருள். பொதுவாக சொல் என்றால் புனிதச் சொற்கள் அடங்கிய வேதத்தின் சொற்களை குறிக்கும். அந்த சொற்களுக்கு துணையாக இருப்பவன் இறைவன் என்று உணர்த்தும் முகமாக சொற்றுணை வேதியன் என்று அப்பர் பிரான் நமச்சிவாயப் பதிகத்தினை தொடங்குகின்றார். வாய்மொழியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு (குரு--சீடன் சங்கிலி), பண்டைய நாட்களில் வேதங்கள் சொல்லிக் கொடுக்கப் பட்டன. எழுத்து மூலமாக அறியப்படாமல் வாய் சொற்கள் மூலம் கற்றுக் கொடுக்கப்பட்ட வடமொழி வேதங்கள் எழுதாக் கிளவி என்றும் அழைக்கப்பட்டன. 

சங்கத் தமிழ் நூல்களில் இறைவனின் புகழினைப் பாடும் பாடல்கள்,  இலக்கியங்களில்  பல இருந்த போதிலும், அவற்றை பாடல்களாகவே கருதி வந்தனரே தவிர தோத்திரமாக கருதவில்லை. இறைவனே வேதங்களை அருளிச் செய்தான் என்ற கருத்தும், வடமொழியில் அன்றி வேறு மொழிகளில் வேதங்கள் தோன்றாது என்ற கருத்தும் அந்நாளில் வலுப்பெற்று இருந்தது. மேலும் வடமொழி வேதங்கள் கேட்போருக்கும் ஓதுவோர்க்கும் பல விதமான இம்மை மற்றும் மறுமை பலன்களை தரவல்லது என்ற எண்ணமும் மிகுந்திருந்தது. இந்த சூழ்நிலையில் தான் தேவாரங்கள் தோன்றின. நால்வர் பெருமானாரின் உள்ளங்களில் இறைவனே இருந்து பாடினான் என்றும், இறைவனது கருத்தே தங்களது வாய்மொழியாக வந்தது என்றும் நால்வர் பெருமானர்கள் தங்களது பாடல்களில் உணர்த்துகின்றனர். எனவே தான் வடமொழி வேதங்களைப் போன்று பொருட்செறிவு வாய்ந்தவையாக திருமுறை பாடல்கள் விளங்குகின்றன. பல தேவாரப் பாடல்களில் பிறப்பிறப்புச் சுழற்சி, வினைகளின் தன்மை, நிலையான ஆனந்தம் தரும் முக்தி உலகம், ஆதி அந்தம் இல்லாத பெருமானின் தன்மை, வினைகள் அறுத்து முக்தி நிலைக்கு அழைத்துச் செல்லும் பெருமானின் ஆற்றல், சிவபுராணங்களில் உள்ள பலவகை திருவிளையாடல்கள் முதலியன இடம் பெறுகின்றன. பெரிய புராணத்தில் விரிவாக கூறப்படும் மூவர் பெருமானாரின் வரலாறு, தேவாரப் பாடல்கள் நிகழ்த்திய அற்புதங்களையும், அந்த பாடல்களின் சிறப்புகளையும் உணர்த்துகின்றன. மேலும் பல தேவாரப் பதிகங்கள் இன்றும், பக்தி சிரத்தையுடன் ஓதும் அடியார்களுக்கு சிறந்த பலன்களை அளிப்பதையும் நாம் காண்கின்றோம். வடமொழி வேதங்களை ஓத வேண்டிய முறையில் ஓதினால் நன்மை தரும் ஒலியலைகள் எழுப்பப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அத்தகைய ஒலியலைகள் எழுப்பும் வண்ணம் தேவாரப் பாடல்களுக்கு பண்கள் வரையறுக்கப் பட்டுள்ளன. எனவே, இறைவனது அருளால், அவனது தூண்டுதலால் நால்வர் பெருமானர்களின் வாய்மொழியாக வந்த பாடல்கள், பல பலன்களை ஒதுவோர்க்கு அளிக்க வல்ல இந்த பாடல்கள், வடமொழி வேதங்களைப் போன்று சிறப்புத் தன்மை உடையன என்பது புலனாகின்றது.   

வடமொழி வேதங்களுக்கு உரிய அத்தனை சிறப்புகளும் தேவாரப் பதிகங்களுக்கு உள்ளன என்பதை உணர்த்தும் வகையில் திருநெறிய தமிழ் என்று தான் அருளிய முதல் பதிகத்தின்  கடைக் காப்பில் கூறிய திருஞானசம்பந்தர் வாயிலாக இறைவன் உணர்த்துகின்றார். மூன்று வயதுக் குழந்தை பாடிய பாடல் தோடுடைய செவியன் என்று தொடங்கும் பதிகம். உனக்கு பால் கொடுத்தவர் யார் என்று தந்தை கேட்ட கேள்விக்கு பதிலாக, வெளிவந்த பாடல். இறைவனே அந்த குழந்தையின் உள்ளிருந்து பாடினால் ஒழிய, மூன்று வயதுக் குழைந்தையின் வாயிலிருந்து, பெருமானின் பலவிதமான சிறப்புகளை உணர்த்துவதும், சந்தமுடைய சீர்கள் பொருந்தியதும், ஆகிய பாடல்கள் எவ்வாறு வரமுடியும். திரு என்றால் தெய்வத் தன்மை பொருந்திய என்று பொருள்; நெறிய=சிவநெறிக்கு உரிய; தமிழ்=தமிழ் வேதம். பல தேவாரப் பாடல்களில் திருஞான சம்பந்தர், தமிழ் மறை என்றும் தமிழ்க் கிளவி என்றும் இந்த பாடல்களை குறிப்பிடுகின்றார், மேலும் இந்த பாடல்கள் ஓதுவோர்க்கு அளிக்கும் பலன்களும் உணர்த்தப் படுகின்றன. 

இங்கே விளக்கம் அளிக்கப்பட்டுள்ள திருக்கருப்பறியலூர் பதிகத்தில், கலந்தவர் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். தன்னோடு கலந்து உடனாக இருக்கும் பெருமான் என்று குறிப்பிடுவதன் மூலம், தனது வாய்மொழியாக வந்த இந்த பாடல்கள். இறைவனது கருத்துக்களே என்று உணர்த்துகின்றார். மேலும் பலம் தரு தமிழ்க் கிளவி என்ற தொடர் மூலம் தேவாரப் பதிகங்கள், வடமொழி வேதங்கள் போன்று ஓதுவோர்க்கு பலன் அளிப்பன என்றும் உணர்த்துகின்றார்.         

பொழிப்புரை:

நன்மைகள் தரும் நீர்வளம் நிரம்பிய புகலிப் பதியில் (சீர்காழி நகரின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தோன்றிய ஞானசம்பந்தன்னுடன் கலந்தவனும் திருக்கருப்பறியலூர் தலத்தில் பொருந்தி உறைபவனும் ஆகிய இறைவனைக் குறித்து பாடிய, ஓதுவோர்க்கு பலன்களைத் தரும் தமிழ் வேதமாகிய பத்து பாடல்களையும் நன்கு கற்று, இறைவனை வழிபாடு செய்யும் அடியார்களின் வினைகள் எளிதில் வாடிவிடும்; வினைகள் வாடுவதால் அவர்கள் வினைகள் அற்றவர்களாக மாறி முக்தி உலகம் செல்லும் தகுதியை அடைவார்கள்.    

முடிவுரை:

இந்த பதிகத்து பாடல்களில் பெருமானின் புகழ் எடுத்துரைக்கப் பட்டு, அத்தகைய பெருமை வாய்ந்தவன் உறையும் இடம் கருப்பறியலூர் என்று உணர்த்தப் படுகின்றது. முதல் பாடலில் பக்குவமடைந்த அடியார்களை முக்தி உலகினுக்கு அழைத்துச் செல்வதைக் கற்றவன் என்றும், இரண்டாவது பாடலில் ஓரம்பினால் முப்புரங்கள் மூன்றும் எரித்து அவை பொடியாக மாறுவதைக் கண்டவன் என்றும், தாழ்ந்த குழை தொங்கி ஆடும் காதினை உடையவன் என்று மூன்றாவது பாடலிலும், காலனை காலால் உதைத்து கடந்தவன் என்று நான்காவது பாடலிலும், வேதங்கள் மற்றும் அங்கங்களின் பொருளே தனது கருத்தாகக் கொண்டவன் என்றும் ஐந்தாவது பாடலிலும், மன்மதனை எரித்த நெற்றிக் கண்ணினை உடையவன் என்று ஆறாவது பாடலிலும், இயமனை உதைத்த காலினை உடையவன் என்று ஏழாவது பாடலிலும், இராவணனின் வலிமை குன்றும் வண்ணம் கோபம் கொண்டவன் என்று எட்டாவது பாடலிலும், பிரமனும் திருமாலும் தேடிக் காணாத வண்ணம் மறைந்து கொண்டவன் என்று ஒன்பதாவது பாடலிலும், கொகுடிக் கோயிலில் நிலையாக நிறைந்தவன் என்று பத்தாவது பாடலிலும் கூறுகின்றார். பெருமானின் சிறப்புகளை இந்த பாடல் மூலம் அறிந்து கொண்ட நாம் அவனது புகழினை உணர்த்தும் இந்த பதிகத்தினை ஓதி, கருப்பறியலூர் கடவுளை வணங்கி நமது வினைகளை வாடச் செய்து. பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபடுவோமாக.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com