தீவினைகள் நீங்கி, துன்பமும் துயரமும் இல்லாமல் இருக்க துறைகாட்டும் வள்ளலார் கோவில், திருவிளநகர்

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 40-வது தலமாக போற்றப்படுவது..
தீவினைகள் நீங்கி, துன்பமும் துயரமும் இல்லாமல் இருக்க துறைகாட்டும் வள்ளலார் கோவில், திருவிளநகர்

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 40-வது தலமாக போற்றப்படுவது திருவிளநகர். இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்டு வர நமது தீவினைகள் அகலும், துன்பமும், துயரமும் நம்மை வந்தடையாது.

இறைவன் பெயர்: துறைகாட்டும் வள்ளலார், உச்சிரவனேஸ்வரர்

இறைவி பெயர்: வேயுறுதோளியம்மை

இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.

எப்படிப் போவது

மயிலாடுதுறை - செம்பொனார்கோவில் சாலையில், மயிலாடுதுறையில் இருந்து 6 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. பிரதான சாலை ஓரத்திலேயே கோவிலின் தெற்கு நுழைவாயில் உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு உசிரவனேஸ்வரர் திருக்கோயில்

திருவிளநகர்

மயிலாடுதுறை வட்டம்

நாகப்பட்டிணம் மாவட்டம் – 609 305.

இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தருமை ஆதீன அருளாளுகைக்கு உட்பட்ட பழமையும், பெருமையும் வாய்ந்த சோழர் காலத்திய ஆலயம் இது. தெற்கில் ஒரு நுழைவாயிலுடனும் கிழக்கில் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்டதாகவும் காணப்படுகிறது. இக்கோவில் 2 பிராகாரங்களைக் கொண்டது. இரண்டாவது பிராகாரத்தில் சிறிய நந்தி மண்டபமும், ஆஸ்தான மடபமும் இருக்கின்றன. இரண்டாவது கோபுர வாசலின் இருபுறமும் விநாயகர் காணப்படுகிறார்.

மூலவர் உச்சிரவனேஸ்வரர் கிழக்கு நோக்கியபடி காட்சி தருகிறார். இறைவன் கருவறை விமானம் அழகிய சுதை சிற்பங்கள் நிறைந்து இருப்பதைக் காணலாம். இறைவன் கருவறை கோஷ்டத்தில் காணப்படும் துர்க்கை கண்டு ரசிக்கத்தக்கது. கருவறை மேற்கு கோஷ்டத்தில் காணப்படும் திருமால் சிற்பமும் கலையழகுடன் காட்சி அளிக்கிறது. இறைவி வேயுறுதோளியம்மை தனது திருக்கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி காட்சி தருகிறாள். மேற்குப் பகுதியில் சோமஸ்கந்தர், ஆறுமுகன், அருணாசலேஸ்வரர் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. வடக்குப் பிராகாரத்தில் நடராஜர், கிழக்கில் நவகிரக சந்நிதி, சூரியன், பைரவர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.

சம்பந்தர் ஒருமுறை இத்தலத்துக்கு விஜயம் செய்ய வந்தபோது, காவிரி ஆறு கரைபுரண்டு ஓடுவதைப் பார்த்து கரையிலேயே நின்று பரிதவித்தார். துறை காட்டுபவர் யாரேனும் உள்ளார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்த இவரை வேடன் ஒருவன் தன்னைப் பின்தொடர்ந்து வரும்படி சொல்லி ஆற்றில் இறங்கினான். சம்பந்தரும் அவனைப் பின்தொடர்ந்து ஆற்றில் இறங்க, வெள்ளம் பிரிந்து அவர்களுக்கு வழி விட்டது. மறுகரை சேர்ந்த சம்பந்தர் நன்றி சொல்ல வேடனைத் தேட அவன் மாயமாக மறைந்துவிட்டதைக் கண்டார். இறைவனே வேடனாக வந்து துறை காட்டியதால் அவர் துறைகாட்டும் வள்ளலார் என்று அழைக்கப்படுகிறார்.

தல வரலாறு

முன்னொரு காலத்தில் அருள்வித்தன் என்னும் அந்தணன் இத்தல இறைவன் மீது அளவில்லாத பக்தி கொண்டிருந்தான். நாள்தோறும் இறைவனுக்கு மாலை கட்டிக் கொடுக்கும் தொண்டினைச் செய்து வந்தான். இவனது பக்தியை சோதிக்க விரும்பினார் இறைவன். ஒருநாள் இவன் பூக்கூடையுடன் காவிரி ஆற்றைக் கடந்து வரும்போது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்படி செய்தார். இதனால் கலங்கிய இவன், தன்னைப் பற்றி கவலைப்படாமல் இறைவனுக்குரிய பூக்கூடையை காப்பாற்றுவதில் மிகவும் கவனமாக இருந்தான்.

தலையளவு வெள்ளம் வந்துவிட்டபோதிலும், தன் கைகளால் பூக்கூடையை தலைக்கு மேல் தூக்கிப் பிடித்துக்கொண்டு தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் இறைவனுக்கு செய்யும் கொண்டில் பங்கம் வந்துவிடக் கூடாதே என்று கவலைப்பட்டான். அவனுடைய உறுதியையும், அன்பையும் கண்ட இறைவன் அவனுக்கு அருள்புரிந்து, காவிரி ஆற்றின் வெள்ளத்தை கட்டுப்படுத்தி ஆற்றின் துறையைக் காட்டி அவனைக் கரையேறச் செய்தார். இதனால் இறைவன் துறைகாட்டும் வள்ளல் ஆனார்.

இத்தலத்து இறைவன் மேல் சம்பந்தர் பாடிய பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

ஒளிரிளம்பிறை சென்னிமேல் உடையர் கோவணஆடையர்

குளிரிளம்மழை தவழ்பொழிற் கோலநீர்மல்கு காவிரி

நளிரிளம்புனல் வார்துறை நங்கைகங்கையை நண்ணினார்

மிளிரிளம்பொறி அரவினார் மேயது விளநகரதே.

அக்கரவ்வணி கலனென அதனொடார்த்ததோர் ஆமைபூண்

டுக்கவர்சுடு நீறணிந் தொளிமல்குபுனற் காவிரிப்

புக்கவர்துயர் கெடுகெனப் பூசுவெண்பொடி மேவிய

மிக்கவர்வழி பாடுசெய் விளநகரவர் மேயதே.

வாளிசேரடங் கார்மதில் தொலையநூறிய வம்பின்வேய்த்

தோளிபாகம் அமர்ந்தவர் உயர்ந்ததொல்கடல் நஞ்சுண்ட

காளமல்கிய கண்டத்தர் கதிர்விரிசுடர் முடியினர்

மீளியேறுகந் தேறினார் மேயது விளநகரதே.

கால்விளங்கெரி கழலினார் கையிளங்கிய வேலினார்

நூல்விளங்கிய மார்பினார் நோயிலார்பிறப் பும்மிலார்

மால்விளங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார்

மேல்விளங்குவெண் பிறையினார் மேயது விளநகரதே.

பன்னினார்மறை பாடினார் பாயசீர்ப்பழங் காவிரித்

துன்னுதண்டுறை முன்னினார் தூநெறிபெறு வாரெனச்

சென்னிதிங்களைப் பொங்கராக் கங்கையோடுடன் சேர்த்தினார்

மின்னுபொன்புரி நூலினார் மேயது விளநகரதே.

தேவரும்அமரர்களும் திசைகள்மேலுள தெய்வமும்

யாவரும்மறி யாததோர் அமைதியாற்றழ லுருவினார்

மூவரும்மிவ ரென்னவும் முதல்வரும்மிவ ரென்னவும்

மேவரும்பொரு ளாயினார் மேயது விளநகரதே.

சொற்றரும்மறை பாடினார் சுடர்விடுஞ் சடைமுடியினார்

கற்றருவ்வடங் கையினார் காவிரித்துறை காட்டினார்

மற்றருந்திரள் தோளினார் மாசில்வெண்பொடிப் பூசினார்

விற்றரும்மணி மிடறினார் மேயது விளநகரதே.

படர்தருஞ்சடை முடியினார் பைங்கழல்லடி பரவுவார்

அடர்தரும்பிணி கெடுகென அருளுவாரர வரையினார்

விடர்தரும்மணி மிடறினார் மின்னுபொன்புரி நூலினார்

மிடறரும்படை மழுவினார் மேயது விளநகரதே.

கையிலங்கிய வேலினார் தோலினார்கரி காலினார்

பையிலங்கர வல்குலாள் பாகமாகிய பரமனார்

மையிலங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார்

மெய்யிலங்குவெண் ணீற்றினார் மேயது விளநகரதே.

உள்ளதன்றனைக் காண்பன்கீ ழென்றமாமணி வண்ணனும்

உள்ளதன்றனைக் காண்பன்மே லென்றமாமலர் அண்ணலும்

உள்ளதன்றனைக் கண்டிலார் ஒளியார்தருஞ்சடை முடியின்மேல்

உள்ளதன்றனைக் கண்டிலா வொளியார் விளநகர் மேயதே.

மென்சிறைவண் டியாழ்முரல் விளநகர்த்துறை மேவிய

நன்பிறைநுதல் அண்ணலைச் சண்பை ஞானசம்பந்தன் சீர்

இன்புறுந்தமி ழாற்சொன்ன ஏத்துவார் வினை நீங்கிப்போய்த்

துன்புறுந் துயரம்மிலாத் தூநெறிபெறு வார்களே.

சிறப்பும் இனிமையும் பொருந்திய இப்பதிகத்தின் பாடல்களைக் தினமும் பாடி ஏத்துகின்றவர் வினைகள் நீங்கித் துன்பமும் துயரமும் அடைய மாட்டார்கள்; அவர்கள் தூய நெறியைப் பெறுவார்கள் என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தின் கடைசிப் பாடலில் குறிப்பிடுகிறார். துறைகாட்டும் வள்ளல் அருள் நமக்கிருந்தால், பிறவிப் பெருங்கடலைச் சுலபமாகக் கடக்கலாம்.

சம்பந்தர் அருளிய பதிகம் - பாடியவர் சிவகாசி முருக.இரமேஷ்குமார் ஓதுவார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com