குரு தோஷ பரிகாரத்தலம் மாகாளநாதர் கோவில், கொல்லுமாங்குடி

குரு தோஷ பரிகாரத் தலம் மாகாளநாதர் கோவில், கொல்லுமாங்குடிபாடல் பெற்ற ஸ்தங்கள்
குரு தோஷ பரிகாரத்தலம் மாகாளநாதர் கோவில், கொல்லுமாங்குடி

குரு தோஷ பரிகாரத் தலம் மாகாளநாதர் கோவில், கொல்லுமாங்குடி
பாடல் பெற்ற ஸ்தங்கள் வரிசையில் இல்லாவிட்டாலும், கொல்லுமாங்குடி மாகாளநாதர் ஆலயம் ஒரு பழமையான சிவ ஸ்தலம்.

இறைவன் பெயர்: மாகாளநாதர்

இறைவி பெயர்: சௌந்தரநாயகி

எப்படிப் போவது

மயிலாடுதுறை - பூந்தோட்டம் மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ள கொல்லுமாங்குடி என்ற ஊரின் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, வடக்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் இந்த ஆலயம் உள்ளது. கும்பகோணம் - காரைக்கால் சாலையில், கும்பகோணத்தில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ளது கொல்லுமாங்குடி ஊர். 

ஆலய முகவரி

அருள்மிகு மாகாளநாதர் திருக்கோயில்

மாங்குடி சிவன் கோவில்

கொல்லுமாங்குடி, நன்னிலம் வட்டம்

திருவாரூர் மாவட்டம்

இவ்வாலயம், தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலய அர்ச்சகர் வீடு கோவிலுக்கு மிக அருகாமையில் இருப்பதால், அவரை தொடர்புகொண்டு எந்நேரமும் தரிசிக்கலாம்.
ஆலய குருக்கள் கைப்பேசி எண்: +918680978478.

தல பெயர் காரணம்

ராமன் தனது மனைவி சீதை மற்றும் தம்பி லட்சுமணனுடன் வனவாசம் இருந்துவந்த காலத்தில், மாரீசன் என்ற அரக்கன் பொன்மான் உருவில் அவர்கள் எதிரில் வந்தான். பொன்மானின் அழகில் மயங்கிய சீதை அதைப் பிடித்துத் தரும்படி ராமனிடம் வேண்ட, ராமன் அதை துரத்திக்கொண்டு போனார். மாயமான் அவருக்கு பிடிபடாமல் இருக்க, அதைக் கொல்ல தனது அம்பை எய்தார். அவ்வாறு பொன்மான் உருவில் வந்த மாரீசனைக் கொன்ற ஊர் இது என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக கொல்லு + மான்குடி என்று பெயர் ஏற்பட்டு, நாளடைவில் கொல்லுமாங்குடி என மாறியதாகக் கூறப்படுகிறது.

மாகாளர் என்ற சித்தர் இங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டு முக்தி அடைந்ததால், இத்தல இறைவனுக்கு மாகாளநாதர் என்று பெயர் ஏற்பட்டதாக தல வரலாறு குறிப்பிடுகிறது.

தலத்தின் சிறப்பு

சிவனை குரு பகவனான் வழிபட்ட பல தலங்களில் இத்தலமும் ஒன்றாகும். இத்தலத்தில் உள்ள இறைவனை குரு பகவான், விஸ்வாமித்திரர், காசியப முனிவர், புதன் மற்றும் பல முனிவர்கள் வழிபட்டு நற்பலன்களைப் பெற்றுள்ளார்கள். அவ்வாறு அவர்கள் வழிபட்ட நாள் பங்குனி மாத வளர்பிறையில் வரும் வியாழக்கிழமை என்று கருதப்படுகிறது. அதனால், வியாழக்கிழமைகளில் பிறந்தவர்கள், ஜனன ஜாதகத்தில் வியாழ குருவின் பாதிப்பு உடையவர்கள், பங்குனி மாதத்தில் ஒரு வியாழக்கிழமை அன்று இங்கு வந்து, ஆலய தீர்த்தத்தில் நீராடி இறைவனையும். இறைவியையும் வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும். மேலும், இங்குள்ள நவக்கிரக சந்நிதியில் உள்ள குரு பகவானை வணங்கி வழிபட்டால், குரு பகவானால் வரும் தடைகள் யாவும் விலகி சுகம் ஏற்படும் என்பது ஐதீகமாகும். திருமணத் தடை விலகும், வாழ்வில் முன்னேற்றமும் ஏற்படும்.

மேலும், இத்தல இறைவன் மாகாளநாதரை வழிபடுவர்களின் வினைப் பலன்கள் குறைத்து ஆயுள் பலம் கூடும். மரண பயத்தை இறைவன் நீக்கித் தருவார். தன்னை நாடி வந்து வணங்கும் பக்தர்களின் பாவங்களை நீக்கி ஆன்மாக்களைப் புனிதப்படுத்தும் இறைவன் இந்த மாகாளநாதர். இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள அம்பாள் சௌந்தரநாயகியும் தனிச் சிறப்பு பெற்று விளங்குகிறாள். இந்த அம்பாளை வழிபடுவோர் தோற்றப் பொலிவும், ஐஸ்வர்யமும் பெற்று வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

கோவில் அமைப்பு 

2017-ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ள இந்த ஆலயம், புதுப் பொலிவுடன் காட்சி அளிக்கிறது. ஆலயத்தின் மூன்று நிலை கோபுரம் நம்மை வரவேற்கிறது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் பலிபீடமும், அதையடுத்து நந்தி மண்டபமும் உள்ளன. விசாலமான வெளிப் பிராகாரமும் உள்ளதைக் காணலாம். நந்தி மண்டபத்தைத் தாண்டி அடுத்துள்ள வாயில் வழியே உள்ள நுழைந்து அம்பாள் சந்நிதி, இறைவன் சந்நிதி இருக்குமிடத்தை அடையலாம். இரண்டாவது நுழைவாயில் மேற்புறம் சிவன், பார்வதி, விநாயகர் மற்றும் முருகர் சுதை வடிவில் காட்சி அளிக்கின்றனர். மூலவர் மாகாளநாதர் கிழக்கு நோக்கியும், அம்பாள் சௌந்தரநாயகி தெற்கு நோக்கியும் அருள்காட்சி தருகின்றனர். பிராகாரத்தில் நாகர்கள், நால்வர், சூரியன், ஈசான விநாயகர், ஸ்படிக லிங்கேஸ்வரர், கைலாசநாதர், காசி விஸ்நாதர் ஆகியோரின் சிலா உருவங்கள் வரிசையாகக் காணப்படுகின்றன. 

இவ்வாலத்தின் இறைவன் கருவறை கோஷ்டத்தில் காணப்படும் தட்சிணாமூர்த்தி, சிறப்பு வாய்ந்த மூர்த்தமாக திகழ்கிறார். சுமார் நான்கடி உயரம் உள்ள இந்தச் சிலா உருவம், மிக்க கலையழகுடன் காண்போர் மனத்தைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. இந்தத் தட்சிணாமூர்த்தி முன்பு அமர்ந்து நமசிவாய என்ற பஞ்சாட்சர மந்திரத்தை ஜபித்துவர நல்ல பலன்கள் உண்டாகும்.

சந்தர்ப்பம் கிடைத்து மயிலாடுதுறை செல்பவர்கள், அவசியம் இந்த ஆலயத்துக்குச் சென்று இங்குள்ள தட்சிணாமூர்த்தி, மாகாளநாதர் மற்றும் சௌந்தரநாயகியை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com