வெள்ளிக்கிழமை 14 டிசம்பர் 2018

சுவடியியல்

DIN | Published: 03rd December 2018 01:24 AM

சுவடியியல் - கோ.உத்திராடம்; பக்.104; ரூ.90; நாம் தமிழர் பதிப்பகம், 6ஏ/ 4, பார்த்தசாரதி சாமி கோவில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5.
 காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காக, அச்சில் வெளிவராமல் இருந்த நூலான குன்றக்குடி அருட்பாடல்கள் பற்றி ஆய்வு செய்து எழுதப்பட்ட சுவடிகளின் தோற்றமும் வளர்ச்சியும், சுவடிகளின் வகையும் பாதுகாப்பும், சுவடிப் பதிப்பு முன்னோடிகள், சுவடிப் பதிப்பு முறையும் பதிப்பு வளர்ச்சியும் ஆகிய நான்கு கட்டுரைகளும் இந்நூலில் முன் நான்கு இடத்தைப் பெற்றுள்ளன. அடுத்து, எண்களும் குறியீடுகளும், ஓலைச்சுவடிகள் காட்டும் கலை, சுவடி நூலகங்கள், சுவடியியல் கலைச்சொல் ஆகிய பின் நான்கும் கருத்தரங்கிலும், பயிலரங்கங்களிலும் வாசிக்கப்பட்டவை. சுவடி தொடர்பாக மொத்தம் எட்டு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
 நாலடியார், ஏலாதி முதலிய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் சுவடி நூலகம் தொடர்பான குறிப்புகள், மின்நூலகங்கள், அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகம், தமிழ்த் தாத்தாவுக்கு வந்த கடிதங்கள், ஆசியவியல் நிறுவனம், இந்திய மருத்துவ வாரிய நூலகம் முதலிய சுவடி நூலகங்கள் பற்றிய அரிய தகவல்கள் உள்ளன. மேலும், சுவடியியலில் பயன்படுத்தப்படும் ஆவண ஓலை, இராமபாணம், ஓலைக்கூலம், கர்ணம், கவளி, கிளிமூக்கு, கீறல், இளவோலை, இராயசம், எழுத்தாணி, ஏட்டு எண், கூந்தற்பனை, கைபீது, கைபீயத்து முதலிய கலைச்சொற்கள் பலவற்றுக்கும் விளக்கம் தரப்பட்டுள்ளன.
 சுவடிக் கலை வடிவங்கள், சுவடிப் பலகை ஓவியங்கள், சுவடி கோட்டோவியங்கள், கப்பல், நாவாய் சாத்திரம், வடமொழிச் சுவடிகள் பற்றியெல்லாம் அறிந்துகொள்ள இந்நூல் பேருதவி புரியும். சுவடியியல் குறித்த நல்ல புரிதல்களை ஏற்படுத்துகிறது இந்நூல்.

More from the section

இலக்கியச் சங்கமம்
மறுக்கப்படும் மருத்துவம்
ஈரோடு தமிழன்பன் கவிதைகள்
இன்றும் இனிக்கிறது நேற்று 
ஸ்டீவ் ஜாப்ஸ் - ஆப்பிள் பசி