பெண்ணின் திருமண வயதுக்கு நிகராக ஆணின் திருமண வயதையும் 18-ஆகக் குறைக்க வேண்டும் என்கிற கருத்து சரியா? என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

பெண்ணின் திருமண வயதுக்கு நிகராக ஆணின் திருமண வயதையும் 18-ஆகக் குறைக்க வேண்டும் என்கிற கருத்து சரியா?

தவறானது
பெண்களுக்குத் திருமண வயது 18 என்று நிர்ணயம் செய்த நோக்கம் பால்ய விவாகத்தைத் தடுப்பதற்காக. அதனால் ஆணின் திருமண வயதை 18-ஆகக் குறைக்க வேண்டும் என்ற வாதம் தவறானது . 18 வயது என்பது ஒரு ஆண் படிப்பைத் தொடரும் வயது. படிக்க வேண்டும், வேலையைத் தேடிக் கொள்ள வேண்டும். சுயமாக சம்பாத்தியம் வேண்டாமா? ஆணுக்கும் பெண்களைப் போல் திருமண வயதை 18 ஆகக் குறைக்க வேண்டும் என்ற வாதம் தவறானது.
கே. வேலுச்சாமி, தாராபுரம்.

தெளிவான புரிதல்
இந்தக் கருத்து தவறானது. ஒருவனுக்கு 18 வயதில் திருமணம் செய்தால் வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டங்களை எப்படி அணுகுவது என்று அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லாமல் போகும். மேலும், சம வயது பெண்ணோடு திருமணம் செய்யும் போது அவர்களுக்குள் ஏற்படக் கூடிய சின்ன சின்ன சண்டைகளில் யார் முதலில் விட்டுக் கொடுப்பது என்ற கேள்வி வரும். இது திருமணம் என்ற பந்தத்தை கஷ்டமாக்கி விடும். ஆகையால் வாழ்க்கையைப் பற்றி தெளிவான புரிதல் ஏற்பட்ட பிறகு திருமணம் செய்வதுதான் நல்லது.
ப. சுவாமிநாதன், சென்னை.

குறைகாண முடியாது
இக்கருத்து சரியே. முற்காலத்தை விட ஆண்கள் குடும்பச் சூழ்நிலை, வெளிச் சூழ்நிலை வெளிநாட்டுச் சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களால் முன்னேறி உள்ளனர். உடலளவில் மட்டுமல்ல உள்ளத்தின் அளவிலும் (அதாவது உளவியல் பூர்வமாகவும்) எனவே, பெண்ணின் திருமண வயதுக்கு நிகராக ஆணின் திருமண வயதையும் சமமாக்குவதில் எந்த வகையிலும் குறைகாண 
முடியாது.
இரா. வேதநாயகம், வடமாதிமங்கலம்.

ஏற்புடையதல்ல
ஆணின் திருமண வயதை 18 என்று குறைப்பது சரியல்ல. 18 வயது என்பது கல்லூரியில் முதலாண்டு பயிலும் வயது. அந்த வயதில் ஒரு ஆணுக்கு உலக அனுபவம் என்பது போதிய அளவில் இருக்காது. மேலும், நம் நாட்டு சூழலில் எந்த ஆணும் 18 வயதில் பணம் சம்பாதிக்க ஆரம்பித்து விடுவதில்லை. எனவே, போதிய உலக அனுபவமும், சம்பாத்தியமும் இல்லாத வயதில் திருமணம் செய்வது நிச்சயமாக ஏற்புடையதல்ல.
பொன். கருணாநிதி, கோட்டூர்.

முற்றிலும் வேறுபட்டது
இந்தக் கருத்து தவறானது. ஆணிற்கும், பெண்ணிற்கும் உடல் அமைப்பு முற்றிலும் வேறுபட்டது. ஒரு பெண் பருவம் அடைந்த பின் குறைந்தது ஏழு அல்லது எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் தான் திருமணம் நடைபெறுவதுதான் வழக்கம். அதுதான் நல்லதும்கூட. ஒரு ஆண் கல்வி பயின்று வேலை கிடைத்து பணம் ஈட்டும்போது, 21 வயதிற்கு மேல் ஆகிவிடும். மேலும், 20 வயதிற்கு மேல்தான் இருபாலரும் திருமணத்திற்கான உடல் வலிமையை பெறுகின்றனர் என்பதே உண்மை.
டி.ஆர். ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.

எண்ண ஓட்டம்
இக்கருத்து சரியல்ல. பெண்களே, தங்களை விட வயது அதிகம் உள்ள ஆண்களைத் தான் திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றார்கள். ஆணும், பெண்ணும் ஒத்த வயதுடையவர்களாக இருப்பின் அவர்கள் இருவரின் எண்ண ஓட்டமும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். மேலும், வயதும் அனுபவமும் தான் மனிதனைப் பண்படுத்துகின்றன. தற்போதைய சிறிய குடும்ப சூழ்நிலையின் அனுபவமின்மை குடும்ப வாழ்க்கையில் எதிரொலிக்கும். வயதைக் குறைத்துக் கொண்டே போனால், பழைய சிறுவர்-சிறுமியர் திருமணத்தில்தான் கொண்டு போய் விடும்.
பி.கே. ஜீவன், கும்பகோணம்.

சிறந்த உபாயம்
ஆணின் திருமண வயதை 18 ஆகக் குறைக்க வேண்டும் என்பது சரியே. 18 வயதைக் கடந்த வாலிபர்கள் தங்கள் வாழ்க்கையை மனம் போன போக்கில் நடத்துகிறார்கள். வயதைக் குறைப்பதால் ஒருவன் குடும்பம் என்ற கட்டுப்பாட்டிற்குள் வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. சமுதாயச் சிந்தனை மேலோங்குகிறது. தற்கால சூழ்நிலையில், பாலியல் வன்முறைகளைத் தடுக்க இது ஓர் சிறந்த உபாயமாகும். மேலும், குழந்தை வளர்ப்பு, குடும்பத்தைப் பராமரித்தல், பொருளாதார முன்னேற்றம் இவற்றில் அவர்கள் கவனம் செலுத்த வாய்ப்பு ஏற்படும்.
கே. கோவிந்தராஜன், அல்லூர்.

குடும்பப் பொறுப்பு
குறைந்த பட்சம் 21 வயது ஆணுக்கு ஆன பிறகுதான் திருமணம் செய்ய வேண்டும். மனைவியை விட குறைந்தபட்சம் மூன்று வயதாவது கணவன் மூத்தவனாக இருப்பது நலம். ஒருவனுக்கு, தன் மனைவி, மக்கள், உறவினர் இவர்களோடு இணக்கமாக வாழ்வதற்குரிய வயது 21-க்கு மேல்தான் அமையும். அந்த வயதில், பொறுப்புள்ள குடும்பத் தலைவனாக இருப்பதற்கு உரிய புரிதல் வந்து விடும்.
ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

சம்பாதிக்க வேண்டாமா?
ஒரு ஆண் திருமணம் செய்து, நல்ல முறையில் குடும்பம் நடத்த வேண்டுமானால், நன்றாக படித்து நல்ல உத்யோகத்தில் அமர்ந்து நன்கு சம்பாதிக்க வேண்டுமல்லவா? 18 வயதில் அவன் என்ன படித்து எந்த உத்யோகத்தில் அமர்ந்து சம்பாத்தித்து குடும்பம் நடத்த முடியும்? அவன் தனது குடும்பத்திற்குத் தேவையானவற்றை வாங்குவதற்குக்கூட தன்னுடைய பெற்றோரை எதிர்பார்த்து நிற்க வேண்டிய நிலை ஏற்படும்.
என்.கே. திவாகரன், சரவணம்பட்டி.

மிகக் கடினம்
வாழ்க்கையை நடத்திச் செல்வதற்கான திறமை, துன்பங்களை தாங்கிக் கொள்ளும் வலிமை, முக்கிய பிரச்னைகளில் முடிவெடுக்கும் அறிவுக் கூர்மை முதலிய பண்புகளெல்லாம் 18 வயதிற்குள் அமைவது மிகக் கடினம். ஆணாயினும் பெண்ணாயினும் 18 வயதிற்குள் பொருளாதார ரீதியாக நிலை பெறுவதும் இயலாத காரியம். எனவே, பொருளாதார அடிப்படையில் வாழ்வை நிலை நிறுத்திக் கொள்ள ஆணுக்கு 20 வயதாவது நிறைந்திருக்க வேண்டும்.
வெ. பாண்டுரங்கன், திருநின்றவூர்.

ஏற்றுக் கொள்ளலாம்
எல்லா விஷயங்களிலும் ஆணுக்குப் பெண் சமம் என்றால் இதற்கு மட்டும் ஏன் விதிவிலக்கு? இன்றைய சூழலில் படிக்கும்போதே ஆணும், பெண்ணும் காதலிக்கின்றனர். பெரும்பாலும் காதல் திருமணங்களே பெற்றோரின் சம்மத்துடன் அரங்கேறுகின்றன. இருபாலரும் ஒரே வயதிலிருந்தால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு உருவதற்கு வாய்ப்பு குறைவு. எனவே, ஆணின் திருமண வயதை 18 ஆகக் குறைப்பதை ஏற்றுக் கொள்ளலாம்.
எஸ். பரமசிவம், மதுரை.

மனமுதிர்ச்சி தேவை
மனிதர்களிடம் மனமுதிர்ச்சி இல்லாமலும், படித்தும் வேலை வாய்ப்பு கிடைக்காமலும் உள்ள நிலையிலும் பெண்ணுக்கு நிகராக ஆணுக்கும் திருமண வயதை 18 ஆகக் குறைக்க வேண்டும் என்பது ஏற்புடையதல்ல. குடும்ப பாரத்தை சுமக்க தக்க வருவாய் அவசியம் வேண்டும். 18 வயதில் பெரும்பாலான ஆண்களுக்கு அது அமைவதில்லை.
உ. இராசமாணிக்கம், கடலூர்.

மனப்பொருத்தம்
முன்பெல்லாம் பெற்றோர்கள் பார்த்து பிள்ளைகளுக்கு திருமணம் நடந்தது. ஆனால், இப்போது அவர்களே வேலை செய்யும் இடத்தில் தங்களுக்குப் பிடித்த ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆணிற்கு பெண்ணைக் காட்டிலும் கூடுதல் வயது என்பதெல்லாம் இப்போது இல்லையாதால் பெண்கள் கல்யாண வயது 18 என்பதைப் போல் ஆணின் வயதையும் 18 என்ற அமைத்துக் கொள்ளலாம். மனப் பொருத்தத்திற்கு வயது ஒரு தடையல்ல.
டி.வி. கிருஷ்ணசாமி, சென்னை.

உளவியலே அடிப்படை
பெண்ணின் திருமண வயதைவிட ஆணின் வயது கூடுதலாக இருப்பதே நல்லது. அந்தக் குறிப்பிட்ட வயதில்தான் இருவரும் திருமணத்திற்கேற்ற உடல் மற்றும் மன வளர்ச்சி உடையவராக இருப்பர். அறிவியல் வளர்ச்சி, உணவு முறைகள் ஆகியவற்றால் உடல் மற்றும் மனதளவில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், வயது வேறுபாடு என்பது என்பது மாறக்கூடாதது. உளவியல் மற்றும் உடலியல் அடிப்படையில் திருமணத்திற்கான வயது ஆணுக்கு 21 பெண்ணுக்கு 18 என்று இருப்பதே சரியானது.
அ. கருப்பையா, 
பொன்னமராவதி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com