நிச்சயதார்த்தம் சட்டப்பூர்வமானதா?

திருமண ஒப்பந்தம் நிறைவேற்றப்படாததால், அவருக்கு பொருள் மற்றும் இதர நஷ்டங்களுக்கு இழப்பீடாக செலவு செய்த தொகையை கோரலாம்.
நிச்சயதார்த்தம் சட்டப்பூர்வமானதா?

நிச்சயதார்த்தம் என்பதை நடைமுறையில் பாக்கு வெற்றிலை மாற்றிக் கொள்ளுதல் என்று சொல்வர். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்லப்படுவதுண்டு, ஆனாலும் சில சமயங்கள் அவ்வாறு நிச்சயிக்கப்பட்ட சில திருமணங்கள் பல்வேறு காரணங்களால் நிகழாமல் போய்விடுவதுண்டு அவ்வாறு நின்று போன திருமணங்களுக்கு முன்னால் நடைபெற்ற நிச்சயதார்த்தம் முகூர்த்த ஓலை எழுதுதல் போன்ற சடங்குகளில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்னவாகிறது எனப் பார்ப்போம்.

புனித சடங்குகள்...

இந்துத் திருமணங்களின் போது சில புனித சடங்குகள் செய்யப்படுகின்றன அவற்றின் நிலைகளைப் பார்ப்போம்.

1. ”சகாய்” எனப்படும் நிச்சயதார்த்தம்

நிச்சயதாம்பூலம், லக்னப்பத்திரிக்கை மாற்றுதல், முகூர்த்த ஓலை எழுதுதல் எனப் பல வகையான பெயர்களில் இது அழைக்கப்படுகிறது. திருமணம் ஆகப் போகும் பெண் அல்லது மாப்பிள்ளை அல்லது இருவரும் வெளிநாட்டில் இருந்தாலோ அல்லது திருமணம் உறுதி செய்த பிறகு, நடப்பதற்கு சில காலம் ஆகலாமென்றாலோ, லக்னப்பத்திரிக்கை மாற்றுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

வட இந்திய நகரங்களில் இந்தச் “சகாய்” தினத்தன்றுதான் திருமணத் தேதி நிச்சயிக்கப்படுகிறது. பெண்ணும், மாப்பிள்ளையும் மோதிரம் மாற்றிக் கொள்ளுதல் மற்றும் இருவரும் ஒருவருக்கொருவரும், மற்றவர்கள் அவர்களுக்குப் பரிசுப் பொருட்கள் கொடுப்பதுm நடக்கும், தமிழ்நாட்டில் குறிப்பாக கார்காத்தார் சமுதாயத்தில் “கைக் கடிதம் மாற்றுதல்” அல்லது முகூர்த்த ஓலை என்று ஒருநாள் நடத்தி, அதில் திருமணத் தேதியை குறிக்கிறார்கள். அதில் பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் மற்றும் பெண் இருப்பது அவசியம், மாப்பிள்ளை இருந்தாலும், இல்லாவிட்டாலும், பாதகம் இல்லை. அந்தச் சடங்கில், ஒரு சிலர் பெண்ணுக்கு ஆபரணங்கள் போடுவார்கள். சிலர் போடுவதில்லை. அதற்கு பதில் திருமணத்திற்கு முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு முடிந்ததும், இரவு சாப்பாட்டின் போது நிச்சயதார்த்தம் வைத்து, அப்போது ஆபரணங்கள் அணிவிப்பார்கள்.

நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு முகூர்த்த ஓலை எழுதுவர். மற்ற சுபகாரியங்களுக்கு நாள் குறித்தால், குறித்து முடிந்ததும் அந்த வெள்ளைத் தாளின் நான்கு மூலையிலும் மஞ்சள் தடவிக் கொடுப்பார்கள். ஆனால் முகூர்த்த ஓலை எழுதுகின்ற பொழுது, அதன் நான்கு மூலையிலும் மஞ்சள் தடவிய பிறகே திருமண ஓலை எழுத வேண்டும்

முகூர்த்த ஓலை எழுதுதல்- ஓர் ஒப்பந்தம் (Betrothal Agreement)

ஒருவருடைய மகளை, மற்றொருவருடைய மகன் திருமணம் செய்வதாக ஒப்பந்தம் செய்து கண்டு இருவருடைய பெற்றோரும் கையெழுத்திடுகிறார்கள். சம்மந்தப்பட்ட பெண்ணோ, பையனோ அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில்லை. எனவே அந்த ஒப்பந்தம் அவர்களை கட்டுப்படுத்தும் என்று சொல்லமுடியாது. ஆனால் தார்மீகப் கடமை (Pius obligation) என்ற அடிப்படையில் முன்வரலாம், அல்லது பெண்ணையும், பையனையும் கையொப்பமிடச் செய்யலாம்.

நிச்சயதார்த்த ஒப்பந்தம் அல்லது முகூர்த்த ஓலையில் பெண், பையன், பெயர், பெற்றோர், குலம் கோத்திரம், முகவரி, திருமண தேதி, நேரம், இடம், கருப்பொருள்கள், முதலிய விவரங்கள் அடங்கியிருக்கும்,

ஒப்பந்தம் நிறைவேறாவிட்டால் , நிவாரணங்கள்?

இது இருவருக்குள் உள்ள ஒப்பந்தம் என்பதால் இந்திய ஒப்பந்தச் சட்டத்தின்மீழ் ஓர் உடன்படிக்கை செய்தபிறகு, ஒருவர் அந்த உடன்படிக்கையின்படி நடக்கத் தவறினால், மற்றவருக்கு உள்ள நிவாரணம் இரண்டு வகைப்படும்.

1. இழப்பீடு கோருதல்...

திருமண ஒப்பந்தம் நிறைவேற்றப்படாததால், அவருக்கு பொருள் மற்றும் இதர நஷ்டங்களுக்கு இழப்பீடாக செலவு செய்த தொகையை கோரலாம்.

2. ஒப்பந்தத்தில் கண்டுள்ள செயலைக் செய்யக் கட்டாயப்படுத்துதல்

ஒரு செயலைச் செய்யமுடியாத நிலையில் மற்றவர் இருந்தால், அதனைச் செய்துதான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.

பெண் அல்லது பெற்றோர் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யலாமா?

தாங்கள் கையெழுத்திடாமல், பெற்றோர் கையெழுத்திட்டிருந்தால், பிள்ளைகளை சட்டபூர்வமாக கட்டுப்படுத்தாது.

நிச்சயித்த திருமணத்தினை இரத்து செய்வது சட்டவிரோதமா?

தகுந்த காரணங்கள் இருக்குமானால், நிச்சயிக்கப்பட்ட திருமணம் இரத்து செய்யப்படலாம். அது சட்டத்துக்குப் புறம்பான செயல் அல்ல. அவ்வாறு செய்வதானால், பாதிக்கப்பட்ட நபர், தாங்கள் செலவு செய்த தொகையையும், மேலும் நஷ்ட ஈடாக ஒரு தொகையையும் கோரலாம்,

குறித்த வகை தீர்வழிச் சட்டம் (Specific Performance Act) பிரிவு 14(பி) இன் படி முகூர்த்த ஓலை ஒப்பந்தம் குறிப்பிட்டபடி செய்துதான் ஆக வேண்டும் என்று கூற இலயாது. ஆனாலும் இந்திய ஒப்பந்தச் சட்டம், (Indian Contract Act) பிரிவு 65 மற்றும் 73 இன் படி பாதிக்கப்பட்ட நபர்கள் அவர்கள் கொடுத்த விலை உயர்ந்த பொருட்களைத் திரும்பப் பெற உரிமை படைத்தவர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com