பேரிடர் மேலாண்மை - ஓரு பார்வை!

மாநிலத்தின் வருவாய்த்துறையே மீட்பு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஒருங்கிணைப்பு துறையாக செயல்படுகிறது. பேரிடர் ஏற்படும் நேரங்களில் இதர துறைகள் தங்களது முழு ஒத்துழைப்பையும்
பேரிடர் மேலாண்மை - ஓரு பார்வை!

பேரிடர்...

பேரிடர் என்பது, புவிக்காலநிலை வேறுபாட்டுக் காரணிகள் (Geo-climatic factors) காரணமாக ஏற்படுகின்றன. இவை மட்டுமல்லாமல் நிலவியல் கூறுகள், சுற்றுப்புறச்சூழல் சீர்கேடுகள், மக்கள்தொகைப் பெருக்கம், நகரமயமாதல் மற்றும் தொழிற்சாலைகளின் பெருக்கம் ஆகியவற்றின் காரணமாகவும் பேரிடர்கள் நிகழ்கின்றன. இயற்கைச் சீற்றங்களினாலும், மனிதத் தவறுகளினாலும் பல்வேறு இடர்களும் பேரிடர்களும் ஏற்படுகின்றன. இடர் (Hazard) என்பது, அபாயகரமானதாக உணரக்கூடிய ஒரு நிகழ்வு. அந்நிகழ்வில் மனிதனின் அன்றாட வாழ்க்கைப் பாதிப்பு, உயிரிழப்பு, சுகாதாரக் கேடுகள், உடைமைகளின் சேதம், சமுதாய மற்றும் பொருளாதாரச் சீர்கேடு, சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை ஏற்படுகின்றன. இந்த இடரானது, உச்சநிலையை அடையும்போது பேரிடராக (Disaster) மாறுகிறது. மக்களின் ஆற்றலுக்கு அப்பாற்பட்டுப் பெருமளவில் உயிர்ச்சேதத்தையும் பொருட்சேதத்தையும் ஏற்படுத்தும் ஒரு நிகழ்வைப் “பேரிடர்” என்கிறோம். பேரிடர்களின் தன்மைகளை அறிந்து, அவற்றால் ஏற்படும் தீமைகளிலிருந்து விடுபட உதவும் உத்திகளைச் செயல்படுத்துவதே பேரிடர் மேலாண்மை ஆகும்

  • நிலப்பகுதியில் சீற்றம் ஏற்பட்டால், நிலநடுக்கமாகத் தோன்றிப் பேரழிவை ஏற்படுத்துகிறது. நீர் சீற்றம் அடைவதனால், வெள்ளப் பெருக்கெடுத்து எண்ணற்ற அழிவுகள் ஏற்படுத்துகின்றன.

  • காற்று சீற்றம் அடைவதால், புயல் உருவாகிப் பெரும்பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், மழையின்மையால் நிலப்பரப்பு வெகு எளிதாக வறட்சியால் பாதிக்கப்படுகிறது.

  • புவியின் உட்பகுதியில் வெப்பம் மற்றும் அழுத்தம் காரணமாக எரிமலைத் தீக்குழம்புகள் மேலெழும்பி வந்து பெரும்பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

  • மழைக்காலங்களில் தோன்றும் மின்னல், இடி மற்றும் வெள்ளம் சில நேரங்களில் உயிரினங்களுக்கும் உடைமைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

  • இயற்கைப் பேரிடர்கள் மட்டுமல்லாமல், மனிதனாலும் பல பேரிடர்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

இயற்கைப்பேரிடர்கள்...

  1. நிலநடுக்கம் (Earthquake)

  2. எரிமலை வெடிப்பு

  3. சுனாமி

  4. புயல் (Cyclone)

  5. வெள்ளப் பெருக்கு (Flood)

  6. வறட்சி (Drought)

  7. நிலச்சரிவு

  8. பனிச்சரிவு (Avalanche)

  9. மின்னல் மற்றும் இடி (Lingtning and Thunder)

 

பேரிடர் தாக்கத்தை எதிர்கொள்ளத் தேவைப்படும் முன்னேற்பாடுகள்...

  • பேரிடரின் தன்மை, தீவிரம், தாக்கும் இடங்கள் மற்றும் இழப்புகளை அறிதல்

  • பேரிடரைத் தவிர்க்க இயற்கை வளங்களைச் சேகரித்தல் மற்றும் எதிர்கொள்ள மனித வளங்களை ஆயத்தப்படுத்துதல்

  • தகவல் தொடர்புகளை மேம்படுத்தி வைத்தல்

  • பாதுகாப்பு அமைப்புகளை ஏற்பாடு செய்தல் பெண்கள், குழந்தைகள் மற்றும் இயலாதோர்களைக் காக்கும் உத்திகளை வகுத்தல் உணவுப் பொருள்கள், எரிபொருள்கள் (சமையல் வாயு), குடிநீர், உயிர்காக்கும் மருந்துகள், துணிமணிகள், முதலுதவிப் பொருள்கள் முதலியவற்றைப் பேரிடர் காலங்களில் சேகரித்து வைத்தல்

எச்சரிக்கை...

  • எச்சரிக்கைகளைச் சரியாகப் புரிந்துகொள்ளல்

  • வதந்திகளைப் பேரிடர் காலத்தில் நம்பாதிருத்தல்

  • உரிய முன்னெச்சரிக்கைகளை உடனடியாகப் பின்பற்றுதல் இதனால் உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஆகியவை வெகுவாகக் குறையும்)

பாதிப்பு ஏற்படுத்தும் நிலை...

  • பேரிடர் தாக்க இருப்பதற்கான தெளிவான அறிகுறிகள் தென்படுதல்

  • உயிர், உடல் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பது பற்றிய பயம் மற்றும் பீதி அடையாதிருத்தல்

  • பதற்ற நிலை, பரிதவிப்பு நிலையைத் தவிர்த்தல்

  • அபாய அறிவிப்பு மற்றும் பாதுகாப்பு உத்திகளை மேற்கொள்ளல்

  • பாதுகாப்பு நடவடிக்கைகளை விரைவுப்படுத்துதல்

பேரிடரின்போது மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் (Rescue operation)...

  • தாமதமின்றி மீட்புப் பணிகளில் ஈடுபடுதல் மற்றும் மீட்புப் பணிக் குழுவினர்களுக்கு உதவுதல்

  • பேரிடர்களில் சிக்குண்டு தவிப்பவர்களைக் காப்பாற்ற பாதுகாப்புப் படை பாதுகாப்பு கருவிகள், உணவு, உயிர்காக்கும் மருந்துகளைப் பயன்படுத்துதல்

  • மீட்கப்பட்டவர்களுக்கு முறையாகப் பயிற்சி பெற்றவர்கள் மூலமாக முதலுதவி உடனடி மருத்துவச் சிகிச்சையளித்தல்

  • பேரிடருக்குப்பின் மேற்கொள்ளப்படும் மீட்பு உதவிகள் (Rescue)

  • ஒருங்கிணைந்து செயல்படுதல்

  • தற்காலிகப் புகலிடம் அமைத்துத் தேவையான பொருள்களைத் தொடர்ந்து வழங்குதல்

  • மின்சாரவசதி, தொலைதொடர்புக் கருவிகளை அமைத்துக் கொடுத்தல் சேத மதிப்பீடு செய்தல்

  • பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை அரசு I பிற தொண்டு நிறுவனங்கள் மூலம் பெற்றுத் தருதல்

புனர் வாழ்வளித்தல் (Rehabitation)

  • பாதிப்படைந்தவர்களின் மறுவாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்தல்

  • பாதிப்படைந்தவர்கள் மீண்டும் தன் பழைய வாழ்க்கை நிலைப்பாட்டை அடையத் தேவைப்படு வசதிகளையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருதல்

மறுசீரமைத்தல்

  • பேரிடர்களால் பாதிப்பிற்குள்ளானவை மீண்டும் தாக்காதவாறு மறுசீரமைத்தல்

  • இடிந்த கட்டடங்களைப் புதுப்பித்தல், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களைச் சரி

  • பேரிடரைத் தவிர்க்க நீண்டகாலத் திட்டம் தீட்டுதல் (Long term Planning)

  • பேரிடர் மேலாண்மைக் குழுக்களுக்கான குறிக்கோள், செயல் திட்டம், தேவை செலவினங்கள்முதலியவற்றைத் தெளிவாக வரையறுத்தல்

  • பேரிடர்கள் ஏற்படும்முன், ஏற்படும்போது, ஏற்பட்டபின் மேற்கொள்ள வேண் நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைந்த முன்னேற்பாடுகளை வரையறுத்தல்

  • பாதுகாப்புக் குழுக்களை அமைத்து, முன்னெச்சரிக்கை உத்திகளைத் திட்ட சேதாரத்தை மதிப்பீடு செய்தல்

  • பேரிடர், மீண்டும் தாக்கும் இடங்களை இனங்கண்டு கொள்ளல்.

  • பேரிடர்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் கல்வியறிவைப் பரப்ப ஒருங்கிணைப்பு செயல்திட்டம் தீட்டுதல்

திட்டச் செயலாக்கம்

  • பேரிடர் தவிர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்துதல்

  • மத்திய, மாநில, மாவட்ட வட்டார கிராம மற்றும் உள்ளூர் இடர் பாதுகாப்புக் குழுக்களுக்குப் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி அளித்தல்

  • பேரிடர் தவிர்ப்புத் திட்டச்செயல்பாடுகள் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்குத் தொடர்ந்து ஏற்படுத்துதல்.

தேசிய பேரிடர் மேலாண்மை (National Disaster Management Authority)

பேரிடர் மேலாண்மைச் சட்டம் (2005), (டிசம்பர் 23, 2005) எண். 53, இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையால் 28, நவம்பா் 2005 லும், மக்களவையால் 12 டிசம்பா் 2005 லும் நிறைவேற்றப்பட்டது. 2006 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் நாள் இச்சட்டம் இந்திய குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெற்றது. பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005, 11 அத்தியாயங்கள் மற்றும் 79 பிரிவுகள் கொண்டதாகும். இச்சட்டம் இந்தியா முழுவதற்கும் பொதுவானதாகும். இந்தச் சட்டம் "பேரிடா்களின் திறமையான மேலாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய இதர நிகழ்வுகைளத் தவிர்த்தல் குறித்தும் விளக்குகிறது.

தேசிய பேரிடர் மேலாண்மை முகமை (NDMA) என்பது உள்துறை அமைச்சகத்தின் ஒரு நிறுவனமாகும். இதன் பிரதான நோக்கம் இயற்கை அல்லது மனிதா்களால் உருவாக்கப்பட்ட பேரிடா்களின் போதும், நெருக்கடி காலத்தின் போதும் விரைந்து பணியாற்றத் தேவையான செயல்திறன் மேம்பாடு மற்றும் பேரழிவு மீட்பு பொறுப்புகைளயும் செயல்படுத்துவதாகும். இம்முகமை டிசம்பர் 2005 ல் இந்திய அரசால் இயற்றப்பட்ட பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டதாகும். பிரதம மந்திரி இதன் (NDMA) முழுமையான அதிகாரம் பெற்ற தலைவர் ஆவார். இந்நிறுவனம் கொள்கைகளை வடிவமைத்தல், வழிகாட்டுதல் மற்றும் சிறந்த நடைமுறைகளை உருவாக்கும் பணிகளை மேற்கொள்வதுடன், மாநில பேரிடர் மேலாண்மை முகமைகளுடன் முழுமையான மற்றும் பகிர்ந்தளிக்கப்பட்ட அணுகுமுறையை உறுதிப்படுத்துகிறது. மேலும் அவற்றுடன் ஒருங்கிணைந்து அனைத்துப் பணிகைளயும் செயல்படுத்துகிறது.

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்...

நோக்கம்...

மாநிலத்தின் அபிவிருத்திகாகவும், மேம்பாட்டிற்காகவும் இடர்பாட்டு அபாய கவலைகள் நீக்கி ஒரு பாதுகாப்பான தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையரகம் செயல்படுகிறது.

இலக்கு...

நம் சமூகத்தில் ஒரு நிலையான நிலைமையினை கொண்டு செல்ல பேரிடர் அபாயகுறைப்பு மற்றும் விரிதிறன்களை நீட்டிப்பதற்கான கொள்கையினை வரையறுத்து அதன் அடிப்படையில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையரகம் செயல்படுகிறது.

இதன் கவன ஈர்ப்பு பகுதிகளான, இயற்கை வள மேலாண்மை, விரிவான ஆற்றுவடி நில மேலாண்மை, இயற்கை சூழல் அமைப்பின் இயல்பு மற்றும் சமூக நலம் போன்றவற்றினை காக்க ஒரு நீட்டித்த மேலாண்மை திட்டம் தீட்டுதலின் வாயிலாக பல்வேறு அபிவிருத்தி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்துதலின் மூலம் தீங்கு விளைவிக்கும் பகுதிகளில் இடர் நீக்கி நீட்டித்த மேம்பாட்டினை ஊக்குவிக்கபடுகிறது.

மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 இயற்றப்படுவதற்கு முன்பே, தமிழ்நாடு அரசால், அரசாணை எண். 323 வருவாய் NCI (2)] துறை, நாள்: 08.07.2003-ன் மூலமாக, பேரிடர் நிகழ்வின் போது தணிப்பு மற்றும் ஆயத்த நிலை ஏற்பாடு போன்ற பணிகளை ஒருங்கிணைந்த வகையில் செயல்படுத்த தலைமைச் செயலாளர் அவர்களை தலைவராக கொண்டு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையர் அமைக்கப்பட்டது.

தேசிய பேரிடர் மேலாண்மை சட்ட பிரிவு 20(1)-ன் படி, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு உதவும் வகையில் மாநில செயலாக்கக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநில அளவிலான பேரிடர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்துவதும், பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியை கையாள்வதும் அது குறித்து மாநில அரசுக்கு ஆலோசனைகள் வழங்குவதும் மாநில செயலாக்க குழுவின் முக்கிய பணிகளில் ஒன்றாகும். இக்குழு பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்படும் உடனடி நிவாரண பணிகளுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்வதற்கு அதிகாரம் பெற்றுள்ளது. தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், முதலமைச்சர் தலைமையின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் உறுப்பினர்களின் விவரம் பின்வருமாறு:-

  • மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர், பதவி வழி உறுப்பினர்

  • அரசு தலைமைச் செயலாளர், பதவி வழி உறுப்பினர்

  • வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர்

  • உள் துறை செயலாளர்

  • நிதித் துறை செயலாளர்

  • மாநில நிவாரண ஆணையர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர்

  • சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் பேரிடர் மேலாண்மை மற்றும் தணிப்பு மையத்தின் இயக்குநர்.

  • சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தின் கட்டட பொறியியல் துறையின் தலைவர்.

இவ்வாணையமானது பல்வகை பேரிடர் மேலாண்மை தொடர்பான கொள்கை உருவாக்கத்திற்கு வழிகாட்டுதல், மாநில பேரிடர் மேலாண்மை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தல் மற்றும் பேரிடர் அபாய குறைப்பு நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து முக்கிய செயல்பாடுகளை கண்காணித்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

தமிழக அரசின் மாநில செயலாக்க குழு

தமிழக அரசின் மாநில செயலாக்குழு தலைமைச் செயலாளரை தலைவராகவும் கீழ்க்கண்ட உறுப்பினர்களை கொண்டும் அமைக்கப்பட்டுள்ளது,

  • வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை,

  • நிதித்துறை செயலாளர்,

  • பொதுப்பணித் துறை செயலாளர்,

  • நெடுஞ்சாலைத்துறை செயலாளர்,

  • உள்துறைகளின் செயலாளர்

மேற்படி, குழுவின் கூட்டத்தில் மாநில நிவாரண ஆணையர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வார்.

மாநில அறிவுரைக் குழு....

தமிழ்நாடு அரசால் மாநில நிவாரண ஆணையர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் அவர்களை தலைவராகவும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் செயலாளர் அவர்களை இணை தலைவராகவும் கொண்டு மாநில அறிவுரைக்குழு அமைக்கப்பட்டுள்ளது இக்குழுவானது தொலை உணர்வு, தகவல் தொடர்பு, வானிலை முன்னறிவிப்பு, தரைத்தள போக்குவரத்து பொறியியல், நகர்புற குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் அகற்றல், பொது சுகாதாரம், ஊரகப் பகுதி குடிநீர் விநியோகம், கடல் அறிவியல், வானவியல் மற்றும் பருவமாற்றம், வறட்சி மேலாண்மை, நெடுஞ்சாலை, தொழில் துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார நிபுணர், பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து, பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு, வன பாதுகாப்பு மற்றும் காட்டுத் தீ, வெள்ளம் மற்றும் பாசன மேலாண்மை, மின்சார பரிமாற்றம், நீர்வள மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறை வல்லுநர்களை உறுப்பினர்களை கொண்டு மாநில அளவில் பேரிடர் அபாய தணிப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

தமிழ்நாடு மாநில பேரிடர் அபாய தணிப்பு முகமை

தமிழ்நாடு அரசு தனது அரசாணை எண்.488, வருவாய் ஸபேரிடர் மேலாண்மை-ஐ (2)] துறை, நாள்:28.11.2013 மூலம் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமை அமைக்கவும் அதனை தமிழ்நாடு சங்கங்களின் பதிவு சட்டத்தின் கீழ் செய்யவும் ஆணைப்பிறப்பித்தது. அதனடிப்படையில் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமை உருவாக்கப்பட்டு தமிழ்நாடு சங்கங்களின் பதிவு சட்டம் 1975-ன் கீழ் 09.01.2014 அன்று பதிவு எண்.2/2014-ன் படி பதிவு செய்யப்பட்டது.இம்முகமையானது, தமிழ்நாடு அரசு அரசாணை எண். 234 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை -ஐ (2)] துறை நாள்: 26.06.2018-ல் தமிழ்நாடு பேரிடர் அபாய தணிப்பு முகமையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இம்முகமை பல்வகை பேரிடர் தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பணியில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செயலாக்க முகமையாக செயல்படுகின்றது.

இம்முகமையின் முக்கிய செயல்பாடுகள்...

  • பேரிடர் நிகழ்வின் போதும், பின்னரும் மீட்புப்பணிகள் மற்றும் நிவாரணம் வழங்குதல் போன்றவற்றில் மாவட்ட நிர்வாகத்திற்கு வழிகாட்டுதல்.

  • பேரிடர் மேலாண்மை தொடர்பான புள்ளி விவரங்கள், பயிற்சி அளிக்கப்பட்ட மீட்புப்படை அமைப்பினர், வல்லுநர்கள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் சமுதாயம் சார்ந்த அமைப்புகள் போன்றவற்றின் தகவல் களஞ்சியமாக செயல்பட்டு வருகிறது.

  • பேரிடர் மேலாண்மை மற்றும் தணிப்பு குறித்த திறன் மேம்பாடு, பயிற்சி மற்றும் விழிப்புணர்வு தொடர்பான செயல்பாடுகள் மேற்கொள்ளுதல்

  • அரசுக்கு தொழில்நுட்ப உதவிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைகளை அளித்தல்.

  • இயற்கை பேரிடர் நிகழ்வுகளினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இழப்புகளுக்கான காரணங்கள் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அவற்றை தணிக்க உரிய வழிமுறைகளை தெரிவித்தல் .

  • எவ்வகையான பேரிடர்களை எதிர்கொள்ள தேவையான அணுகுமுறைகள், கோட்பாடுகள், திட்ட வழிமுறைகள் மேலாண்மை குறித்த செயல்திட்டம் வகுத்தல்.

  • பேரிடர் மேலாண்மை தொடர்பான பிற நிதி நிறுவன உதவிகளுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்களை செயல்படுத்த திட்டங்கள் வகுத்தல்.

  • மறுசீரமைப்பு மற்றும் மறுகுடியமர்வு ஆகிய நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியையோ நிதி உதவியையோ அல்லது கடனாகவோ தமிழ்நாடு அரசு, இந்திய அரசு, உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐக்கிய நாடுகளின் முகமைகள், செஞ்சிலுவை சங்கம், நன்கொடையாளர்கள், மற்றும் இதர தனியார் நிறுவனங்களிலிருந்து பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.

  • இம்முகமை அமைக்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேற உரிய நிதியுதவியை பெற ஏற்பாடுகள் செய்தல். நில உடைமைகள், கட்டிட உடைமைகள், தளவாடங்கள், கட்டிட சேதாரங்கள் போன்றவற்றை விற்பதனால் ஏற்படும் நிதியை மேலாண்மை செய்யவும், நிர்வகிக்கவும், மறுமூலதனம் செய்யவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளல்.

இம்முகமை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் அவர்களை தலைவராக கொண்ட ஆட்சிக் குழுவால் வழி நடத்தப்படுகின்றது. வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் இம்முகமையின் செயற் குழுவின் தலைவராகவும், பேரிடர் மேலாண்மை ஆணையர் உறுப்பினர் செயலராகவும் செயல்பட்டு வருகின்றனர். வருவாய் நிருவாக ஆணையர் / மாநில நிவாரண ஆணையரின் முழுக் கண்காணிப்பில் இயங்கும் இம்முகமையானது மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செயலாக்க முகமையாக செயல்படுகின்றது.

ஆட்சிக்குழு

மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் அவர்களை தலைவராகவும் தலைமைச்செயலாளர் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர்களை துணை தலைவர்களாகவும் மற்றும் 14 துறைகளின் செயலாளர்களை உறுப்பினர்களாகவும் கொண்ட ஆட்சி குழுவின் முழு கண்காணிப்பில் மாநில பேரிடர் அபாய தணிப்பு முகமை இயங்கி வருகிறது. மாநில நிவாரண ஆணையர் / வருவாய் நிர்வாக ஆணையர் இக்குழுவினை கூட்டுபவராக செயல்பட்டு வருகிறார்.

செயற்குழு

மேலும், மாநில நிவாரண ஆணையர் / வருவாய் நிர்வாக ஆணையர் அவர்களை தலைவராகவும் மற்றும் 9 உறுப்பினர்களையும், ஆணையர் / இயக்குநர் பேரிடர் மேலாண்மை அவர்களை உறுப்பினர் செயலாராகவும் கொண்டு மாநில பேரிடர் அபாய தணிப்பு முகமையின் செயற்குழுவாக அமைக்கப்பட்டு இயங்கிவருகிறது.

பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகள் தொடர்பான ஒருங்கிணைப்பு அமைப்புகள்

1. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பேரிடர் மேலாண்மை தொடர்பான கொள்கைகளை ஏற்படுத்துவதற்கும், திட்டங்கள் தீட்டுவதற்கும், வழிமுறைகள் தெரிவிப்பதற்கும் இந்திய அரசு மட்டத்தில் தலையாய அமைப்பாகும். இவ்வாறு தெரிவிக்கப்படும் பேரிடர் மேலாண்மைத் துறை வழிமுறைகள் மைய அமைச்சகங்களின் துறைகளுக்கும், மாநில அரசுக்கும் அவர்களின் திட்டங்களை வகுக்க பெரிதும் உதவுகிறது. மேலும், இவ்வாணையம் தேசிய பேரிடர் மேலாண்மை திட்டம் சார்ந்த துறைகளின் திட்டங்களுக்கும் ஒப்புதல் அளித்து வருகிறது. இவ்வாணையம் மேலும் பேரிடர் தணிப்பு நடவடிக்கைகளுக்கும், ஆயத்த நிலை ஏற்பாட்டு நடவடிக்கைகளுக்கும் தேவையான நிதி ஒதுக்கப்படுவதை கண்காணிக்கிறது, மேலும் அயல் நாடுகளில் ஏற்படும் பேரிடர் நிகழ்வின் போது தேசிய அளவில் தேவையான உதவிகளை முடிவெடுத்து வழங்கிவருகிறது.

2. இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை

இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை வானிலை, பருவகாலமாற்றங்கள், பருவ நிலை தொடர்பான எச்சரிக்கைகள் தொடர்பான செய்தி அறிக்கைகளை பேரிடர் மேலாண்மை அலுவலர்களுக்கு ஆயத்த நிலை ஏற்பாடுகள் மேற்கொள்ளும் பொருட்டு வெளியிட்டு வருகின்றது. இந்த துறையானது பருவ மாற்றங்களை கண்டறிந்து, முன் அறிவிப்புகளையும் தெரிவித்து வருகின்றது. புயல் மற்றும் வெள்ளக் காலங்களில் மாநில அரசு மண்டல வானிலை ஆராய்ச்சி மையத்துடன் முன்னறிவிப்புகள் குறித்து நெருங்கிய தொடர்பு கொண்டு வருகிறது. ரிக்டர் அளவு 3.0-க்கு மேல் ஏற்படும் நில அதிர்வு பற்றியுமான முன்னெச்சரிக்கை அறிக்கைகள் இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை மாநில அரசுக்கு உடனுக்குடன் தெரிவித்து வருகிறது.

3. இந்திய தேசிய கடல்சார் தகவல்கள் மையம்

இந்திய தேசிய கடல்சார் தகவல்கள் மையம், இந்திய அரசின் புவியியல் துறையை சார்ந்த தேசிய அமைப்பாகும். இம்மையமானது கடற்கரை மற்றும் கடல் சார்ந்த தகவல்களை மீன்பித்தொழில், கப்பல் போக்குவரத்து, பருவ நிலை, சூற்றுச்சூழல் கடற்கரை மற்றும் ஆழ்கடல் நடவடிக்கைகள் மேலாண்மை ஆகியவற்றுக்கு உதவிடும் வகையில் தகவல்கள் தெரிவிப்பதோடு முற்போக்கான ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. மேலும் காற்றின் வேகம், அலைகள், கடல்நீரோட்டம், கடல் மேல்மட்ட காற்றழுத்த வேறுபாடு, கடல் மேல்மட்ட வெப்பநிலை மற்றும் பவழப்பாறைகள் படிவுகள், அலையாத்தி காடுகள், கடற்கரை மாற்ற நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் பரிமாற்றத்திற்கு வழிவகை செய்கிறது. இம்மையம் ஏற்கனவே நில அதிர்வினால் ஏற்பட வாய்புள்ள சுனாமி குறித்து முன்னெச்சரிக்கைகளையும் வழங்கி வருகின்றது.

4. தேசிய பேரிடர் உணர்வு மையம்

தொலை உணர்வு மற்றும் விண்வெளி தகவல்களை பகுதிகள் சார்ந்த மற்றும் பகுதிகள் சாரா படங்களாக தெரிவிக்கும் பணியின் செயலாக்க மையமாக இந்திய அரசின் விண்வெளித்துறையை சார்ந்த தேசிய தொலை உணர்வு மையம் இருந்து வருகிறது. இம்மையத்திலிருந்து பெயரிடப்படும் தொலை உணர்வு தகவல்கள் மற்றும் படங்கள், இயற்கை வளங்களை நிர்வகிப்பதிலும், பேரிடர் மேலாண்மையிலும், வெள்ள மேலாண்மையிலும் முக்கியபங்கு வகிக்கின்றன. அண்மையில் தேசிய தொலை உணர்வு மையம் கிராம அளவில் பேரிடர் மேலாண்மை செய்ய கைப்பேசி செயலி ஒன்றை உருவாக்கி உள்ளனர்.

5. கட்டிட கட்டுமான பொருட்கள் மற்றும் கட்டுமான தொழில்நுட்ப குழு

மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்புற வறுமை ஒழிப்பு துறையைச் சார்ந்த கட்டிட கட்டுமான பொருட்கள் மற்றும் கட்டுமான தொழில்நுட்பகுழு பேரிடர் பாதிப்புகள். ஏற்படாத வகையில் பொருத்தமான கட்டுமான பொருட்கள் குறித்தும் தொழில்நுட்பம் குறித்தும் எளிய வழிமுறைகளை குடிமக்களுக்கு அளித்து வருகின்றது.

6. இந்திய தரக்கட்டுபாடு குழுமம்

நில அதிர்வுகளை தாங்கும் வகையிலான கட்டுமான தரங்களை அந்த நில அதிர்வு தாக்கத்திற்கான பகுதிகளுக்கு உகந்த கட்டுமான வழிமுறைகள் என்று இக்குழுமம் வழங்கி வருகிறது. இதன் அடிப்படையில் கட்டுமான விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டு நகர் மற்றும் ஊரக திட்டமிடல் இயக்குனரகங்கள் மூலமாக பின்பற்றப்படுகின்றன.

7. இந்திய தொழில்நுட்ப கழகம், சென்னை

சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்ப கழகம் உயர் தொழில்நுட்பக் கல்வி மற்றும் செயலாக்க ஆராய்ச்சி துறையில் தேசிய அளவில் ஒரு முன்னோடி நிலையமாக உள்ளது. இந்நிலையம் பதினாறு கல்வி துறைகளுடன் சில செயல்முறை சார்ந்த முன்னோடி ஆராய்ச்சி மையங்களுடனும், பொது அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளின் நூறு ஆய்வகங்களுடனும் இயங்கி வருகிறது.

8. அண்ணா பல்கலைக்கழகம்

வேளாண்மை, நில பயன்பாடு, தரிசு நில மேம்பாடு, வனவளம், பேரிடர் அபாயம் தணிப்பு பருவ நிலை மாற்றம், கடல் சார் நிகழ்வு கண்காணிப்பு ஆகியவைகளுக்கு தொலை உணர்வு மற்றும் விண்வெளி ஆராய்ச்சி சம்மந்தமான புவிசார் தொழில் நுட்பங்களை வழங்க வருகிறது.

9. தேசிய கடல் ஆராய்ச்சி நிலையம்

இந்நிலையம் கடற்கரை மற்றும் கடல்சார் நிகழ்வுகள் குறித்த ஆராய்ச்சி மேற்கொண்டு தகவல்கள் வழங்கும் வகையில் செயல்பட்டு வருகின்றது.

10. அரசுமுறை சாரா அமைப்புகள்

பேரிடர் காலங்களில், அரசு சாரா அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வமைப்புகளுக்கு சமுதாயத்தினுடன் நெருங்கிய வகிக்கிறது. இவ்வமைப்புகளுக்கு சமுதாயத்தினுடன் நெருங்கிய தொடர்பு உள்ளதினால் அவசரகாலங்களில் ஏற்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிப்பதினால் திறமையாகவும், கடினமாகவும் பங்காற்றவல்ல அரசு சாரா அமைப்புகளை பேரிடர் மேலாண்மையின் போது ஈடுபடுத்துவது நல்லதாகும். அரசு முறை சாரா அமைப்புகள் பேரிடர் ஆபத்து தணிப்பு நடவடிக்கைகளில் சமுதாயத்தினை திரட்டி ஈடுபடுத்துவதில் கீழ்க்கண்ட வகையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

  • சமுதாயத்தின் அடிமட்ட மக்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ள அரசு சாரா அமைப்புகளினால் விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும், ஆயத்தநிலை ஏற்படுத்துவதிலும், ஆபத்து தணிப்பு திறனிலும், பொறுப்பான அமைப்பினருடன் எதிர்ப்பு உத்திகளை மேம்படுத்துவதிலும் திறன்பட செயல்பட வாய்ப்புள்ளது.

  • பருவகால மாற்றங்களை எதிர்நோக்கி அயல்நாடுகளில் செயல்படுத்தப்படும் புதிய அணுகுமுறைகளை அறிமுகப்படுத்த முடிகிறது.

  • அவ்வாறான புதிய அணுகுமுறைகளை செயல்படுத்த பலவகையான நன்கொடையாளர்களிடமிருந்து நிதி உதவி பெற முடிகிறது. இதன் மூலம் வெவ்வேறு துறைகள் மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்களை ஒருங்கிணைத்து பேரிடர்களினால் பாதிப்புள்ளாகும் சமுதாயங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வழிவகை செய்ய முடிகிறது.

11. மாநில அவசரகால கட்டுபாட்டு மையம்

மாநில அளவில் ஒரு அவசரகால கட்டுப்பாட்டுமையம் ‘மாநில நிர்வாக ஆணையர் / மற்றும் மாநில நிவாரண ஆணையர் நேரடி மேற்பார்வையில் கீழ் ஆண்டு முழுவதும்’ 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. இம்மையம் ஒரு தகவல் மையமாக செயல்பட்டு வருகிறது. இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை, மத்திய நிர்வாக ஆணையம், இந்திய தேசிய கடல்சார் தகவல் மையம் மற்றும் இதர அமைப்புகளிலிருந்து பெறப்படும் முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகள் மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையங்களுக்கும், ஊடகங்களுக்கும் உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் தெரிவிக்கப்படுகின்றன. இம்மையமானது பேரிடர் காலங்களில் உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் 24 நேரமும் இயங்கி முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை தகவல்களை உடனுக்குடன் விரைவாக பரிமாற்றம் செய்கிறது. பாதிப்புக்குள்ளாகும் மக்களிடம் 1070 என்ற எண்ணிலுள்ள கட்டணமில்லா தொலைபேசி மூலம் அவசரகால தகவல்கள் பெறப்பட்டு பொறுப்பான அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பபடுகிறது. மேலும் மழையளவு, வெள்ள அபாயம், வறட்சி, நில அதிர்வு சம்மந்தமான தகவல்கள் அளிக்கும் அமைப்புகளிலிருந்து பெறப்படும் முன்னறிவிப்புகள் மாவட்ட நிர்வாகத்திற்கும், சம்மந்தபட்ட அரசுத்துறைகள் மற்றும் அமைப்புகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தெரிவிக்கப்படுகிறது.

மாவட்ட பேரிடர் மேலாண்மை

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தை போன்றே மாவட்ட அளவில் பேரிடர் மேலாண்மை திட்டங்களை திட்டமிடவும், ஒருங்கிணைக்கவும் கண்காணிக்கவும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்களின் தலைமையில் மாவட்ட பேரிடர்மேலாண்மை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையானது மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதலின் பேரில் பேரிடர் நிகழ்வுக்கு முன்னரும், பேரிடர் நிகழ்வின் போதும், அதற்கு பின்னரும் மாவட்ட அளவில் பேரிடர் மேலாண்மை சார்ந்த திட்டமிடல், ஒருங்கிணைத்தல் மற்றும் செயல்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்டு முழுவதும் பேரிடர் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், ஆயத்த நிலை ஏற்பாடுகளையும் உறுதிசெய்யும் பொருட்டு அவ்வப்போது கூட்டங்கள் கூட்டப்படுகின்றன.

மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர்கள் வருமாறு:-

  • மாவட்ட ஆட்சியர் - தலைவர் (பதவி வழி)

  • மாவட்ட வருவாய் அலுவலர் - தலைவர் செயல் அலுவலர் (பதவி வழி)

  • மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் - பதவி வழி

  • கூடுதல் ஆட்சியர் / திட்ட அலுவலர், மாவட்ட ஊரக மேலாண்மை முகமை

  • மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)

  • இணை இயக்குநர் (சுகாதாரத்துறை)

மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமையானது, மாவட்ட அளவில் பேரிடர் தொடர்பான ஆயத்தநிலை ஏற்பாடுகள் குறித்து சூழ்நிலைகளை கையாள வேண்டி பேரிடர் அல்லாத காலங்களில் மேற்கொள்ளப்படும் அனைத்து துறை நடவடிக்கைகளையும் ஆண்டு முழுவதும் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளும். எவ்வகையான பேரிடரின் மேலாண்மை தொடர்பான சூழ்நிலைகளை கண்டறிந்து அவற்றை கையாளும் விதங்களை மேம்படுத்தும் வகையில் மாவட்ட அளவிலான அனைத்து துறைகளின் தலைமை அலுவலர்களுக்கும் உரிய உத்தரவுகள் வழங்கப்படும். தேவைப்படும் பட்சத்தில் பிற மாவட்டங்களிலிருந்தோ, முகமையிலிருந்தோ, உதவிகள் பெறவும், நடவடிக்கைகள் மேற்கொண்டு மேற்கெண்ட அனைத்து நடவடிக்கைகளையும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கும், மாநில செயலாக்க குழுவிற்கும் தெரியப்படுத்தும்.

மாவட்ட ஆட்சியர் அவர்களின் பங்கும், பொறுப்புகளும் (சென்னை பெருநகர மாநகராட்சியை பொறுத்தமட்டில் அதன் ஆணையர்)

பேரிடர் நிகழ்வின்போது மாநில அரசு சார்ந்த அனைத்து துறைகளும் மற்றும் வாரியங்களும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதனிமித்தம் சூழ்நிலைகளை கையாள்வதில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலையான பங்கு வருமாறு:-

மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்ற பத்து தினங்களுக்குள் மாவட்ட அளவிலான அனைத்து துறை முக்கிய அலுவலர்களையும் உள்ளடக்கிய முழுஅளவிலான கூட்டத்தை கூட்டி கீழ்க்கண்ட செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

  • மாவட்ட அளவிலான பல்வகை பேரிடர் தாக்கம் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட வேண்டும்.

  • பேரிடர்களை எதிர்கொள்ளும் பொருட்டு மாவட்ட அளவிலான ஆயத்த ஏற்பாடுகள் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

  • மாவட்ட பேரிடர் மேலாண்மை திட்டம் மேம்படுத்துதல் குறித்து பரிசீலனை செய்ய வேண்டும்.

  • மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையத்துடன் கோட்ட, வட்ட, ஒன்றிய அளவில் நேரிடையாகவோ, தொலை தொடர்பு மூலமாகவோ தகவல் பரிமாற்றத்திற்கான சிறந்த திட்டத்தினை உறுதி செய்தல்.

  • பேரிடர் மேலாண்மை தொடர்பான பயிற்சிக்கான அட்டவணை தயாரித்து உறுதிசெய்து அதனை நடைபெறுவதற்கான உரிய நிதியை மாநில அரசிடமிருந்து பெறுதல்

  • மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் ஒருங்கிணைப்புடன் அனைத்து பேரிடர் மீட்பு நடவடிக்கைகளும் நடைபெற உறுதி செய்தல்

  • அனைத்து தொடர்புடையத்துறைகள் மூலமாக சமுதாய தலைவர்களுடன் தொடர்பு ஏற்படுத்துதல்

  • மாவட்டத்திலுள்ள அனைத்து துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத்துறை / தனியார் துறைகள் ஆகியவற்றில் இருக்கின்ற பேரிடர் மேலாண்மையில் கையாள தேவையான வசதிகளை பெறவும், ஈடுபடுத்த உத்தரவுகள் வழங்குதல்.

  • அரசு சாரா அமைப்புகளின் செயல்பாடுகள் சமமாகவும் பாரபட்சமின்றியும் நடைபெறுவதை உறுதிசெய்தல்.

  • பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களின் பொறுப்புகளை வரையறுக்கவும் அவர்கள் பணி சூழ்நிலை பாதுகாப்பாக இருக்கவும் உறுதிசெய்தல்.

  • பேரிடர் மேலாண்மைக்கு தொடர்புடைய துறைகளை சார்ந்த வல்லுனர்களையும், ஆலோசகர்களையும் வரவழைத்து தேவையான ஆலோசனைகளை பெற ஏற்பாடுகள் செய்தல்.

பேரிடர் நிகழ்வுகளின் போது அவற்றின் தாக்கம், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், கையிருப்பு மற்றும் தேவையான வசதிகள், நிவாரணப்பொருட்கள் வழங்க தேவையான போக்குவரத்து வசதிகள் போன்றவைப்பற்றிய தகவல்கள் ஒவ்வொரு வாரமும் மாநில வருவாய் நிர்வாக ஆணையருக்கும், மாநில நிர்வாகத்திற்கும் தெரிவிக்கப்படவேண்டும்.

மாவட்ட அவசரகால கட்டுபாட்டு மையம்...

மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் அதனதன் தலைநகரில் மாவட்ட அவசரகட்டுபாட்டு மையம் உள்ளன. மாவட்ட அவசரகால கட்டுபாட்டுமையங்கள் அந்தந்த மாவட்ட மாவட்ட ஆட்சியரின் நேரடி மேற்பார்வையின் கீழ் இயங்கி வருகிறது. மாவட்ட அவசர கால கட்டுபாட்டு மையம் பேரிடர் காலங்களில் மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்திலிருந்து பெறப்படும், முன்னறிவிப்புகள், எச்சரிக்கைகளுக்கு ஏற்ப தேடுதல், மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் வட்ட, கிராம மட்டத்தில் சென்றடையும் வகையில் தகவல் பரிமாற்றம் செய்கின்ற பணியை மேற்கொள்கிறது. பேரிடர் காலங்களில் பிற தொடர்புடைய துறைகளின் அலுவலர்கள் ஈடுபடுத்தி மாவட்ட அளவில் தேடுதல், மீட்பு நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு தொடர்புடைய தகவல்களை பரிமாற்றம் செய்து அதனை உடனுக்குடன் மாநில வருவாய் ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் அவர்களுக்கு தெரிவிக்கிறது. இந்த மையத்தினை பொதுமக்கள் தொடர்புகொள்ள வசதியாக 1077 என்ற எண்ணுடன் கூடிய கட்டமைய்யா தொலைபேசி இணைப்பு உள்ளது. இவற்றை தவிர கூடுதல் அவசரகால கட்டுப்பாட்டு மையங்கள் 13 கடலோர மாவட்டங்களிலும், நீலகிரி மாவட்டத்திலும் கீழ்க்கண்ட வருவாய் கோட்ட அலுவலகத்தில் இயங்கி வருகின்றன.

அவசர நிலை எதிர்கொள்ளுதல்...

அடிப்படை வசதிகள், உதவி தரும் அமைப்புகள் மற்றும் மனித வள திறன் மேம்பாடு ஆகியவற்றை வழங்குவதன் மூலம் வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறையானது மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை திறனை வலுப்படுத்தி வருகிறது.

ஆபத்துக்கால இடர்களை எதிர்கொள்ள துறையானது இதர துறைகள், அரசு மற்றும் இடர்களை எதிர்கொள்வதில் நிபுணத்துவம் பெற்ற தனியார் தொழில்நுட்ப மையங்கள் உதவியுடன் சூழ்நிலைகளை எதிர்கொண்டு இடர் தணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பேரிடர் எதிர்கொள்ளுதல்

பேரிடர் எதிர்கொள்ளுதல் 13 நடவடிக்கைகள் என்பது பேரிடரால் ஏற்படும் பாதிப்புகள், உயிரிழப்புகள், உடைமை இழப்புகள் மற்றும் சுற்றுப்புற சூழல் பாதிப்பு ஆகியவற்றை குறைத்தல் மற்றும் பேரிடரால் பாதிக்கப்பட்ட / பாதிக்கக்கூடிய மக்களை மீட்டு எடுத்தல் ஆகியவை அடங்கும். பேரிடர் எதிர்கொள்ளுதல் என்பது பேரிடர் ஏற்பட்ட உடன் தொடங்கி பேரிடர் முடிவுக்கு வந்தது என்று அறிவிப்பு வரும் வரை இது தொடர்பான மீட்வு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும்.

பேரிடர் எதிர்கொள்ளுதல் என்பது மிகுந்த பிரச்சனைக்குரிய இடர்களை, குறுகிய கால அவசரசத்திற்குள், கைவசம் உள்ள தகவல் மற்றும் வளங்களை கொண்டு எதிர்கொள்ளுதல் ஆகும். இது பேரிடர் மேலாண்மையின் நான்கு பணிகளில் மிகவும் சிக்கலான பணியாகும்.

பேரிடர் எதிர்கொள்ளுதல் என்பத உடனடி தேவைகளான தேடுதல் மற்றும் மீட்பு பணிகள், முதலுதவி, புகலிடங்கள் ஆகியவற்றை வழங்குதலோடு மட்டுமில்லாமல் இதர அமைப்புகளையும் ஒருங்கிணைத்து மீட்பு நடவடிக்கைகளை எதிர்கொள்வதை குறிக்கும்.

சிறப்பான பேரிடர் எதிர்கொள்ளுதலுக்கு தொடர்புடைய அனைத்து துறைகளும் இடர்கள் குறித்த தெளிவான விவரத்தையும், இடர்கால ஏற்படக்கூடிய மின்விளைவுகள், அவற்றினை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை முன்கூட்டியே அறிந்து வைத்து இருப்பதும் ஆகும்.

மாநிலத்தின் வருவாய்த்துறையே மீட்பு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஒருங்கிணைப்பு துறையாக செயல்படுகிறது. பேரிடர் ஏற்படும் நேரங்களில் இதர துறைகள் தங்களது முழு ஒத்துழைப்பையும் தரல் வேண்டும். அவசரகால நேரங்களில் மாநில அவசர கட்டுப்பாட்டு அறை, மாநில அளவிலான இதர கட்டுப்பாட்டு அறைகள் முழு வேகத்தில் செயல்படுகின்றன.

அவசர காலங்களில் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய முதன்மை பணிகள் கீழ்வருமாறு:-

  • கிராமங்களில் உள்ள தன்னார்வலர்களின் மூலம் தேவை மதிப்பீடு செய்வது.

  • பாதிப்பு ஏற்படம் பகுதிகளில் தேவைப்படும் பொருட்களை சமமாக பகிர்ந்தளித்தல்

  • புகலிடம் / நிவாரண மையங்கள் உணவு, உடை, போன்ற அடிப்படை வசதிகளுடன், பொது சுகாதாரம் மற்றும் சுத்தமான இருப்பிட வசதிகள் அளித்தது.

  • நிவாரண பொருட்கள் வழங்குவதில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடித்தல்.

பல்வேறு வகையான பேரிடர் எதிர்கொள்ளுதல் நடவடிக்கைகளில் எந்தெந்த துறைகள் ஈடுபட் வேண்டும் என்ற விவரம் பணிவருமாறு பட்டியல்.

.எண்

அவசரகால மீட்பு நடவடிக்கைகள்

பொறுப்பு துறைகள்

1.

மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்துதல்

மாநில பேரிடர் மேலாண்மை மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை.

2.

இடர்கால தகவல் தொடர்பு

வருவாய் நிர்வாக பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை, மாநில அவசர கட்டுப்பாட்டு அறை, மாவட்ட கட்டுப்பாட்டு அறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை, ஊடகங்கள் மற்றும் தொலை தொடர்பு நிறுவனங்கள்

3

பொது மக்கள் வெளியேற்றம்

வருவாய் நிர்வாக பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை, ஊரக மற்றும் நகராட்சி துறைகள், காவல்துறை, ஊர்க்காவல் படை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, மாநில பேரிடர் மீட்புப்படை, தேசிய பேரிடர் மீட்பு படை, ஆயுதப்படை, தன்னார்வலர்கள், 108 ஆம்புலன்ஸ், பொதுமக்கள்

4

மீட்கப்பட்ட மக்களை முகாம்களில் தங்க வைத்தல்

வருவாய் நிர்வாக பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை, உள்ளாட்சி மற்றும் நகராட்சி அமைப்புகள்.

5

போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் மாற்று வழி அமைத்தல்

போக்குவரத்து காவல் துறை, ஊர்க்காவல் படை மற்றும் தன்னார்வலர்கள்.

6

பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதியை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வருதல்

மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படைகள், காவல் துறை, ஊர்க்காவல் படை மற்றும் தன்னார்வலர்கள்

7

சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாப்பு

காவல்துறை மற்றும் ஊர்க்காவல் படை

8

தேடுதல் மற்றும் மீட்பு பணிகள்

தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை , மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படைகள், காவல் துறை, பொது மக்கள்

9

முதலுதவி மற்றும் அவசரகால சிகிச்சை

சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் செஞ்சிலுவை சங்கம்.

10

நிவாரண மையங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் அளித்தல்

வருவாய் நிர்வாக பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை, சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்

11

இறந்த மற்றும் காயம் அடைந்த மக்களை இனம் கண்டறிதல்

வருவாய் நிர்வாக பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை, சுகாதாரத்துறை, மாநிலம் உள்ளாட்சி அமைப்புகள்.

12

காயமுற்றவர்களுக்கு மருத்துவ சிகிச்சை

சுகாதாரத்துறை

13

பாதிப்பு மற்றும் வளம் மதிப்பீடு

வருவாய் நிர்வாக பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை, உள்ளாட்சி அமைப்புகள், தொழில்நுட்ப வல்லுநர்கள்

14

பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்தல்

ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சலைத்துறை, நகராட்சி உள்ளாட்சி அமைப்புகள்

15

தொழிற்று நோய் பரவுதலை தடுத்தல் மற்றும் சுகாதார முகாம்கள் அமைத்தல்

சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்

16

தேவை அடிப்படையில் தற்காலிக வசிப்பிடங்கள் அமைத்து தருதல்

வருவாய் நிர்வாக பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை, உள்ளாட்சி அமைப்புகள்

17

நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புக்கான பொருட்களை அனுப்புதல்

வருவாய் நிர்வாக பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை, குடிமைப் பொருள் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை, நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்

18

இடிபாடுகள் மற்றும் திடக்கழிவுகள் அகற்றம்

மாநில பேரிடர் மீட்புப்படை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சி அமைப்புகள்

19

சாலை வசதி, தகவல் தொடர்பு சீரமைத்தல்

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி உள்ளாட்சி அமைப்புகள், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்

20

குடிநீர் வசதி

தமிழ்நாடு வடிகால் வாரியம், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றல் வாரியம் மற்றும் உள்ளாட்சிஅமைப்புகள்.

21

மின்வசதி சீரமைப்பு

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்

22

போக்குவரத்து சீரமைப்பு

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை

23

உணவு வசதி

வருவாய் நிர்வாக பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை, குடிமைப் பொருள் வழங்கல் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்

24

நிவாரண பொருட்கள் வழங்குதல்

வருவாய் நிர்வாக பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை, குடிமைப் பொருள் வழங்கல் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை

25

தற்காலிக பிணவறை / இறந்த உடல்கள் அகற்றம்

சுகாதாரத்துறை, வருவாய் நிர்வாக பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை, மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்

26

கால்நடைகள் / வீட்டு வளர்ப்பு பிராணிகளை வெளியேற்றுதல்

கால்நடைப் பராமரிப்புத்துறை, புளு கிராஸ், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள்

27

இறந்த விலங்குகளை அப்புறப்படுத்துதல்

கால்நடை பராமரிப்புத்துறை

28

இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை மேற்கொள்ளுதல்

வருவாய் நிர்வாக பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை மற்றும் தொடர்புடைய இதர துறைகள்.

மாநில உதவி எண்(State Helpline) 1070

மாவட்ட உதவி எண் (District Helpline) 1077

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com