திருகோணேஸ்வரர் திருக்கோயில், திருகோணமலை தொடர் - 5 

திருக்கோணீஸ்வரர் ஆலயத்தை, முன்னர் திருக்கோணமலை கோணீஸ்வரர் கோயில் என்றுதான் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.
திருகோணேஸ்வரர் திருக்கோயில், திருகோணமலை தொடர் - 5 

தல அருமை

திருக்கோணீஸ்வரர் ஆலயத்தை, முன்னர் திருக்கோணமலை கோணீஸ்வரர் கோயில் என்றுதான் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. இலங்கையின் கிழக்கு கோடியில் உள்ள திருகோணமலையில் சுவாமி பாறை (சுவாமி மலை என்றும் கூறுகிறார்கள்) எனும் மலை உச்சியில் திருகோணமலை பிரதேசத்தைப் பார்த்தவாறு கம்பீரமாக அமைக்கப்பட்டு இருந்த இந்த ஆலயம் 1580-ம் ஆண்டில் அமைக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

ஆறாம் நூற்றாண்டில் இந்தக் கோயிலிலே மாபெரும் சிவாலயமாக இருந்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். சுவாமி மலையில் திருக்கோணீஸ்வரர் ஆலயத்தைத் தவிர இன்னும் இரண்டு ஆலயங்களும் இருந்துள்ளன. முதல் பராந்தக சோழ மன்னன் என்பவனுக்கு அஞ்சி தன் நாட்டில் இருந்து தப்பி இலங்கைக்குப் பாதுகாப்புக்காக வந்திருந்த ஒரு பாண்டிய மன்னன் தம்பலகமத்தில் திருப்பணிகள் செய்ததாக சில வரலாற்றுக் குறிப்புக்கள் உள்ளன.

அதன் பின் இந்தியாவில் திருப்பதியில் உள்ள ஆலய கோபுரக் கலசங்களை தங்கத் தகட்டில் அமைத்த ஜடவர்ம வீரபாண்டியன் என்ற அதே மன்னனே திருக்கோணீஸ்வரர் ஆலய கோபுரக் கலசங்களையும் தங்கம் மற்றும் வெள்ளித் தகட்டினால் அலங்கரித்தான். இவரைத் தவிர வேறு பல்லவ மன்னர்களும் இந்த ஆலயத்தின் மேன்மையை அறிந்து கொண்டு இதற்கு நிறைய நிதி உதவி செய்துள்ளார்கள். இந்த ஆலயத்தில் ஆயிரம் தூண்கள் இருந்தது என்றும் வானளாவிய அளவில் அது கட்டப்பட்டு இருந்தது என்றும் கூறுவார்.

இந்த நிலையில்தான் மேற்கு நாட்டில் இருந்த போர்த்துக்கீசியர்கள் வர்த்தகம் செய்ய ஆசைக்கொண்டு கிழக்குப் பகுதிகளுக்கு விஜயம் செல்லத் துவங்கினார்கள். இந்தக் காலகட்டத்தில் கிழக்குப் பகுதிகளில் பல நாடுகளில் அரசியல் ஸ்திரத் தன்மை அற்றே இருந்து வந்தது. ஆகவே எங்கெல்லாம் அரசியல் ஸ்திரத் தன்மை இல்லாமல் இருந்தனவோ அங்கெல்லாம் அந்த நாட்டின் மீது படையெடுத்து அந்த நாடுகளைக் கைப்பற்றிக் கொண்டே வந்தார்கள் போர்த்துக்கீசியர்கள்.

இலங்கை மீதும் படையெடுத்து இலங்கையைக் கைப்பற்றினார்கள். அப்போது இந்த திருகோணமலைப் பிரதேசமும் அவர்கள் ஆளுகைக்கு வந்தது. அப்போது இங்கிருந்த கோணேஸ்வரர் ஆலயத்தைக் கண்ட போர்த்துக்கீசியர் பிரமித்து இதன்மீது ஆசை கொண்டார்கள். வானளவு உயரமான கோணீஸ்வரர் ஆலயம் அவர்களது கண்களை உறுத்தி விழிக்கவைத்தது. இது மட்டும் அல்ல, இந்த இடத்துக்குப் பெருமளவிலான மக்கள் பல பிரதேசத்திலும் இருந்து வந்து வழிபட்டுக் கொண்டு இருந்ததைக் கண்டும், பல மன்னர்களின் ஆதரவினால் அந்த ஆலயம் பெரும் செல்வம் நிறைந்த ஆலயமாக இருந்ததையும் பார்த்து பொறாமை கொண்டார்கள்.

பெரும் புகழ் பெற்று இருந்த இந்த இடம் இந்து சமயத்தின் கடற்கரை விளக்கு போல அமைந்து இருந்ததையும் கண்டு பொறாமைமேல் பொறாமைக் கொண்டார்கள். இந்த ஆலயம் இருக்கும்வரை தம்முடைய சமயம் அங்குத் தழைத்தோங்க முடியாது என்பதையும் உணர்ந்து கொண்டார்கள். ஆகவே அந்த ஆலயத்தின் செல்வத்தைக் கொள்ளையடித்து அந்த ஆலயத்தை தரைமட்டமாக்க முடிவு செய்து அதற்கான நாளையும் குறிக்க முனைந்தார்கள். ஆனால் இதை நேரடியாகச் செய்ய முடியாத அளவு ஆலயம் பாதுகாப்பாக இருந்தது.

ஆலயத்தின் தினசரி பூஜைகளைத் தவிர பல வருட உற்சவங்களும் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன. இந்த நிலையில் ஆயிரத்து அறுநூற்று இருபத்து நான்காம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தன்று எப்போதும் போல சுவாமியை ஊர்வலமாக நகரில் எடுத்துச் சென்று வலம் வரும் விழா நடந்துகொண்டிருந்தது. இதற்காக மாதுமை அம்பாள் (பார்வதி தேவி) சமேத திருக்கோணேச்சரப் பெருமான் திருவுலாவாக அடியார்களுடன் கோயிலிலிருந்து கிளம்பி நகருக்கு எழுந்தருளிக் கொண்டு வந்தார்கள்.

இந்த தருணத்தையே எதிர்பார்த்திருந்த போர்த்துக்கீசியப் படை வீரர்கள் பிராமணர்கள் போல வேடம் தரித்துக் கொண்டு ஆலயத்துக்குள் சென்று, சுவாமி தரிசனம் செய்யப் போவது போலக் கோயிலுக்குள் புகுந்தார்கள். அதாவது திருகோணேச்சரப் பெருமான் திருவுலாவுக்கு எழுந்தருளிய பின்னரே போர்த்துக்கீசியர் கோவிலுக்குள் புகுந்து விட்டனர். அந்த நேரத்தில் கோயிலின் உள்ளே பூசாரிகள் சிலரும் ஆலய வேலையாள் சிலரும் இருந்தார்கள்.

போர்த்துக்கீசிய தளபதியின் தலைமையில் ஆலயத்துக்கு உள்ளே நுழைந்த படையினர் உள்ளே நுழையும் போது தம்மை எதிர்த்தவர்களை எல்லாம் வாளால் வெட்டிக் கொன்றார்கள். கோயிலிலிருந்த தங்கம் வெள்ளி நகைகளையும் விலை மதிப்புமிக்க பிற பொருள்களையும் சூறையாடி எடுத்துக் கொண்டு சென்றனர். இதுமட்டும் இல்லாமல் மீண்டும் பீரங்கிகளை கொண்டு வரச்செய்த போர்த்துக்கீசியப் படையினர் கோயிலை முற்றிலுமாக இடித்து அழித்தனர்.

இதற்கு சில நாட்களுக்கு முன்னர் அங்கு வந்திருந்த ஒரு போர்த்துக்கீசியப் படை தளபதிகளில் ஒருவன் அந்த ஆலயக் கட்டுமானத்தின் அழகைக் கண்டு பிரமித்துப் போய் ஒரு ஓவியரை வரவழைத்து அந்த ஆலயத்தின் தரைப் படத்தை வரைந்தெடுத்துக் கொண்டான். அந்தப் படம் போர்த்துக்கீசிய நாட்டுக் கலை அரங்கில் உள்ளதாகவும் ஒரு செய்தி உள்ளது. அந்த வரைபடத்தின் மூலம்தான் போர்த்துக்கீசியர் அழித்த கோயிலில் ஆயிரங்கால் மண்டபமும் பெரியதொரு தீர்த்தக்கேணியும் பிற மண்டபங்களும் இருந்தன என்பது தெரிய வருகிறது.

இப்படி ஆலயத்தை இடித்துச் சூறையாடப்போகிறார்கள் என்பதை முன்னமே அறிந்து கொண்ட சில சிவ பக்தர்கள், போர்த்துக்கீசிய படையினர் உள்ளே நுழையும் முன்னர் மிகவும் ரகசியமாக வேறு ஒரு காரியத்தை செய்து விட்டிருந்தார்கள். அந்த ஆலயத்தில் உள்ள செல்வங்களை அவர்கள் கொள்ளை அடித்துக் கொண்டு போனாலும் சரி தாம் வணங்கி வரும் கோணேஸ்வரர் விக்கிரகத்தை மட்டும் அவர்கள் எடுத்துச் சென்று விடக் கூடாது என்பதில் தீவிரமாக இருந்தார்கள்.

மாலையில் திருவிழா ஊர்வலத்தில் ஊர்வல மூர்த்திகளைப் பக்தர்கள் நகர்வலமாக எடுத்துக் கொண்டு சென்று இருந்தபோது அந்த இருட்டை பயன்படுத்திக் கொண்டு ஆலயத்தின் உள்ளே புகுந்திருந்த போர்த்துக்கீசியர் தமது படையினருடன் ஆலயத்தில் சுவர்களை உடைத்தார்கள். கண்களில் பட்டதையெல்லாம் உடைத்தார்கள். அப்போது அந்த ஆலயத்தில் ஏழு அல்லது எட்டு திரி விளக்குகள் மட்டுமே ஆலயத்துக்கு ஒளியைத் தந்து கொண்டு இருந்தது.

அந்த காலங்களில் அத்தனை மின்வசதி கிடையாது. ஆலயத்தில் நுழைந்த போர்த்துக்கீசியர் தூண்கள் பிற வாயில்கள் என அனைத்தையும் உடைக்கத் துவங்கி அதன் பின் அவர்கள் அங்கிருந்த பெட்டிகளில் இருந்த விலை உயர்ந்த சீலைகள், தங்கம் வெள்ளியிலான தோரணங்கள் மற்றும், தங்கம் வெள்ளியிலான நகைகள் எடுத்து தனிப்பெட்டிகளில் வைத்துக் கொள்ளத் துவங்கினார்கள். அந்த நேரத்தை நன்கு பயன்படுத்திக் கொண்ட சிவனடியார்கள் அந்தக் கலவரத்தில் உடைக்கப்பட்டு இருந்த பின்புற மதில் சுவர் வழியே உள் புகுந்தார்கள்.

நேராக கர்பக்கிரகத்துக்குச் சென்று அங்கிருந்த மூர்த்தியை அடியோடு பெயர்த்தெடுத்துப் பின் வாயில் வழியே வெளியேறி தம்பலகமத்தை நோக்கி ஓடினார்கள். நல்லவேளையாக போர்த்துக்கீசியர் இருட்டான நேரத்தில் ஆலயத்துக்குள் வந்திருந்ததினால் சிவ பக்தர்கள் விக்ரகங்களை எடுத்துக் கொண்டு ஓடுவது எளிதாகத் தெரியவில்லை. மேலும் அவர்களுக்கு அனைத்துப் பாதையும் அத்துப்படி என்பதினால் அவற்றை எடுத்துக் கொண்டு இருண்ட கானகப்பாதை வழியே ஓடினார்கள்.

இப்படியாக ஒரு பிரிவினர் வீரத்துடன் தமது உயிரையும் லட்சியம் செய்யாமல் ஆலய விக்கிரகங்களைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்வதைக் கண்ட மேலும் சிலர் இன்னும் சில விக்ரகங்களை ஆலயத்துக்குள் இருந்து எடுத்துக் கொண்டு இன்னொரு பாதையில் ஓடிக்கொண்டிருந்தார்கள். இரண்டு பிரிவுகளாக பிரிந்து ஆலய விக்ரகங்களைப் பாதுகாப்பதில் ஈடுபட்டிருந்த சிவபக்தர்களுடைய குறிக்கோள் ஒன்றுதான். 

உயிரைக்  கொடுத்தாவது அத்தனை பழைமையான, தாம் அத்தனை காலம் வரை வழிபாட்டு வந்திருந்த விக்ரகங்களை போர்த்துக்கீசியர் கைகளில் சிக்கவிடக் கூடாது என்பதற்காகத்தான். முதலில் கோணேஸ்வரர் மூர்த்தியை எடுத்துக் கொண்டு தம்பலகமத்தின் மேற்குப் பகுதியை நோக்கி ஓடியவர்கள் அங்கிருந்த உயரமான மலைப் பிரதேசத்தில் ஒரு இடத்தில் அதை கொண்டு போய் மறைத்து வைத்து அங்கேயே அதை வைத்து வழிபடலானார்கள்.

இதுவே முதல் திருகோணேஸ்வரர் ஆலயத்தில் இருந்து வளர்ந்த இரண்டாவது திருகோணேஸ்வரர் ஆலயமாக பின்னர் உருவெடுத்து விளங்கியது. இதே சமயத்தில் ஆலயத்தில் இருந்து போர்த்துக்கீசியர் கைகளில் சிக்காமல் பாதுகாப்பாக எடுத்து வந்து விட்ட விக்ரகங்களை எடுத்துச் சென்ற இரண்டாவது பிரிவினர் அவற்றை எங்குப் பாதுகாப்பாக வைப்பது எனப் புரியாமல் திண்டாடிக் கொண்டு தாம் கொண்டு சென்ற கடவுள் சிலைகளை ஆங்காங்கே இருந்த கிணறுகளில் போட்டு மறைத்து வைத்தனர்.

மேலும் சில சிலைகளைப் பூமியில் புதைத்து வைத்து விட்டும் ஓடிவிட்டார்கள். இந்தச் சிலைகளே மீண்டும் பல காலம் கழித்து மீண்டும் புதுப்பிக்கப்பட்ட முதல் திருகோணேஸ்வரர் ஆலயத்தில் இன்றும் இருக்கின்றன. கிணற்றிலும், பூமிக்கு அடியிலும் புதைத்து வைக்கப்பட்டு இருந்த சிலைகளை அங்கிருந்த இடிபாடுகளை அகற்றி ஆலய நிர்மாணப் பணியினை பல காலம் பொறுத்து மேற்கொண்ட பக்தர்கள் கண்டுப்பிடுத்து எடுத்து கோயிலில் சேர்த்தனர்.

அன்றைக்கு சிவபக்தர்கள், இடிக்கப்பட்ட ஆலயத்தில் இருந்து சிலைகளை எடுத்துச்சென்று இருக்காவிட்டால் புராதன சரித்திர புகழ்பெற்ற இந்தச் சிலைகள் அனைத்தையும் போர்த்துக்கீசியர்கள் சிதைத்து அழித்திருப்பார்கள். அதே நேரத்தில் திருவிழா ஊர்வலம் சென்றிருந்த பக்தர்களுக்கும், ஆலயம் அழிக்கப்பட்ட செய்தி போய்ச் சேர்ந்ததது. அவர்களும் கொண்டு சென்றிருந்த சிலைகளைத் திரும்ப ஆலயத்திற்கு கொண்டு வராமல் ஆலயத்துக்கு வெளியிலேயே மறைத்து வைத்துக் கொண்டார்கள் .

போர்த்துக்கீசியர் 1624-ல் கோணேசர் ஆலயத்தை அழிக்கும் முன்  இந்த ஆலயத்தைக் குறித்த அனைத்து தகவல்களையும் எடுத்து வைத்திருந்தனர். போர்த்துக்கீசிய தளபதி என்பவனே ஆலயத்தை  அழிக்க முக்கிய காரணமானவன். ஆலயம் அழிக்கப்படும் முன்னர் அவர்கள் எடுத்திருந்த வரைபடங்கள், குறிப்புகள், கட்டிடப் படங்கள் ஆகியன கோணேசர் ஆலயத்தைப் பற்றிய செய்தியை விவரமாக அறிந்து கொள்ள பின்பு பெரிதும் உதவின.

அவனது குறிப்புகளில் அழிக்கப்பட்ட அந்த ஆலயத்தின் பரப்பளவும் கூறப்பட்டு இருந்தன. அவன் எழுதி வைத்திருந்த குறிப்பின்படி அந்த காலத்தில் தற்போது ஆலயம் இருக்கும் பகுதி முழுவதுமே அங்கிருந்த ஆலயத்தின் பகுதியாகவே காணப்பட்டுள்ளது. போர்த்துக்கீசியரின் பதிவேடுகளிலிருந்து இதை அறிந்துகொள்ள முடிகிறது. ஆலயத்தை இடித்த போர்த்துக்கீசியர்கள், அதன் கற்களைக் கொண்டே அங்கு தாம் பாதுகாப்பாகத் தங்க ஒரு அரணையும் அமைத்துக் கொண்டார்கள்.

கோயில்களை இடிக்கும் முன் அனைத்தையும் தரைப் படமாக வரைந்து வைத்துள்ளான். இந்தப் படங்களில் ஒன்று போர்சுக்கலில்  உள்ள கலைக்கூடத்தில் உள்ளதாகக் கூறுகிறார்கள். கோயில் கற்களைக் கொண்டு கோட்டையைக் கட்டும்பொழுது பழைய கல்வெட்டு ஒன்றும் அதன் மகிமைத் தெரியாமலேயே கோட்டை வாசலில் வைத்துக் கட்டப்பட்டிருக்கிறார்கள். அந்தக் கல்வெட்டில் கோணேசர் ஆலயம் அன்னியர்களினால் சிதைக்கப்படும் என்றும், அதன்பின் அதைக் கட்டி முடிக்க தமிழ் மன்னர்கள் அங்கு ஆட்சியில் இருக்க மாட்டார்கள் என்றும் ஒரு வாசகம் காணப்படுகிறது.

குளக்கோட்ட மன்னனின் மறைவுக்குப் பிறகு திருமலை ராஜ்யத்தை ஆண்டு வந்த வன்னிய மன்னன் ஒருவருடைய அரச சபையில் அரச பண்டிதர் ஒருவர் இருந்தார். அந்த அரச பண்டிதர், இந்த ஆலயத்தின் வருங்காலம் குறித்து மன்னன் வினவிய கேள்விக்கு பதிலாக கோணேசர் ஆலயம் போர்துகீசியர்களினால் அழிக்கப்படும் என்றும், அதை மீண்டும் கட்டி முடிக்க தமிழ் மன்னர்கள் இங்கு ஆட்சியில் இருக்க மாட்டார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

இந்தச் செய்தியையே ஆலயத்தின் ஒரு தூணில் இருந்தக் கல்லில் செதுக்கி இருந்தார்கள். இதுவே வரும் காலத்தைக் குறித்து பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கூறப்பட்டு இருந்த தீர்க்கதரிசனமான  ஒரு செய்தியாகும் என்றும் ஆலய மகிமையைக் கூறி வியப்பு தெரிவிக்கிறார்கள். 

போர்த்துக்கீசியர் ஆலயத்தை இடித்த பின் சில காலம் ஆன பின்பு........ டச்சுக்காரர்கள் இலங்கை மீது படையெடுத்து வந்து  இலங்கையைக் கைப்பற்றி திருகோணமலையையும் கைப்பற்றினார்கள். இவர்கள் போர்த்துக்கீசியரினால் இடிக்கப்பட்டிருந்த கோணேசர் ஆலயத்தில் இடிபடாமல் இருந்த மீதி தூண்களை இடித்துத் தங்களுடைய கோட்டையைக் கட்டிக் கொண்டனர். இங்கிருந்த பல பகுதிகளுக்கும் டச்சுப் பெயர்களையும் சூட்டினார்கள். அவர்களும் இந்து மதத்துக்கு எதிரானவர்களாக இருந்ததினால் இங்கு இருந்த ஆலயங்கள் எதற்குமே செல்வதற்கும், வணங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனால் கோணேசர் பக்தர்கள் வேறு வழியின்றி ரகசியமாக அங்கிருந்த ஆலயப் பகுதிக்கு சென்று வணங்கி வந்தார்கள். மேலும் சில காலம் கழித்து இங்குப் படையெடுத்து வந்த ஆங்கிலேயர் வசம்  திருகோணமலை கோட்டை வீழ்ந்தது. ஒருவிதத்தில் அது பக்தர்களுக்கு நன்மையாகவே அமைந்து விட்டது. ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் இடிக்கப்பட்டிருந்த இந்த ஆலயத்துக்குச் சென்று  வணங்குவதற்குத் தடையேதும் செய்யவில்லை.

இடிபட்டு இருந்த இந்த ஆலயத்துக்குச் சென்று தரிசிப்பதை ஆங்கிலேயர் தடுக்காது மக்கள் மன உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்தனர். இதன் பின்பு, கோயில் இருந்ததாகக் கருதப்படும் சுவாமி மலையில் இந்துக்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறான சூழ்நிலையில் உலகப் போர் மூண்டது உலகம் முழுவதும் பல நாடுகள் சுதந்திரம் அடைந்தன. ஆங்காங்கே ஆட்சி செலுத்தி வந்து கொண்டு இருந்த ஆங்கிலேய அரசாங்கம் தமது ஆட்சியை விலக்கிக் கொண்டு தத்தம் நாட்டிற்குச் சென்றார்கள்.

இதன் பின்னணியில் 1948-ஆம் ஆண்டு இலங்கையும் சுதந்திரம் பெற்றது. போர்த்துக்கீசியர் ஆலயத்தை அழித்தபோது சிவபக்தர்கள் ஆலயத்தில் இருந்த விக்கிரகங்களை நாலாபக்கமும் எடுத்துச் சென்று புதைத்து வைத்திருந்த சிலைகளை எடுத்தனர். பிள்ளையார், சிவன், பார்வதி, விஷ்ணு மற்றும் சிலைகளை பூமியிலிருந்து கிணறு வெட்டும் பொழுது கண்டெடுத்தார்கள். பக்தர்கள் ஒன்றிணைந்து மீண்டும் இடிபட்டு அழிக்கப்பட்டு இருந்த அதே ஆலய பகுதியில்  கோணேசர் ஆலயத்தை மீண்டும் புனரமைத்தார்கள். 1963-ஆம் ஆண்டு கும்பாபிஷேகமும் நடத்தினார்கள்.

(மேலும் அடுத்து, வரும் ஆறாவது தொடரில்..........)

-கோவை.கு.கருப்பசாமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com