தாமிரவருணி புஷ்கரத்துக்கு செல்ல முடியவில்லையே என்ற ஏக்கமா? இதைப் படிங்க முதல்ல!

ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்று போற்றுவர். இந்த மாதத்தில் இரவு நேரமும் பகல் நேரமும் சமமாக இருப்பதால்,
தாமிரவருணி புஷ்கரத்துக்கு செல்ல முடியவில்லையே என்ற ஏக்கமா? இதைப் படிங்க முதல்ல!

ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்று போற்றுவர். இந்த மாதத்தில் இரவு நேரமும் பகல் நேரமும் சமமாக இருப்பதால், இதற்கு ‘துலா(தராசு) மாதம் என்று பெயர். துலா மாதம் எனப்படும் ஐப்பசி மாதம் 17/10/2018 பிறந்ததை முன்னிட்டு சூரிய பகவான் கன்னி ராசியில் அடியெடுத்து வைக்கிறார். அதனையொட்டி துலா மாதம் எனப்படும் ஐப்பசி மாதம் முப்பது நாளும் காவிரி ஆற்றில் துலா ஸ்நானம் செய்வது சகல பாவங்களையும் போக்கும் எனப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

துலா காவேரி மஹாத்மியம்

ஆதியில் உமாதேவிக்கு ஸ்ரீ பரமேஸ்வரன் சொன்ன காவேரி மகாத்மியத்தை, தேவ வன்மன் என்ற அரசனுக்கு, சுமத்திரங்கி என்ற ரிஷி சொல்லத் தொடங்குகிறார். ஒரு சமயம் பார்வதி-பரமேஸ்வரர் ஒரு நந்தவனத்தில் தங்கியிருந்தபோது அங்குப் பறவைகள் வடிவில் வந்த நதி தேவதைகள், துலா மாதத்தில் காவேரியில் ஸ்நானம் செய்துவிட்டு அவ்விருவரையும் தரிசிக்க வந்தன. அவர்கள் வேண்டிய வரங்கள் எல்லாவற்றையும் தந்த ஈஸ்வரன், மேலும் கூறலானார்..

"கங்கைக்கு நிகரான காவிரியில் நீராடினாலும், தரிசித்தாலும், அதனைப் பக்தியுடன் தொட்டாலும் அதன் கரையில் தானம், தர்ப்பணம் செய்தாலும் எல்லாப் பாவங்களும் விலகி, புண்ணியம் கிட்டும். இதன் கரைகளில் காசிக்குச் சமமான ஸ்தலங்களும் இருக்கின்றன. நினைத்ததைத் தரும் சிந்தாமணியான காவேரியின் பெருமையை இன்னும் சொல்கிறேன் கேள்" என்றார். அஸ்வமேத யாகம் செய்யத் தொடங்கிய அரிச்சந்திர மகாராஜாவை, முனிவர்கள், பிராயச்சித்தமாக துலா மாதத்தில் காவிரியில் நீராடிவிட்டு வரச்சொன்னார்கள்.

நாத சந்மா என்பவன், பரம பதிவ்ரதையான அனவித்யை என்பவளுடன் காவேரி ஸ்நானம் செய்வதற்காகவும் இருவரும் மோக்ஷ சாம்ராஜ்யத்தைப் பெற வேண்டியும், கௌரி மாயூர க்ஷேத்திரத்தை நோக்கி வந்தான். முனிவர்கள், தங்கள் பத்தினிகளுடனும், புத்திரர்களுடனும் தங்கி, ஹோமாக்னி செய்து, பலவித தானங்களை செய்துவரும் அந்த மோக்ஷ புரியில் நாமும் தங்கி நற்கதி பெறுவோம் என்றான் நாதசன்மன். அப்படியானால். காவேரி, மற்ற எல்லாத் தீர்த்தங்களை விட எவ்வாறு உயர்ந்தது என்று, அனவித்யை கேட்க, நாதசன்மனும் கூறத்தொடங்கினான்.

காவிரி உருவான கதை

காவேரன் என்ற அரசன், தனக்குப் புத்திர பாக்கியம் இல்லாததால் பிரம்மாவைக் குறித்துத் தவம் செய்தான். பிரம்மாவானவர், "உனக்குப் புத்திர பாக்கியம் இல்லாவிட்டாலும், ஒரு குழந்தையை அளிக்கிறேன்" என்று கூறி, தன் மனத்தால் ஒரு பெண் குழந்தையை உண்டாக்கி அவனிடம் அளித்தார். காவேரி என்ற பெயரில் அவனிடம் வளர்ந்த அப்பெண், தகுந்த கணவனை வேண்டித் தவம் செய்யலானாள். பின்னர், அகஸ்திய முனிவரைக் கண்ட காவேரியானவள், இவரே தனது மணாளர் ஆவார் என்று நினைத்து, லோபாமுத்ரா என்ற பெயருடன் அவரை திருமணம் செய்துகொண்டவுடன், அவள் விரும்பியபடியே, நதி ரூபமாகி, பிற நதிகளுக்கும் மனிதர்களுக்கும் ஏற்பட்ட பாவங்களை நீக்கவும், மோக்ஷத்தை அளிக்கவும் மறு அம்சமாகத் திகழுமாறு, அகஸ்த்ய ரிஷி அருளினார்.

துலா மாதத்தில் காவிரியில் ஸ்நானம் செய்யும் முறைகளை, நாதசன்மன் விளக்கினார். உதய காலத்தில் நியமத்துடன் எழுந்தும், சிவபூஜை செய்தும் தீய பழக்கங்களை நீக்கியும், விரதத்துடனும் பரமேஸ்வர தியானத்துடன் இருக்க வேண்டும். மூன்றரைக்கோடி தீர்த்தங்கள் துலா மாதத்தில் காவிரியில் வந்து சேருவதால், இதில் ஸ்நானம் செய்வதன் மூலம், அழகு, ஆயுள், ஆரோக்கியம், செல்வம், கல்வி, வலிமை, மாங்கல்ய பாக்கியம். புத்திர பாக்கியம் முதலியவை சித்திக்கும். இதைக் காட்டிலும் புண்ணியச் செயல் எவ்வுலகிலும் இல்லை. எனவே, ஜன்மத்தில் ஒரு முறையாவது, துலா ஸ்நானம் செய்ய வேண்டும்." பிறகு இருவரும் துலா ஸ்நானம் செய்து, ஸ்ரீ அபயாம்பிகையையும் ஸ்ரீ கௌரி மாயூர நாதரையும் தரிசித்து மோக்ஷம் பெற்றனர்.

விஷ்ணுவின் வீரஹத்தி போக்கிய துலா ஸ்நானம்

துலா மாதக் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியன்று காலையில் நல்லெண்ணெய் தேய்த்துக்கொண்டு வெந்நீரில் ஸ்நானம் செய்து, அதன் பிறகே, காவேரி ஸ்நானம் செய்ய வேண்டும். தீராத தலைவலி முதலிய உபாதைகளும் இதனால் நீங்கும் என்று பரமசிவனே சொல்லியிருக்கிறார். நரகாசுரனை சம்ஹரித்தவுடன் வீரஹத்தி தோஷம் ஏற்பட்டதால், சிவபெருமான் அருளியபடி, மகாவிஷ்ணு காவேரி ஸ்நானம் செய்து, அப்பாவத்தைப் போக்கிக் கொண்டார்.

ப்ருகு முனிவரின் புத்திரியாகத் தோன்றிய மகா லக்ஷ்மி, காவேரி ஸ்நானம் செய்து தனது சுய வடிவம் பெற்று, மகாவிஷ்ணுவை அடைந்தாள். காவேரி ஸ்நானம் செய்த பூமா தேவி, யம தர்மனிடம், " தான தர்மங்கள் செய்யாமலும், பித்ரு காரியங்களைச் செய்யாமலும் பாவங்களைச் சுமப்பவர்களை உன் உலகத்திற்கு அழைத்துக்கொள். காவேரி ஸ்நானம் செய்தவர்களையும் அதன் மகிமையைக் கேட்டவர்களையும் என்னிடம் விட்டுவிடு." என்று சொன்னவுடன் எமனும் அதன்படியே செய்வதாக வாக்களித்தான்.

ஒரு முறை அகத்திய முனிவரிடம் காவேரி எடுத்தெறிந்து பேசியதால் கோபம் கொண்ட அகத்திய முனிவர் காவேரியை தன் கமண்டலத்தில் அடைத்து வைக்க, இதைக் கண்ட தேவர்கள், விநாயகரிடம் முறையிட, விநாயகப்பெருமான் காக்கை உருவத்தில் வந்து, அகத்தியர் முனிவரின் கமண்டலத்தை தள்ளிவிட்டார். விக்னங்களை போக்கும் விக்னேஷ்வரனால் காவேரி தாய் மீண்டும் பரந்துவிரிந்து ஓடினாள். 

காவிரியின் வேறு பெயர்கள்

தட்சிணகங்கை என்று போற்றப்படும் காவேரிக்குப் பொன்னி, விதிசம்பூதை, கல்யாணி, சாமதாயினி, கல்யாண தீர்த்தரூபி, உலோபமுத்ரா, சுவாசாஸ்யாமா, கும்பசம்பவ வல்லவை, விண்டுமாயை, கோனிமாதா, தக்கணபதசாவணி எனப் பல பெயர்கள் உள்ளன.

கங்கையின் பாபம் போக்கிய காவிரி

காவேரி நதி ஒரு புண்ணிய நதியாகும். இதில் ஸ்நானம்(நீராடினால்) செய்தால் பாவங்கள் நீங்கும். இதை மக்கள் உணர்வதற்குப் புராணத்தில் ஒரு சம்பவம் இருக்கிறது. மக்கள் தங்களுடைய பாவங்களைப் போக்க கங்கையில் நீராடி நீராடி கங்கைக்கே பாவம் அதிகமாகச் சேர்ந்து தோஷம் ஏற்பட்டது. தன் பாவங்கள் தீர என்ன செய்ய வேண்டும்? என்று விஷ்ணு பகவானிடம் கேட்டாள் கங்கை. அதற்கு ஸ்ரீமகாவிஷ்ணு, “நீ காவேரி நதியில் நீராடு. உன் பாவம் நீங்கும்” என்றார். 

அன்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம் புண்யக்ஷேத்ரே விநச்யதி |

புண்ய க்ஷேத்ரே கிருதம் பாபம் வாரனாச்யாம்  விநச்யதி |

வாரனாச்யாம் க்ருதம் பாபம் கும்பகோனே  விநச்யதி |

கும்பகோனே க்ருதம் பாபம் காவேரி ஸ்நானே விநச்யதி |

என்று காவேரி ஸ்நானத்தின் மகிமையை வேதம் போற்றுகிறது. அதன்படியே ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத அமாவாசையன்று கங்காதேவி காவேரியில் நீராடி மக்கள் தன்னிடம் கரைத்த பாவங்களைப் போக்கிக் கொள்கிறாள் என்று புராண இதிகாசங்களில் போற்றப்படுகின்றது.

துலா காவேரி ஸ்நானம் செய்யும்முன் தகுந்த புரோகிதர்களை கொண்டு ஸ்நான ஸங்கல்பம் செய்துகொள்வது சிறந்தது. முடியாதவர்கள் கீழ்க்கண்ட ஸ்லோகத்தைக் கூறி துலா ஸ்நானம் செய்வது உசிதம். 

"கங்கேச யமுனே சைவ

கோதாவரி சரஸ்வதீ

நர்மதே சிந்து காவேரீ

ஜலேஸ்மின் சன்னிதிம் குரு"


"கவேர கன்யே காவேரி, சமுத்ர மகிஷிப் பிரியே

தேகிமே பக்தி முக்தி தவம் சர்வ தீர்த்த ஸ்வரூபிணி "

ஜோதிடத்தில் துலா காவேரி ஸ்நானம் செய்யும் அமைப்பு யாருக்கு?
ஜோதிடத்தில் ஒன்பதாம் வீட்டை தர்மஸ்தானம் எனச் சிறப்பாக கூறப்படுகிறது. எனவே தீர்த்த யாத்திரை போன்ற புண்ணிய காரியங்கள் செய்ய லக்கினமும் ஒன்பதாம் பாவமும் பலமான தொடர்பில் இருக்கவேண்டும். ஜாதகத்தில் பன்னிரண்டாம் பாவத்தை அயன சயன போக மோக்ஷ ஸ்தானம் எனப் போற்றப்படுகிறது.

கால புருஷனுக்கு தனுர் ராசி ஒன்பதாம் பாவமும் மீனம் பன்னிரண்டாம் பாவமும் ஆகும். எனவே அதன் அதிபதியான குரு தர்ம காரியங்கள் மற்றும் தீர்த்த யாத்திரை போன்ற ஆன்மீக பயணங்களுக்கு செய்ய முக்கிய பங்கு வகிக்கிறார். ஜாதகத்தில் ஒன்பதாம் அதிபதி அல்லது கால புருஷ ஒன்பதாம் அதிபதி ஜலராசியில் இருந்து சுபக்கிரகத்தின் பார்வை பெரும் போது அந்த ஜாதகன் புனித பயணங்களை மேற்கொள்வான். மேலும் புனித நதியில் நீராடும் பாக்கியம் பெறுவான்.

குரு பகவான் ஒன்பதாம் வீட்டைப் பார்த்தாலும் ஒன்பதாம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் சேர்ந்து தர்மகர்மாதிபதி யோகம் பெற்று இருந்தாலும் அந்த ஜாதகன் பல புனித பயணங்களை மேற்கொள்வான். ஒன்பதாம் வீட்டை குரு பகவான் பார்வை செய்தாலும் சந்திரனுக்கு ஒன்பதாம் வீட்டில் ஒரு சுப கிரகம் இருந்தாலும் அவன் பலமுறை புனித யாத்திரை செல்வான். ஒன்பதாம் அதிபதி லக்னத்தில் அமர்ந்து குருவின் பார்வை பெற்றால் அந்த ஜாதகன் புனித நீராடுவான். சுபக்கிரகத்தின் பார்வை பன்னிரண்டாம் வீட்டின் மீதும் பன்னிரண்டாம் அதிபதி மீதும் இருக்கும் போது மத ரீதியிலும் தர்ம காரியங்களுக்காகவும் ஆன்மீக பயணங்களுக்காகவும் தனது சொத்தை செலவிடுவார்.

பன்னிரண்டாம் அதிபதி சுபக்கிரகத்துடன் கூடி நின்றால் அந்த ஜாதகனை மரியாதைக்குரிய சுப செலவு செய்ய வைக்கும். ஜோதிடத்தில் மேஷம், சிம்மம் மற்றும் தனுசு தர்ம திரிகோணங்கள் எனப்படும்.  மேலும் கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் ஆகிய மூன்றும் மோக்ஷ திரிகோணங்கள் எனப்படும். தர்ம திரிகோண அதிபதிகளும் மோக்ஷ திரிகோண அதிபதிகளும் பரிவர்தனை பெற்று நின்றால் அடிக்கடி தீர்த்த யாத்திரை மற்றும் புனித யாத்திரை செய்யும் அமைப்பு ஏற்படும். மோக்ஷ திரிகோணங்களில் ஸர்ப கிரகங்கள் நின்றாலும் ஒன்பதாம் வீடு, ஒன்பதாம் வீட்டதிபதி ஸர்ப கிரங்களின் தொடர்பு பெற்றால் புனித யாத்திரை செய்யும் அமைப்பு ஏற்படும்.

குருபகவான் நீர் ராசியில் பயணிக்கும்போது மற்றும் நீரினை குறிக்கும் சந்திரன் மற்றும் சுக்கிரனோடு தொடர்பு கொள்ளும்போது தீர்த்தயாத்திரை செய்யும் நிலை ஏற்படும். இந்த காவிரி துலாஸ்நானம் நடைபெறும்பொழுது துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குச் செல்கிறார். மேலும் விருச்சிக ராசியில் இருந்து மீனம், ரிஷபம் மற்றும் கடகம் ராசிகளைப் பார்க்கிறார்.

இதில் மீன ராசியும் கடக ராசியும் நீர் ராசியாகி அமைந்து அதுவே குருவின் ஆட்சி மற்றும் உச்ச வீடாகவும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே கடகம், விருச்சிகம் மற்றும் மீன ராசி/லக்னம் ஒன்றுக்கொன்று திரிகோணமாகவும் அதுவே கால புருஷனுக்கு மோக்ஷ திரிகோணமாகவும் அமைந்திருப்பதால் இந்த மூன்று ராசி லக்னகாரர்களும் துலா காவேரி தீர்த்த யாத்திரையில் கலந்துகொள்வார்கள்.

1. கடகம், விருச்சிகம் மற்றும் மீன ராசிகளை ராசியாகவோ லக்னமாகவோ 1-5-9 அதிபதிகளாகவோ கொண்டவர்கள்.

2. எந்த லக்னமாக இருந்தாலும் கடகம், விருச்சிகம் மற்றும் மீன ராசிகளில் 1-5-9 அதிபதிகள் நிற்க பெற்றவர்கள். 

3. எந்த ராசி/லக்னமாக இருந்தாலும் தர்மகர்மாதி யோகம் பெற்று கோச்சார குரு ஜாதக தர்ம கர்மாதிபதிகளை பார்க்கப்பெற்றவர்கள்.

ஸ்நானம் என்னும் நீராடல் உடல் தூய்மைக்காக மட்டுமல்ல புறக்கண்களுக்குப் புரிபடாத ஆன்ம தூய்மைக்காகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. புண்ணியத் தலங்களுக்குச் செல்லும்போது தவறாமல், அங்குள்ள புண்ணிய நதி, கிணறு, குளம் ஆகியவற்றில் ஸ்நானம் செய்வது அவசியம் என்கிறது சாஸ்திரம்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com