பிரம்மபுரீசுவரர் கோயில் - சீர்காழி தல பதிவு (1)

தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரையில் அமைந்துள்ள அறுபத்து..
பிரம்மபுரீசுவரர் கோயில் - சீர்காழி தல பதிவு (1)

தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரையில் அமைந்துள்ள அறுபத்து மூன்று தலங்களில் இத்தலம் பதினான்காவது தலமாகப் போற்றப்படுகிறது. 

இறைவன்: பிரம்மபுரீசுவரர், தோணியப்பர், சட்டைநாதர்

இறைவி: பெரியநாயகி, திருநிலை நாயகி, ஸ்திர சுந்தரி

தல விருட்சம்: பாரிஜாதம், பவளமல்லி

ஆகமம்: பஞ்சாத்திர ஆகமம்

ஆலயப் பழமை

 ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது
 
தல தீர்த்தங்கள்

பிரம்ம தீர்த்தம், காளி தீர்த்தம், சூல தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், வைணவ தீர்த்தம், இராகு தீர்த்தம், ஆழி தீர்த்தம், சங்க தீர்த்தம், சுக்கிர தீர்த்தம், பராசர தீர்த்தம், அகத்திய தீர்த்தம், கெளதம தீர்த்தம், வன்னி தீர்த்தம், குமார தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், கேது தீர்த்தம், அண்டத் தீர்த்தம், பதினெண்புராண தீர்த்தம், புறவ நதி, கழுமல நதி, விநாயக நதி என, இருபத்திரண்டு தீர்த்தங்கள்.

தேவாரம் பாடியவர்கள்: திருநாவுக்கரசர் மூன்று பதிகங்கள், சம்பந்தர் - அறுபத்தேழு பதிகங்கள், சுந்தரர் -  ஒரே ஒரு பதிகம். 

மேலும் பாடல் பாடியோர்கள்: மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், நம்பியாண்டார் நம்பிகள், பட்டினத்தார், சேக்கிழார், அருணாசல கவிராயர், மாரிமுத்துபிள்ளை, முத்து தாண்டவ தீட்சிதர்.  

இருப்பிடம்: சீர்காழி நகரின் மையப்பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளது.

அஞ்சல் முகவரி 

அருள்மிகு பிரம்மபுரீசுவரர் திருக்கோயில்

சட்டைநாத சுவாமி தேவஸ்தானம்

சீர்காழி,

நாகப்பட்டினம் - 609 110

 ஆலயப்பூஜை காலம்

நாள்தோறும் காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00  மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

புராண பெருமை

உலகம் அழியும் வகையில் கடல் பொங்கி எழுந்த ஊழிக் காலத்தில், சிவன் அறுபத்துநான்கு கலைகளை, உடையாக அணிந்து பிரணவ மந்திரத்தைத் தோணியாக அமைத்து, உமாதேவியுடன் தோணியில் புறப்பட்டார். தோணியுடன் சீர்காழி வந்த போது, எல்லா இடமும் அழிந்து போக இவ்விடம் மட்டும் அழியாமல் இருக்கக் கண்டு இதுவே மூலத்தலம் என்று உமாதேவியிடம் கூறி இங்குத் தங்கினார்.
 
சிவன் தோணியை இயக்கி வந்ததால் இறைவனுக்கு "தோணியப்பர்" என்றும் பெயர் ஏற்பட்டது. பிரம்மா, இறைவன் சிவபெருமானை வணங்கி மீண்டும் படைப்புத் தொழிலை ஆரம்பித்ததால், சிவபெருமானுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரும், சட்டைநாதர் என்ற மற்றொரு பெயரும் உண்டானது.

கோயில் அமைப்பு

பேருந்தைவிட்டு இறங்கி, சீர்காழியில் உள்ள இவ்வாலயத்துக்கு விரைந்த போது, மிகவும் பெரிய ஆலயமாக ஊருக்கு மத்தியில் நான்கு கோபுர வாயில்களுடன் அமைந்திருந்தது. கிழக்கு திசையிலுள்ள ராஜகோபுரத்தின் முன்பு செல்லவும், "சிவ சிவ, சிவ சிவ" என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டு உள் புகுந்தோம். முன் முற்றத்திலே பிரம்ம தீர்த்தம் இருக்கிறது, குளத்தினில் இறங்கி, தீர்த்தத்தை அள்ளியெடுத்து சிரசிற்கு வார்த்து இறைவனை நினைந்து வணங்கிக் கொண்டோம். இக்கிழக்குக் கோபுர வாயில் வழியே, ஆலயத்தின் பிரதான வாயில் எனத்தெரிந்து, இவ்வாயில் வழியாக உள் புகுந்தோம்.

இத்தலத்தில் இறைவனுக்கு மூன்று சந்நிதிகள் இருக்கின்றன. கோயிலில் நுழைந்ததும், ஆஸ்தான மண்டபத்தைக் கடந்து கர்ப்பகிரகத்தினுள் சென்றால் பிரம்மபுரீஸ்வரரின் சந்நிதி கிழக்கு நோக்கி கோவிலின் குளத்தருகே அமைந்துள்ளது. இவருக்கு வலப்பக்கமாக ஞானசம்பந்த பெருமான் உற்சவ மூர்த்தியாக உள்ளார். சின்னஞ்சிறிய குழந்தை வடிவில் இடது கையில் சிறு கிண்ணம் இருக்கிறது. இறைவி ஞானத்தைப் பாலில் குழைத்து கிண்ணத்தில் கொடுத்ததின் அடையாளமாகக் கிண்ணம் உள்ளது.
 

கோயிலின் வடபகுதியில் திருநிலைநாயகியின் கோயிலும் இதன் முன்னே பிரம்மதீர்த்தமும் இருக்கின்றன. இந்தப் பிரம்ம தீர்த்தக்கரையில் தான் இறைவி ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்தருளினார். கோயிலின் உள்ளே ஒரு கட்டுமலை மீது தோணியப்பர் பெரியநாயகி சமேதராகக் காட்சியருள் தருகின்றார்கள். கட்டுமலையிலுள்ள தோணியப்பர் மற்றும் பெரியநாயகியின் திரு உருவங்கள் சுதையாலானவை.

இச்சந்நிதியின் மேல் தளத்திற்கு சில படிகள் ஏறிச்சென்றால் கட்டுமலை உச்சியில் தெற்கு நோக்கியவாறு சட்டைநாதர் சந்நிதியில் இருக்கிறார். சட்டைநாதர் பெயரிலேயே தேவஸ்தானம் விளங்குகிறது.
குறுகலான வழியே நுழைந்து, மரப்படிகளேறித் தரிசிக்கச் செல்ல வேண்டும். ஆண்கள் சட்டையைக் கழற்றி விட்டு ஏறிச்சென்று தரிசித்துப் பின்னர் வந்து அணிந்து கொள்ள வேண்டும். அவ்வாறே, பெண்கள் தலையிலுள்ள பூவையெடுத்து வைத்துக் கொண்டு, சென்று தரிசித்து விட்டுப் பின்பு தலையில் சூடிக்கொள்ள வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.

மகாபலியிடம் சென்று மூன்று அடி மண் கேட்டுப் பெற்ற மகாவிஷ்ணு, அதன் பின்பு செருக்குற்றுத் திரிந்தார். வடுகநாதர் ஆகிய சிவபெருமான் சென்று, தம் திருக்கரத்தால் விஷ்ணுவை மார்பிலடித்து செருக்கை வீழ்த்தினார். இலட்சுமி இறைவனிடம் மாங்கல்ய பிச்சை கேட்க, சிவபெருமானும் அவ்வாறே அருள்செய்ய மகாவிஷ்ணு உயிர்பெற்றெழுந்து வணங்கினார். தம் தோலையும் எலும்பையும் அணிந்து கொள்ளுமாறு மகாவிஷ்ணு வேண்ட, இறைவனும் எலும்பைக் கதையாகக்கொண்டு, தோலைச் சட்டையாகப் போர்த்தி அருள் செய்தார்.

இவ்வடிவமே சட்டைநாதர் வடிவமாகும். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இரவு பத்து மணிக்குமேல் அர்த்தசாமம் முடிந்தவுடன் சட்டைநாதருக்கு புனுகு எண்ணெய் சார்த்தி, நெய்யில் தயாரித்த வடை, பாயசம் நிவேதனம் செய்யப்படுகிறது. இந்தப் பூஜையை காண்பது மிகவும் விசேஷமானது. அம்பாள் சந்நிதி தனிக்கோயிலாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பாள் கருவறை தோஷ்டத்தில் ஸ்ரீசாமளாதேவி, ஸ்ரீஇச்சாசக்தி, ஸ்ரீஞானசக்தி, ஸ்ரீகிரியாசக்தி ஆகியோர் உள்ளனர்.

அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் இத்தலமும் ஒன்றாகும். அம்பாள் கோயிலுக்கு முன்புறம் பிரம்ம தீர்த்தம் உள்ளது. நான்கு புறமும் நன்றாகப் படிக்கட்டுகள் அமைக்கப்பெற்று அதிசுத்தமாக காட்சி அளிக்கிறது. பிரம்ம தீர்த்த குளக்கரை முன்னால் வளைவு போடப்பட்டு, அதன் இருபுறங்களிலும், பிரம்மன் வழிபடுவது, தந்தையாகிய சிவபாத இருதயருக்கு ஞானசம்பந்தர் தோணியப்பரைச் சுட்டிக் காட்டுவது, அம்பிகை பொற்கிண்ணத்தில் ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் அளிப்பது முதலியவை சுதையால் அமைக்கப்பட்டுள்ளன.

சம்பந்தர் ஞானப்பால் உண்டது

ஏழாம் நூற்றாண்டில் சைவம் தழைக்க திருஞானசம்பந்தர் அவதரித்த தலம் என்ற பெருமையை உடையது சீர்காழி என்ற இந்தப் பாடல் பெற்ற ஸ்தலம். சிவபாத இருதயாருக்கும் பகவதியம்மைக்கும் மகனாகப் பிறந்த சம்பந்தருக்கு இக்கோவில் திருக்குளக்கரையில் இறைவன் சிவபெருமான் விரும்பியபடி, உமாதேவி சிவஞானத்தை அமுதமாகக் குழைத்து பாலாகக் கொடுக்க, அதை உண்ட ஞானசம்பந்தர் இறையருள் பெற்றார். குழந்தையின் வாயில் பால் வழிந்திருந்ததைக் கண்ட தந்தை, பால் கொடுத்தது யார் என்று வினவினார்.

"தோடுடைய செவியன்" என்று தொடங்கும் பதிகத்தைச் சம்பந்தர் பாடி பாலூட்டியது உமாதேவியென்றும், தான் இறையருள் பெற்றதையும் கூறினார். இவர் சீர்காழி இறைவன் மேல் அறுபத்தேழு பதிகங்கள் பாடியுள்ளார். சுமார் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு, உலகமாதா பெரியநாயகி அம்மை, குழந்தை சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டிய வரலாற்றை நினைவுபடுத்தும் விதமாக, சீர்காழியில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் இரண்டாம் நாள் திருவிழாவாக "திருமுலைப்பால்" உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை பிரம்மோற்சவத்தில் இரண்டாம் நாள் திருவாதிரை நட்சத்திரத்தன்று இவ்விழா நடைபெறும். 

முத்திருவாதிரை

ஞானசம்பந்தர் பிறந்தது ஒரு "திருவாதிரை நாளில்", அவர் ஞானப்பால் உண்டது ஒரு "திருவாதிரை நாளில்", அவர் முக்தி பெற்று இறைவனுடன் கலந்ததும் ஒரு "திருவாதிரை நாளில்" என்பது முக்கியமான அமைப்பாகும். திருஞானசம்பந்தர் அவதரித்த இந்த சீர்காழியில் உள்ள இறைவனை பிரம்மா, முருகன், காளி, குரு, இந்திரன், சந்திரன், சூரியன், வியாச முனிவர் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். தேவாரப் பதிகம் பெற்ற தலங்களில் அதிகமான பதிகங்கள் பெற்ற தலம் என்ற பெருமை சீர்காழி தலத்திற்குண்டு. மேலும் இத்தலத்திலுள்ள அஷ்டபைரவர் சந்நிதி மிகவும் பிரசித்தி பெற்றது. 

அஷ்ட பைரவர் வழிபாடு காலம்

தெற்கு கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் இடது பக்கத்தில் அமைந்துள்ள இந்த அஷ்டபைரவர் சந்நிதி வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். பிரம்மபுரீசுவரருக்கும், திருநிலை நாயகிக்கும், திருஞானசம்பந்தருக்கும் தனித்தனியே ஆலயங்கள் அமைந்துள்ளன. இவையும் கிழக்குப்பார்த்த சன்னதிகளாகும். சுவாமி, கோயில் மகா மண்டபத்தில் திருஞானசம்பந்தர் உற்சவமூர்த்தியாக எழுந்தருளி இருக்கிறார். 

வடக்கு உட்பிரகாரத்தில் ஸ்ரீ முத்துசட்டைநாதரும், தெற்கு உட்பிரகாரத்தில் திருமாளிகைப்பத்தியில் அறுபத்து மூவர்களும் உள்ளனர். இவைகள் பன்னிருகத்தும் விளங்கிவந்த பெயர்களாமென்பது “வசையில் காட்சி” என்னும் திருக்கழுமல மும்மணிக்கோவை பத்தாவது பாடலால் விளங்கும். இங்கேயே சட்டைநாதர் பலிபீடமும் இருக்கின்றது. மேலைப் பிரகாரத்திலும் வடக்குப் பிரகாரத்தில் மேலே மலைக்குப் போகப் படிக்கட்டுகள் அமைந்திருக்கின்றன. சுவாமி கோயிலை ஒட்டிக் கட்டுமலை இருக்கிறது. புள்ளினம் ஏந்தும் ஐதீகத்தில் ஸ்ரீ உமாமகேசுவரர் பெரிய உருவத்துடன் எழுந்தருளி இருக்கின்றார். இவ்விரு முர்த்தங்களும் சுதையாலானவை. ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி மிகவும் மூர்த்திகரம் மிக்கவர். சுவாமி சன்னதியில் மடைப்பள்ளியும் தேவஸ்தான அலுவலகமும் தனித்தனியே அமைந்திருக்கின்றன. 

கல்வெட்டு

இத்தலத்தில் 47 கல்வெட்டுகள் உள்ளன. கல்வெட்டில் இத்தலம் இராஜராஜவன் நாட்டுத் திருக்கழுமல நாட்டுப் பிரமதேயம் திருக்கழுமலம் என்று குறிக்கப்பெற்றுள்ளது. பிரம்மபுரீசுவரர் திருக்கழுமலமுடையார் என்றும், தோணியப்பர் திருத்தோணிபுரம் உடையார் என்றும், தோணியப்பர் பக்கத்திலுள்ள அம்மை பெரியநாச்சியார் என்றும், திருஞானசம்பந்த பெருமான் ஆளுடைய பிள்ளையார் என்றும் குறிப்புரைக்கின்றன.

தல பெருமை

த்திருத்தலம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னுமான பழமையானது. ஆரியவர்த்தத்தை ஆண்டு வந்த காலவித்து என்னும் வேந்தன் புத்திரப் பேறின்மையினால் வருந்தி உரோமச முனிவரைக் கண்டு  தன் கவலையைத் தெரிவித்தான். முனிவரும் கயிலையின் சிகரத்தைத் தரிசித்தால் கவலை நீங்கும் என்று கூறினார். எவ்வாறு தரிசிக்க முடியும் என்று கவலையுற்ற வேந்தனை, நாட்டுக்கு அனுப்பிவிட்டுக் கயிலாயம் சென்ற முனிவர் தவஞ்செய்தார்.
 

இறைவன் முனிவர் முன்தோன்றி, வேண்டுவது யாதென எனக் கேட்க, முனிவரும் தென்னாட்டு மக்கள் தரிசிக்க வேண்டி இம்மலைச்சிகரம் ஒன்றைத் தென்திசையில் தோற்றுவித்து அதில் உமாதேவியுடன் வீற்றிருந்தருள வேண்டும் என்று பிரார்த்தித்தார். அதற்குக் கயிலாயபதி ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் போர் நடக்கும் பொழுது இது நிறைவேறும் என்று அருள்புரிந்தார். பின்பு ஒரு நாள் ஆதிசேஷனுக்கும், வாயுவுக்கும் தம்முள் யார் வலியர் என்பது பற்றிப் போர் நிகழ்ந்தது. 

ஆதிசேஷன் தனது ஒரு தலையை மெதுவாகத் தூக்கினான். உடனே மலைச்சிகரம் பெயர்ந்து ஒரு பெருங்கிளையும் பல சிறு கிளைகளுமாகப் பெயர்ந்து விழுந்தன. பெருங்கிளையான சிகரம் இறைவன் அருளால் இருபது பறவைகளால் இங்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டது. காலவித்து என்னும் அரசனும் தரிசித்தான். பின்னர் அம்மலை மறைந்து நிற்க, மலைவந்து தங்கிய இடத்தில் சுதையால் இருப்பது பறவைகள் தாங்கியது போலவே கட்டுமலை ஒன்றைக்கட்டுவித்து அரசனும் தன் நகர் சேர்ந்தான்.

சம்பந்தர்: அவதாரத் தலம், சீர்காழி
வழிபாடு: இலிங்க வழிபாடு
முத்தித் தலம்: நல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்)
குருபூசை நாள்: வைகாசி - மூலம் 
 
திருஞானசம்பந்தர் பிறந்து, நடந்து, மொழி பயின்ற அவரது திருமனை திருஞானசம்பந்தர் எனும் தெருவில் இருக்கிறது. தற்போது அது தேவாரப் பாடசாலையாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

இத்தலத்திற்குப் பன்னிரண்டுத் திருப்பெயர்கள் உண்டு அவை,  

பிரம்மபுரம் - பிரம்மன் வழிபட்டதால் 
 
வேணுபுரம் - இறைவன் மூங்கில் வடிவில் (வேணு - மூங்கில்) தோன்றியதால்
 
புகலி - சூரனுக்குப் பயந்த தேவர்களின் புகலிடமாய் விளங்கியதால்
 
வெங்குரு- குரு பகவான் வழிபட்டதால்
 
தோணிபுரம் - பிரளயகாலத்தில் இப்பதி தோணியாய் மிதந்ததாலும், பிரளய காலத்தில் இறைவன் தோணியில் காட்சி தந்ததாலும் இப்பெயர்

பூந்தராய் - பூமியைப் பிளந்து சென்று இரணியாக்கதனைக் கொன்ற வராகமூர்த்தி (திருமால்) வழிபட்டதால்
 
சிரபுரம் - சிரசின் (தலை) கூறாய் உள்ள இராகுக் கிரகம் பூசித்ததால்.
 
புறவம் - புறா வடிவத்தில் வந்த அக்கினியால், சிபிச் சக்கரவர்த்தி பேறு பெற்றதால்.
 
சண்பை - சண்பை என்னும் கோரைப்புல்லால் மடிந்த தம்குலத்தோரால் நேர்ந்த பழி தீரக் கண்ணபிரான் (திருமால்) வழிபட்டதால்.
 
சீகாளி (ஸ்ரீகாளி) - காளிதேவி, சிதம்பரத்தில் நடராசப்பெருமானோடு வாதாடிய குற்றம் நீங்க, வழிபட்டதால் 
 
கொச்சைவயம் - மச்சகந்தியைக் கூடிய கொச்சை (பழிச்சொல்) நீங்கப் பராசரர் வழிபட்டதால்
 
கழுமலம் - மலத் தொகுதி நீங்குமாறு உரோமசமுனிவர் வழிபட்டதால், குரு, இலிங்க, சங்கம வழிபாட்டு முறையில் பிரமன் பூசித்த பிரமபுரீஸ்வரர் இலிங்கமாகவும், ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் தந்தருளிய தோணியப்பர் குருமூர்த்தமாகவும் சட்டைநாதர் சங்கம வடிவினராகவும் உள்ளார்கள்.

ஐந்தொழில்களைச் செய்தருளுவதற்கு இலிங்கமாகவும், பக்குவ ஆன்மாக்களுக்கு உபதேசம் புரிந்து, சிவஞானச்செல்வத்தை அளிப்பதற்குக் குருவடிவமாயும், பேரின்ப சித்திகளை அருளுவதற்குச் சங்கம வடிவாயும், இறைவன் உள்ளார். சட்டைநாத சுவாமி இங்கு முக்கிய தெய்வமாகும். இரண்யனைக் கொன்ற நரசிங்கத்தைத் தடிந்து, அதன் தோலைச் சட்டையாகப் போர்த்துக் கொண்டதால், சுவாமித் இத்திருநாமத்தைக் கொண்டார்.

சிறப்புகள்

"திருமுலைப்பால் உற்சவம்" இன்றும் சித்திரைப் பெருவிழாவில், இரண்டாம் நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தரின் நட்பைப் பெற்று, அவரால் 'அப்பர்' எனப் பெயரும் பெற்றப் பதி. சுந்தரர் இங்கு வந்தபோது, இது, சம்பந்தப்பெருமான் அவதரித்தபதி என்று இத்தலத்தை மிதிப்பதற்கு அஞ்சி நகர்ப்புறத்து நின்று பாட, அதற்கு இறைவர் காட்சி தந்த பதி இது.  திருநீலகண்ட யாழ்ப்பாணர், சம்பந்தரை வணங்கி, அவருடைய பதிகங்களை யாழிலிட்டு வாசித்து, சம்பந்தருடன் இருக்கும் பெருமை பெற்ற பதி இது. கணநாத நாயனார் அவதரித்தத் திருப்பதி. இத்திருக்கோயில் வளாகத்தில் கணநாத நாயனாரின் திருவுருவச்சிலை இருக்கிறது.

பாடல் வகை

மாணிக்கவாசகர், பூந்துருத்திகாடநம்பி, பட்டினத்து அடிகள் ஆகியோர்களால் (திருக்கழுமல மும்மணிக்கோவை), நம்பியாண்டார் நம்பிகள் - ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி, ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம், ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக் கோவை, ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை, ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம், ஆளுடையபிள்ளையார் திருத்தொகை, அருணகிரிநாதர், தருமையாதீனத்துப் பத்தாவது குருமூர்த்தி சிவஞானதேசிகர், திருவாவடுதுறை ஆதீனத்து எட்டாவது குருமூர்த்தி மாசிலாமணி தேசிகர், மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, அருணாசலக்கவிராயர் முதலியோர் சீர்காழியின் சிறப்பையும், திருஞானசம்பந்தரின் பெருமைகளையும் பாடிப் புகழ்ந்துள்ளனர். சீர்காழி அருணாசலக்கவிராயர் இத்திருக்கோயிலுக்குத் தலபுராணம் பாடியுள்ளார்.  

- கோவை கு கருப்பசாமி   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com