திருவானைக்கா ஜம்புகேசுவரர் கோயிலில் நாளை 2-ம் கட்ட கும்பாபிஷேகம்

திருவானைக்கா அருள்மிகு  ஜம்புகேசுவரர் -  அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலின் 2-ம் கட்ட மகா கும்பாபிஷேகம்..
திருவானைக்கா ஜம்புகேசுவரர் கோயிலில் நாளை 2-ம் கட்ட கும்பாபிஷேகம்

திருவானைக்கா அருள்மிகு  ஜம்புகேசுவரர் -  அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலின் 2-ம் கட்ட மகா கும்பாபிஷேகம் நாளை காலை நடைபெறவுள்ளது. இதையொட்டி திங்கள்கிழமை 2,3-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. 

பஞ்ச பூதத் தலங்களில் நீர்த்தலமாக விளங்கி வரும் திருவானைக்கா கோயிலுக்கு 18 ஆண்டுகளுக்குப் பின்னர் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, சுமார் ரூ.5 கோடி மதிப்பில் உபயதாரர்கள் மூலம் புனரமைப்பு செய்யப்பட்டது.

தொடர்ந்து, டிசம்பர் 9, 12 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக மகா கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி, கடந்த 9-ம் தேதி கோயிலில் உள்ள 45 பரிவார சன்னதிகள், உற்ஸவ மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

தொடர்ந்து, ராஜ கோபுரம், கார்த்திகை கோபுரம், அம்மன், சுவாமி சன்னதி மூலஸ்தான விமானங்களுக்கு புதன்கிழமை காலை 2-ம் கட்ட மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, யாகசாலை பூஜை சுந்தரபாண்டியன் கோபுரம் அருகேயுள்ள யாகசாலை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது.

திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் 2,3 மற்றும் 4, 5-ம் கால யாக பூஜைகள் நடைபெற உள்ளன. தொடர்ந்து, புதன்கிழமை 6-ம் கால பூஜையைத் தொடர்ந்து தீபாரதனையுடன் கடங்கள் புறப்பட்டு சகல ராஜகோபுரம்  மற்றும் அருள்மிகு ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மன் விமானங்களுக்கு சரியாக 6.30 மணியிலிருந்து 7 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. தொடர்ந்து சுவாமி, அம்மன் மூலஸ்தானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் 7 மணியிலிருந்து 7.25 க்குள் நடைபெறுகிறது. இதையொட்டி கோயில் கோபுரங்கள் மின்னொளியில் ஜொலிக்கின்றன. 

பக்தர்களுக்கு பேருந்து வசதி, அடிப்படை வசதிகளும் செய்துதரப்பட்டுள்ளன. மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் கோ.ஜெயப்பிரியா மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com