திருவானைக்கா சம்புகேசுவரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

திருச்சி திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேசுவரி உடனுறை சம்புகேசுவரர் திருக்கோயிலில் முதல்கட்ட மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவானைக்கா சம்புகேசுவரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

திருச்சி திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேசுவரி உடனுறை சம்புகேசுவரர் திருக்கோயிலில் முதல்கட்ட மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
 ஐம்பூதத் தலங்களில் நீர்த்தலமாக விளங்கி வரும் இத்திருக்கோயிலில் உபயதாரர்கள் மூலம் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 2 கட்டங்களாக கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து பணிகள் நடைபெற்றன. முதல் கட்ட கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் கோயிலின் நவராத்திரி கொலு மண்டபத்தில் கடந்த 7 ஆம் தேதி தொடங்கின. சனிக்கிழமை (டிச.8) இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு நான்காம்கால யாக சாலை பூஜைகளுக்குப் பின்னர் பூர்ணாஹுதி, தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து யாகசாலையிலிருந்து அனைத்துப் பரிவாரத் தேவதைகளின் சன்னதிகளுக்கு மேளதாளங்கள், வாண வேடிக்கைகளுடன் கடங்கள் புறப்பாடு நடைபெற்றது.
 காலை 7.30 மணியிலிருந்து 8.15 மணிக்குள் திருக்கோயிலில் உள்ள ராஜகோபுர விநாயகர், மல்லப்பா கோபுரம் அருகிலுள்ள விநாயகர், சுப்பிரமணியர், தெட்சிணாமூர்த்தி சன்னதி, 108 சிவலிங்க சன்னதி என 45 சன்னதிகள், விமானங்கள், உற்சவ மூர்த்திகளுக்கு ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களின் ஓம் நமச்சிவாய முழக்கங்களுக்கு மத்தியில் சிவாச்சாரியர்கள் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றினர்.
 இதைத் தொடர்ந்து தீபாராதனைக்குப் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
 முதல்கட்ட கும்பாபிஷேக விழாவில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள்,திருவாவடுதுறை கட்டளை விசாரணை தம்பிரான் சுவாமிகள், அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன், எஸ். வளர்மதி மற்றும் பக்தர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 கும்பாபிஷேகம் நடைபெற்ற 45 சன்னதிகளிலும் திரளான பக்தர்கள் பங்கேற்று ஓம் நமச்சிவாய என பக்தி முழக்கமிட்டனர்.
 டிச.12 இல் இரண்டாம் கட்ட கும்பாபிஷேகம் : கோயிலின் சுந்தரபாண்டியன் கோபுரப் பகுதியில் 7 வேதிகைகள், 23 யாககுண்டங்களுடன் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் இரண்டாம் கட்ட கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.
 2 முதல் 5 ஆம் கால யாக சாலை பூஜைகள் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறுகிறது. டிசம்பர் 12 ஆம் தேதி காலையில் 6 ஆம் கால யாகசாலை பூஜைகளுக்குப் பின்னர், சம்புகேசுவரர், அகிலாண்டேசுவரி அம்மன் சன்னதி விமானங்கள், ராஜகோபுரம், மல்லப்ப, கார்த்திகை, , சங்கமேசுவரர் கோபுரம், சுந்தரபாண்டியன் கோபுரங்களுக்கும், சன்னதிகளின் கருவறைகளுக்கும் கும்பாபிஷேகம் காலை 7 மணியிலிருந்து 7.25 மணிக்குள் நடைபெறுகிறது. டிசம்பர் 13 ஆம் தேதி முதல் மண்டலாபிஷேகமும் தொடங்குகிறது.
 ஆளுநர் பங்கேற்பு: டிசம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட மகா கும்பாபிஷேகத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்க உள்ளதால் அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் கோ.ஜெயப்பிரியா, பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com