முருகனை தேனீக்கள் மொய்க்கும் அதிசய திருத்தலம்! 

பேரளத்தில் இருந்து திருநள்ளார் செல்லும் சாலையில் 5 கி,மீ தூரத்தில் கந்தன்குடி எனும் பெயர்பலகை கண்டு..
முருகனை தேனீக்கள் மொய்க்கும் அதிசய திருத்தலம்! 

பேரளத்தில் இருந்து திருநள்ளார் செல்லும் சாலையில் 5 கி,மீ தூரத்தில் கந்தன்குடி எனும் பெயர்பலகை கண்டு அங்கிருந்து வலது புறம் திரும்பினால் கிழக்கு நோக்கிய சுப்பிரமணியர் கோயிலை அடையலாம்.  

முற்காலத்தில் துர்வாச முனிவர் சோழ நாட்டு சிவதல வழிபாட்டிற்கென வான்வழி சென்றுகொண்டிருந்தார். அப்போது அசுரகுல பெண் ஒருவர் அவரை இடைமறித்து முனிவரே நான் உம்மை விரும்பி அடைந்தேன். எனக்கு உம்மால் பிள்ளைப்பேறு வேண்டும் எனக் கேட்டாள். இறைவழிபாடு செய்ய செல்லும் என்னை மறித்து தகாத விருப்பத்தினை சொன்ன உன்னைச் சபிக்கிறேன், அழிவு செய்யும் அசுர மக்கள் இருவர் பிறக்க கடவது எனச் சாபமிட்டார்.

முனிவரின் சாபம் அப்போதே பலிக்க துவங்கியது. விண்ணிலேயே ஒரு மகனைப் பெற்றதால் அவனுக்கு அம்பரன் எனப் பெயர். மேலும் ஓர் பிள்ளை அழுகை ஒலியுடன் பிறந்ததால் அவனுக்கு அம்பன் எனப் பெயர். பின்னர் அவர்கள் வளர்ந்து தேவர்களை வதைக்கச் சிரமம் தாளாமல் அம்பிகையிடம் சரணடைந்த தேவர்களை அம்பிகை அமைதிப்படுத்தி தனது கோபசக்தியை திரட்டி காளியை உருவாக்கி அனுப்பினாள். இதனைக் கண்ணுற்ற முருகனோ காளிக்கு முன்னதாக சென்று அசுரர்களை அழித்த அம்பகரத்தூர் எனும் தலத்திற்கு முன்னால் பாசறை அமைத்தான்.

அம்பிகை தன் மைந்தன் முருகனை அழைத்துத் தானே காளி உருக்கொண்டு அசுரர்களை வதம் செய்து வருவேன் என்றும், நீ இத்தலத்திலேயே குடிகொண்டு வரும் பக்தர்களுக்கு அருள்புரிவாய் எனக் கூறினார். அதனால் கந்தன் இருக்கும் இடம் கந்தன் குடி என ஆனது. 

அக்காலகட்டத்தில் இப்பகுதி பெரும் காடாக இருந்தது அதில் ஓர் பன்னீர் மரமொன்று செழித்து வளர்ந்திருந்தது, அதன் கீழோர் புற்று ஒன்று இருந்தது. இப்பகுதியில் வாழ்ந்த அந்தணர் ஒருவரின் பசு ஒன்று மேய்ச்சல் முடிந்து திரும்பும்போது தினமும் தானே அப்புற்றின்மேல் பால் சொரிந்து வந்தது. இதனைத் தொடர்ந்து கவனித்த அந்தணர், ஊரார் உதவியுடன் அப்புற்றினை அகற்ற அதனுள் இருந்த வள்ளி தெய்வானை சமேத முருகன் சிலைகளை எடுத்து அந்தப் பன்னீர் மரத்தின் அருகிலேயே ஓர் சிறிய கோயில் ஒன்றினை கட்டினார். அவரே இத்தல சுப்பிரமணியர். இவ்வூருக்கு தேன்காடு என ஒரு பெயரும் உண்டு. தேனொழுகும் மலர்வனம் கொண்ட ஊராதலால் இப்பெயர் வந்தது.

இவ்வூர் முருகனை அருணகிரிநாதர் பாடிய பாடல் உள்ளது. இதனால் இத்தலம் 15-ம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகும். 17-ம் நூற்றாண்டில், இந்தக் கோயிலை இப்பகுதியில் வாழ்ந்த பெருநிலக்கிழார் திரு மருது பிள்ளை அவர்கள் இக்கோயிலின் முதல் திருப்பணியை தொடங்கி, மூன்று ஏக்கர் பரப்பில் பெரிய கோயிலாகவும், அதன் தென் திசையில் பெரிய குளமொன்றினையும் வெட்டினார். நிர்வாக செலவினங்களுக்காக நன்செய் நிலம் 21 எக்கரும், புஞ்சை நிலம் 11 ஏக்கரும் எழுதி வைத்து கோயில் நிர்வாகம் சிறப்பாக நடைபெற வழி வகுத்தனர்.

அதன் பின்னர் அவரது மரபில் வந்த சிதம்பரம் பிள்ளை, மருதவாணன் பிள்ளை ஆகியோர் அன்னதான சத்திரம், சிவாச்சாரியார் குடியிருக்க வீடு ஆகியவற்றினை கட்டி பெரிய ஆலயமாக மாற்றினர். பின்னர், நிர்வாகம் இந்து சமய அறநிலையத்துறைக்கு மாற்றப்பட்டது. 

தென் நாட்டில் உள்ள முருகனின் எட்டு குடிகளில் இந்த கந்தன்குடியும் ஒன்று. முகப்பில் மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது. கோயில் வாயிலைக் கடந்து உள்ளே கொடிமரத்தின் அடியில் உள்ள விநாயகனைத் தொழுது உள்ளே சென்றால் வலது புறம் தெற்கு நோக்கிய தெய்வானை சன்னதி, அதனை ஒட்டி பள்ளியறை உள்ளது. இடது புறம் கிழக்கு நோக்கிய சித்தி விநாயகர் சன்னதி. கருவறை சன்னதியின் உள்ளே உற்சவர்கள் உடன் நடராஜர் சன்னதி அதனைக் கடந்து உள்ளே சென்றால் வள்ளி தெய்வானை சமேத முருகன் கிழக்கு நோக்கிச் சிரித்த முகத்துடன் காட்சியளிக்கிறார்.

கருவறை சுற்றி பெரிய பிரகாரம் அதில் தென்புறம் தலவிருட்சம் பன்னீர் மரம் உள்ளது அதனை ஒட்டி கிழக்கு நோக்கிய ஐராவதேசுவரர் சன்னதி தனி கோயிலாக உள்ளது. கருவறை வடபுறம் விசுவநாத விசாலாட்சி சன்னதியும் அருகில் சண்டேசர் சன்னதியும் உள்ளன. வடகிழக்கில் தீர்த்த கிணறும் பைரவர் சன்னதியும் உள்ளன.

முருகனின் சிறப்பு நாட்களாகச் சொல்லப்படும் வைகாசி விசாகம், ஆனி உத்திராடம், ஆடி கார்த்திகை, கார்த்திகை சோமவாரம், மார்கழி திருவாதிரை, தை கார்த்திகை, பங்குனி உத்திரம் மற்றும் மாத கார்த்திகை தினங்கள் இக்கோயிலில் விசேஷ தினங்களாகும். 

பிரம்மோற்சவம் சித்திரை பௌர்ணமிக்கு பத்துநாட்கள் முன்னதாக தொடங்குகிறது. இந்தப் பத்து நாட்களிலும் முருகன் வள்ளி தெய்வானை சமேதராக உலா வருகிறார். ஒன்பதாம் நாள் திருத்தேர் உலா. அன்றைய தினம் சுவாமி முருகன் தேருக்கு வரும்போது முருகனை தேனீக்கள் மொய்க்கும் அதிசயம் நடக்கிறது. இப்படிப்பட்ட நிகழ்வினை உ.வே.சாமிநாதய்யர் தனது புத்தகத்தில் இது பற்றி எழுதியுள்ளார்.

வாருங்கள் நாமும் தேனீக்கள் போல் இறைவனைச் சுற்றி வந்து அவன் அருள் பெறுவோம். 

- கடம்பூர் விஜயன் 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com