வீட்டிலேயே எளிய முறையில் ‘ஆர்கானிக் கண்மை’ தயாரிப்பது எப்படி?

இரண்டு முறைகளில் கண்மை தயாரிப்பது எப்படி என்று கற்றுக் கொடுத்திருக்கிறோம். இரண்டில் முதலில் உள்ளது பாரம்பரிய முறை. அதிலுள்ள ஒரே ஒரு மைனஸ் என்னவென்றால் தண்ணீரில் கரையக் கூடிய தன்மை.
வீட்டிலேயே எளிய முறையில் ‘ஆர்கானிக் கண்மை’ தயாரிப்பது எப்படி?

உங்களுக்கு கண்மை இட்டுக் கொள்ளும் பழக்கம் உண்டா? ஒவ்வொருமுறையும் கண்மை தீர்ந்து போன பின்... நேரமின்றியோ அல்லது வேலைப்பளுவினாலோ மீண்டும்  கண்மை வாங்க மறந்து தவித்திருக்கிறீர்களா? அப்படித் தவிக்கும் போது எப்போதேனும் இப்படி யோசித்ததுண்டா? ஏன் நமக்குத் தேவையான கண்மையை நாமே வீட்டில் தயாரித்துக் கொள்ளக்கூடாது என! அப்படி யோசித்திருப்பீர்கள் எனில் இந்தக் கட்டுரை நிச்சயம் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

பயனைத் தாண்டியும் இதிலிருக்கும் மற்றொரு உபகாரம் என்னவென்றால் அது நம் கண்களின் ஆரோக்யம். கடைகளில் வாங்கி உபயோகிக்கக் கூடிய கண்மைகள் என்ன இருந்தாலும் ரசாயனக்கூட்டுபொருட்கள் தானே? பன்றிக் கொழுப்பிலிருந்து,  பல்வேறு விதமான தாவர எண்ணெய்கள், செயற்கை மெழுகுகள் முதல் அவற்றில் என்னென்ன விதமான ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன? அவை நம் கண்களுக்கும், புருவத்திற்கும் என்னென்ன விதமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை என்றெல்லாம் அறியாமலே பயன்படுத்துவதைக் காட்டிலும் இது தேவலாம் இல்லையா? எனவே கூடுமான வரையில் இவற்றையும் வீட்டில் தயாரிக்க முயற்சித்துப் பாருங்கள்.

பாரம்பர்ய முறை...

தேவையான பொருட்கள்:

  • அகல்விளக்குகள் - 2
  • நல்லெண்ணெய் - 2 விளக்குகளை ஏற்றப் போதுமான அளவு
  • தடிமனான திரி - 2
  • எவர்சில்வர் தட்டு அல்லது மூடி - 1
  • எவர்சில்வர் டம்ளர்கள் - 2

கண்மைக்குத் தேவையான புகைக்கரி (charcoal)  தயாரிப்பு செய்முறை: 

2 அகல் விளக்குகளையும் ஏற்றி எரிய விட்டு அதன் நடுவில் இரண்டு எவர்சில்வர் டம்ளர்களை வைத்து அவற்றின் மீது எவர்சில்வர் தட்டால் மூடவும். சுமார் 1 மணி நேரம் விளக்குகளை எரிய விட்டால் மூடியின் மீது கணிசமான அளவு புகைக்கரி படியும். தேவையான அளவு புகைக்கரி கிடைத்ததும் விளக்குகளை அணைத்து மூடியை நீக்கி.. சூடு ஆறியதும் அதிலிருக்கும் புகைக்கரியை ஸ்பூனால் சுரண்டி எடுத்து ஒரு சிறு கோப்பையில் சேகரிக்கவும்.

மிகவும் மென்மையான இந்த புகைக்கரித் துகள்களுடன் 1/2 டீஸ்பூன் விளக்கெண்ணெய் விட்டு நன்கு பசை போல கலந்தால் குழந்தைகளுக்குப் பயன்படுத்தத் தோதான கண்மை கிடைக்கும். இதில் விளக்கெண்ணெய் சேர்ப்பதால் கண்களுக்கு மிகவும் நல்லது. கண்மை தயாரிப்பில் இது தான் நமது தென்னகத்து பாரம்பர்ய முறை.

பீ வேக்ஸ் பயன்படுத்தி கண்மை (காஜல்) தயாரிக்கும் மற்றொரு முறை:

அனைத்து சூப்பர் மார்கெட்டுகளிலும் பீ வேக்ஸ் என்று கேட்டால் கிடைக்கும். அதாவது தேன் கூட்டில் இருந்து எடுக்கப் படக்கூடிய ஒருவகை மெழுகு இது. இந்த மெழுமை வாங்கி ஃப்ரிஜ்ஜில் சேமித்து வைத்துக் கொண்டு அவ்வப்போது தேவையான அளவு துருவி எடுத்து கண் மை தயாரிக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

  • பீ வேக்ஸ் - ஒரு ஸ்பூன் 
  • புகைக்கரித்தூள் - 1 ஸ்பூன்
  • விளக்கெண்ணெய் - தேவையான அளவு அல்லது 1 1/4 ஸ்பூன்)

செய்முறை:

அடுப்பை ஆன் செய்து அதில் ஒரு கனமான பாத்திரத்தில் பாதியளவு நீர் நிரப்பி கொதிக்க விடவும். கொதிக்கும் நீரில் ஒரு சிறு எவர்சில்வர் கிண்ணத்தை மிதக்க விட்டு.. கிண்ணம் சூடானதும் அதில் ஒரு டீஸ்பூன் பீ வேக்ஸையும், 1 டீஸ்பூன் புகைக்கரித்தூளையும் சேர்த்து மேலும் சூடாக்கவும். சூட்டில் பீ வேக்ஸ் இளகி உருகி புகைக்கரித்தூளுடன் கலக்கத் தொடங்கும் போது ஒரு சிறு ஸ்பூனில் விளக்கெண்ணெயை மெதுவாக அந்தக் கலவையில் சேர்த்துக் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். விளக்கெண்ணெயை அப்படியே மொத்தமாக விட்டு விடக்கூடாது. துளித்துளியாகச் சேர்க்க வேண்டும். விளக்கெண்ணெயின் அளவு 1/2 டீஸ்பூனில் இருந்து 1 அல்லது 1 1/2 டீஸ்பூன் அளவு தேவைப்படலாம். கண்மைக்கு நீரில் கரையாத தன்மை அதிகரிக்க வேண்டுமென்றால் பீ வேக்ஸின் அளவை அதிகரித்துக் கொள்ளலாம். இப்போது சூடுபடுத்துவதை நிறுத்தி விட்டு கிண்ணத்தில் உள்ள கலவையின் அடர்த்தியைச் சோதித்துக் கொள்ளவும். திக்னஸ் போதுமென்றால் கிண்ணத்தை பாத்திரத்தில் இருந்து இறக்கி விட்டு... அதிலிருக்கும் கலவையை சூடு ஆறியதும் ஒரு அழகான சிறு கண்ணாடி அல்லது டிரான்ஸ்ஃபரண்ட் பிளாஸ்டிக் ஜாரில் நிரப்பிக் கொள்ளவும். அது செட் ஆக 30 நிமிடங்கள் ஆகலாம். விரைவாகப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்ணாடி ஜாரை ஓர் இரவு முழுதும் ஃப்ரிஜ்ஜில் வைத்து எடுங்கள். மறுநாள் நீங்களே உங்கள் கைகளால் தயார் செய்த கண்மையை பெருமையுடன் கண்களுக்கு இட்டுக் கொள்ளலாம்.

மேலே இரண்டு முறைகளில் கண்மை தயாரிப்பது எப்படி என்று கற்றுக் கொடுத்திருக்கிறோம். இரண்டில் முதலில் உள்ளது பாரம்பரிய முறை. அதிலுள்ள ஒரே ஒரு மைனஸ் என்னவென்றால் தண்ணீரில் கரையக் கூடிய தன்மை. இரண்டாவது முறையில் பீ வேக்ஸ் பயன்படுத்தப் பட்டிருப்பதால் அது தண்ணீரில் கரையாது. எனவே இந்த முறை இளம்பெண்களால் பெரிதும் விரும்பப் படலாம். கைக்குழந்தைகளுக்கு நெற்றிக்கு இடுவதற்கும், கன்னத்தில் இடுவதற்கும் முதலாவதாகச் சொன்ன முறையில் கண்மை தயாரித்துக் கொள்ளலாம். ஏனெனில் இதில் குழந்தையின் உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய எவ்விதமான ரசாயனங்களும் சேர்க்கப்படவில்லை என்பதால்.

Image courtesy: google

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com