கசகசா... அறிந்ததும் அறியாததுமான சில சுவாரஸ்யங்கள்!

கசகசா விதைப் பைகளை முற்ற விடாமல் அவை காய்வதற்கு முன்பே பச்சையாக இருக்கும் போது விதைப் பையைக் கீறி அதனுள் இருந்து வடியும் பாலைச் சேகரித்தால் அது தான் ஓபியம் எனும் போதைப்பொருள்.
கசகசா... அறிந்ததும் அறியாததுமான சில சுவாரஸ்யங்கள்!

கசகசா எப்படி விளைவிக்கப் படுகிறது?

கசகசா வை ஆங்கிலத்தில் ஓவியம் பாப்பி என்கிறார்கள். ஓபியம் செடியில் விதைகளைத் தாங்கியிருக்கும் பை முற்றி அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதனுள்ளிருந்து கசகசா பெறப்படுகிறது. இந்த விதைப் பைகளை முற்ற விடாமல் அவை காய்வதற்கு முன்பே பச்சையாக இருக்கும் போது விதைப் பையைக் கீறி அதனுள் இருந்து வடியும் பாலைச் சேகரித்தால் அது தான் ஓபியம் எனும் போதைப்பொருள். அதனால் தான் இந்தக் கசகசாவை ஓரளவுக்கு மேல் சாப்பிட்டால் அது போதையளிக்கிறது. இதனால் தான் துபாய், கத்தார், குவைத், செளதி அரேபியா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் கசகசாவை போதைப்பொருள் பட்டியலில் வைத்திருக்கிறார்கள். 

கசகசாவுக்கான தடை...

அதுமட்டுமல்ல வளைகுடா நாடுகளான செளதி அரேபியா, கத்தார், துபாய், ஓமன் உள்ளிட்ட நாடுகளில் கசகசா தடைசெய்யப்பட்ட ஒரு போதைப் பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அசைவ உணவுப் பொருட்களில் சுவை கூட்டப் பயன்படுத்தும் கசகசாவை வளைகுடா நாடுகளுக்குக் கொண்டு சென்றால் அது அங்கு தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகிறது. இந்தியாவிலும் கூட இந்திய அரசின் நிதித்துறை, வருவாய்த்துறை மற்றும் சுங்க இலாகா மூலமாக இந்தியாவில் இருக்கும் அனைத்து சர்சதேச விமான நிலையங்களுக்கும், துறைமுகங்களுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு கசகசா கொண்டு செல்ல தடை விதிக்கும் படி உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட இடங்கள் அனைத்திலுமே பயணிகள் கண்களில் படும்படியாக ‘கசகசாவை கொண்டு செல்லத் தடை ‘ என்று கொட்டை எழுத்துக்களில் எழுதி அறிவிப்பும் செய்யப்பட்டுள்ளது.

கசகசாவின் மருத்துவ குணங்கள்...

  • கசகசாவிற்கு நோய்த்தடுப்பாற்றலும் மனித ஆரோக்யத்தை மேம்படுத்தும் ஆற்றலும் உண்டு.
  • கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும். அதில் உள்ள ஒலியீக் ஆசிட், லினோலியிக் ஆசிட், போன்ற அமினோ அமிலங்கள் மாரடைப்பைத் தடுத்து, பக்கவாதத்தில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.
  • கசகசாவின் வெளிப்புற உறையில் அதிக அளவு நார்ச்சத்து (100 g raw seeds provide 19.5 g or 51% of recommended daily levels (RDA) of fibre ) இருப்பதால் அது  மலச்சிக்கலைத் தடுக்க உதவுவதோடு, சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
  • கசகசா விதை, தயாமின், பண்டோதேனிக் அமிலம், பைரிடாக்ஷின், ரைபோ பிளேவின், போலிக் அமிலம் போன்ற வைட்டமின்களுக்கு மிகச்சிறந்த ஆதாரமாக விளங்குகிறது.
  • போதிய அளவில் இரும்பு, காப்பர், பொட்டாஷியம், மாங்கனீஸ், ஜிங்க், மற்றும் மெக்னீசியம் உள்ளது.
  • கசகசா விதையில் உள்ள ஒபியம் அல்கலாயிடுகளான மார்பின் (morphine), தெபைன்(thebaine), கொடின் (codeine), பபவரைன்(papaverine)  போன்றவை மனித உடலில் பல சாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. நரம்பு எரிச்சலை நீக்கவும், வலியைக் குறைக்கவும்  பயன்படுவதோடு, இந்த வேதிப் பொருட்கள் பல இருமல் மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. கசகசா விதை, கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பானது.
  • இந்த மரத்தின் மற்ற பாகங்கள், பொதுவாக போதை தரக்கூடிய பொருட்களைக் கொண்டுள்ளது என்றாலும், அதை விரிவாக ஆராயும் பொது அதில், வலி நிவாரணியான மார்பின், தெபய்ன், கொடின் போன்ற மருந்துகள் தான் உள்ளன. இப்படி வலி நிவாரணம் மற்றும் மூளை நரம்பு மண்டலத்தில் வேலை செய்யும் இந்தப் பொருட்கள், போதைக்காக உட்கொள்ளப்படுகிறது என்பது உண்மையானாலும் கசகசா மட்டும் இதில் விதிவிலக்காக உள்ளது.

கசகசாவை பலநாடுகள் தடை செய்யக் காரணம்...

பல நாடுகள், தங்கள் நாட்டுக்குள் கசகசாவைக் கொண்டு வரத் தடை செய்யக் காரணம், கசகசா விதையை செடியில் இருந்து அறுவடை செய்யும் பொது மற்ற பாகங்களில் உள்ள போதை தரும் பொருளுடன் சேர்ந்து மாசுபடுவது ஒரு காரணம். பொதுவாக கசகசா விதை அறுவடை செய்த பின், உரிய முறையில் சுத்திகரிப்பு செய்யப்பட்டால் நூறு சதவீதம் சுத்தமாகி விடும்.

ஒபியம், பப்பி தாவரத்தின் விதை உட்பட எல்லா பாகங்களிலும், மருந்து மூலக்கூறான மார்பின் மற்றும் கொடின் போன்றவை இருப்பதால், இந்த விதையைச் சாப்பிட்டவர்களின் சிறுநீர் சோதனை முடிவிலும், போதைப்பொருள் (false) positive என்றே காட்டும்.

கசகசாவில், மார்பின், மற்றும் கொடின் இருந்தும் அது ஏன் போதை தருவதில்லை என்றால் இந்த மருந்துகளின், செறிவு, கசகசா விதையில் போதை தராத அளவுக்கு மிக மிகக் குறைவு.

M. Thevis, G. Opfermann, and W Schanzerand  போன்ற விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு செய்து, அதன் முடிவை Journal of Analytical Toxicology என்ற இதழில் வெளியிட்டார்கள். அதில் வியாபரத்திற்காக விற்கப்படும் ஒரு கிராம் கசகாசாவில் இந்த மார்பின் அளவு 0.5 மைக்ரோகிராம் முதல் 10 மைக்ரோ கிராம். ஒரு கசகசா சேர்க்கப்பட்ட உணவில், ஒரு சில மைக்ரோகிராம் மார்பின் தான் இருக்கும்.

மருந்தாக விற்கப்படும் மார்பினில், வலி நிவாரணத்திற்காக ஒரு முறை எடுக்கப்படும் டோஸில் 5000 முதல் 30000  மைக்ரோகிராம் மார்பின் இருக்கும். எனவே, மார்பின் மருந்தின் விளைவு பெற, ஒரு மனிதன் 500 முதல் 60000 கிராம் கசகசா ஒரே முறையில் சாப்பிட்டால் தான் அந்த மருந்தின் விளைவு வரும். இந்த அளவுக்கு எந்த உணவிலும் கசகசா சேர்க்கவே முடியாது. இது கிட்டத்தட்ட 1 முதல் 130 பவுண்ட் கசகசா சாப்பிடுவதற்கு சமம். இவ்வளவு கசகசா ஒரே முறையில் சாப்பிடுவது சாத்தியமே இல்லை. கற்பனைக்கும் எட்டாதது. உணவில் தெளிக்கப்படும் கசகசா விதையால், மார்பினின் எந்த மருத்துவ சக்தியையும் தரமுடியாது என்னும் போது, போதை தர வாய்ப்பே இல்லை.

எனினும் போதையைக் கண்டறிய சிறுநீர் டெஸ்டுக்குச் செல்லும் விளையாட்டு வீரர்கள் போன்றவர்கள் இந்த டெஸ்டுக்கு முந்திய தினம் கசகசாவைத் தவிர்ப்பது நல்லது. மருந்துக்காக மாத்திரை மற்றும் ஊசி மூலம் மார்பின் உட்கொள்ளும் பொது, மூளை நரம்பு மண்டலத்தில் வேலை செய்து, உடனடி வலி நிவாரணம் மற்றும் தூக்கத்தை தருகிறது. போதைக்காக அதிக அளவில் உட்கொள்ளும்போது போதை களிப்பு, போதைக்கு அடிமையாதல் உண்டாகிறது.

கசகசா பயிரிடப்படும் நாடுகள்...

கசகசா இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது. கசகசாவுக்காக பயிர் செய்யப்படும் செடிகளிலிருந்து சட்ட விரோதமாக ஓபியம் எடுப்பதும் நடக்கிறது.

இந்தியாவை பொறுத்தவரை கசகசா போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரவில்லை. என்றாலும், இந்திய அரசின் நீதித்துறை, வருவாய்த்துறை மற்றும் சுங்க இலாகா இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கசகசாவை உரிய அனுமதியின்றி எடுத்துச் செல்ல தடை உத்தரவு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நம்நாட்டில் காரசாரமாக சுவையும் மணமுமாகச் சாப்பிட்டுப் பழகிய மக்கள் வெளிநாடுகளில் வசிப்பதற்காகச் செல்லும் போது ஊறுகாய் பாட்டில்கள், சாதத்தில் கலந்து உண்ணத்தக்க பருப்புப் பொடி வகைகள், இட்லி மிளகாய்ப்பொடி லிஸ்டில் அசைவ உணவுகளைச் சமைத்து உண்ணத் தோதாக கசகசாவையும் தங்களது லக்கேஜுகளில் கொண்டு செல்ல முயன்று விமான நிலைய சோதனைகளில் பிடிபட்டு தண்டனை பெற்ற அனுபவங்கள் பல உண்டு. அந்த அளவுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் கசகசாவை கொண்டு செல்ல தடை விதித்திருக்கிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com